ஓப்பெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓப்பெக் அமைப்பின் சின்னம்
ஓப்பெக் நாடுகள்
  தற்போதுள்ள உறுப்பு நாடுகள்
  முன்னாள் உறுப்பு நாடுகள்

ஓப்பெக் (OPEC - Organization of the Petroleum Exporting Countries) என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு அல்லது பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு என்பதன் சுருக்கப் பெயராகும்.

இந்தக் கூட்டமைப்பில் பன்னிரண்டு நாடுகள் இருக்கின்றன.[1][2] அவை:

 1. அல்சீரியா
 2. அங்கோலா
 3. எக்குவடோர்
 4. ஈரான்
 5. ஈராக்
 6. குவைத்
 7. லிபியா
 8. நைச்சீரியா
 9. கத்தார்
 10. சவுதி அரேபியா
 11. ஐக்கிய அரபு அமீரகம், மற்றும்
 12. வெனிசுவேலா

ஆகும்.

இந்தோனீசிய நாடும் இக்கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தாலும், 2008 ஆம் ஆண்டு முடிவில் அது இக்கூட்டமைப்பில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட முடிவெடுத்துள்ளது. பொலிவியா, சூடான், சிரியா ஆகிய நாடுகளுக்கும் இக்கூட்டமைப்பில் சேர அழைப்பு விடப்பட்டுள்ளது.[3] அட்லாண்டிக் பகுதியில் கணிசமான அளவு எண்ணெய் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், பிரேசில் நாடும் இவ்வமைப்பில் சேருவது பற்றி யோசித்து வருகிறது.[4]

ஓப்பெக்கின் குறிக்கோள்[தொகு]

1965 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு வியன்னா நகரில் தனது தலைமை அலுவத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு தனது உறுப்பின நாட்டு எண்ணெய் வள அமைச்சர்களுடன் வழக்கமான கூட்டங்களைக் கூட்டி வருகிறது.

தனித்தனியாகவும், ஒரு குழுமமாகவும் இந்நாடுகள் தங்களது நலத்தைப் பேணுவதற்கான சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதும், உலக அரங்கில் பாறைநெய் விலை நிலையாக இருப்பதற்கான வழிமுறைகளைக் காண்பதும் இக்கூட்டமைப்பின் முதன்மையான குறிக்கோள் என்று இதன் சட்டதிட்டம் கூறுகிறது. அதோடு எல்லாச் சமயங்களிலும் உற்பத்தி நாடுகளின் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அவர்களின் வருமானம் நிலையாக இருப்பதை உறுதி செய்வதும், நுகரும் நாடுகளுக்கு இடையூறில்லாமல் பாறைநெய்யை அனுப்புவதும், பாறைநெய்த் தொழிலில் ஈடுபடுவோருக்கு நியாயமான இலாபம் கிடைக்கச் செய்வதும் இவர்களின் குறிக்கோள்களில் அடங்கும்.[5]

வரலாறு[தொகு]

வியன்னாவில் இருக்கும் ஓப்பெக் தலைமை அலுவம்

ஓப்பெக் போன்ற அமைப்பை உருவாக்க முதல் அடியை எடுத்து வைத்தது வெனிசுவேலா நாடு தான். 1949-ஆம் ஆண்டு வெனிசுவேலா, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளை அணுகி, அவர்களுக்குள் நெருங்கிய உறவும் தொடர்பும் பேண வழிமுறைகளைக் கண்டறியலாம் என்று ஆலோசனைகளை எடுத்து வைத்தது. 1960-ல் வெனிசுவேலாவின் ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் உவான் பப்லோ பெரேசு அல்பான்சோவும் சவுதி அரேபிய ஆற்றல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அப்துல்லா அல்-தரிக்கியும் முடுக்கியதன் விளைவாக, ஈராக், ஈரான், குவைத், சவுதி அரேபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் அரசுகள் பாக்தாத் நகரில் சந்தித்து, அவரவர் நாட்டில் உற்பத்தியாகும் பாறைநெய்யின் விலையைக் குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தினர். 1960 களில் அமெரிக்க அதிபராயிருந்த டுவைட் டி. ஐசனாவர் இயற்றிய சட்டத்தின் காரணமாக வெனிசுவேலாவின் எண்ணெய்க்கு வரம்பு விதித்தும், மெக்சிக்கோ, கனடா நாடுகளின் எண்ணெய்க்குச் சார்பாகவும் இருந்த காரணத்தால் உந்தப்பட்டு, ஈராக்கின் பாக்தாத் நகரில் ஓப்பெக் அமைப்பு உருவாக்கப் பட்டது. ஐசனோவர் தங்களது தேசியப் பாதுகாப்பு, மற்றும் போர்க்காலத்தில் ஆற்றலின் அணுக்கம் போன்ற காரணங்களைக் கூறினார். இதற்கு எதிர்வினையாக வெனிசுவேலாவின் அதிபர் ராமுலோ பெத்தன்கோர்ட், தங்களது எண்ணெய் வள வருமானமும் இலாபமும் பாதிக்காமல் இருப்பதற்காக எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளுடன் உறவு நாடினார்.

