இந்திய மைனா
இந்திய மைனா (அறிவியல் பெயர்: Acridotheres tristis tristis) என்பது சாதாரண மைனாவின் துணையினம் ஆகும்.[1]
விளக்கம்
[தொகு]இந்திய மைனாவானது கொண்டைக்குருவிக்கும் புறாவுக்கும் இடையிலான அளவில் சுமார் 23 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு, கால்கள் போன்றவை மஞ்சளாகவும், விழிப்படலம் பழுப்பாகவும் இருக்கும். தலை, கழுத்து, மார்பு ஆகியன பளபளக்கும் கறுப்பு நிறத்திலும், உடலின் மேற்பகுதி கறும்பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் இறக்கைகளில் வெள்ளை வட்டம் காணப்படும். பறக்கும்போது தெளிவாகத் தெரியும். இதன் வயிறும் வாலடியும் அழுக்கு வெள்ளையாக இருக்கும். வாலடிப் போர்வை இறகுகள் வெண்மையாகவும், கண்ணைச் சுற்றிலும் தூவியற்ற பகுதி மஞ்சளாக இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]இது தெற்கு கசக்கஸ்தான், துருக்மெனிஸ்தான் கிழக்கு ஈரானில் இருந்து தெற்கு சீனா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம், தென்னிந்தியா வரை காணப்படுகிறது. இது ஹவாய் மற்றும் வட அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
நடத்தை
[தொகு]இந்திய மைனா இணையாகவும் சிறு கூட்டமாகவும் காணப்படும். இது தன் வாழிடங்களில் மனிதர்களைச் சார்ந்து வாழும் திறண் கொண்டது. புழு, பூச்சி, தானியம், சமையலறை கழிவுப் பொருட்கள், பழங்கள் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை உணவாகக் கொள்ளும். மலர்த் தேனை விரும்பிக் குடிக்கும். மனிதர்களிடம் எளிதாக பழகும் தன்மை கொண்டது. பலவகையான உரையாடும் குரலில் கத்தும். குஞ்சாக இருக்கும்போதே இதை சிலர் எடுத்து வளர்த்து பேசப் பழக்குவர். என்றாலும் காட்டு மைனாவைப்போலப் பேசும் திறண் இதற்கு இல்லை.[2]
இது பெப்ரவரி முதல் ஆகத்து வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. குச்சி, வேர், குப்பைகள், காகிதம் ஆகியவற்றைக் கொண்டு சுவர், மரப் பொந்துகளில் கூடு கட்டும். அதில் நான்கு அல்லது ஐந்து முட்டைகளை இடும். முட்டைகள் பசுமை தோய்ந்த பளபளக்கும் நீலநிறத்தில் இருக்கும். ஓரே ஆண்டில் இருமுறை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது உண்டு.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
- ↑ 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 367.