உள்ளடக்கத்துக்குச் செல்

சமூகவுடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமவுடைமை அல்லது சமூகவுடைமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

பல்வேறு வடிவங்கள்

[தொகு]

சமூகவுடைமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.

மார்க்சிய சமூகவுடைமை

[தொகு]

மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இணைந்து எழுதிய பொதுவுடமை அறிக்கையில் (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):

  • இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
  • வரலாறு என்பது வர்க்கப் போராட்டமே (History as a Class struggle)
  • பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)

மார்க்சிய சமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.

மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது உருசியாவில் 1917ல் நடைபெற்ற போல்செவிக் புரட்சி.

மக்களாட்சி சார் சமூகவுடைமை

[தொகு]

சமவுடைமை என்ற இலக்கை மக்களாட்சி மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சி சார் சமவுடைமை (Democratic Socialism).

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

சந்தை சமூகவுடமை

[தொகு]

உற்பத்தி காரணிகள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், எனினும் அவை தடையில்லா அங்காடிச் சக்திகளுக்கு (Market Forces) உட்பட்டே இயங்க வேண்டும் என்ற பொருளியல் அமைப்பு தான் சந்தைசார் சமூகவுடமை (Market Socialism) ஆகும். அரசுடைமை நிறுவனங்கள் ஈட்டும் இலாபம், ஒருசிலரின் கைகளில் குவியாமல், மக்களுக்கு சமமாக பகிரும் வழிகளாக:

  • இலாபத்தின் பங்கை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்,
  • இலாபத்தை பொது நிதியாக (public finance) மக்கள் நலனுக்கு பயன்படுத்துதல்,
  • இலாபத்தை சமூக பங்காக (social dividend) மக்களுக்கே நேரடியாக பகிர்ந்தளித்தல்

போன்ற முறைகளை பரிந்துரைக்கின்றது.

திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு

[தொகு]

உற்பத்தி காரணிகளை பொதுவுடமைகளாக வைத்துக்கொண்டு பொருளியல் திட்டமிடுதலின் வழியாக உற்பத்தி மற்றும் பகிர்வை கட்டுப்படுத்தும் அமைப்பு.

அனைத்து சமவுடைமை நாடுகளிலும் பயன்படுத்தப்படும் முறை. குறிப்பாக இது சோவியத் ஒன்றியம் உருவாக்கிய அமைப்பு. 1930களில் ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது.

சமவுடைமை முன்வைக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு வாதங்கள்

[தொகு]

முதலாளித்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடுகளால் ஏற்படும் தீங்குகளாக சமவுடைமைவாதிகள் கூறுபவை:

  • முதலாளித்துவம் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கின்றது.
  • இலாபம் மற்றும் செல்வம் சிலரின் கைகளில் மட்டுமே குவிகின்றது.
  • உழைப்புச்சுரண்டல்
  • தலையிடா கொள்கை பின்பற்றும் அரசுகளால் சமூகத் தேவைகள் புறக்கணிக்கப் படுகின்றன.
  • கட்டுப்பாடற்ற வணிகக் கொள்கை பின்பற்றப் படுவதனால் வீழ்ச்சி மற்றும் பெருமந்தங்கள் உருவாகின்றன.

சமூகவுடைமை நிகழ்வுகள்

[தொகு]

சமூகவுடைமை கோட்பாடுகளின் தாக்கத்தால் உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்று கூடல், மக்கள் புரட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ள.

முதலாவது பன்னாட்டு அமைப்பு

[தொகு]

சமவுடைமை கோட்பாட்டின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் (International Workingmen Association). இது முதலாவது பன்னாட்டு அமைப்பு (First International) என்று அழைக்கப்படுகிறது. இருவேறு அணிகளின் கருத்தியல் வேறுபாடுகளின் காரணமாக கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும், குறுகிய காலத்திலேயே, ஐரோப்பாவின் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.

