டட்லி சேனாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டட்லி சேனாநாயக்க
Dudley Shelton Senanayaka As The Prime Minister of Ceylon.jpg
கண்டி ஹில்வுட் மகளிர் கல்லூரியில், 1965
2வது இலங்கைப் பிரதமர்
பதவியில்
மார்ச் 26, 1952 – அக்டோபர் 12, 1953
அரசர் இரண்டாம் எலிசபெத்
முன்னவர் டி. எஸ். சேனாநாயக்க
பின்வந்தவர் ஜோன் கொத்தலாவல
6வது இலங்கைப் பிரதமர்
பதவியில்
மார்ச் 21, 1960 – சூலை 21, 1960
முன்னவர் டபிள்யூ. தகநாயக்கா
பின்வந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
8து இலங்கைப் பிரதமர்
பதவியில்
மார்ச் 27, 1965 – மே 29, 1970
முன்னவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
பின்வந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 19, 1911
இலங்கை
இறப்பு ஏப்ரல் 13, 1973(1973-04-13) (அகவை 61)
கொழும்பு, இலங்கை
தேசியம் இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
தொழில் அரசியல்வாதி, வழக்கறிஞர்
சமயம் தேரவாத பௌத்தம்

டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake, சிங்களம்: ඩඩ්ලි ශෙල්ටන් සේනානායක; சூன் 19, 1911 — ஏப்ரல் 13, 1973) இலங்கையின் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவியில் இருந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

டட்லி சேனாநாயக்கா 1911 ஆம் ஆண்டில் இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவுக்கும், மோலி டுனுவில ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றவர். பின்னர் கேம்பிரிட்ஜ் கோர்ப்பசு கிறிஸ்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் துறையில் உயர் படிப்பை மேற்கொண்டார். பின்னர் லண்டன் மிடில் டெம்பிளில் பாரிஸ்டராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இலங்கை திரும்பிய டட்லி டெடிகமை தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் பின்வரிசை உறுப்பினராக இருந்தார். இவரது தந்தை அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் டட்லி வேளாண்மைத்துறை அமைச்சரானார். சடுதியாக இவரது தந்தையும் அப்போது பிரதமராகவும் இருந்த டி. எஸ். சேனநாயக்கா இறக்கவே 1952, மார்ச் 26 இல் இவர் இலங்கைப் பிரதமராக இலங்கை ஆளுநர் சோல்பரி பிரபுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் டட்லி பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 1952 தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது ஆட்சியில் அரிசி விலை அதிகரித்தது. அரசு வழங்கி வந்த மானியங்களின் தொகை குறைக்கப்பட்டது. இதனால் ஓராண்டு காலத்துள் இவரது அரசு மக்களின் செல்வாக்கை இழந்தது. டட்லி சேனநாயக்கா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். சேர் ஜோன் கொத்தலாவலை பிரதமரானார். 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பணிப்பகிஷ்கரிப்புகளை அடுத்து டட்லி அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

1956 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் அரசியலுக்கு வந்தார். கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டார். எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத தொங்கு நாடாளுமன்றமே வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் அரசு அமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சி முன்வைத்த ஆகக் குறைந்த நான்கு கோரிக்கைகளையும் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு உடன்படும் கட்சிக்கே தமது கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அறிவித்திருந்தார். டட்லி சேனநாயக்கா அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்ததால் மகா தேசாதிபதி சேர் ஒலிவர் குணத்திலக்க டட்லியிடம் ஆட்சியைக் கொடுத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அரியணை உரை மீது எடுக்கப்பட்ட முதல் வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புடன் டட்லி சேனாநாயக்காவின் அரசு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட்டது.

1960 சூலையில் மீண்டும் இடம்பெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. டட்லி சேனநாயக்கா எதிர்க்கட்சித் தலைவரானார். 1965 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்காவின் அரசில் இருந்து 14 உறுப்பினர்கள் வெளியேறியதை அடுத்து அவரது அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து இடம்பெற்ற 1965 தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகப் பிரதமரானார். 6வது நாடாளுமன்றத்தின் முழுமையான காலப்பகுதிக்கும் பிரமராக இருந்த டட்லி 1970 தேர்தலில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்தவர் 1973, ஏப்ரல் 13 இல் தனது 61வது அகவையில் காலமானார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டட்லி_சேனாநாயக்க&oldid=3729235" இருந்து மீள்விக்கப்பட்டது