இந்தப் பின்னணியிலேயே ஓப்பெக் அமைப்பு உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் பாறைநெய்க் கொள்கைகளை ஒன்றுபடுத்துவதும் இதன் காரணங்களுள் ஒன்று. ஆரம்பத்தில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, மற்றும் வெனிசுவேலா என்னும் இவ்வைந்து நாடுகள் மட்டுமே இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன. பிறகு 1960இல் இருந்து 1975ற்குள்ளாக கத்தார், இந்தோனீசியா,லிபியா, ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, மற்றும் நைஜீரியா நாடுகள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டன. எக்குவடோர், கபான் நாடுகளும் பிறகு இதனுடன் இணைந்தன என்றாலும், எக்குவடோர் 1992ல் விலகிக் கொண்டது. ஆண்டொன்றுக்கு உறுப்பினர் சந்தாவான இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்ட முடியாமலோ கட்ட விரும்பாமலோ இந்நாடு விலகிக் கொண்டது. அதோடு, ஓப்பெக் நிர்ணயித்த உச்சவரம்பு தாண்டியும் தாங்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று விரும்பியது. இதே போன்ற காரணங்களால் கபான் நாடும் 1995ல் விலகிக் கொண்டது.

2007ல் அங்கோலா இணைந்து கொண்டது. இந்தோனீசிய உற்பத்திப் பற்றாக்குறையால் ஏற்றுமதிக்குப் பதிலாய் இறக்குமதி செய்யும் நாடாக மாறியதால், இவ்வமைப்பில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது.

ஈராக் போரை அடுத்து அந்நாட்டு நிர்வாகத்தைக் கையில் வைத்திருந்த காலத்தில் அமெரிக்காவும் இவ்வமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தது.

எண்ணெய் அரசியல்[தொகு]

நீண்டகாலப் பாறைநெய் விலை, 1861-2007 (orange line adjusted for inflation, blue not adjusted).

அரபு இசுரேல் சண்டைகள்[தொகு]

அரபு-இசுரேல் சச்சரவுகளின் தீராத நிலை உண்டாக்கிய எதிர்வினையால் ஓப்பெக் அமைப்பு ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருமாறியது. 1967-இன் ஆறு நாள்ப் போரின் பின் ஓப்பெக்கின் அரபு நாடுகள் தங்களுக்கு என்று தனியே ஒரு அமைப்பை உருவாக்கினர். அது Organization of Arab Petroleum Exporting Countries (OAPEC - அரபு ஓப்பெக்) என்று வழங்கப்பட்டது. இதன் மையக் கொள்கையானது, மேற்கு நாடுகளின் இசுரேல் ஆதரவு நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தலும் அழுத்தம் தருவதுமாக இருந்தது. எகிப்து, சிரியா போன்ற நாடுகளும், பாறைநெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் அடங்காவிட்டாலும், இசுரேல் எதிர்ப்புக் கொள்கையைப் பலப்படுத்தவென்று பின்னர் இவ்வமைப்பில் சேர்ந்து கொண்டன.

1973-இன் யோம் கிப்பூர் போர் அரபு நாடுகளின் எண்ணங்களை மேலும் வலுப்படுத்தியது. அப்போரில் எகிப்து, சிரியாவிற்கு எதிராகப் போரிட்ட இசுரேலுக்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததும், அவசர உதவிகள் செய்ததும் அரபு நாடுகளுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அதனால், இம்மேலை நாடுகளுக்குப் பாறைநெய் ஏற்றுமதி செய்வதில்லை என்று அரபு ஓப்பெக் முடிவு செய்தது.

