புதைபடிவ எரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதைபடிவ எரிபொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புவியின் மேற்பரப்பில் புதையுண்டிருக்கும் புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருட்கள் புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuels) எனப்படும். அவை எளிதில் ஆவியாகும் வளிமங்களான மெத்தேன், பாறைநெய் நீர்மங்கள், மற்றும் ஆவியாகாத கரி போன்ற திண்மப் பொருட்கள் என்று பல வகையாகக் கிடைக்கும். கரிம-நீரிய விகிதக் கணக்கில் ஒரு எல்லையில் அந்த விகிதம் குறைவான வளிமங்களும் மறு எல்லையில் அவ்விகிதம் அதிகமான கரி என்னும் திண்மமும் அடங்கும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன செடி கொடிகள் மற்றும் விலங்குகள் புதையுண்டு படிவப் பொருட்களாகி அதிலிருந்து உருவானவையே இந்த எரிபொருட்கள் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புவியின் அடியில் வெப்பமும் அழுத்தமும் இந்த இறந்த உயிரிப் பொருட்களின் மீது வினையாற்றி அதிலிருந்து உருவானவை என்னும் உயிர்வழித் தேற்றத்தை (biogenic theory) மிக்கேயில் லோமோனோசோவ் என்பவர் 1757-இல் முன்வைத்தார். இதற்கு மாறாக உயிரல்லாவழித் தேற்றம் (abiogenic theory) என்று வழங்கப்படும் ஒரு தேற்றமும் உண்டு. இயற்கை எரிவளி போன்ற எளிதில் ஆவியாகும் நீரியக்கரிமங்கள் எந்தவொரு உயிரிப் பொருளோடும் சம்பந்தமில்லாமல் உருவானவை என்று சொல்கிறது.

2005 ஆண்டுவாக்கில், உலகில், ஒரு ஆண்டிற்குத் தேவையான ஆற்றல் மூலங்களில் 86% புதைபடிவ எரிபொருட்களில் இருந்து பெறப்படுகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது. மிச்சத்தில் சுமார் 6.3% நீர் மின் ஆற்றலாகவும், சுமார் 6% அணு ஆற்றலாகவும் பெறப்படுகின்றன.

சிக்கல்கள்[தொகு]

புதைபடிவ எரிபொருட்கள் புதுப்பிக்க முடியாதவை. அவை உருவாகப் பல்லாயிரம் ஆண்டுக்காலம் தேவைப்படும். இந்த வளங்கள் உருவாகும் வேகத்தை விட அவற்றைப் பயன்படுத்தும் வேகம் அதிகமாக இருப்பதால், கால ஓட்டத்தில் இவ்வளம் குன்றி வருகிறது. பிற இயற்கைச் சூழல் சார்ந்த பிரச்சினைகளும் இதனால் ஏற்படுகின்றன. அதோடு வட்டார, உலகப் பிரச்சினைகளும் இந்த வளங்களைச் சார்ந்து ஏற்படுகின்றன. உலக எரிபொருள் தேவை பெருகப் பெருக, புதுப்பிக்கும் முறையிலான ஆற்றலையும் நோக்கித் தேடல்கள் தொடர்கின்றன.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஒரு வருடத்திற்கு உலக அளவில் 21.3 பில்லியன் டன்கள் கார்பன் டை-ஆக்சைடு வெளியேற்றப் படுகிறது என்று கணிக்கப் பட்டுள்ளது. இயற்கைச் செலுத்தங்களால் அதில் பாதியை மட்டுமே உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதால் சூழலில் கார்பன் டை-ஆக்சைடு வளிம அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. கார்பன் டை-ஆக்சைடு பசுங்குடில் வளிமங்களில் ஒன்று என்பதால், புவி வெப்ப ஏற்றத்திற்கும் (global warming) இது காரணமாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதைபடிவ_எரிமம்&oldid=1349931" இருந்து மீள்விக்கப்பட்டது