எம். எஸ். அனந்தபத்மநாப ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமகா வித்வான் எம்.எஸ். அனந்தபத்மநாப ராவ் (6 செப்டம்பர் 1903 - 29 நவம்பர் 1987) ஒரு கன்னட கவிஞர், எழுத்தாளர் மற்றும் கதை சொல்லி ஆவார். இவர், குமாரவியாசர் முடிக்காமல் விட்டுச் சென்ற மகாபாரதத்தின் கன்னட மொழிபெயர்ப்பின் கடைசி எட்டு பர்வங்களைக் கொண்ட கர்னாட பாரத கதாமஞ்சரி என்ற மாபெரும் படைப்பை எழுதியவர் ஆவார். [1]

சுயசரிதை[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராவ் செப்டம்பர் 6, 1903 இல் பிறந்தார். இவர் தனது கல்வியை மடிகேரியில் மூத்த விருது பெற்ற பஞ்ஜே மங்கேஷ் ராவின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் கீழ் தொடர்ந்தார். [2]

குடும்பம்[தொகு]

ராவ் லட்சுமி தேவியை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருந்தனர். [3]

தொழில்[தொகு]

அனந்தபத்மநாப ராவ் சுருக்கெழுத்து, புத்தகம் எழுதுதல் மற்றும் தட்டச்சு எழுதுதல் ஆகியவற்றை தனது சிறப்புப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார். பள்ளி படிப்பை முடித்ததும், அப்போதைய கூர்க் அரசாங்கத்தின் கீழ் மாநில கலால் துறையில் சேர்ந்தார். இவரது திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், 1930 ஆம் ஆண்டு கூர்க் அரசு அனந்தபத்மநாப ராவை சுருக்கெழுத்து பயிற்சி பெற வேலூருக்கு பணியமர்த்தியது. இவர் கன்னட சுருக்கெழுத்துக்களைக் கற்றுக் கொண்டார், பின்னர் கன்னட சுருக்கெழுத்தில் நிபுணத்துவம் பெற்ற முதல் நிருபராக காவல் துறையில் சேர்ந்தார்.

சுதந்திர மாநில அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர், கூர்க் முதல் முறையாக ஒரு சுயாதீன சட்டமன்றத்தை உருவாக்கியது. அனந்தபத்மநாப ராவ், சுதந்திர கூர்க் சட்டமன்றத்தில் கன்னட நிருபராக நியமிக்கப்பட்டார். [4]

கன்னட இலக்கியத்திற்கான பங்களிப்புகள்[தொகு]

கன்னட குழு[தொகு]

பஞ்ஜே மங்கேஷ் ராவ் தனது சக ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்களான பி.எஸ். குஷாலப்பா, ஷெனாய் மாஸ்டர், ஜி ஸ்ரீனிவாஸ் மூர்த்தி மற்றும் சி.எம். ராமராவ் ஆகியோரின் ஆதரவுடன் கன்னட குழு ஒன்றைத் தொடங்கினார். அனந்தபத்மநாப ராவ் மற்றும் அவரது நண்பர்கள் பி.கே.சுப்பா ராவ், ஜி.எஸ்.கேசவாச்சார்யா மற்றும் சில இளைஞர்கள் அதில் பணியாளர்களாக ஆனார்கள். [4]

கன்னட சாகித்ய சம்மேளனம்[தொகு]

1932 ஆம் ஆண்டில், கன்னட சாகித்ய பரிஷத் அதன் 18 வது ஆண்டு இலக்கிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மாநாட்டின் தலைவராக பழம்பெரும் அறிஞரும் கவிஞருமான டி.வி.குண்டப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒட்லேமனே ஆத்மராம் சாஸ்திரி, ஷெனாய் மாஸ்டர், டி.எம்.சித்தலிங்கய்யா மற்றும் பலர் தலைமைக் குழுவில் அங்கம் வகித்தனர். இளைஞர் தொழிலாளர்களில் முதலாவதாக அனந்தபத்மநாப ராவ் இருந்தார். அனந்தபத்மநாப ராவ், டி.வி.ஜி.யின் கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்தார். இவர் கன்னட சாகித்ய பரிஷத்தின் வாழ்நாள் உறுப்பினராக ஆகுமாறுத் தூண்டினார். டி.வி.ஜி மாநாட்டின் எஞ்சிய நிதியை ஒப்படைத்தார் மற்றும் கூர்க்கில் கன்னட சங்கத்தை நிறுவ அனந்தபத்மநாப ராவுக்கு பரிந்துரைத்தார். இவ்வாறு 1932 ஆம் ஆண்டு டி.வி.ஜி.யின் ஆசியுடன் முதன் முதலாக குடகு கன்னட சங்கம் நிறுவப்பட்டு தொடங்கப்பட்டது. அனந்தபத்மநாப ராவ் சங்கத்தின் முதல் இயக்குநரானார், பின்னர், இவர் அதன் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். [4]

