ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் (Unified Communications) என்பது தொலைபேசி அழைப்புகள், ஒளித்தோற்ற (video) அழைப்புகள், பல்வகை ஊடகங்கள் (multi-media) போன்றவற்றின் செய்தி கையாளும் மேலாண்மை செயலாற்றல் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது இணையத்தள வரைமுறையின் (Internet Protocol) அதித வளர்ச்சியால் உந்தப்பட்டு அதனுடனே வளர்ந்து வரும் தொழில்நுட்பம்.

கார்ட்னர் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தின் முதன்மைப் பலனை ஆராய்ந்து தெரிவு செய்திருக்கின்றது. இந்தத் தொழில்நுட்பம் மனிதகுலம் செய்திகள் பரிமாறிக் கொள்ளும் முறைகளில் தற்போது உள்ள கால தாமதத்தைக் குறைக்கும் என்பதே கார்ட்னர் நிறுவனத்தின் தெரிவு.

வரலாறு[தொகு]

மனிதகுலத்தின் உற்பத்தித் திறன், மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தின் வேகம் அவர்கள் தகவல் (information) மற்றும் தரவுகளை (data) பெற்று, அவற்றை ஆராய்ந்து, முடிவெடுத்து, அந்த முடிவுகளைச் செயலாற்றும் வேகத்தைப் பொறுத்தே இருக்கிறது.

நாகரீக மனிதன் ஒலி, ஒளி மற்றும் எழுத்து வடிவங்களில் தகவல் பறிமாறிக் கொள்கிறான். நேரடியாக ஒருவரை ஒருவர் கண்ணால் பார்த்து அல்லது ஒருவர் பேசுவதை மற்றவர் காதால் கேட்டுத் தகவல் பரிமாறிக் கொள்வது இயற்கை ஊடகங்கள் மூலமாகத்தான். இதற்கு மனிதர்கள் ஒரே காலம், மற்றும் இடத்தில் இருக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லாத பட்சத்தில் மனிதர்களுக்கு தகவல் பெற இடையூறாக இருக்கும் அடிப்படைக் காரணங்கள் காலமும் தூரமும் ஆகும். உதாரணமாக புறாக்களையோ, குதிரை மேல் சேவகர்களையோ செய்தி (message) அனுப்ப உபயோகித்த காலத்திலிருந்து இன்று வெகு தூரம் வந்து விட்டோம். தொலைபேசி என்ற தொழில்நுட்பம், தூரம் மற்றும் காலத்தால் ஏற்பட்ட இடையூறுகளைப் பெருமளவு ஒழித்து விட்டது. இணையத்தளம் என்ற தொழில்நுட்பம், காலம், நேரம் மற்றும் இடைத்தரகர்களால் வந்த இடையூறுகளை அகற்ற உதவியாக இருந்தது.

ஆனால் தொலைபேசிகளையும் இணையதளத்தையும் அளித்த அதே தொழில் நுட்பம் மனித குலத்திற்கு பல வகை தகவல் பறிமாற்றச் சாதனங்களையும், பல வகை தகவல் பறிமாற்ற வடிவங்களையும் மற்றும் ஊடகங்களையும் கொடுத்திருக்கிறது.

இணையத்தள வரைமுறையின் அசாத்தியத்தால் மனித குலத்திற்கு பல்வேறு புதிய ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன. செய்திப் பத்திரிக்கையில் தினசரி செய்திகளை அச்சிட்ட காகிதத்தில் படித்துக் கொண்டிருந்த நம்மில் பலர் இன்று கணினித் திரையில் அதே செய்திகளைப் படிக்கிறோம். அஞ்சல் வழி தபால் மூலம் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த நாம் இன்று அதே பயனைப் பெற மின்னஞல்களையும், குறுஞ்செய்திச் சேவைகளையும் பெரிதும் நம்புகிறோம்.

தொலைபேசி மூலம் தூரத்தில் இருப்போருடன் பேசிய நாம் இப்போது நகர்பேசி மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு பெறும் திறன் பெற்றிருக்கிறோம். இணையதள வரைமுறையும் சிலிக்கான் தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து நகர்பேசியை ஒரு கணினியின் திறனுக்கு ஈடாக ஏறக்குறைய உயர்த்தியிருக்கிறது. ஆகவே நகர்பேசி கம்பியில்லா ஒலி வழித் தொடர்புகளுக்கு மட்டும் ஆவன செய்யாமல், இன்று இணையத்தளத்தில் உலாவவும், மின்னஞ்சல் தகவல் தொடர்புகளுக்கும் ஆவன செய்யும் சாதனமாக வளர்ந்துள்ளது என்றால் மிகையாகாது.

இத்துணை வசதிகள் வந்தும் இன்னமும் காலமும், தூரமும் செய்யும் இடையூறுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக ஒருவர் ஒரு வணிக உரையாடலுக்காக தனது வாடிக்கையாளரைச் சந்திக்க தனது சிற்றுந்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அந்த வாடிக்கையாளர் ஒரு சிறிய தகவலைக் கொண்டு வருமாறு மின்னஞ்சல் மூலம் கேட்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தன்னிடம் மடிக்கணினியும் நகர்பேசியும் இருந்த போதிலும் சிற்றுந்தை ஓட்டிக் கொண்டே தனது மின்னஞசல்களைப் படிப்பது என்பது ஓட்டுனருக்கு இயலாத மற்றும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய செயல். ஆனால் தன் வாடிக்கையாளரின் வேண்டுகோள் தனக்கு உடனே கிடைக்கும் பட்சத்தில் ஓட்டுனரால் எதிர்வரும் சந்திப்பை அதிகப் பயனுள்ளதாக்கிக் கொள்ள இயலும். வாடிக்கையாளரின் நன்மதிப்பைப் பெற முடியும்.

வந்த செய்தியை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியாத இந்தப் பிரச்சினை எதனால் வருகிறது என்று யோசித்தால் பின்வருவது புலப்படும். தனக்கு வந்த செய்தி வரி வடிவத்தில் இருப்பதாலும் அதை தன் கண்களால் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் ஆனால் தன் கண்கள் சாலையைக் கவனிக்க முக்கியமாகத் தேவைப்படுவதாலும், கைகள் சிற்றுந்தை ஓட்டத் தேவைப் படுவதாலும் தன்னால் வந்த தகவலைப் உடனடியாகப் பெற்றுக் கொள்ள ஓட்டுனரால் இயலவில்லை. செய்தி வடிவத்தையும் ஊடகத்தையும் மாற்றித் தரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். எப்படியென்றால்,தொழில்நுட்பம் வரிவடிவத்தை ஒலிவடிவமாக மாற்றி, அதே தகவலை நகர்பேசி மற்றும் சிற்றுந்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் படித்துக் காட்ட உதவுமானால் மேற்கூறிய பிரச்சினை தீர்ந்து விடும். இத்தகைய தொழில்நுட்பம் நடப்பில் இருக்கிறது. இதுதான் ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகளின் முதல் படி எனலாம். இந்தத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைந்த செய்திப் பறிமாற்றமுறை (Unified Messaging) என்று அழைக்கிறார்கள்.

தகவல்கள் எந்தச் சாதனத்தில் இருந்தாலும் அல்லது எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை ஒரு தனிமனிதன் தேர்ந்தெடுக்கும் சாதனத்தில் வேண்டிய வடிவில் பெறுவது இன்னமும் முழுமையாகச் சாத்தியமாகவில்லை. ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் என்ற தொழில் நுட்பம் இதனைச் சாத்தியமாக்க முற்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]