உயிரகச்செதுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூளை உயிரகச்செதுக்கு

உயிரகச்செதுக்கு அல்லது துணித்தாய்வு அல்லது திசுப் பரிசோதனை (Biopsy) என்பது நோயை ஆய்வுறுதி செய்ய ஓர் உயிரினத்தின் உடலில் இருந்து உயிரணுக்கள், அல்லது இழையங்கள் அகற்றப்படும் ஒரு மருத்துவ சோதனை அல்லது அப்படியான மருத்துவ சோதனையில் பெறப்படும் மாதிரி ஆகும். இவ்வாறான உயிர்ச்செதுக்கை ஆராய்ந்தறிவதன் மூலம் ஒரு நோய் இருப்பதையோ அல்லது ஒரு நோய் அதிகரிப்பதை உறுதிப்படுத்தவோ முடிகின்றது. இந்த உயிரகச்செதுக்கின் மூலம் பெறப்படும் இழையங்கள் தகுந்த செயல்முறைகளின் பின்னர், ஒரு நோயியலாளரால் நுண்ணோக்கியில் அவதானிக்கப்பட்டு, நோய் பற்றி ஆராயப்படும். அத்துடன் சில வேதியியல் முறையிலும் ஆராயப்படலாம். இது நோயியல் தொடர்பான ஒரு மருத்துவ நடைமுறையாகும்.

பல்வேறு வகையான நோய்களை இழையவியல் அடிப்படையில் ஆய்வு செய்து நோய் தொடர்பான ஆய்வுறுதி செய்ய உதவும். ஏனைய மருத்துவச் சோதனைகளில், புற்றுநோயாக இருக்கக்கூடும் என ஐயுறும்போது, குறிப்பிட்ட உடற்பகுதியிலிருந்து சிறிதளவு இழையத்தினை அகற்றி நுண்நோக்கியின் துணையுடன் நோய், அதற்கான காரணம், நோயின் நிலை ஆகியவற்றை நுணுகி ஆய்வு செய்யப்படுகிறது. புற்றுநோயினை உறுதிப் படுத்த இச்சோதனையே அவசியம்.

கட்டி (tumour) அல்லது ஐயத்துக்கிடமான பகுதி முழுமையாக அகற்றப்படலாம். இது அகழ்ந்தெடுக்கும் உயிரகச்செதுக்கு (Excisional biopsy) எனப்படும். நோய் என்ற ஐயத்துக்கிடமான பகுதியில் ஒரு வெட்டோ, கீறலோ இடப்பட்டு இழையவியல் அமைப்பு பாதுகாக்கப்பட்ட நிலையில் இழையத்தின் ஒரு பகுதி மட்டும் பெறப்படுமாயின் அது கீறல் உயிரகச்செதுக்கு (incisional biopsy) எனப்படும். சில சமயம் இழையவியல் அமைப்பு கருத்தில் கொள்ளப்படாமல் நீர்ம அல்லது திண்ம இழையம் ஊசி மூலம் குற்றி பெறப்படுமாயின் அது ஊசி உறிஞ்சல் உயிரகச்செதுக்கு (Needle biopsy) எனப்படும்.

வரலாறு[தொகு]

அராபிய மருத்துவரான அபுல்காசிம் (1013-1107) என்பவர் மருத்துவ ஆய்வறிவுக்கான உயிரகச்செதுக்கை எடுத்தார். இது தைராய்டு சுரப்பி யில் ஏற்பட்ட ஒரு கழலையிலிருந்து ஊசியால் குற்றி பெறப்பட்ட உயிரகச்செதுக்கு ஆகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Anderson, J. B., Webb, A.J.: Fine-Needle Aspiration Biopsy and the Diagnosis of Thyroid Cancer. British Journal of Surgery 74:292-6, 1987


"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரகச்செதுக்கு&oldid=1496226" இருந்து மீள்விக்கப்பட்டது