உள்ளடக்கத்துக்குச் செல்

எசுபார்த்தாவின் லைகர்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுபார்த்தாவின் லைகர்கசு

லைகர்கசு (Lycurgus, (/lˈkɜːrɡəs/; கிரேக்கம்: Λυκοῦργος Lykoȗrgos; வார்ப்புரு:Fl. அண். கி.மு. 820 ) என்பவர் தெல்பியில் உள்ள அப்பல்லோ கோயில் பூசாரியின் அனுமதிக்கு இணங்க எசுபார்தா சமுதாயத்தின் இராணுவம் சார்ந்த சீர்திருத்தத்தை நிறுவிய எசுபார்த்தாவின் அரை-தொன்ம சட்டமியற்றியவர் ஆவார். இவரது அனைத்து சீர்திருத்தங்களும் மூன்று எசுபார்த்தன் நற்பண்புகளை ஊக்குவித்தன. அவை சமத்துவம் (குடிமக்கள் இடையில்), இராணுவ சமுதாயம், சிக்கனம் ஆகியவை ஆகும். [1]

இவர் பண்டைய வரலாற்றாசிரியர்கள் மற்றும் தத்துவவாதிகளான எரோடோட்டசு, செனபோன், பிளேட்டோ, பாலிபியசு, புளூட்டாக், எபிக்டெட்டசு ஆகியோரால் குறிப்பிடப்படுகிறார். லைகர்கசு என்பவர் உண்மையில் வரலாற்றில் வாழ்ந்த நபரா என்பது தெளிவாக இல்லை; இருப்பினும், பல பண்டைய வரலாற்றாசிரியர்கள் இவர் சமூக மற்றும் இராணுவவாத சீர்திருத்தங்களை உருவாக்கியவர் என்று நம்பினர் - குறிப்பாக கிரேட் ரேட்ரா - இது எசுபார்த்தன் சமுதாயத்தை மாற்றியது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

லைகர்கசைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் புளூட்டார்க்கின் "லைஃப் ஆஃப் லைகர்கஸ்" (பேராலல் லைவ்சின் ஒரு பகுதி) என்பதிலிருந்து வந்தவை. இது ஒரு உண்மையாக வாழ்க்கை வரலாற்றை விட நிகழ்வுகளின் தொகுப்பாகும். லைகர்கசைப் பற்றி உறுதியாக எதுவும் அறிய முடியாது என்று புளூடார்சு தானே குறிப்பிடுகிறார். ஏனென்றால் வெவ்வேறு எழுத்தாளர்கள் இவரைப் பற்றிய மாறுபட்ட தகவல்களை வழங்குகின்றனர். [2] லைகர்கசு என்பவர் உண்மையில் இருந்தவரா அல்லது இல்லாதவரா என்பதை உறுதியாக கூறமுடியாது - "லைகோர்கோஸ்" என்பது அப்பல்லோ கடவுளின் அடைமொழியாக இருக்கலாம், ஏனெனில் அவர் ஆரம்பகால எசுபார்த்தாவில் வணங்கப்பட்டார். மேலும் பின்னர் தொன்மகதைகளில் கடவுளின் இந்த அம்சத்தை ஒரு புத்திசாலித்தனமான மனிதர்மீது ஏற்றி அவரே சட்டத்தை அளித்தவராக மாற்றியதாக இருக்கலாம். [3] [4] என்றாலும் எசுபார்த்தாவின் அரசின் அடையாள நிறுவனராக இவர் அதன் பல சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களின் துவக்கியாக பார்க்கப்பட்டார். எலிசின் இஃபிடோஸ் இருந்த அதே காலத்தில் லிகர்கசு உயிருடன் வாழ்ந்ததாகவும், கிமு 776 இல் அவருடன் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் தொடங்கினார் என்றும் சிலர் நம்பினர். மேலும் இவர் ஓமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்ததாகவும், அவர்கள் தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் கருதப்பட்டது. இருப்பினும், இது சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன் வாழ்ந்த லிகர்கசு என்ற பெயருடைய வேரொரு மனிதராக இருக்கலாம். [5]

எசுபார்த்தாவின் லைகர்கஸ் தன் அண்ணனின் குழந்தை பிறந்தவுடன் அரச பதவியை ஒப்படைக்கிறார்

