உள்ளடக்கத்துக்குச் செல்

சால்வதோர் தாலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சால்வதோர் தாலீ
நவம்பர் 29, 1939இல் சால்வதோர் தாலீ
பிறப்புசால்வதோர் தொமிங்கோ பிலிப்பெ ஜசிந்தோ தாலீ இ தொமெனிக்
(1904-05-11)மே 11, 1904
பிகோரெசு, எசுப்பானியா
இறப்புசனவரி 23, 1989(1989-01-23) (அகவை 84)
பிகோரெசு, காத்தலோனியா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
கல்விSan Fernando School of Fine Arts, மத்ரித்
அறியப்படுவதுஓவியர், சிற்பி, எழுத்தாளர், புகைப்படக்கலைஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நீங்கா நினைவு (1931)
சிலுவையின் புனித யோவானின் கிறிஸ்து (ஓவியம்) (1951)
இறுதி இராவுணவு அருட்சாதனம் (ஓவியம்) (1955) மற்றும் பல
அரசியல் இயக்கம்கியூபிசம், ஆடுகுதிரைவாதம் (டாடா), அடிமன வெளிப்பாட்டியம்
வாழ்க்கைத்
துணை
காலா தாலீ

சால்வதோர் தாலீ (Salvador Dali, மே 11, 1904 - ஜனவரி 23, 1989) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டலன் இனத்தவரான, அடிமன வெளிப்பாட்டிய ஓவியர் ஆவார். இவரது முழுப்பெயர் சால்வதோர் தொமிங்கோ பிலிப்பெ ஜசிந்தோ தாலீ இ தொமெனிக் என்பதாகும். எசுப்பானியாவின் காத்தலோனியாவில் உள்ள பிகோரெசு (Figueres) என்னுமிடத்தில் பிறந்த இவர் ஒரு திறமையான படவரைவாளர். இவரது கவர்ச்சியான அடிமன வெளிப்பாட்டிய ஆக்கங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. சால்வதோர் தாலீயின் ஓவியத் திறன் மறுமலர்ச்சி ஓவியர்களின் செல்வாக்கினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகவும் அறியப்பட்ட இவரது ஓவியமான நீங்கா நினைவு (The Persistence of Memory) 1931 ஆம் ஆண்டில் தீட்டி முடிக்கப்பட்டது. இவருக்குத் திரைப்படம், சிற்பம், நிழற்படக்கலை போன்ற கலைகளிலும் ஈடுபாடு இருந்தது.

இளமைக்கால வாழ்க்கை

[தொகு]

இவரது தந்தை சால்வதோர் தாலீ இ குசி ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது தாய்தான் இவருடைய கலைகள் மீதான ஈடுபாடுகள் வளர காரணமானவர். தாலீ சிறிய வயதிலேயே ஓவியப் பள்ளியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். 1919 ஆம் ஆண்டு இவரது ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சியை இவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

தாலீயின் மூத்த சகோதரர் இவர் பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக இறந்து போனார். தாலீக்கு ஐந்து வயது ஆகும் போது , மூத்த சகோதரரின் கல்லறைக்கு அழைத்துச் சென்று அவருடைய மறுபிறவிதான் தாலீ என்று அவரிடம் கூறினார்கள். இதை அவர் நம்பத் தொடங்கினார். இந்த நம்பிக்கை இவரது ஓவியங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது. 1963ஆம் ஆண்டு "மறைந்த என் சகோதரன்" என்ற ஓவியமாகவும் தீட்டினார்.

இவர் இளமைக் காலத்தில் வாழ்ந்த காத்தலோனியா நிலப்பகுதியை அடிக்கடி தன்னுடைய ஓவியங்களில் பிரதிபலித்தார். எடுத்துகாட்டாக, நீங்கா நினைவு என்ற ஓவியத்தில் காணப்படும் மலைத்தொடர் காத்தலோனியா நிலப்பகுதியில் உள்ள குரூசு முனை (Cap de Creus) என்னும் இடத்தில் அமைந்த பாறைத் தொகுப்பு ஆகும்.

