அன்வருத்தீன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


1749ல் ஆம்பூர் போரில் அன்வருத்தீன் கான், பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி படைகளால் கொல்லப்படுதல்

அன்வருத்தீன் கான் (Anwaruddin Khan) (1672 – 3 ஆகஸ்டு 1749), என்றழைக்கப்படும் முகமது அன்வருத்தீன் இரண்டாவது ஆற்காடு நவாப் ஆவார். முதலிரண்டு கர்நாடகப் போர்களில் பங்கு வகித்தவர்களில் முக்கிய நபர். தற்கால பாக்கித்தானில் 1721-1733 காலங்களில் இராணுவ சுபேதாரகப் பணியாற்றியவர்.

வாழ்க்கை[தொகு]

அன்வருத்தீன் கான், தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் அவத் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் 1672ல் ஹாஜி முகமது அன்வர் உத்தீன் கானுக்குப் பிறந்தவர்.

தில்லி முகலாயப் பேரரசின் போர்ப் படையில் சேர்ந்த அன்வருத்தீன் கான், பின்னாளில் ஐதராபாத் நிசாம் முதலாம் ஆசப் ஷாவின் நம்பிக்கைக்கு உரியவரானார்.

ஐதராபாத் நிஜாம் பேரரசின் எல்லூர் மற்றும் இராஜமுந்திரி பகுதிகளுக்கு அன்வருத்தீன் கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1725க்குப் பின்னர் அவுரங்கசீப் பகதூர் என்ற பட்டம் அன்வருத்தீன் கானுக்கு வழங்கினார். 1725 - 1743 முடிய சிறீகாகுளம் மற்றும் இராஜமகேந்திரபுரம் மற்றும் மசூலிப்பட்டினம் பகுதிகளின் பௌஜ்தாராக ஐதராபாத் நிசாமால் நியமிக்கப்பட்டார்.

இரண்டாம் சாதுல்லா கான் இறந்த பின்னர், சூலை 1744ல் ஐதராபாத் நிஜாமின் பிரதிநிதியாகவும், ஆற்காடு நவாப் ஆகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக அன்வருத்தீன் கான் இரண்டாம் ஆற்காடு நவாபு வம்சத்தினை நிறுவினார்.

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியர்களிடத்தில் நட்புடன் பழகிய அன்வருத்தீன் கான், 1748ல் ஐதராபாத் நிஜாம் மன்னர் நிஜாம் உல் மாலிக்கின் இறப்பிற்குப் பின், பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களிடம் பிணக்குக் கொண்டார்.

தென்னிந்தியாவில் தங்கள் பலத்தை நிருபிக்க, பிரித்தானிய மற்றும் பிரான்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவனத்தினர்கள் போட்டியிட்டதன் விளைவாக 1746ல் முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்றது. ஆற்காடு பகுதி இவ்வாறக இரண்டு கம்பெனியர்களுக்குமிடையே போர்க்களமானது.

1746ல் மதராஸ் சண்டையில், பிரெஞ்ச் கம்பெனிப் படைகள், பிரித்தானிய கம்பெனியின் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றியது. முகமது அன்வருத்தீன் கான், கம்பெனி ஆட்சியாளரகளின் இரண்டு தரப்பினரையும் கூப்பிட்டு கண்டித்து அமைதிப்படுத்தினார். ஆனால் பிரெஞ்ச் ஆளுநர் டூப்ளே, ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.

எனவே முகமது அன்வருத்தீன், பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் தனது மகனை, பிரெஞ்சுப் படைகளிடமிருந்து சென்னையைக் கைப்பற்ற அனுப்பினார். 29 அக்டோபர் 1746 அன்று பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற அடையாறு போரில் ஆற்காடு நவாபு படைகள் தோற்றது.[1]முகமது அன்வருத்தீன் கானுக்கு ஆங்கிலேய - பிரெஞ்சு கம்பெனிகளிடமிருந்து, தங்களுக்கே ஆதரவு தரவேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அன்வருத்தீன் கான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார்.

தென்னிந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை அகற்றுவதற்கு, பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனியினர், முகமது அன்வருத்தீன் கானுக்கு பதிலாக உசைன் தோஸ்த் கான் என்ற சந்தா சாகிபை, ஆற்காடு நவாப் ஆக பதவியில் அமர்த்த வேண்டும் என முடிவு செய்தனர்.

ஐதராபாத் நிசாம் நவாப் பதவிக்கு போட்டியிட்ட, இருவருக்கு ஆங்கிலேயர்களும், பிரெஞ்சியரும் தனித்தனியாக ஆதரவளித்தனர்.

1748ல் நிஜாம் உல் முல்க் இறந்து விடவே, அவரது இரண்டாம் மகன் நசீர் ஜங்கிற்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கு நிசாம் மன்னர் பதவிக்கு போட்டியிட்டனர். முசாபர் ஜங், தெற்கிலிருந்து சந்தா சாகிப் மற்றும் பிரெஞ்ச் படைகளுடன் ஐதராபாத் நோக்கி புறப்பட்டார்.

வயதான ஆற்காடு நவாப் முகமது அன்வருத்தீன் கான், ஆங்கிலேயப் படைகள் உதவியுடன், ஆம்பூர் அருகே 3 ஆகஸ்டு 1749ல் பிரெஞ்ச் படைகளுடன் நடைபெற்ற ஆம்பூர் போரில் அன்வருத்தீன் கான் தமது 77வது வயதில் கொல்லப்பட்டார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

முன்னர்
இரண்டாம்சாதுல்லாகான்
ஆற்காடு நவாப்
சூலை 1744 – 3 ஆகஸ்டுய் 1749
பின்னர்
சந்தா சாகிப்
(பிரான்சுப் படையின் ஆதரவுடன்)
பின்னர்
முகமது அலி கான் வாலாஜா
(பிரித்தானியர்களின் ஆதரவுடன்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வருத்தீன்_கான்&oldid=2811750" இலிருந்து மீள்விக்கப்பட்டது