பாறைநெய் சந்தைவிலை அதிருப்திகள்[தொகு]

அரபு-இசுரேல் சண்டை இப்பிரச்சினைகளுக்கு ஒரு காரணம் தான். அதற்கும் முன்னரே சில பிரச்சினைகள் மெல்ல மூண்டுகொண்டிருந்தன. மேற்கு நாடுகள் வருடம் ஐந்து விழுக்காடு எனத் தங்கள் ஆற்றல் நுகர்வை அதிகரித்துக் கொண்டு, பாறைநெய்க்குக் குறைந்த விலையையே இந்நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டு, அதே சமயம் தங்களது உற்பத்தியை உயர்ந்த விலையில் இவ்வுற்பத்தி நாடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஈரானின் ஷா முதலானோர் அழுந்தக் கூறினர். உலகில் இரண்டாவது பெரிய பாறைநெய் ஏற்றுமதியாளராகவும் அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடாகவும் ஈரான் அச்சமயத்தில் இருந்தது.

1973-இல் நியூயார்க் டைம்சு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஈரானின் ஷா இவ்வாறு கூறுகிறார்: "நிச்சயமாய் உலக எண்ணெய் விலை அதிகரிக்கத் தான் போகிறது. நீங்கள் எங்களுக்கு விற்கும் கோதுமையின் விலையை மூன்று மடங்கு அதிகரித்து விட்டீர்கள். சர்க்கரைக்கும் சிமெண்டுக்கும் இப்படியே. எங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கி அதனைத் தூய்வித்துப் பாறைவேதிகளாக நூறு மடங்கு விலையுயர்த்தி எங்களிடமே விற்கிறீர்கள். அதனால், நீங்கள் எங்களிடம் வாங்கும் எண்ணெய்க்கும் அதிக விலை தருவது தான் நியாயம். ஒரு பேச்சுக்குச் சொன்னால், பத்து மடங்குக்கும் மேல் நீங்கள் கட்ட வேண்டும்."[6]

இந்தப் பயமுறுத்தல்களும், பாறைநெய்யை ஒரு ஆயுதமாகவும் ஓப்பெக் பயன்படுத்த முனைந்ததும் அவர்களின் சக்தியைக் குறைக்கும் வகையிலேயே விளைவை ஏற்படுத்தியது. மேற்கு நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் தங்கள் உறவைப் பலப்படுத்துக் கொண்டனர். வடக்குக் கடல், மெக்சிக்கோ வளைகுடா போன்ற இடங்களில் கடலடியில் எண்ணெய் கண்டுபிடிப்பதை மும்முரமாகத் தொடர்ந்தனர். இதனால் உலக அரங்கில் பாறைநெய் விலையைக் கட்டுப்படுத்த ஓப்பெக் நாடுகளின் சக்தி குறைந்தது.

எண்பதுகளின் விலைச்சரிவு[தொகு]

ஓப்பெக்கின் ஏற்றுமதி வருவாய் 1971 - 2007.[7]

1980-க்குப் பிறகு பாறைநெய் விலை குறையத் தொடங்கியது. தொடர்ந்து ஆறு வருடங்கள் சரிந்த விலை 1986இல் மொத்தம் 46 விழுக்காடு குறைந்திருந்தது. அதிகரித்த உற்பத்தியும் குறைந்த தேவையுமே இச்சரிவிற்குக் காரணங்களாய் இருந்தன. இதன் காரணமாய் ஓப்பெக் நாடுகளின் பாறைநெய் ஏற்றுமதி வருமானம் குறைந்தது. அவை, தங்களது ஒற்றுமையையும் இழந்தன.

