ஆடு ஜீவிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட் டேஸ்
முதல் பதிப்பு (மலையாளம்)
நூலாசிரியர்பென்யாமின்
உண்மையான தலைப்பு' ஆடு ஜீவிதம்'
மொழிபெயர்ப்பாளர்ஜோசப் கோயிப்பள்ளி[2]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைபுதினம், புனைவு
வெளியீட்டாளர்பெங்குயின் புக்ஸ் (ஆங்கிலம்)[1]
கிரீன் புக்ஸ்(மலையாளம்)
வெளியிடப்பட்ட நாள்
15 ஜூலை 2008
ஆங்கில வெளியீடு
1 ஜூலை 2012[3]
பக்கங்கள்255
ISBN978-01-4341-633-3 (ஆங்கிலம்), 978-81-8423-117-5 மலையாளம்)
முன்னைய நூல்அபிகீசன் (மலையாளம்)
அடுத்த நூல்'மஞ்சவெயில் மரணங்கள் (மலையாளம்)

கோட் டேஸ் (Goat Days) (அசல் மலையாளத் தலைப்பு: ആടുജീവിതം (ஆடுஜீவிதம்))என்பது இந்திய எழுத்தாளர் பென்யாமின் 2008 ஆம் ஆண்டு எழுதிய ஒரு மலையாள மொழி புதினமாகும். இது சவூதி அரேபியாவில் தனது விருப்பத்திற்கு மாறாக ஆடு மேய்க்கும் வேலையில் அமர்த்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த மலையாளத் தொழிலாளியைப் பற்றிய கதையாகும்.[4][5]

இந்தப் புதினம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இது கேரளத்தில்ல் அதிகம் விற்பனையான நூல் என்ற சாதனை படைத்தது. [6] ஊடகங்களின்படி, பென்யாமின் இதன் மூலம் பிரபலமானார். தற்போது மலையாளத்தில் அதிக விற்பனையாகும் புதினத்தில் ஒன்றாக உள்ளது. புதினத்தின் அசல் மலையாளப் பதிப்பு 100 க்கும் மேற்பட்ட மறுபதிப்புகளைக் கடந்துள்ளது. [7]

நஜீப் முகமது என்ற இந்தியக் குடிமகனின் வாழ்க்கையை இந்தப் புதினம் சித்தரிக்கிறது. பாரசீக வளைகுடா நாடுகளில் வேலை செய்து, சொந்த ஊருக்கு அனுப்பும் அளவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்பதே நஜீப்பின் கனவாக இக்கிறது. ஆனால், சவூதி பாலைவனத்தின் நடுவில் ஆடு மேய்க்கும் அடிமைத்தனமான பணியிலேயே அவன் அமர்த்தப்படுகிறான். இறுதியில், நஜீப் தனது பாலைவன சிறையிலிருந்து தப்பிக்க ஒரு அபாயகரமான திட்டத்தை உருவாக்குகிறான். இந்தியாவின் பென்குயின் புத்தக நிறுவனம் இந்தப் புதினத்தை "பாலைவனத்தில் நஜீப்பின் வாழ்க்கையின் விசித்திரமான மற்றும் கசப்பான நகைச்சுவை" என்றும், "தனிமை மற்றும் அந்நியப்படுத்தலின் உலகளாவிய கதை" என்றும் விவரிக்கிறது.[8]

புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மான் ஆசிய இலக்கியப் பரிசு 2012 இன் நீண்ட பட்டியலிலும், தெற்காசிய இலக்கியத்திற்கான டிஎஸ்சி பரிசு 2013 இன் குறுகிய பட்டியலிலும் இடம்பெற்றது. புத்தகம் 2009 இல் பென்யாமினுக்கான கேரள இலக்கிய அகாதமி விருதையும் பெற்றுத் தந்தது. [9] ஆனாலும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் புத்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது.[10]

கதைச் சுருக்கம்[தொகு]

புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (சிறை, பாலைவனம், தப்பித்தல் மற்றும் புகலிடம்).