இரண்டாம் பன்னாட்டு அமைப்பு

[தொகு]

1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889ல் இரண்டாம் பன்னாட்டு அமைப்பு (Second International) நடைபெற்றது. மார்க்சிய சிந்தனைகளுக்கு ஆதரவு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இதில் பல்வேறு சமவுடைமை கட்சிகளை ஒருகிணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

உருசிய போல்சிவிக் புரட்சி

[தொகு]

1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக இரண்டாம் நிக்கலாஸ் அரியணையிலிருந்து வெளிளியேற்றப் பட்டதற்கு மிக முக்கியமாக விளங்கியது சமூகவுடைமை இயக்கங்களே. சார் மன்னரின் வீழ்ச்சிக்குப் பின் கெரன்சிகியின் தலைமையில் தற்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர், கெரன்சிகியின் அரசை வீழ்த்தி விளாதிமிர் லெனின் தலைமையில் போல்சிவிக்குகள் சமவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையில் அரசமைத்தனர். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோருக்குப் பின்னர் மிக முக்கியமான சமவுடைமை கொள்கையாளராக அறியப்பட்டவர் லெனின்.

சமவுடைமை நாடுகள்

[தொகு]

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு தருணங்களில் தங்களை சமவுடைமை நாடுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளன. சோவியத்து உருசியாவின் வெற்றியினால் ஈர்க்கப்பட்டு தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்திக்கொண்டன. இந்நாடுகளை இரு வகைகளாக பார்க்கலாம்

  1. மார்க்சிய-லெனினிய சமவுடைமை நாடுகள்.
  2. பிற சமவுடைமை நாடுகள்.

மார்க்சிய-லெனினிய சமவுடைமை நாடுகள்

[தொகு]

இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடைமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடைமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன.

பிற சமவுடைமை நாடுகள்

[தொகு]

இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடைமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.

சமவுடைமையும் மூன்றாம் உலகநாடுகளும்

[தொகு]

1917 இல் இரஷ்யா ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்பட்டது. ஐரோப்பிய நாடு என்ற அடையாளம் இல்லாமல் இருந்தது. எனினும், இரஷ்ய உளவியல் தன்மைகள், கீழை நாட்டு மாந்தர்களின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இரஷ்ய கிறித்தவம் கத்தோலிக்க, சீர்திருத்த கிறித்தவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, பழைமைவாத கிறித்தவத்தைப் பின்பற்றி வந்தது. ஏனெனில், கத்தோலிக்கக் கிறித்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சியாளர்களைத் தழுவிக் காணப்பட்டது. அதுபோல், சீர்திருத்த கிறித்தவம் நவீன ஐரோப்பிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கி செயற்பட்டது. பழமைவாத கிறித்தவம் மட்டுமே ரஷ்ய பூர்வீகத்தின் தூய்மையை தன்னகத்தே கொண்டு விளங்கியது. இத்தகைய சூழலில் சமவுடைமைப் புரட்சி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவே பல்வேறு சமவுடைமையாளர்கள் நம்பினர்.[1]

இரஷ்யாவில் நூற்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழ்ந்து வந்தன. ஜார் மன்னரின் ஆட்சியானது, தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்றார் லெனின். அவர், அக்டோபர் புரட்சியானது அடிமைப்பட்டுக் கிடக்கும் தேசிய இனங்களை விடுதலை செய்யும் என்றும் புரட்சியின் போது அறிவித்தார். 1917 டிசம்பர் 31 ஆம் நாள் முடிந்து மறுநாள் புத்தாண்டு அன்று பின்லாந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனிநாடானது.

லெனின் ஆசிய மக்களின் ஆதரவாளராகக் காணப்பட்டார். அடிமைக்குள்ளாக்கப்பட்ட ஆசிய தேசிய இனங்கள் எழுச்சி அடைவதை அவர் பெரிதும் எதிர்நோக்கினார். அனைத்துலக அரசியலில் ஆசிய தேசிய இனங்கள் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அடையும் என்று நம்பினார். இவரது இரண்டு கருத்தியல்கள் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தோன்றிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு முக்கியப் பங்காற்றின. அவை: ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள் ஆகும். இவற்றுள், ஏகாதிபத்தியம், உலக முதலாளியத்தின் உருவாக்கத்திலும் நிலைகொள்ளலிலும் காலனிய நாடுகளின் நிலை பற்றியது. இரண்டாவது, ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியில் தேசிய விடுதலை இயக்கங்களின் பங்களிப்புகள் குறித்ததாகும். இதில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்னும் கருத்து முக்கியமானது.[1]

