உள்ளடக்கத்துக்குச் செல்

குருதியியல் புற்றுநோய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதியியல் புற்றுநோய்கள்
Micrograph of a plasmacytoma, a hematological malignancy.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10C81.-C96.
ஐ.சி.டி.-9200-208
ஐ.சி.டி.-ஒ9590-9999
ம.பா.தD019337

குருதியியல் புற்றுநோய்கள் அல்லது இரத்தவியல் புற்றுநோய்கள் (Hematological malignancy) என்பது குருதி, என்புமச்சை, நிணநீர்க்கணு ஆகியவற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வகைகளாகும். இவை மூன்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை ஊடாக மிக நெருங்கிய தொடர்புடவையாக இருப்பதனால், இவற்றில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் புற்றுநோய், அனேகமாக மற்றைய இரண்டையும் சேர்த்து பாதிக்கும்.
திடமான/திண்மக் கட்டிகளில் (solid tumour) பொதுவாக நிறப்புரி இடமாற்றம் (chromosomal translocation) நிகழ்வதில்லை. ஆனால் குருதிப் புற்றுநோய்க்கான பொதுவான காரணி இந்த நிறப்புரி இடமாற்றமேயாகும். இந்த நோயை பொதுவாக புற்றுநோயியல் (oncology) இல் நிபுணத்துவம் பெற்றவர்களே சிகிச்சையளிப்பர்.

நோய்க்காரணிகள்

[தொகு]

புற்றுநோய்க்கான நோய்க்காரணிகளை சரியாக அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஆனால் சில சூழ் இடர்க் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • புகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல்:இது அனேகமான புற்றொநோய்களுக்கு ஒரு காரணியாக கூறப்படுகின்றது போலவே இரத்தவியல் புற்றுநோய் வகைகளையும் ஏற்படுத்தும் காரணியாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் புகைப்பவர்களில் பலருக்கும் இந்நோய் வராமல் இருப்பதையும், நோய் வந்தவர்களில் பலர் புகைக்காதவர்களாகும் இருப்பதையும் அறிய முடிகின்றது.
  • பென்சீன், Formaldehyde போன்ற சில வேதிப்பொருட்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்தப்படும்போது அது ஒரு சூழ் இடர் காரணியாக மாறலாம். பொதுவாக குறிப்பிட்ட சில வேலைத்தளங்களில் இவ்வகை வேதிப்பொருட்களை அடிக்கடி தொடவோ, மூச்சியக்கத்தால் உள்ளெடுக்கவோ வேண்டி ஏற்படலாம். ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இவ்வகையான நோயாளிகள் இருக்கின்றார்கள்.
  • கதிரியக்கத்திற்கு தொடர்ந்து அதிகளவில் வெளிப்படுத்தப்படுபவர்களிலும் இந்நோய்க்கான சூழ் இடர் இருக்கலாம். ஆனால் சாதாரணமாக நோய் ஆய்வுறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் எக்ஸ் கதிர் சோதனை, வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி சோதனை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான கதிரியக்கம் இந்நோயை ஏற்படுத்தப் போதுமானதல்ல. அதனால் இவ்வாறான சோதனைகளால் இந்நோய் வருவதற்கான சாத்தியம் குறைவே.
  • வேதிச்சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் பிந்திய நிலையில் மீண்டும் புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம் என நம்பப்படுகின்றது. இம்மருந்துகளுடன், கதிரியக்கச்சிகிச்சையும் சேரும்போது மீண்டும் புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கின்றதாக நம்பப்படுகின்றது.
  • சில தீ நுண்மங்களும் புற்றுநோயை ஏற்படுத்தலாம். எடுத்துக்காட்டாக T-cell லூக்கீமியா வைரசு 1 (HTLV-1).
  • டெளன் நோய்க்கூட்டறிகுறி, மற்றும் இதுபோன்ற நிறப்புரி மாற்றத்தால் ஏற்படும் சில நோய்களும் இந்த புற்று நோய்களுக்குரிய சூழ் இடரை அதிகரிக்கின்றது.
  • நெருங்கிய உறவினரான பெற்றோர், சகோதரர், குழந்தைக்கு இந்நோய் இருக்குமாயின், அவர்களுக்கும் சூழ் இடர் அதிகமாகும்.

நோய் ஆய்வுறுதி செய்தல்

[தொகு]

இந்நோயை ஆராய்ந்தறிய முழுமையான குருதி எண்ணிக்கை (Complete blood count), குருதிப்படலம் (blood film/smear) என்பவற்றை ஆய்வு செய்தல் மிக அவசியமாகும். ஒளி நுண்ணோக்கியில் (light microscope), புற்றுநோய் உயிரணுக்கள் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு பொதுவாக அறுவைச் சிகிச்சை மூலம் உயிரகச்செதுக்கு அல்லது துணித்தாய்வு (biopsy) பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். என்பு மச்சையில் இருந்தும் இவ்வாறான உடலிழையப் பரிசோதனை மாதிரிகள் பெறப்படும். இம்மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி, நுண்ணோக்கியில் சோதனை செய்து, புற்றுநோயின் தன்மை ஆராயப்படும்.

சிகிச்சை

[தொகு]

குருதிப் புற்றுநோயானது மிகவும் அவசரமாகவும், அவதானமாகவும் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும். குருதி மாற்றீடு (blood transfusion) ஒரு வகை சிகிச்சை முறையாகும். முன்னைய மருத்துவ முறைகளில் 'முழுமையான குருதி மாற்றீடு' செய்யப்பட்டது. ஆனால் தற்போது செங்குருதியணு, வெண்குருதியணு, குருதிச் சிறுதட்டுக்கள், குருதி நீர்மம் [Blood plasma), குருதி உறைவிற்கான காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் பயன்படுத்தப்படும். இந்நோய் மேலும் தீவிரமடைகையில் வேதிச்சிகிச்சை (chemotherapy), கதிரியக்கச்சிகிச்சை (radiation therapy), நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை (Immunotherapy) போன்றனவும் பயன்படுத்தப்படும். அத்துடன் சில நிலைமைகளில் நோயாளியின் உடல்நிலை, வயது என்பவற்றைப் பொறுத்து என்புமச்சை மாற்றுறுப்பு ஊன்றுதல் (Bone marrow transplantation) சிகிச்சையும் வழங்கப்படும்.
இவ்வாறு சிகிச்சை வழங்கப்பட்டு பகுதியாகவோ, முழுமையாகவோ குணமடைந்தாலும், அவர்களை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையான புற்றுநோய்கள் மீள வரக்கூடிய சாத்தியங்களை ஆராய்தல் அவசியம். சில சமயம், வழக்கமாக இல்லாவிடினும், இங்கு வழங்கப்படும் சிக்கிச்சைகளான வேதிச்சிகிச்சை, கதிரியக்கச்சிகிச்சை போன்றவற்றின் பக்கவிளைவுகளால் வேறுவகைப் புற்றுநோய்கள் உருவாதலுக்கான சந்தர்ப்பமும் உண்டு. எனவே சிகிச்சை வெற்றியளித்தாலும் கூட அவர் தொடர்ந்து முன்னரே நிர்ணயம் செய்யப்படும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]