நஜீப் முகம்மது என்ற இளைஞன், கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடுவைச் சேர்ந்த ஒரு இளைஞன். புதிதாகத் திருமணமான அவன், வளைகுடா நாடுகளில் ஏதேனும் ஒரு நல்ல வேலைக்குச் சேர வேண்டும் என்று கனவு காண்கிறான். பல முயற்சிகளுக்குப் பிறகு, சவூதி அரேபியாவில் பணிபுரியும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. இருப்பினும், ரியாத்தின் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியவுடன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறான். பின்னர் தன் முதலாளி (அர்பாப்) என்று நம்பும் ஒரு அரேபியரால் அழைத்துச் செல்லப்படுகிறான். பாலைவனத்தின் நடுவில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணைக்கு அந்த முதலாளி அவனை அழைத்துச் செல்கிறான். நஜீப்பின் மிக மோசமான கனவை உறுதிப்படுத்துகிறான். அர்பாப் நஜீப்பை பண்ணை மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கிறான்.

நஜீப் பின்னர் ஒரு அடிமைத் தொழிலாளியாகவும் சவுதி அரேபியாவின் தொலைதூர பாலைவனங்களில் மூன்றரை ஆண்டுகளாக செம்மறி ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறான். அவனுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை அரைப் பசியுடன் இருக்கிறான். முகம் கழுவுவதற்குக் கூட தண்ணீர் மறுக்கப்படுகிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அவதிப்படுகிறான். பண்ணையின் மிருகத்தனமான மேற்பார்வையாளர், துப்பாக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் நஜீப்பைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி அடிக்கிறார். இப்போது நஜீப் இந்த புதிய விதியை வெறும் மனித அத்தியாவசியங்கள் இல்லாமல் நிர்வகிக்க வேண்டியிருந்தது.

மொழி, இடங்கள் அல்லது மனிதர்கள் தெரியாத ஒரு நாட்டில், அவன் எந்த மனித தொடர்புகளிலிருந்தும் வெகு தொலைவில் இருக்கிறான். நஜீப் படிப்படியாக தன்னை ஆடுகளுடன் அடையாளப்படுத்தத் தொடங்குகிறான். அவைகளில் ஒன்றாக தன்னைக் கருதுகிறான். அவனது மனப்போக்கு இப்போது ஆடுகளின் மனநிலையைப் போலவே மாறியதால் அவனது கனவுகள், ஆசைகள், பழிவாங்கல்கள் மற்றும் நம்பிக்கைகள் மறையத் தொடங்குகின்றன. அவன் ஆடுகளுடன் பேசுகிறான். அதனுடனேயே சாப்பிடுகிறான். அவைகளுடனேயே தூங்குகிறான். கிட்டத்தட்ட ஒரு ஆட்டின் வாழ்க்கையை வாழ்கிறான். பலமுறை தப்பியோட முயன்றாலும், கண்காணிப்பாளர் ஒவ்வொரு முறையும் அவரைப் பிடித்து, உணவு, தண்ணீரைத் தர மறுத்து தண்டிக்கிறார். தப்பி ஓடிவிட்டதாக நினைத்த முந்தைய மேய்ப்பனின் எலும்புக்கூடு மணலில் புதைந்து கிடப்பதைக் கண்டு தப்பிக்கும் முயற்சியை மறந்து விடுகிறான். அப்படியிருந்தும், நம்பிக்கையின் ஒளியை வைத்திருக்கிறாரன். அது சுதந்திரத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு நாள் தனது துன்பங்களுக்கு முடிவு கட்டும் எனவும் நினைக்கிறான்.

