நிர்மால்யம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்மால்யம் ( மலையாளம்: നിര്‍മ്മാല്യം , transl. "படைக்கப்பட்டது" அல்லது "நேற்றைய படையல்கள்" ) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும், இதனை எம்டி வாசுதேவன் நாயர் எழுதி இயக்கியுள்ளார். பிஜே ஆண்டனி, சுமித்ரா மற்றும் ரவி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இப்படத்தில் நடித்தற்காக, பிஜே ஆண்டனி 1974 ஆம் ஆண்டில், சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை, வென்றார், இத்திரைப்படத்தில் வெளிச்சபாடுவாக (கடவுளுக்கும் இந்து கோவிலில் பூசை செய்பவருக்கும் இடையே ஒரு தெய்வமேறி குறிசொல்பவனாக) நடித்தார். இந்தத் திரைப்படம் 1974 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் , கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றது . மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

இது எம்டி வாசுதேவன் நாயர் இயக்குனராக அறிமுகமான படமாகும். சுகுமாரன் மற்றும் சுமித்ரா நடிகர்களாக அறிமுகமான படமும் இதுவாகும். இதற்கு முன் இந்தி படத்தில் நடித்த ரவி மேனனின் இரண்டாவது படம் இது. இந்தப் படம் ரவி மேனனின் நடிப்பு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய "பள்ளிவளும் கல்சிலம்பும்" என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்தப் படம், புறக்கணிக்கப்பட்ட கோவிலையும், கோவிலைச் சார்ந்திருக்கும் மக்களையும், சுற்றி நகர்கிறது. பி.ஜே.ஆண்டனி (வெளிச்சப்பாடு அல்லது குறிசொல்லுபவன்) கோவிலின் தெய்வ ஊழியராக உள்ளார். வெளிச்சப்பாடுவின் மனைவி நாராயணி (கவியூர் பொன்னம்மா) கோவிலில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் அப்பு ( சுகுமாரன் ) படித்தவர். ஆனால் வேலையில்லாமல் இருகிறார். எனவே கோவில் மற்றும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். வெளிச்சபாடுவின் மகள் அம்மிணி கோவில் சடங்குகளில் தந்தைக்கு உதவுகிறார்.

திடீரென்று கோவில் பூசாரி, தன் வேலையை விட்டுவிட்டு ஒரு டீக்கடையைத் தொடங்குகிறார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த புதிய அர்ச்சகர் பிரம்மதத்தன் நம்பூதிரி (ரவி மேனன்) இப்போது கோவிலைக் கவனித்துக்கொள்கிறார்.

வீட்டில் நிலைமை சரியில்லாததாலும், தங்கைகளுக்கு இன்னும் திருமணம் ஆகாததாலும், கோவிலில் பணிபுரிகிறார். எனினும் அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருக்கிறார்.

அவர் வெளிச்சப்பாடுவின் மகள் அம்மிணியுடன் தகாத உறவு கொள்கிறார். இதனால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். கடுமையான வறுமையின் காரணமாக வெளிச்சப்பாடு பிச்சை எடுக்கத் தொடங்குகிறார். ஒரு நாள் அவரது மகன் அப்பு புனித வாளை வெற்றிலை வியாபாரிக்கு விற்க முயற்சிக்கிறார், வெளிச்சப்பாடு அதைக் கண்டுபிடிகிறார். அவர் மகன் அப்புவை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்.

இதற்கிடையில், கிராமத்தில் பெரியம்மை நோய் பரவியுள்ளது, முதலில் பாதிக்கப்பட்டது வாரியரின் மனைவி. பெரியம்மை நோய் பரவியதால், மக்கள் கோவில் மற்றும் அதன் சடங்குகளில் தீவிரம் காட்டுகின்றனர். கிராம மக்கள் அம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து அனைவரிடமும் பணம் வசூலிக்கத் தொடங்குகின்றனர்.

திருவிழா நாளில், வெளிச்சப்பாடு, தனது மனைவி நாராயணி தனது உடலை உள்ளூர் வட்டிக்காரரிடம் விற்று பிழைப்பு நடத்துவதைக் வெளிச்சப்பாடு காண நேர்கிறது.

வெளிச்சப்பாடு முற்றிலும் உடைந்து போகிறார். இவர் தேவியின் முன் ஆவேசமாக வெறியாட்டு நடனமாடுகிறார். புனித வாளால் நெற்றியில் வெட்டிக் கொள்கிறார். முகத்தில் வடியும் இரத்தத்தை, வெளிச்சப்பாடு தன் மனைவி முகத்தில் உமிழ்கிறார். இறந்து விழும் வரை வெறியுடன் நடனமாடுகிறார். ஆவேசமிக்க உக்கிரமான காட்சியுடன் படம் முடிகிறது.

