இந்தியக் காட்டுக் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் காட்டுக் கீச்சான் (அறிவியல் பெயர்: Tephrodornis pondicerianus pondicerianus) என்பது சாதாரணக் காட்டுக் கீச்சானின் துணையினம் ஆகும்.[1] இது கிழக்கு இந்தியா முதல் தெற்கு லாவோஸ் வரை காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இந்தியக் காட்டுக் கீச்சான் கொண்டைக்குருவி அளவை ஒத்து சுமார் 16 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு பழுப்பு நிறத்திலும், விழிப்படலம் பசுமை தோய்ந்த பழுப்பாகவும், கால்கள் கொம்பு பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பறவையின் உடலின் மேற்பகுதி கருஞ்சாம்பல் பழுப்பாக இருக்கும். அடிப்பகுதி சாம்பல் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். கண் வழியாகச் செல்லும் கரும்பட்டைக் கோடும் அதற்கு மேல் காணப்படும் வெண் புருவமும் இதை எளிதில் அடையாளம் காண உதவுகிறது. இதன் வாலு கரும்பழுப்பு நிறத்தில் சதுரமாக இருக்கும். வாலின் வெளியோர இறகுகள் வெண்மையாக இருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பால் ஈருருமை இல்லை.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இந்தியக் காட்டுக் கீச்சான் கிழக்கு இந்தியா முதல் தெற்கு லாவோஸ் வரை காணப்படுகிறது. தென்னிந்தியாவில் ஆங்காங்கே வறள் காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது. மாறாப் பசுங்காடுகளில் காண இயலாது.[2]

நடத்தை[தொகு]

இவை இணையாகவோ, சிறு கூட்டமாகவோ சிறு மரங்களிலும் புதர்களிலும் கிளைக்கு கிளையும் மரத்துக்கு மரமும் ஒன்றன் பின் ஒன்றாக தாவி இரைதேடும். இரைதேடும் பறவைக் கூட்டங்களோடு சேர்ந்து இரை தேடும். கம்பளிப் பூச்சி, சிலந்தி, வண்டுகள் போன்ற பூச்சிகள் இதன் முதன்மை உணவாகும்.[2]

ஆண் பறவை சற்று இனிய குரலில் 'வீட், வீட், வீட் எனவும், வ்வீ, வ்வீ, வ்வீ எனவும் ஒலி எழுப்பும்.

இப்பறவை பெப்ரவரி முதல் மே முடிய இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரப்பட்டை, வேர், நார் முதலியவற்றால் சிலந்தி நூல் கொண்டு கோப்பை வடிவில் இலைகளற்ற மரக்கிளையில் இரு கிளைகள் கவையாக பிரியும் இடத்தில் கூடு அமைக்கும். மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். முட்டை பசுமை தோய்ந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Batises, bushshrikes, boatbills, vangas (sensu lato)". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 March 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 378-379.