கடைசியாக ஒரு இரவு, பக்கத்து பண்ணையில் சோமாலியத் தொழிலாளியான இப்ராஹிம் காதிரியின் உதவியுடன், நஜீப் முகமது மற்றும் அவரது நண்பர் ஹக்கீம் கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கிறார்கள். ஆனால், மூவரும் பல நாட்கள் பாலைவனத்தில் வழி மறந்து தடுமாறுகிறார்கள். இளம் ஹக்கீம் தாகத்தாலும் சோர்வாலும் இறந்துவிடுகிறான். ஆனால் இப்ராஹிம் காதிரியும் நஜீப்பும் தொடர்ந்து நகர்ந்து, ஒரு பாலைவனச் சோலையில் தடுமாறி சில நாட்கள் ஓய்வெடுக்க முடிகிறது. அவர்கள் மீண்டும் நகரத் தொடங்க திட்டமிட்டிருந்த நாளில், நஜீப்பைத் தனியாக விட்டுவிட்டு இப்ராஹிம் மறைந்து விடுகிறான். ஆரம்பத்தில் தடுமாறிய ஆளான நஜீப், எப்படியோ அருகில் உள்ள நெடுஞ்சாலைக்குச் செல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். அங்கு ஒரு நாள் முயற்சிக்குப் பிறகு, ஒரு அன்பான அரேபியர் அவனைக் காப்பாற்றி அல்-பத்தாவுக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு, அகதிகளுக்கு உதவும் சக மலையாளியான குஞ்சிக்காவை சந்திக்கிறான். குஞ்சிக்கா அவனை உடல் நலம் தேறச் செய்து இறுதியாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கத் திட்டமிடுகிறார். நஜீப் நன்றாக இருப்பதாக உணர ஆரம்பித்தவுடன், குஞ்சிக்காவுடன் இருந்தபோது சந்தித்த ஹமீத்துடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்காக காவலர்களால் கைது செய்யப்படுகிறான். நஜீப் சுமேசி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படுகிறான், அங்கு அர்பாப்கள் தங்களிடம் பணிபுரிந்த தலைமறைவான கைதிகளில் யாரையாவது பிடித்துச் சென்று தங்கள் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார்கள். ஆரம்பத்தில் நஜீப்பும் ஹமீதும் தங்கள் அர்பாப்கள் வருவதைக் கண்டு பயந்து போகின்றனர். ஆனால் ஹமீதின் அர்பாப் தோன்றி ஹமீதை அவருடன் அழைத்துச் செல்லும் வரை அவர்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்படுகின்றனர். விரைவில், நஜீப்பின் அர்பாப் உள்ளே நுழைகிறார். மீண்டும் கால்நடைப் பண்ணைக்கு இழுத்துச் சென்று விடுவாரோ என நஜீப் பயப்படுகின்றான். ஆனால் அதிசயமாக அவர் நஜீப்பை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. அதே நேரத்தில் தான் விசாவுடன் வந்தது வேறு நிறுவனத்தில் வேலைக்காக. ஆனால் விமான நிலையத்தில் கடத்தப்பட்டு தான் அடிமையாகப் பயன்படுத்தப்பட்டதை நஜீப் உணரிகிறார்.

சில வாரங்களில், தான் சவுதி அரேபிய அதிகாரிகளால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படப்போகிறோம் என்பது அவனுக்குத் தெரியும். பரவச உணர்வுடன் அவன் தனது சக கைதிகளிடம் விடைபெறுகிறான். மேலும் நாடுகடத்தப்பட்ட பலருடன் அவன் விமானத்தில் ஏறும்போது, எல்லோரும் ஆடுகளைப் போல விமானத்திற்குள் எப்படி அடைக்கப்படுகிறார்கள் என்பதையும், தான் எப்படி ஆடு வாழ்க்கை வாழ்ந்தான் என்பதையும் உணர்கிறான்.

முக்கிய பாத்திரங்கள்[தொகு]

நூலாசிரியர் பென்யாமின்
  • புத்தகத்தின் கதாநாயகனும் ஹரிப்பாடு என்னுமிடத்திலிருந்து வந்த மணல் அள்ளும் தொழிலாளியுமான நஜீப் முகமது ( சவூதி அரேபியாவின் சுமேசி சிறைச்சாலையில் கைதி எண் 13858) மூன்றரை வருடங்கள் (4 ஏப்ரல் 1992 - 13 ஆகஸ்ட் 1995) சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒரு தொலைதூர பண்ணையில் கழிக்கிறான்.[11]
  • ஹக்கீம் ஒரு இளைஞன், அவனும் மற்றொரு அரேபியரின் கீழ் சிக்கி நஜீப்பைப் போலவே வாழ்கிறான். பாலைவனத்தில் இருந்து தப்பிக்க நஜீப்புடன் இணைகிறான் இருப்பினும், அரேபியப் பாலைவனம் வழியாக அவர்களின் ஆபத்தான பயணத்தில் பசி, தாகத்தினால் மரணமடைகிறான்.
  • இப்ராஹிம் காதிரி
  • அரேபிய உரிமையாளர்
  • ஹமீத்
  • குஞ்சிக்கா
  • சைனு