லைகர்கசு வாழ்ந்த காலம் குறித்து பண்டைய மற்றும் நவீன எழுத்தாளர்கள் கிமு 10 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 6 ஆம் நூற்றாண்டு என மாறுபட்டுள்ளனர். சில அறிஞர்கள் மிகவும் நம்பத்தகுந்த காலத்தை துசிடிடிசு குறிப்பிடுவதாகக் கருதுகின்றனர். அவர் தனது காலத்தில் எசுபார்த்தாவின் அரசியலமைப்பு நானூறு ஆண்டுகள் பழமையானது என்று கூறினார்; இது லைகர்கசின் காலத்தைக் குறிக்கும், அல்லது குறைந்தபட்சம் அவருக்குக் கூறப்பட்ட அரசியல் சட்ட சீர்திருத்தங்கள், கிமு 9 ஆம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில் நிகழ்ந்திருக்கலாம். [3] [4] [6] [7]

லைகர்கசின் அண்ணனான அரசர் இறந்தபோது லைகர்கசு ஆட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. லைகர்கசின் அண்ணன் இறக்கும்போது அவரின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். [8] அண்ணிக்கு குழந்தை பிறந்ததும், லைகர்கசு அந்தக் குழந்தைக்கு சாரிலாஸ் ("மக்களின் மகிழ்ச்சி") என்று பெயரிட்டு தனது அரச பதவியை குழந்தைக்கு மாற்றி கொடுத்தார். அதன்பிறகு இவர் தன் அண்ணன் மகன் சாரிலாசின் பாதுகாவலராகவும், இராசப்பிரதிநிதியாகவும் இருந்து எசுபார்த்தாவை ஆண்டார். இளைய அரசரின் தாயும் அவரது உறவினர்களும் லைகர்கர்சு மீது பொறாமைப்பட்டு வெறுத்தனர். இவரே சாரிலாசின் மரணத்திற்கு காரணமான சதி செய்வதாக அவதூறாக குற்றம் சாட்டினர். 

பயணங்கள்

[தொகு]

குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் தன்மீது ஏற்படும் பழிக்கு அஞ்சி லைகர்சு அதை தவிர்ப்பதற்காக, சாரிலாசு வளர்ந்து, வாரிசாக ஒரு ஒரு மகனைப் பெறும் வரை பயணங்களை மேற்கொள்வது என்று முடிவு செய்கிறார். எனவே, லைகர்கசு தனது அதிகாரங்களை அனைத்தையும் துறந்து, புகழ்பெற்ற தன் பயணங்களைத் தொடங்கினார். இவரது முதல் இலக்கு கிரீட் ஆகும், அது எசுபார்த்தா போன்று ஒரு டோரியர் நிலம் ஆகும். அங்கு இவர் மினோசின் சட்டங்களைக் கற்றார். இந்த நேரத்தில் அவர் தேல்ஸ் என்ற இசையமைப்பாளரைச் சந்தித்தார். அவருடைய இசை வெகுமக்களை அமைதிப்படுத்தக்கூடியது. அது கேட்போரை சிறந்த மனிதர்களாக ஆகத் தூண்டியது. எசுபார்த்தன் மற்றும் கிரெட்டான் கல்வி நிறுவனங்கள் உண்மையில் பொதுவான குணாதிசயங்களைக் கொண்டிருந்தன. எசுபார்த்தா மற்றும் கிரீட்டின் பொதுவான டோரியன் மரபுரிமை காரணமாக பொதுவாக இது போன்ற ஒற்றுமைகள் அதிகம் இருந்தன. அதன் பிறகு அயோனியன் கிரேக்கர்களின் தாயகமான ஆசிய மைனருக்கு பயணம் செய்தார் இவர், அயோனியர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை டோரியன்களின் கடுமையான மற்றும் ஒழுக்கமான பண்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருந்தது. லைகர்கஸ் எகிப்து, எசுபானியா மற்றும் இந்தியா வரை பயணித்தார் என்று சிலர் கூறுகிறார்கள். அயோனியாவில், லைகர்கசு ஓமரின் படைப்புகளைக் கண்டுபிடித்தார். லைகுர்கர்சு ஓமரின் சிதறிய துண்டுகளை தொகுத்து, ஓமரின் காவியங்களில் உள்ள அரசியற் கலை மற்றும் அறநெறி பற்றிய பாடங்கள் பரவலாக அறிவதை உறுதி செய்தார். புளூடார்ச்சின் கூற்றுப்படி, எகிப்தியர்களை லைகர்கசு பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள், [a] மேலும் இவர் எகிப்தியர்களிடமிருந்து இராணுவ தரப்பினரை சிறு தொழிலாளர் வர்கத்திடமிருந்து பிரிக்கும் யோசனையைப் பெற்றார். இதனால் பிற்கால எசுபார்தன் சமுதாயத்தை செம்மைப்படுத்தினார். இதில் எசுபார்தன்கள் கைவினைப் பொருட்களில் பயிற்சி பெற அனுமதிக்கப்படவில்லை. [9]