1990-1991-இன் வளைகுடாப் போருக்கு முன்னர் ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஓப்பெக் நாடுகள் எண்ணெய் விலையை அதிகரிக்க முயல வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால், ஈராக்கின் குவைத் மீதான படையெடுப்பும், ஈரான் ஈராக் போர் முதலியவையும் ஓப்பெக்கின் ஒற்றுமையைப் பெரிதளவும் குறைத்திருந்ததால், ஒன்றுபட்ட செயல்பாட்டில் குறையே ஏற்பட்டது. அதனால், எண்ணெய் உற்பத்தி குறித்த அச்சம் ஏதுமின்றி விலை மேலும் சரிந்துகொண்டே இருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் பாறைநெய்யின் விலை ஒரு பீப்பாய்க்கு ஏறத்தாழப் பத்து டாலர் என்னும் அளவிலேயே இருந்தது.

போர்களும் பாறைநெய் விலை அதிகரிப்பும்[தொகு]

வெனிசுவேலாவின் அதிபர் ஊகோ சாவேசு-இன் முயற்சியால் ஓப்பெக் நாடுகள் மீண்டும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் எண்ணெய் உற்பத்தியை 1998 முதல் குறைக்க ஆரம்பித்தனர். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் 2000-இல் சாவேசு ஓப்பெக் நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டினார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மீதான செப்டம்பர் 11 தீவிரவாதிகளின் தாக்குதல், அமெரிக்காவின் ஆப்கானிசுதான், ஈராக் படையெடுப்புகள், ஈராக் ஆக்கிரமிப்பு போன்றவற்றால், ஓப்பெக் நினைத்த அளவையும் விடப் பாறைநெய் விலை உயர்ந்துவிட்டது.

டாலரில் இருந்து யூரோவிற்கு[தொகு]

ஓப்பெக் நாடுகள் தங்கள் பண இருப்பை டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று 2007இல் எழுந்த பேச்சு[8] உலகப் பாறைநெய்ச் சந்தையில் பெரும் விளைவை ஏற்படுத்தியது. பாறைநெய்யின் விலை டாலரிலேயே வழங்கப் படுவதால், டாலரின் மதிப்பு சரியச் சரிய, எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்குக் கிடைத்த வருவாயின் மதிப்பும் குறைந்தது. இதனால், சந்தைப் பரிமாற்றத்தை யூரோவிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஈராக் முடிவு செய்திருந்தது. அதனை அடுத்துப் பிற ஓப்பெக் நாடுகளும் யூரோவிற்கு மாறுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தனர். இடையில் ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு அந்நாட்டை ஆக்கிரமித்த இடைக்கால அமெரிக்க அரசு ஈராக்கின் முடிவை மாற்றி, மீண்டும் டாலரிலேயே பரிமாற்றத்தைத் தொடர வைத்தனர். ஆனால், ஈரான், வெனிசுவேலா இரண்டும் இதே போன்று டாலரில் இருந்து யூரோவிற்கு மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

நாடுகளின் உற்பத்தி வரம்பு[தொகு]

ஓப்பெக் நாடுகளின் உற்பத்தி வரம்பும் உற்பத்தியும் (ஆயிரம் பீப்பாய்/நாள்) [9]
நாடு வரம்பு (7/1/05) உற்பத்தி (1/07) கொண்மம் (capacity)
 சவூதி அரேபியா 10,099 9,800 12,500
 அல்ஜீரியா 894 1,360 1,430
 அங்கோலா 1,900 1,700 1,700
 எக்குவடோர் 520 500 500
 ஈரான் 4,110 3,700 3,750
 ஈராக் 1,481
 குவைத் 2,247 2,500 2,600
 லிபியா 1,500 1,650 1,700
 நைஜீரியா 2,306 2,250 2,250
 கட்டார் 726 810 850
 ஐக்கிய அரபு அமீரகம் 2,444 2,500 2,600
 வெனிசுவேலா 3,225 2,340 2,450
மொத்தம் 29,971 29,591 30,330

புவி வெப்ப ஏற்றத்தை மட்டுப்படுத்த உற்பத்தி வரம்பு[தொகு]

புதைபடிவ எரிபொருளின் நுகர்வு பசுங்குடில் வளிம உற்பத்தி அதிகரிக்கவும் காரணமாக இருப்பதால், ஓப்பெக் நிறுவனம் சரியான உற்பத்தி உச்சவரம்பை நிர்ணயித்துக் கட்டுப்படுத்தினால் புவி வெப்பேற்ற விளைவுகளைக் குறைத்துக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.[10].

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓப்பெக்&oldid=3288591" இருந்து மீள்விக்கப்பட்டது