நிஜ வாழ்க்கையில் நஜீப் முகமது என்பவருக்கு கருவாற்றாவைச் சேர்ந்த சேர்ந்த நண்பர் ஒருவரால் ₹30,000க்கு (2020 இல் ₹200,000 அல்லது US$2,500க்கு சமம்) சவூதி அரேபியாவில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி புரிய விசா வழங்கப்பட்டது. நிஜ வாழ்க்கை நஜீப்புடனான தனது சந்திப்பை நினைவுப்படுத்தும் பென்யாமின் இவ்வாறு நினைவு கூர்ந்தார்:

மொழிபெயர்ப்புகள்[தொகு]

அசல் புத்தத்தை கிரீன் புக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புத்தக நிறுவனம் திருச்சூரில் 15 சூலை 2008 அன்று வெளியிட்டது. பெங்குயின் புத்தக நிறுவனத்திற்காக ஆங்கில மொழிபெயர்ப்பு கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பேராசிரியரான ஜோசப் கோயிப்பள்ளி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. [12] [13]

கன்னடம் மற்றும் இந்தியில் மொழிபெயர்ப்புகள் வெளிவர உள்ளன. [14]

திரைப்படத் தழுவல்[தொகு]

இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற படத்தைத் தயாரிக்கப் போவதாக இயக்குநர் பிளெஸ்ஸி அறிவித்திருந்தார். இருப்பினும், "நாங்கள் இன்னும் விவாத கட்டத்தில் இருக்கிறோம். ஒரு மலையாளப் படத்திற்கு அதன் தயாரிப்புச் செலவு சாத்தியமாகாது என்பதை உணர்ந்தபோது, ஒரு படத்திற்கான எங்கள் திட்டங்களைத் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. இப்போது பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறோம், நஜீப் வேடத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கிறார் " என குறிப்பிட்டார்.

இருப்பினும், 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், புத்தகத்தின் பெயரிடப்பட்ட திரைப்படத் தழுவலை மலையாளத் திரைப்படமாக உருவாக்குவதா பிளெஸ்ஸி உறுதிப்படுத்தினார். பல மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 2018 இல் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக மலையாளத் திரையுலகிற்கு மீண்டும் வருவதை உறுதிப்படுத்தினார். [15] [16]

சான்றுகள்[தொகு]

  1. Saraswathy Nagarajan (12 September 2012). "Arts / Books : 'I write for my satisfaction'". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/books/article3888796.ece. 
  2. AllTimeBooks.com or Indianbooks.co.in. "Goat Days By Benyamin (translated by Joseph Koyipally) - Second Hand Books - from AllTimeBooks.com or Indianbooks.co.in and". Biblio.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-07-26.
  3. "Goat Days". Caravanmagazine.in. Archived from the original on 6 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-07-26.
  4. Anandan, S. (6 December 2012). "Three Malayalis on the Man Asian longlist". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/three-malayalis-on-the-man-asian-longlist/article4169108.ece. 
  5. "aadujeevitham". Indulekha.com.
  6. "Words in Migration". outlookindia.com. 17 October 2011. Archived from the original on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-26.
  7. Ghoshal, Somak (27 January 2013). "Beastly tales: A conversation with Benyamin". livemint.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
  8. "Goat Days". Penguin Books India. 15 July 2012. Archived from the original on 22 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
  9. "Literary Awards". Government of Kerala. Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 August 2014.
  10. Gupta, Trisha (December 27, 2019). "Books: Fiction should prophesy the future". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-18.
  11. "From Saudi slave to inspiration: Meet Najeeb, the real life hero of 'Aadujeevitham'". thenewsminute.com. 13 January 2018. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
  12. "Book review: Goat Days - Lifestyle - DNA". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
  13. "Koyippally's Benyamin, an intelligent work of translation- IBN Live". ibnlive.in.com. 14 August 2012. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-10-26.
  14. "Three Malayalis on the Man Asian longlist". 6 December 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/three-malayalis-on-the-man-asian-longlist/article4169108.ece. Anandan, S. (6 December 2012). "Three Malayalis on the Man Asian longlist". The Hindu. Chennai, India.
  15. "After 25 years, AR Rahman to return to Malayalam film industry with Prithviraj's Aadujeevitham". indianexpress.com. 17 January 2018. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.
  16. "Confirmed! A R Rahman to compose for Aadujeevitham". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடு_ஜீவிதம்&oldid=3930920" இலிருந்து மீள்விக்கப்பட்டது