கல்பனா லஜ்மி
கல்பனா லஜ்மி | |
---|---|
பிறப்பு | 1954 |
இறப்பு | 2018 (அகவை 63–64) |
பணி | திரைப்பட படைப்பாளி |
உறவினர்கள் | குரு தத் (மாமா) ஆத்மா ராம் (மாமா) |
கல்பனா லஜ்மி (Kalpana Lajmi 1954-2018) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். கல்பனா ஒரு சுயாதீன திரைப்பட தயாரிப்பாளராக இருந்தார். இந்தியாவில் இணை சினிமா என்று அழைக்கப்படும் யதார்த்தமான, குறைந்த செலவில் தயாரிக்கபட்ட படங்களில் அதிகம் பணியாற்றினார். இவரது படங்கள் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டவை. இவர் பூபேன் அசாரிகாவுக்கு நீண்ட காலம் மேலாளராக இருந்தார். இவர் 2017 இல் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனால் 2018, செப்டம்பர் 23 அன்று தனது 64 வது வயதில் இறந்தார். [1]
வரலாறு
[தொகு]கல்பனா லஜ்மி ஓவியர் லலிதா லஜ்மி மற்றும் கடற்படை கேப்டன் கோபி லஜ்மி ஆகியோரின் மகளாவார். [2] மேலும் இவர் திரைப்படப் படைப்பாளி குரு தத்தின் மருமகள் ஆவார். இவர் மூத்த திரைப்பட இயக்குநர் சியாம் பெனகலின் கீழ் உதவி இயக்குநராக அறிமுகமானார். இவர் படுகோன் குடும்பத்தின் உறவினரும் ஆவார். இவர் சியாம் பெனகலின் பூமிகா: தி ரோல் படத்தில் உதவி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இவர் 1978 இல் டிஜி மூவி பயனிர் என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் A Work Study in Tea Plucking (1979) மற்றும் Along the Brahmaputra (1981) போன்ற ஆவணப்படங்களை இயக்கினார். சபனா ஆசுமி, நசிருதீன் ஷா, பரூக் சேக் ஆகியோர் நடித்த ஏக் பால் (ஒரு கணம்) திரைப்படத்தின் மூலம் 1986 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநராக அறிமுகமானார். இவர் படத்தைத் தயாரித்து, திரைப்பட எழுத்தாக்கத்தில் கலந்து கொண்டார். மேலும் குல்சாருடன் இணைந்து படத்திற்கான திரைக்கதையை எழுதினார்.
பின்னர் திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகி தன்வி ஆஸ்மி நடித்த லோஹித் கினாரே (1988) என்ற தனது முதல் தொலைக்காட்சித் தொடரை இயக்கச் சென்றார். 1993 இல் டிம்பிள் கபாடியா நடிப்பில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ருடாலி படத்தின் மூலம் மீண்டும் திரைத் துறைக்குத் திரும்பினார். கபாடியா தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். படத்தை இயக்கியதற்காக கல்பனா பாராட்டுகளைப் பெற்றார்.
இவரது அடுத்த படமான தர்மியான்: இன் பிட்வீன் (1997) கல்பனாவாலேயே இயக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கிர்ரான் கெர், தபூ ஆகியோர் முக்கிய மற்றும் வலிமையான பாத்திரங்களில் நடித்தனர்.
2001 இல் இவரது அடுத்த படம் தமன்: எ விக்டம் ஆப் மெரீடியல் வயலன்ஸ் ஆகும். இப்படம் இந்திய அரசால் விநியோகிக்கப்பட்டது. மேலும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. கல்பனாவின் இயக்கத்தில் நடித்த நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது இது இரண்டாவது முறையாகும். இந்த முறை ரவீணா டாண்டன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதற்கு முன்பு அவர் இவ்விருதைப் பெற்றதில்லை, மேலும் கல்பனா அவருள் மறைந்திருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்தார் என்ற பெருமையைப் பெற்றார்.
இவரது அடுத்த படம், கியோன்? (2003) கவனிக்கப்படாமல் போனது. அதே சமயம் இவரது கடைசி படமாக 2006 இல் சுஷ்மிதா சென் கிராமத்து விபச்சாரியாக நடித்த சிங்காரி திரைப்படம் ஆகும். சிங்காரி - வணிக ரீதியாக தோல்வியுற்றது.
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பணி(கள்) |
---|---|---|
1978 | டிஜி மூவி பயனிர் | இயக்குநர் |
1979 | எ ஒர்க் ஸ்டடி இன் டீ பிளக்கிங் | இயக்குநர் |
1981 | அலாங் த பிரம்மபுத்திரா | இயக்குநர் |
1986 | ஏக் பால் | இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் |
1988 | லோஹித் கினாரே | இயக்குநர் |
1993 | ருடாலி | இயக்குனர், எழுத்தாளர் |
1997 | தர்மியான்: இன் பிட்வின் | இயக்குநர், தயாரிப்பாளர் |
2001 | தாமன்: எ விக்டம் ஆப் மெரீடியல் வயலன்ஸ் | இயக்குநர், எழுத்தாளர் |
2003 | கியோன்? | இயக்குநர், தயாரிப்பாளர் |
2006 | சிங்காரி | இயக்குர், தயாரிப்பாளர், எழுத்தாளர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmmaker Kalpana Lajmi, director of Rudaali, dies in Mumbai at 64". Hindustan Times. 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
- ↑ "Kalpana Lajmi: A life in focus | India News - Times of India". 25 July 2003. https://timesofindia.indiatimes.com/kalpana-lajmi-a-life-in-focus/articleshow/94391.cms.
வெளி இணைப்புகள்
[தொகு]- 21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்
- 20 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் தொழிலதிபர்கள்
- இந்தியப் பெண் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- 21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்
- 20-ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்
- இந்தியப் பெண் திரைக்கதை எழுத்தாளர்கள்
- இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்
- 2018 இறப்புகள்
- 1954 பிறப்புகள்