உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் கர்நாடகப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் கர்நாடாகப் போர்
ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்
மற்றும் கர்நாடகப் போர்கள் பகுதி

1746 மதராஸ் சண்டையில் பிரித்தானியர் புனித ஜார்ஜ் கோட்டையை, பிரான்சுப் படைகளிடம் இழத்தல்
நாள் 1746–1748
இடம் சென்னை, கடலூர், பாண்டிச்சேரி
பிரிவினர்
ஐதராபாத் நிசாம் பிரெஞ்சு இராச்சியம் பிரான்சு பேரரசு பெரிய பிரித்தானியா ஐக்கிய இராச்சியம்
தளபதிகள், தலைவர்கள்
அன்வர்தீன் கான்
முகமது அலி கான் வாலாஜா
டூப்ளே
பெர்ட்ராண்ட் பிரான்க்காய்ஸ்
ஸ்டிரிங்கர் லாரன்ஸ்
எட்வர்டு பைத்தான்
எட்வர்டு போஸ்கவென்


முதலாம் கர்நாடகப் போர், 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற தென்னிந்திய ஆட்சியாளர்களிடையே ஆட்சித் தலைமை ஆசையால் ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன.

முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி, தில்லி முகலாய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தன்னாட்சியுடன் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது இறப்பிற்குப் பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த மோதல்கள் உருவானது. ஐதராபாத் நிசாமின் மருமகன் சந்தா சாகிப்பும் மற்றும் ஆற்காடு நவாப் அன்வர்தீன் முகமது கானும் கருநாடக நவாபாக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிபுக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின.

1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆசுத்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதிக் கொண்டது. பிரஞ்சு ஆளுனர் தூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள், 1746 இல் மதராஸ் சண்டையில் பிரித்தானியரிடமிருந்து சென்னை மற்றும் கடலூர் பகுதிகளைக் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற அடையாறு சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. இப்போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு வித்திட்டது.

1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது

போரின் போக்குகள்

[தொகு]

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் தனது காலனிகளை விரிவுபடுத்தும் நோக்கில், 1720ல் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை, பிரஞ்சுப் பேரரசு நாட்டுடமையாக்கியது. பிரஞ்சு நாட்டிற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் 1744ல் நடைபெற்று கொண்டிருந்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சியாக, இந்தியாவில் பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் பிரான்சு பேரரசின் இந்திய ஆளுநர் டூப்ளே, கூடுதல் கப்பல் படைகளுடன், பிரித்தானியர்களின் சென்னை மற்றும் கடலூர் கடற்கரை நகரங்களைக் கைப்பற்றினார்.

மதராஸ் சண்டையில் 4 செப்டம்பர் 1746ல் பிரஞ்சுப் படைகள், பிரித்தானியர்களை வென்று சென்னையைக் கைப்பற்றினர்.[1] பிரித்தானியப் படைத்தலைவரை சிறை பிடித்து பாண்டிச்சேரிக்கு அனுப்பினர். சென்னையை பிரஞ்சுப் பேரரசின் கீழ் இணைத்தனர்.[2]

இராபர்ட் கிளைவ், சென்னைக்கு தெற்கே கடலூர் அருகே உள்ள புனித டேவிட் கோட்டையில் தங்கினார்.[3][4] சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றும் நோக்கில் கர்நாடக நவாப் அன்வர்தீனின் 10,000 படைகளுக்கும், பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனியின் 3,000 படைகளுக்கும் இடையே 29 அக்டோபர் 1746 அன்று நடைபெற்ற அடையாற்று போரில், கர்நாடகா நவாப்பின் படைகள் தோற்று பின் வாங்கியது.

பின்னர் டூப்ளே, பிரித்தானியர்களின் கடலூர் நகரத்தின் புனித டேவிட் கோட்டையைக் கைப்பற்ற முற்றுகையிட்டார். பிரித்தானியர்களுக்கு உதவிட கர்நாடக நவாப்பின் மகன் முகமது அலி கான் வாலாஜா கடலூரை நோக்கி படைகளுடன் வந்தார்.

இதற்கிடையே டூப்ளே மற்றும் கர்நாடக நவாப்பும் டிசம்பர், 1746ல் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தம் அடிப்படையில், கர்நாடக நவாப்பின் படைகள் பின்வாங்கியது.

ஆங்கிலேயர்களின் புனித டேவிட் கோட்டை மீது பிரான்சுப் படைகள் தாக்குதல்கள் தொடுத்தது. பிரித்தானியர்களும், கர்நாடாக நவாபு படைகளும் கடுமையான எதிர்தாக்குதல்கள் தொடுத்ததால், பிரான்சுப் படைகள் பாண்டிச்சேரியை நோக்கி பின்வாங்கியது.[5]

1748ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் பாண்டிச்சேரியை முற்றுகையிட்டது. 1748 இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பிரான்சு ஆளுநர் டூப்ளே, சென்னையை ஆங்கிலேயர்களுக்கு திருப்பி வழங்கினார்.

பின் விளைவுகள்

[தொகு]

பிரித்தானியர்களின் பெரிய படைப்பிரிவுகளை, டூப்ளேவின் சிறிய எண்ணிக்கையிலான பிரெஞ்சுப் படைகள் வெற்றி கொள்ள இயலவில்லை. பின்னர் டூப்ளே தென்னிந்தியாவில் பிரெஞ்சு செல்வாக்கை பெருமளவில் விரிவுபடுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்டார்.

1748-1754ல் நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போரில் தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் வலுவான பிரஞ்சு செல்வாக்கை நிலைநாட்டவும், கர்நாடக நவாபையும், ஐதராபாத்தின் நிசாமையும் பதவியில் அமர்த்திட தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்தார்.

மாறாக பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம், அதன் சொந்த செல்வாக்கை சிறிது விரிவாக்கம் செய்தது, மேலும் பிரித்தானிய கம்பெனிப் படைகள், டூப்ளேவின் விரிவான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு கடின முயற்சி செய்யவில்லை.

இரண்டாம் கர்நாடகப் போரின் போது, 1751ல் இராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியக் கம்பெனிப் படைகள் சென்னையை, பிரஞ்சுப் படைகளிடமிருந்து கைப்பற்றியது.

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Malleson, p. 35
  2. Harvey (1998), pp. 31–34
  3. Malleson, p. 38
  4. Harvey (1998), pp. 35–36
  5. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 152–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_கர்நாடகப்_போர்&oldid=3737272" இலிருந்து மீள்விக்கப்பட்டது