இறுதிச்சுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறுதிச்சுற்று
Irudhi Suttru
இயக்கம்சுதா கொங்கரா
தயாரிப்புஎசு.சசிகாந்த்
சி. வி. குமார் (தமிழ்)
மாதவன் (இந்தி)
ராச்குமார் இரானி (இந்தி)
கதைசுதா கொங்கரா
அருண் மாதேசுவரன் (தமிழ் வசனம்)
திரைக்கதைசுதா கொங்கரா
சுனந்தா ரகுநாதன்
இசைபாடல்கள்:
சந்தோசு நாராயணன்
பின்ணணி இசை:
சஞ்சய் வான்ட்ரேக்கர்
அதுல் ரனிங்கா
நடிப்புமாதவன்
ரித்திகா சிங்
ஒளிப்பதிவுசிவக்குமார் விசயன்
படத்தொகுப்புசத்தீசு சூரியா
கலையகம்ஒய் நாட் சுடூடியோசு
யுடிவி மோசன் பிக்சர்சு
திருக்குமரன் எண்டெர்டெய்ன்மென்ட் (தமிழ்)
விநியோகம்டிரீம் பேக்டரி (வினியோகம்), (தமிழ்நாடு)
ராச்குமார் இரானி பிலிம்
மாதவன் டிரை கலர் பிலிம் (இந்தி)
எபி இன்டர்நேசனல் (உலகமெங்கும்)
வெளியீடுசனவரி 29, 2016 (2016-01-29)
ஓட்டம்109 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
இந்தி

இறுதிச்சுற்று (Irudhi Suttru) குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய ஒரு திரைப்படமாகும். 2016 ஆம் ஆண்டில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் இப்படம் வெளியானது. இத்திரைப் படத்தில் ஆர். மாதவன் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்திலும், இவருடன் ஆர்வலரும் குத்துச்சண்டை வீரருமான ரித்திக்கா சிங் குத்துச்சண்டை வீரராகவும் இப்படத்தில் நடித்தனர். இறுதிச் சுற்று என்ற பெயரில் தமிழிலும் சாலா காதூசு என்ற பெயரில் இந்தியிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியானது. ஒய் நாட் சுடூடியோசு மற்றும் யு.டி.வி. மோசன் பிக்சர்சு நிறுவனத்திற்காக இரு மொழி பதிப்புகளையும் எசு.சசிகாந்த் தயாரித்தார். சி.வி.குமாரின் திருக்குமரன் பொழுது போக்கு நிறுவனம் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பை இணையாகத் தயாரித்தது. மாதவனின் டிரை கலர் பிலிம் நிறுவனம் ராச்குமார் இரானியுடன் சேர்ந்து இந்தி பதிப்பைத் தயாரித்தனர். சந்தோசு நாராயணன், சஞ்சய் வாண்ட்ரேக்கர், அதுல் ரனிங்கா ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். சிவக்குமார் விசயன் ஒளிப்பதிவையும், சத்தீசு சுரியா படத் தொகுப்பு பணியையும் மேற்கொண்டனர். இத்திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சூலை 2014 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 50 நாட்களுக்குள் படமாக்கி முடிக்கப்பட்டது. 2016 சனவரி 29 ஆம் நாள் இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகி திரைப்படம் ஏராளமான விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது [1][2].

பிரபு செல்வராசு (தமிழ் பதிப்பு)/ஆதி தோமார் (இந்தி பதிப்பு) பாத்திரத்தில் நடிக்கும் மாதவன் வாழ்க்கையில் தோற்றுப் போன ஒரு குத்துச்சண்டை வீரராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். மிகவும் திறமையான வீரராக அவர் இருந்தபோதிலும் குத்துச்சண்டை சங்கத்தின் அழுக்கு அரசியலால் அப்போது பாதிக்கப்படுகிறார். பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பெண்கள் குத்துச்சண்டை அணிகளின் பயிற்சியாளர் ஆகிறார். வீரர்கள் தேர்வில் காணப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளால் விரக்தியும் கோபமும் கொள்கிறார். குத்துச்சண்டை சங்கத் தலைவர் தேவ் கத்ரி (சாகிர் உசைன்) உடனான கருத்து வேறுபாடு காரணமாக, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பிரபு மீது குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையாக சென்னைக்கு மாற்றப்படுகிறார். சென்னை பயிற்சி மையம் மிக மோசமான உள்கட்டமைப்புடன் உள்ள போதிலும், பிரபு / ஆதி திறமையான வீரர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகிறார். தற்செயலாக சாலையோர மீன் விற்பனையாளர் மதியின் (ரித்திகா சிங்) திறமையைக் கண்டறிகிறார். தமது சகோதரியின் குத்துச்சண்டை போட்டியில் தவறுதலாக முடிவு செய்து அறிவிக்கும் நடுவர்களை மதி அடித்து துவம்சம் செய்யும் போது அவரிடமுள்ள திறமை பிரபுவுக்கு தெரிகிறது.

