எம். ஜி. ராமச்சந்திரன் இலங்கைப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஜி. ஆர். கொழும்பு வானூர்தி நிலையத்தில்

ம. கோ. இராமச்சந்திரன் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, பல நகரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.[1]இந்திய நடிகரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான எம். ஜி. ஆர். என ரசிகர்களால் அழைக்கப்படும் ம. கோ. ராமச்சந்திரன், பிற்காலத்தில் தமிழ் நாடு முதலமைச்சராக பதவி வகித்த போதிலும், இலங்கைப் பயணம் மேற்கொண்ட காலத்தில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கவில்லை.

எம். ஜி. ஆருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த பி. சரோஜாதேவியும், எம். ஜி. ஆரின் உதவியாளரான ரவீந்தரும் உடன் சென்றிருந்தனர்.

கொழும்பு[தொகு]

கொழும்பு நகருக்கு அண்மையிலுள்ள இரத்மலான என்ற இடத்தில் அமைந்திருந்த வானூர்தி நிலையத்தில் எம். ஜி. ஆர். போய் இறங்கினார்.

கொழும்பு நகரில் அமைந்திருந்த சிங்களர்களுக்குச் சொந்தமான ஒரு பத்திரிகை நிறுவனம் எம். ஜி. ஆரையும் சரோஜாதேவியையும் விருந்தினர்களாக அழைத்திருந்தது. இந்த நிறுவனம் தினபதி என்ற நாளேட்டையும் சிந்தாமணி என்ற வார ஏட்டையும் தமிழில் வெளியிட்டு வந்தார்கள். இந்த ஏடுகளின் ஆசிரியராக எஸ். டி. சிவநாயகம் என்பவர் இருந்தார். இவர்களின் நிறுவனம் அமைந்திருந்த கொழும்பு நகரின் பிரதான சாலை ஒன்றின் வழியாக எம். ஜி. ஆரும் சரோஜாதேவியும் திறந்த காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

கொழும்பு நகரின் பிரபலமான கால்பேஸ் ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தார்கள். பின்னர் கொழும்பில் ஒரு பிரபல சினிமா புள்ளியும் சினிமாஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் அதிபருமான கே. குணரத்தினம் என்பவரின் விருந்தாளிகளாகத் தங்கியிருந்தார்கள்.

கொழும்பு நகரில் தங்கியிருந்தபோது இலங்கையின் பிரதம மந்திரியாக அப்போது பதவி வகித்த டட்லி சேனாநாயகாவை எம். ஜி. ஆர். சந்தித்தார்.

கொழும்பு நகரிலிருந்து பின் அவர் கண்டி, மாத்தளை, நுவரெலியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கும் சென்றார்.

மட்டக்களப்பு[தொகு]

மட்டக்களப்பு நகரில் எம். ஜி. ஆரையும் சரோஜாதேவியையும் அப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு பிரதிநிதியாக இருந்த செல்லையா ராஜதுரை வரவேற்றார். அக்காலத்தில் செல்லையா ராஜதுரை சார்ந்திருந்த பெடரல் கட்சி உறுப்பினர்களில் அவர் மட்டுமே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான கவிஞர் கண்ணதாசன், மு. கருணாநிதி போன்றோருடன் தொடர்புடையவராக இருந்தார். அதனால் அவருக்கு ஏற்கனவே எம். ஜி. ஆரின் அறிமுகம் இருந்தது. மட்டக்களப்பு நகரசபை மண்டபத்தில் எம். ஜி. ஆருக்கும் சரோஜாதேவிக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம்[தொகு]

எம். ஜி. ஆரும் சரோஜாதேவியும் உள்ளூர் வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தில் பலாலி என்ற இடத்தில் அமைந்திருந்த நிலையத்தில் போய் இறங்கினார்கள்.

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தங்கினார்கள். நகரில் இருந்த பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கம் ஒன்றில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எம். ஜி. ஆரின் யாழ்ப்பாணப் பயணம் பற்றி அப்போது அங்கு சுன்னாகம் என்ற இடத்தில் சி. சரவணபவன் என்பவர் வெளியிட்டு வந்த கலைச்செல்வி என்ற இதழில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. அதில் இரண்டு முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எம். ஜி. ஆர். தான் பங்குபற்றும் எந்த நிகழ்ச்சியின் மூலமும் வசூலாகும் தொகையை மொத்தமாக ஏதாவது ஒரு தொண்டுக்கு (Charity) பயன்படுத்த வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தாராம். மேலும், அவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள மயிலிட்டி என்ற நகரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி வழங்கினார். அவர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது கால் முடமான ஒருவர் எப்படியோ கட்டுக் காவல்களையும் மீறி மேடைக்கு வந்து எம். ஜி. ஆரைத் தொட்டார். அந்த இடத்திலேயே அவருக்கு எம். ஜி. ஆர். 500 ரூபா கொடுத்தார்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]