சிவராம காரந்த்
கோட்டா சிவராம காரந்த் | |
---|---|
சிவராம காரந்த் | |
பிறப்பு | சாலிகிராமம், உடுப்பி மாவட்டம், கருநாடகம் | 10 அக்டோபர் 1902
இறப்பு | 9 திசம்பர் 1997 மணிப்பால், உடுப்பி மாவட்டம், கருநாடகம் | (அகவை 95)
தொழில் | எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், ஊடகவியலாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1902-1997 |
வகை | புதினம், புனை அறிவியல், சிறுவர் இலக்கியம் |
இலக்கிய இயக்கம் | நவோதயா |
கோடா சிவராம காரந்த் (Kota Shivaram Karanth, கன்னடம்: ಕೋಟಾ ಶಿವರಾಮ ಕಾರಂತ, அக்டோபர் 10, 1902 - டிசம்பர் 9, 1997) கன்னட மொழியின் குறிப்பிடத்தக்க படைப்பாளி. ஞானபீட விருது பெற்றவர். சூழியல் போராளி. கலைக்களஞ்சியத் தொகுப்பாளர். வரலாற்றாசிரியர். நடனக்கலைஞர். யக்ஷ கானத்தை மறு சீரமைப்பு செய்தவர். சிற்ப ஆராய்ச்சியாளர். நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர். பத்ம பூஷண் விருது பெற்றவர். நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை திரும்பக் கொடுத்துவிட்டார்
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]உடுப்பி அருகே கோடா என்ற சிற்றூரில் மாத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். சேஷ காரந்தருக்கும் லக்ஷமம்மாவுக்கும் அவர் ஐந்தாவது குழந்தை. குந்தாபுராவில் பள்ளிப்படிப்பு முடித்தார். கல்லூரியில் படிக்கையில் காந்தியவாதியாக ஆகி விடுதலைப் போரில் ஈடுபட்டு சிறை சென்றார். கதர் போராளியாக இருந்தார். காசி, பிரயாக் போன்ற இடங்களில் ஆன்மிகம் என்னும் பெயரில் போலித் துறவிகள் செய்யும் தீயச் செயல்களைக் கண்டு வெறுத்த காரந்த் சமூக சீர்திருத்தம் மீது நாட்டம் கொண்டார்.அப்போதுதான் எழுத ஆரம்பித்தார். முதல் படைப்புகள் நான்கு நாடகங்கள். தன் முப்பதாவது வயதில் லீலா காரந்தை மணந்தார்.
காரந்த் பலமுகம் கொண்டவர். சமூக சேவையையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். தன் சொந்த ஊரில் வேளாண்மை செய்தார். ஒரு சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்கினார். காகிதத்தில் பொம்மை செய்வதில் அவர் நிபுணர். கன்னடக் கலைக்களஞ்சியம் பன்னிரண்டு தொகுதிகளையும் தானே உருவாக்கினார். கன்னட நடன வடிவமான யட்சகானம் என்ற முறையை பழமையில் இருந்து மீட்டு நவீன கலைவடிவமாக மாற்றம் செய்தார். அவர் சிறந்த நடனக்கலைஞரும்கூட. கன்னட அச்சு முறையை நவீனப்படுத்தினார். கொஞ்சகாலம் அச்சகங்களையும் நடத்தினார்.
வாழ்நாள் முழுக்க காரந்த் போராடிக் கொண்டே இருந்தார். முதிய வயதில் கன்னட சூழியலுக்காக முன்னணி போராளியாக இருந்தார். அரசுக்கு எதிரான பல வழக்குகளை நடத்தினார்.அணு ஆற்றலுக்கு எதிராகத் தம் வாணாள் முழுவதும் செயல்பட்டார். தம் 95 ஆவது வயதில் அவர் கர்நாடகப் பறவைகளைப் பற்றிய முக்கியமான நூல் ஒன்றை எழுதினார்.
காரந்தின் சுயசரிதை பித்தனின் பத்து முகங்கள். காரந்தின் மகன் உல்லாஸ் காரந்த் இந்தியாவின் முக்கியமான சூழியல் அறிஞர். புலிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
படைப்புகள்
[தொகு]காரந்த் 47 நாவல்களும் 31 நாடகங்களும் ஆறு கட்டுரை தொகுதிகளும் கலைவிமர்சனங்களின் தொகுதிகளாக 31 நூல்களும் சாளுக்கியக் கட்டிடக்கலை பற்றிய ஆய்வுநூல் ஒன்றும் யட்சகானத்தைப்பற்றிய இரு பெரும் தொகை நூல்களையும் எழுதினார்.
மூன்று பாகங்கள் கொண்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம், 12 பாகங்கள் கொண்ட கன்னடக் கலைக்களஞ்சியம் நான்கு பாகங்கள் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியம் ஆகியவை அவரது சாதனை நூல்கள்.
இவற்றைத்தவிர 240 குழந்தை நூல்களையும் 4 பயண நூல்களையும் பறவைகளைப்பற்றி 2 நூல்களையும் எழுதியிருக்கிறார். மொத்தம் 417 நூல்கள்.
மூகஜ்ஜிய கனசுகளு [ஊமைப்பெண்ணின் கனவுகள்] மரணி மண்ணிகே [மண்ணும் மனிதரும்] சோமன துடி [சோமனின் துடி] ஆகிய மூன்று நாவல்களும் அவரது சாதனைப்படைப்புகள்
பரிசுகள்
[தொகு]காரந்த் கிட்டத்தட்ட 30 விருதுகளை பெற்றிருக்கிறார்:
- ஞானபீடம் 1978
- பத்ம விபூஷண் 1977
- சாகித்ய அக்காதமி 1958
- பாம்பா விருது
- துள்ஸி சம்மான்
- ஸ்வெதேஷ் அக்காதமி சம்மான்
திரையில்
[தொகு]- சோமன துடி [புட்டண்ண கனகல்]
- சிக்குரித கனசு
- மலைய மக்களு
மொழியாக்கம்
[தொகு]தமிழில் வெளிவந்த நாவல்கள்
- ஊமைப்பெண்ணின் கனவுகள் - சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- மண்ணும் மனிதரும் -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- சோமன துடி சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- அழிந்தபிறகு -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்