உள்ளடக்கத்துக்குச் செல்

இடைகால் தியாகராஜசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு தியாகராஜசுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):தென் திருவாரூர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:இடைகால், அம்பாசமுத்திரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:தியாகராஜர்
தாயார்:சிவகாமி அம்பாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[2]

இடைகால் தியாகராஜசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இடைகால் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] திருவாரூருக்கு இணையான தலமாக கருதப்பட்டு வணங்கி வருவதால் இத்தலம் தென் திருவாரூர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.[2]

அமைவிடம்

[தொகு]

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் நெடுஞ்சாலையில் 30 கி. மீ. தொலைவில் இடைகால் அமைந்துள்ளது. இந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]

வரலாறு

[தொகு]

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் இக்கோயில் கற்றளியாக எழுப்பப்பட்டது. அப்போது இத்தல இறைவனின் பெயரை திருவாம்பிகை ஈசுவரமுடையார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது. பெருமானராயன் காளிங்கன் என்பவர் கோயிலின் வெளிச்சுற்றில் கொடிமரம் நிறுவி, பங்குனி உத்தர நாளில் இறைவின் திருவீதியுலா செல்ல தோர் ஒன்றை உருவாக்கித் தந்ததாக கல்வெட்டில் குறிக்கபட்டுள்ளது. மேலும் கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுததேவராயர், சதாசிவதேவராயர், கண்டியத் தேவன், இராமராஜவிட்டல ஈஸ்வர மகராஜா, சின்ன பசவப்ப நாயக்கர், அஞ்செழுத்து உடையார் என பல ஆட்சியாளர்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.[2]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலின் முதன்மை வாயிலில் மூன்று நிலை இராச கோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தின் உள்பக்க விதானத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து பிரம்மாண்ட சிற்பங்களைக் கொண்ட 16 தூண்களை உடைய வசந்த மண்டபம் அமைந்துள்ளது. வசந்த மண்டபத்தை அடுத்து முகமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் தற்காலத்தில் சிவகாமி அம்ன் உடனுறை தியாகராஜர் என அழைக்கப்படுகிறார். கோட்டத்தில் உள்ள தென்முகக் கடவுள் இத்தலத்தில் வித்தியாசமாக இடக் காலை மடக்கியும் வலக்காலை தொங்கவிட்டபடியும் உள்ளார். காலடியில் பாம்பு உள்ளது. உள் சுற்றில் சப்த கன்னியர், சுரதேவர், கன்னி மூலை கணபதி, கரியமாணிக்கப் பெருமாள், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சனீசுவரர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி ஆகியோருக்கான சிற்றாலயங்கள் அமைந்துள்ளன.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "தென் திருவாரூர் என்று போற்றப்படும் இடைகால் தியாகராஜர் கோயில்". Hindu Tamil Thisai. 2024-12-12. பார்க்கப்பட்ட நாள் 2024-12-14.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)