அனந்தபத்மநாப ராவ் கன்னட சாகித்ய பரிஷத்தின் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கூர்க் மாநிலத்தின் பிரதிநிதியானார். இவர் ஒவ்வொரு ஆண்டும் வசந்த சாகித்யோத்ஸவா (இலக்கியத்தின் வசந்த விழா) என்ற கருத்தை உருவாக்கினார். இந்த விழாவின் பெயரில், கன்னட இலக்கியத்தின் பல முக்கியஸ்தர்களான பி.எம்.ஸ்ரீ, டி.பி.கைலாசம், ஜி.பி.ராஜரத்தினம், ஆநாக்ரு, தாராசு, தா சு ஷ்யாமா ராவ், ஷம்பா ஜோஷி, தாரா பேந்திரே, குவெம்பு, சிவராம கரந்த், எம்.கோவிந்த பாய் மற்றும் பலர் கூர்க் மாநிலத்திற்கு வருகை தந்தனர். அனந்தபத்மநாப ராவ் மடிகேரி வேதாந்த சங்கத்தில் நவராத்திரி உற்சவம் மற்றும் ஸ்ரீமடஆஞ்சநேயா கோயில், ராமோத்ஸவ இலக்கிய விழா மற்றும் பல இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் தனது நேரத்தை முதலீடு செய்தார். [4]

கன்னட சங்கம் மற்றும் சங்கீத நாடக அகாடமி[தொகு]

இந்த நாட்களில் அனந்தபத்மநாப ராவ், மாஸ்தி வெங்கடேச ஐயங்காரை இலக்கிய நிகழ்ச்சிக்காக சோம்வார்பேட்டைக்கு அழைத்தார். கன்னட சங்கம் நிறுவப்பட்டால் மட்டுமே அந்த இடத்திற்கு செல்வேன் என்ற நிபந்தனையுடன் மாஸ்தி ஒப்புக்கொண்டார். அனந்தபத்மநாப ராவ், காபி தோட்டக்காரர் சந்திரப்பாவின் ஆதரவுடன், சோம்வார்பேட்டை கன்னட சங்கத்தை இரவோடு இரவாக நிறுவினார். முதல் செயலாளராக சக்கரதான மூர்த்தி பொறுப்பேற்றார். இறுதியில் மாஸ்தி வெங்கடேச அய்யங்காருக்கு சோம்வார்பேட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அனந்தபத்மநாபா பின்னர் சங்கீத நாடக அகாடமியின் கூர்க் பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார் [4]

கமகி (கதை சொல்லி)[தொகு]

1932ல் நடைபெற்ற கன்னட சாகித்ய சம்மேளனத்தில் (இலக்கிய மாநாடு) பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கமக பகீரத கலாலே சம்பத்குமாராச்சார்யா தொடர்ந்து 3 நாட்கள் காவ்ய வசனம் அல்லது கமகா வசனம் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட அனந்தபத்மநாப ராவ் கமகா என்கிற கதை சொல்லுதல் கலையின் பக்கம் ஈர்க்கப்பட்டார். அதுவரை அனந்தபத்மநாப ராவ் ஹரிகதா கலைஞராக இருந்தார். ஹரிகதா ஆர்வலர்களுக்காக இவர் ஜடபாரத உபகாயானத்தையும் (ஒரு கவிதைத் துண்டு) இயற்றினார். கமகா ஒரு புதிய கலை வடிவமாக அவரது கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்தது. பிற்காலத்தில் கமகா வித்வான் கிருஷ்ணகிரி கிருஷ்ணா ராவின் மாணவராக தன்னை சேர்த்துக் கொண்டு இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றார். 1942 ஆம் ஆண்டில், இவர் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கமகா கற்பிக்கத் தொடங்கினார் மற்றும் கலை வடிவத்தின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்விற்கும் பங்களித்தார். மேலும், இவர், இந்துஸ்தானி இசை ராகங்களில் தனி ஆர்வம் கொண்டிருந்தார்.

அனந்தபத்மநாப ராவை கமகியாகப் பாராட்டியவர்களில் கவிஞர் டி.ஆர்.பெந்த்ரேவும் ஒருவர். பந்த்ரேவின் 50வது பிறந்தநாளையொட்டி, காவ்யா வசனம் நடத்த அனந்தபத்மநாப ராவை வீட்டுக்கு வரவழைத்து உற்சாகப்படுத்தினார். ஒருமுறை ராஷ்டிரகவி குவேம்பு அவரிடம், “கிருஷ்ணகிரி கிருஷ்ணராவ் அவர்களின் ஆசி உங்களுக்கு உண்டு. நீங்கள் ஒரு பாடகர் அல்ல, ஆனால் நீங்கள் கூர்க்கின் குயில் (கோடகினா கோகிலே)" என்று பாராட்டினார். பின்னர், 1983 ஆம் ஆண்டு, கர்நாடக கமகா கலா பரிஷத் நடத்திய முதல் மாநில அளவிலான கமக சம்மேளனத்தின் தலைவராக அனந்தபத்மநாப ராவ் ஆனார். மேலும், "கமக ரத்னகர" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். [5]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • 1952 ஆம் ஆண்டு மைசூர் தேவராஜ பகதூர் தத்தி விருது அவரது துளசி ராமாயணத்திற்காக வழங்கப்பட்டது.
  • 1977 - 78 ஆண்டுக்கான கன்னட சாகித்ய அகாடமி விருது
  • 1983 ஆம் ஆண்டு கர்நாடக கமகா கலா பரிஷத்தின் கமக ரத்னாகர விருது

இறப்பு[தொகு]

அனந்தபத்மநாப ராவ் நவம்பர் 29, 1987 இல் இறந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Gamaka Diggajagalu" book published by Karnataka Sangeetha Nruthya Academy. p. 47
  2. "Kalaachethana" book published by Karnataka Sangeetha Nruthya Academy. P.387
  3. ”Gamaka Diggajagalu” book published by Karnataka Sangeetha Nruthya Academy. P.50 – 51 and P. 60 – 61
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Gamaka Chetanagalu" book published by Karnataka Gamaka Kala Parishath.
  5. "Gamaka Kalopasakaru" book published by Karnataka Gamaka Kala Parishath.