ஓவியங்கள்

[தொகு]
நீங்கா நினைவு

மறுமலர்ச்சி கால ஓவியங்களின் தாக்கத்தில் இவரது துவக்க கால படைப்புகள் இருந்தாலும், 1930களில் வளரத்துவங்கிய அடிமன வெளிப்பாட்டிய வடிவத்தின் தாக்கத்தில் இவர் ஓவியங்களை வரையத் துவங்கினார். இவ்வியக்கத்தின் ஓவியர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

சிக்மண்ட் பிராய்ட் என்னும் உளப்பகுப்பாய்வு அறிஞரின் அடிமனக் கொள்கையை உள்வாங்கி தனது ஓவியங்களில் வெளிப்படுத்தினார். அடிமன வெளிப்பாட்டிய கலை வடிவத்தின் சின்னமாக தாலீ விளங்குகிறார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிலுவையின் புனித யோவானுடைய இறையியல் கவிதைகளால் கவரப்பட்டு தனது ஓவியங்களில் அடிமன வெளிப்பாட்டியத்தோடு இணைத்து கிறிஸ்துவ நம்பிக்கைகளையும் ஓவியமாக வரைந்தார்.

1931 ஆம் ஆண்டு தாலீ வரைந்த நீங்கா நினைவு என்ற ஓவியத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். இந்த ஓவியத்தில், காலம் இடம் இரண்டுமே நெகிழ்வுத் தன்மை கொண்டது எனப் பொருள் படும்படி வரைந்திருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய சார்பியல் கொள்கையை இந்த ஓவியம் அடிப்படையாக கொண்டதாக பலர் கருதுகிறார்கள். ஆனால், தாலீயோ வெயிலிலோ வைத்த பாலாடைக் கட்டி எப்படி உருகுமோ அதை அடிமன வெளிப்பாடாகக் கொண்டு வரையப்பட்டதே என்று விளக்கமளித்தார்.

தாலீயின் இளம்வயதில் வரைந்த ஓவியங்களில் சில:

[தொகு]
  • விலாபெர்டின் ('Vilabertin')
  • பிகாரசின் அருகிலுள்ள நிலப்பகுதி ('Landscape Near Figueras')
  • காபரே காட்சி ('Cabaret Scene')

அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் தாலீ உருவாக்கிய ஓவியங்கள் சில:

[தொகு]

அடிமன வெளிப்பாட்டியப் பாணியில் கிறித்தவக் கருத்துகள் கொண்ட ஓவியங்கள் சில:

[தொகு]

சிற்பங்கள்

[தொகு]

ஓவியங்கள் மட்டுமல்லாது சிற்பங்களையும் அடிமன வெளிப்பாட்டியத் தாக்கம் கொண்டவையாக தாலீ உருவாக்கினார் அவற்றில் முக்கியமானது நண்டுத் தொலைபேசி ஆகும். தொலைபேசியின் மேல்புறம் பெரிய கடல் நண்டு போன்ற உருவத்தை வடிவமைத்து இணைத்தார். தாலீயின் ஓவியங்களில் தொலைபேசிகளும் நண்டுகளும் அடிக்கடி இடம்பெற்றன. இவையிரண்டும் ஆழ்ந்த பாலியல் தாக்கங்கள் கொண்டதாக தாலீ கருதினார். இந்த நண்டு தொலைபேசியை ஆங்கிலக் கவிஞரும் அடிமன வெளிப்பாட்டியம் தொடர்பான பொருட்களைச் சேமிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருந்த எட்வர்ட் ஜேம்ஸ் என்பவருக்காக தாலீ வடிவமைத்தார்.

உதடுவடிவ மெத்திருக்கையும் (Lips Sofa) தாலீயின் முக்கிய படைப்புகளில் ஒன்றாகும். மே வெஸ்ட் என்ற நடிகையின் உதடுகளைப் போன்ற தோற்றமுடைய மெத்திருக்கையை தாலீ உருவாக்கினார்.

திரைத் துறை

[தொகு]
1910 ல் சர்வதோர் தாலீயின் குடும்ப புகைப்படம்: மேலிருந்து வலமாக, அத்தை மரியா தெரசா, தாய், தந்தை, சல்வதோர் தாலீ, அத்தை கேத்ரினா (பின்னாளில் தந்தையின் இரண்டாம் மனைவியானவர்) சகோதரி அன்னா மரியா மற்றும் பாட்டி அன்னா

சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது இவருக்குத் தீரக் காதல் இருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். அந்த ஈடுபாடு பின்னாட்களில் இவர் திரைத்துறையில் நுழையக் காரணமாய் இருந்தது.