லெனின், உலக முதலாளித்துவத்தை ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம் தனியாக நின்று வீழ்த்திவிடமுடியாது உறுதியாக இருந்தார். தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியில் உலக முதலாளித்துவம் கடுமையாகப் பலவீனப்படும் என்று எண்ணினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தேசிய விடுதலை இயக்கங்களின் எழுச்சியினைச் சமவுடைமைச் சமூகம் போதிய அளவு அங்கீகரிக்கப்படவில்லை. தேசிய விடுதலை இனங்கள் பற்றிய லெனினது பார்வை புறந்தள்ளப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான பனிப்போரில் சோவியத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமே விடுதலை பெற்ற நாடுகளின் தலையாயப் பணியாக அமைந்தது. மூன்றாம் உலக நாடுகள் சமவுடைமையின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், மூன்றாம் உலக நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை அவற்றிற்குரிய தனித்த பண்புகளுடன் பேச உலக கம்யூனிச இயக்கம் முன்வரவில்லை.[1]

மூன்றாம் உலக நாடுகளில் தெற்கு ஆசியத் துணைக்கண்டத்தின் இன்றியமையாத சமூக வடிவமாக சாதி அமைப்பு உள்ளது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசியல், பண்பாடு, சமயம், பொதுவாழ்வு, மறைமுக வாழ்வியல் என அனைத்திலும் சாதியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.சாதிக்கு, வலுவான, வரலாற்றுரீதியான தொடர்பு இருப்பது வெளிப்படை. தெற்கு ஆசியாவின் எல்லா பகுதிகளிலும் சாதி காணப்படுகிறது.[2] மார்க்சிய வர்க்கப் போராட்டத்திற்கு அதிகம் பொருந்தக்கூடிய நாடு இந்தியா என்பார் அம்பேத்கர். சரியான திசையில் பயணித்தால், ரஷ்யாவைவிட எளிதாக இந்தியாவில் ஒரு புரட்சியை நிகழ்த்திவிட முடியும் என்று எடுத்துரைத்தார். இவர், சாதி என்ற சொல்லுக்குப் பதிலாகப் பல இடங்களில் வர்க்கம் என்பதைத் தம் எழுத்துக்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். இவர், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்னும் நூலில் சாதிக்கு எதிராகப் பௌத்தம் நடத்திய போராட்டங்களையும் அவற்றை முறியடித்து சாதி அமைப்பு நிறுவப்பட்ட வரலாற்றையும் பதிவுசெய்துள்ளார்.[2] இந்தியாவிற்கு, சமவுடைமை அரசே பொருத்தமாக இருக்கும் என்கிறார். இதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் முதலானவற்றை அரசுடமைப்படுத்துவது இன்றியமையாததென அவர் எடுத்துரைத்துள்ளார். சமவுடைமைக் கொள்கைக்கு மார்க்சுக்கு இணையாக கௌதம புத்தரை முன்மொழிந்து, அவர் தனது உரையாடல்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.[2] அதுபோல், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்தாம் உலகஅளவில் மிக அடர்த்தியான பண்பாட்டுப் பரப்பைக் கொண்டவையாகும். தொல்பழங்குடிப் பண்பாடுகள், நாகரிகங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதங்கள் ஆகியன இந்நாடுகளில் விரிந்து காணப்படும். இவற்றிற்கிடையில் பொதுவுடைமைவாதிகள், பல வேளைகளில் அந்நியப்பட்டுக் காட்சியளிக்கின்றனர். அதாவது, இப்பண்பாடுகளின் மீதான தமக்கிருக்கும் உரிமையையும் அவற்றைத் தன்வயப்படுத்திக்கொள்ளும் கடமையையும் உணராதவர்களாகக் காணப்படுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "சோசலிச பாதையில் 100 ஆண்டு பயணம்". பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
  2. 2.0 2.1 2.2 2.3 "மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரிகள் தேங்கிப் போனது ஏன்?". பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகவுடைமை&oldid=3431022" இலிருந்து மீள்விக்கப்பட்டது