எட்டு ஆண்டுகளாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று வரும் மதியினுடைய அக்காவை ஒதுக்கிவிட்டு மதிக்கு தினமும் சில மணி நேரம் பயிற்சியளிக்க பிரபு முன்வருகிறார். பிரபுவின் முரட்டுத்தனமான பயிற்சி முறைகளும் மதியின் இயற்கையான ஆக்ரமிப்பு குணமும் அவருடன் சேர்ந்து பயணிப்பதில் இடர்களை உண்டாக்குகிறது. இதன் விளைவாக உள்ளுரில் நடைபெற்ற ஒரு அனைத்துலகப் போட்டியில் மதி தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. சகோதரிகள் இருவரையும் விடுதியில் தங்க வைத்து கடுமையாகப் பயிற்சியளித்தால் இவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லமுடியும் என்று நினைக்கும் பயிற்சியாளர் பிரபு அவர்களின் பெற்றோரிடம் அனுமதி கேட்கிறார். முதலில் பிரபுவை தவறாகப் புரிந்துகொண்ட மதி, பின்னர் பயிற்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக பிரபு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை விற்பதை அறிந்த மதி மனம் மாறுகிறாள். முழுமையான ஈடுபாட்டோடு பயிற்சியும் பிரபுவின் மீது காதலும் கொள்கிறாள். தங்கைக்கு மட்டும் அதிக பயிற்சியளிப்பதாக கருதும் மதியின் அக்கா ஒரு சந்தர்ப்பத்தில் மதியின் கையை தந்திரமாக உடைத்து விடுகிறாள். தகுதி சுற்று நடைபெறும் நாளில் இந்நிகழ்வு நடைபெறுவதால் மதி உடைந்த கையுடனேயே போட்டியில் பங்கேற்று மீண்டும் தோல்வியடைகிறாள். கோபம் கொண்ட பயிற்சியாளர் பிரபு மதியை பயிற்சியை விட்டு வெளியேற்றுகிறார்.

நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தேவ் மதியை டில்லிக்கு அழைத்து ஒரு கலாச்சார பரிமாற்ற போட்டியில் உருசிய குத்துச்சண்டை வீரருடன் மதியை போட்டியிட வைத்து தோல்வியடையச் செய்கிறார். திரும்பும் வழியில் தேவ் மதியிடம் பாலியல் ரீதியாக அநாகரிமாக நடக்க முயல்கிறார். உடன்பட மறுக்கும் மதியை திருட்டுப் பட்டம் கட்டி காவலர்களிடம் சிக்க வைத்து பழிவாங்குகிறார்.

காவலர்களிடம் இருந்து மதியை மீட்டு உரிய பயிற்சி அளித்து அனைத்துலக்ப் போட்டியில் மதியை வெற்றி பெறச்செய்வது எஞ்சியிருக்கும் கதையாகும். கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் மதி இறுதிப்போட்டியில் உருசிய வீராங்கனையுடன் மோதி வெற்றி பெறுகிறார். போட்டியின் முடிவில் மதியும் பிரபுவும் உணர்ச்சி மேலிட்டல் ஒருவரையொருவர் கட்டித் தழுவுகின்றனர்.

இறுதி சுற்று படத்திற்கான செயற்கைக் கோள் ஒளி ஒலி பரப்பு உரிமை செயா தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரித்திக்கா சிங் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பல்வேறு விருதுகளை வென்றார்.

நடிப்பு[தொகு]

 • மாதவன்- பிரபு செல்வராஜாக (தமிழில்)/ ஆதி தாமர் (இந்தியில்)
 • ரித்திகா சிங்- எழிலரசியாக
 • மும்தாஜ் சோர்கார்- இலக்சுமியாக
 • நாசர்- பஞ்ச் பாண்டியனாக
 • ராதாரவி- முரளிகிருஷ்ணனாக (தமிழில்)
 • எம். கே. ரைனா (இந்தியில்)
 • ஜாகிர் உசைன்- தேவ் காத்ரி
 • காளி வெங்கட்- சாமிக்கண்ணாக
 • பாலிந்தர் கார்- தமயந்தியாக
 • பிபின்
 • ஒலிம்பிக் தேவராஜன்- நடுவராக
 • சஞ்சனா நடராணசன்- குத்துச்சண்டை மாணவராக

இசை[தொகு]

ச‌ந்தோஷ் நாராயணன் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சஞ்சய் வந்த்ரேகர், அதுல் ரனிங்கா ஆகியோர் அளித்துள்ளனர். தமிழ்ப்பாடல்களை விவேக், முத்தமிழ்[3] ஆகியோர் எழுதியுள்ளனர்.சாலா காதூசு இந்தி திரைப்படத்தில் வரும் பாடல்களை சந்தோசு நாரயணன் எழுதியிருந்தார். பின்னணி இசையமைப்பாளர் சஞ்சய் வாண்டிர்கர் மற்றும் அத்துல் ரனிங்கா ஆகியோர் இசையமைத்திருந்தனர். முன்னதாக இவர்கள் ராச்குமார் இராணியிடம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்தி பதிப்பின் பாடல் வெளியீடு 2016 ஆம் ஆண்டு சனவரி 2 இல் வெளியிடப்பட்டது[4]. தமிழ் பாடல்கள் சத்தியம் சினிமா அரங்கில் சனவரி 4 இல் வெளியிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

 1. "Madhavan gears up for the release of Irudhi Suttru". The Hindu. 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-28.
 2. "Movie Mistakes". Tamil Movie Mistakes. 2016-04-03. Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
 3. https://cinema.vikatan.com/movie-review/58294-iruthi-sutru-tamil-movie-review.html
 4. "Saala Khadoos (Original Motion Picture Soundtrack) - EP by Santhosh Narayanan on iTunes". iTunes Store. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுதிச்சுற்று&oldid=3709317" இலிருந்து மீள்விக்கப்பட்டது