லூயி புனுவலுடன் இணைந்து ஆந்தலூசிய நாய் (Un Chien Andalou) என்று பெயரிடப்பட்ட 17 நிமிட நீளம் கொண்ட ஒரு குறும்படத்தை உருவாக்கினார். இந்தக் குறும்படத்தின் துவக்கக் காட்சியில், ஒரு சவரக் கத்தியை நன்கு கூர் தீட்டி, ஒரு பெண்ணின் கருவிழியின் மத்தியப் பகுதி கிழிப்பதாகவும், விழிக்கோளம் சிதைந்து சதைகள் தொங்குவதாகவும், அந்தக் காட்சிகள் அப்படியே நிலவை, இருட்டு இரன்டாக கிழிப்பதாகவும் தொகுக்கப்பட்டு படமாக்கப் பட்டு அடிமன வெளிப்பாட்டியத் தன்மை கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சி அமைப்பு இன்றும் வெகுவாக பேசப்படுகிறது. லூயி புனுவலுடன் சேர்ந்து மேலும் சில திரைப்படங்களில் பணி புரிந்தார்.

அதேபோல,ஆல்பிரட் ஹிட்ச்காக்குடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஹிட்ச்காக்கினுடைய ஸ்பெல்பவுண்ட் என்ற திரைப்படத்தின் கனவுக் காட்சிகளை வடிவமைத்தவர் தாலீ தான்.

வால்ட் டிஸ்னியுடன் சேர்ந்து அக்கடமி விருதுக்கு முன்மொழியப்பட்ட டெஸ்டினோ எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.

தகைமைகள்

[தொகு]
  • 1964 : கத்தோலிக்க இசபெல்லா தகைமைச் சிலுவைப் பதக்கம் (Knight Grand Cross of the Order of Isabella the Catholic)[6]
  • 1972 : அறிவியல், நுண்கலைக்கான பெல்ஜிய அரசவையின் இணை உறுப்பினர் ( Royal Academy of Science, Letters and Fine Arts of Belgium) [7]
  • 1981 : எசுப்பானிய விருதான மூன்றாம் சார்லசின் பதக்கம் (Knight Grand Cross of the Order of Charles III)][8]
  • 1982 : எசுப்பானிய அரசரான முதலாம் வான் கார்லோஸி இவருக்காக நினைவுச்சின்னம் ஒன்றினை உருவாக்கினார்
  • செவாலியே_விருதுக் குழுவின் உறுப்பினர்
  • பிரான்சு நாட்டின் கவின்கலை மன்றத்தின் இணை உறுப்பினர்.

தாலீயின் அருங்காட்சியகங்கள் மற்றும் நிரந்தர காட்சிக்கூடங்கள்

[தொகு]

ஸ்பெயினில் உள்ள கடலோனியாவில் தாலீ திரையரங்கு மற்றும் அருங்காட்சியகததில் தாலீயின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புளோரிடாவின் புனித பீட்டர்ஸ்பெர்க்கில் அமைந்துள்ள பெருந்தொழிலதிபர்களான ரெனால்டு மற்றும் எலீனார் மோர்சுச்குச் சொந்தமான தாலீ அருங்காட்சியகத்தில் 7 தலைசிறந்த படைப்புகள் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட தாலீயின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாட்ரிட்டில் உள்ள ரெயினா சோபியா (Reina Sofia Museum) அருங்காட்சியகத்திலும், கலிபோர்னியாவின் காபிஸ்ட்ரானோ வில் உள்ள சால்வதோர் தாலீ காட்சியகத்திலும் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் Espace Dalí என்ற பெயரிலும், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்தில் தாலீ உலகம் (Dalí Universe) என்ற பெயரிலும் தாலீயின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நியூ யோர்க் நகரத்தின் ரைக்கர்சு தீவிலுள்ள சிறைச்சாலையில் சிலுவையில் அரைதல் ( Crucifixion) எனும் ஓவியம் தாலீயால் 1965 ல் தானமாக அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியம் சிறைச்சாலையின் உணவு உண்ணும் கூடத்தில் 16 ஆண்டுகளாக தொங்கவிடப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாப்பு கருதி அந்த ஓவியம் சிறைச்சாலையின் முகவாயில் அறைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் 2003 ஆம் ஆண்டு அது திருடப்பட்டு இன்னும் மீட்கப்படாமல் உள்ளது.

தாலீயின் மீசை

[தொகு]
தாலீயின் மீசை

சல்வடார் தாலீயின் மீசை உலக அளவில் மிகவும் புகழ்பெற்றது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு ஓவியர் தியாகோ வெலாஸ்க்யூசின் மீசை இவருடைய மீசைக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. தாலீயின் மீசை அடிமன வெளிப்பாட்டியத்தின் ஒரு குறியீடாகவே திகழ்கிறது. தமிழ்த் திரைப்படம் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் மீசை வடிவமைப்பு இவருடைய மீசையை ஒத்ததே.

படக்காட்சி

[தொகு]
[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வதோர்_தாலீ&oldid=4040951" இலிருந்து மீள்விக்கப்பட்டது