லைகர்கசின் தலைவர், வத்திக்கான் அருங்காட்சியகத்தில் உள்ள பளிங்கு சிலையிலிருந்து [10]

எசுபார்த்தாவுக்குத் திரும்புதல்

[தொகு]

லைகர்கசு இல்லாததால் வருத்தமுற்ற எசுபார்தன்கள் அவருக்கு கடிதம் எழுதி அவரை திரும்பி வரும்படி கெஞ்சினார்கள். அவர்கள் கூற்றின் படி, லைகர்கசு மட்டுமே அவர்களின் இதயத்தில் மன்னராக இருந்தார். இவர் ஆட்சி செய்வதில் சிறப்பான இயல்பு, கீழ்ப்படியவைக்கும் திறமை போன்றவற்றைக் கொண்டிருந்தார். எசுபார்தன் மன்னர்கள் கூட லைகர்கசு திரும்பி வரவேண்டும் என்று விரும்பினர். ஏனென்றால் மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவராக அவர்கள் இவரைக் கண்டனர்.

எசுபார்த்தாவில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று லிகர்கசு ஏற்கனவே முடிவு செய்திருந்தார். இவர் திரும்பி வந்ததும், சட்டங்களை மட்டும் மாற்றியமைக்கவில்லை, மாறாக, மிகுதியான மாற்றங்களைச் செயல்படுத்த , புத்திசாலித்தனமான எபோர்களின் (எசுபார்த்தாவின் அரசவையின் அதிகாரம் கொண்ட நபர்கள் அடங்கிய குழு) முன்மாதிரியைப் பின்பற்றினார்.

லைகர்கசு மற்றும் டெல்பியின் ஆரக்கிள்

[தொகு]

எசுபார்தன் சமுதாயத்தில், முக்கிய முடிவுகளின்போது தெல்பியின் ஆரக்கிள் (தெல்பியில் உள்ள அப்போலோ கோயிலின் தலைமை பூசாரி) வழிகாட்டுதலுக்காகவும் கணிப்புகளுக்காகவும் அடிக்கடி ஆலோசிக்கப்பட்டது. கிரீட்டிலிருந்து லிகர்கசு திரும்பிய பிறகு, எசுபாத்தன் சமூகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு முன், அதற்கான வழிகாட்டுதலுக்காக தெல்பியின் ஆரக்கிளைக் கலந்தாலோசிக்க முடிவு செய்தார். ஆரக்கிளின் அங்கீகாரத்தைப் பெற்றால், தெல்பியின் ஆரக்கிள் பெற்றுள்ள நற்பெயரின் காரணமாக அதிக ஆதரவு கிடைக்கும் என்பதை லைகர்கசு அறிந்திருந்தார். ஆரக்கிள் லைகர்கசிடம், "அவரது பிரார்த்தனைகள் கேட்கப்பட்டன, லைகர்கசின் சட்டங்களைக் கடைப்பிடித்த அரசு உலகில் மிகவும் பிரபலமானதாக மாறும்" என்று கூறினார். [11] அத்தகைய ஒப்புதலுடன், லைகர்கசு எசுபார்த்தாவின் முன்னணி மனிதர்களிடம் சென்று அவர்களின் ஆதரவையும் பெற்றார். [12] லைகர்கசு கொண்டு வந்த சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஆரக்கிள் முக்கிய பங்கு வகித்தார்.

இறப்பு

[தொகு]

புளூட்டாக்கின் லைவ்ஸ் மற்றும் பிற ஆதாரங்களின்படி, லைகர்கசு தனது சீர்திருத்த சட்டங்களில் நம்பிக்கை கொண்டபோது, அப்பல்லோவுக்கு பலிகொடுக்க தெல்பியில் உள்ள ஆரக்கிளுக்குச் செல்வதாக அறிவித்தார். இருப்பினும், தெல்பிக்குச் செல்வதற்கு முன், இவர் எசுபார்த்தாவின் மக்களைக் கூட்டி, மன்னர்கள் மற்றும் ஜெரோசியா உட்பட அனைவரையும் இவர் திரும்பும் வரை இவரது சட்டங்களைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுக்கச் செய்தார். பின்னர் இவர் தெல்பிக்கு பயணத்தை மேற்கொண்டார். மேலும் தெல்பியில் உள்ள அப்போலோ கோயில் தலைமை பூசாரியான ஆரக்கிளின் ஆலோசனையைப் பெற்றார். இவருடைய சட்டங்கள் மிகச் சிறந்தவை என்றும், அது பின்பற்றும் மக்களைப் பிரபலமாக்கும் என்றும் கூறினர். அதன் பின்னர் இவர் வரலாற்றிலிருந்து மறைந்தார். ஒரு விளக்கமாக கூறப்படுவது என்னவென்றால், தன் சட்டங்களால் திருப்தி அடைந்த இவர் வீடு திரும்புவதற்குப் பதிலாக பட்டினிகிடந்து இறந்தார். இதன்வழியாக தான் முன்பே பெற்ற உறுதிமொழி மூலமாக எசுபார்த்தாவின் குடிமக்கள் தனது சட்டங்களை காலவரையின்றி தொடர்ந்து கடைப்பிடிப்பதைக் கட்டாயமாக்கினார். [13] இவர் பின்னர் எசுபார்த்தாவில் நாயகனாக வழிபடப்பட்டார். மேலும் எசுபார்தன்கள் இவர் மீது வைத்த அதிக மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டார். [14] [15]

குறிப்புகள்

[தொகு]
 1. "The Egyptians say that he took a voyage into Egypt, and that, being much taken with their way of separating the soldiery from the rest of the nation, he transferred it from them to Sparta, a removal from contact with those employed in low and mechanical occupations giving high refinement and beauty to the state. Some Greek writers also record this." Source: Plutarch

மேற்கோள்கள்

[தொகு]
 1. Forrest, W.G. A History of Sparta 950–192 B.C. Norton. New York. (1963) p. 50
 2. Plutarch, Lycurugus, 1.1
 3. 3.0 3.1 Burn, A.R. (1982). The Pelican History of Greece. London: Penguin. pp. 116–117.
 4. 4.0 4.1 Bury, J.B. (1956). A History of Greece to the death of Alexander the Great. London: Macmillan. pp. 135–136.
 5. Talbert, Richard (1988). Plutarch on Sparta. 27 Wrights Lane, London W8 5TZ, England: Penguin Classics. pp. 8-28.{{cite book}}: CS1 maint: location (link)
 6. Thucydides 1.18.1
 7. Hammond, N.G.L. (1967). A history of Greece. Oxford: Oxford University Press. p. 103.
 8. "Plutarch • Life of Lycurgus". penelope.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
 9. Lycurgus, in Plutarch on Sparta, Penguin Classics, 1988, p. 12
 10. Library, British (2013-11-27), British Library digitised image from page 240 of "Ancient Rome and its connection with the Christian religion. An outline of the history of the city from its ... foundation ... to the erection of the chair of St. Peter in the Ostrian Cemetery ... Containi, பார்க்கப்பட்ட நாள் 2021-05-21
 11. M. A., Linguistics; B. A., Latin. "Legendary Lycurgus the Lawgiver of Sparta". ThoughtCo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
 12. "L Y C U R G U S". www.ahistoryofgreece.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
 13. see the biography of Lycurgus பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம் in Plutarch's Lives of the Noble Grecians and Romans
 14. Herodotus, Ιστορίαι [The Histories], Κλειώ [Clio], 66, p. 15 Vol 6 of the 1952 edition of Great Books of the Western World
 15. Pausanias 3.16.6