நடிகர்கள்[தொகு]

  • வெளிச்சப்பாடு (குறிசொல்லுவோன்) வேடத்தில் பிஜே ஆண்டனி
  • வெளிச்சபாட்டின் மகள் அம்மினியாக சுமித்ரா
  • பிரம்மதத்தன் நம்பூதிரியாக ரவிமேனன், கோவில் அர்ச்சகர்
  • வெளிச்சபாட்டின் மனைவி நாராயணியாக கவியூர் பொன்னம்மா
  • வெளிச்சபாட்டின் மகன் அப்புவாக சுகுமாரன்
  • உள்ளூர் வட்டிக்கு பணம் (கடன்) கொடுப்பவராக குஞ்சாண்டி
  • ராவுண்ணி நாயராக சங்கரடி
  • சாந்தா தேவி
  • வலிய தம்புரானாக கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயர்
  • எம்.எஸ்.நம்பூதிரி
  • எஸ்பி பிள்ளை

தயாரிப்பு[தொகு]

படத்தின் முக்கிய படப்பிடிப்பு, எடப்பல் அருகே உள்ள முக்கோலா ( முகுதாலா ) என்ற சிறிய கிராமத்தில் நடைபெற்றது. நாவல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எம்டி வாசுதேவன் நாயர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.[2] ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு கூறும்போது, “கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினர். காட்சிகளுக்கான தேவையான பொருட்களையும் எங்களுக்கு கொடுத்து உதவினர். சிறிய மற்றும் கூட்டமான காட்சிகளிலும் நடித்தனர். உண்மையில், அவர்கள் படப்பிடிப்புக் குழுவுடன் மிகவும் இணைந்திருந்தார்கள். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் ஊருக்குப் புறப்படும் நேரம் வரும்போது பல குழந்தைகள் கண்ணீருடன் இருந்தனர்.

ஸ்ரீகோவில் பகுதியைத் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் ஒரே ஷெட்யூலில் முடிக்கப்பட்டது. கோழிக்கோட்டில் ஸ்ரீகோவில் சிலையுடன் கூடிய ஒரு செட் அமைத்து, அங்கு நெருக்கமான காட்சிகளைப் படமாக்கியுள்ளார்கள். எங்கள் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட கோவிலில், வழக்கமான பூஜைகள் நடைபெறாததாலும், அது மிகவும் நெரிசலான இடமாக இருந்ததாலும், விளக்குகள் போன்றவற்றை வைப்பதற்கும், உள்ளே நுழைய விடாமல் நிர்வாகம் தடை செய்தது. மற்ற வெளிப்புற இடங்களுக்கு, திருமிட்டக்கோடு கோயிலில் ஆற்றங்கரையில் உள்ள படிகளைப் பயன்படுத்திப் பாடல் காட்சியையும், அருகிலுள்ள குகையில் மழைக் காட்சியையும் படமாக்கியுள்ளனர். தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன் மழைக்கட்சியைப் படமாக்கியுள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சென்னையில் நடந்தது.[3]

மூத்த நடிகர் சங்கரடியும் வெளிச்சபாடு கதாபாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அவரது உடலமைப்பு அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாது என்று கூறி அவரே அந்த வாய்ப்பை நிராகரித்தார். அவரே பிஜே ஆண்டனியைப் பரிந்துரைத்தார். ஆண்டனியின் சிறந்த நடிப்பு இன்னமும் மறக்கமுடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.[4]

ஒலிப்பதிவு[தொகு]

கே.ராகவன் இசையமைத்திருந்தார். சுவாதி திருநாள் மற்றும் எடசேரி எழுதிய கவிதைகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[5]

பாடல் பின்னணி பாடகர்கள் பாடல் வரிகள் கால அளவு
"பனிமதிமுகி பால். ." கேபி பிரம்மானந்தன், சுகுமாரி நரேந்திர மேனன் சுவாதி திருநாள்
"திந்தனம் தாரோ. ." சுகுமாரி நரேந்திர மேனன், பத்மினி எடசேரி
"சமயமாய். ." கே.பி.பிரம்மானந்தன், எல்.ஆர்.அஞ்சலி எடசேரி
"ஸ்ரீமஹாதேவன் தந்தே. ." கேபி பிரம்மானந்தன், பத்மினி எடசேரி

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Malayalam films released during the year 1973". PRD, கேரள அரசு. Archived from the original on 12 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  2. Vijayakumar, B. (2011-09-25). "Nirmalyam 1973". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2482063.ece. 
  3. Ramachandra Babu. Nirmalyam. Nostalgia. Retrieved 13 January 2012.
  4. "ശങ്കരാടി,നാട്യങ്ങളില്ലാത്ത നടന്‍" பரணிடப்பட்டது 2012-04-24 at the வந்தவழி இயந்திரம். Janayugom. Retrieved 2012-01-04.
  5. "Nirmalyam [1973]". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மால்யம்_(திரைப்படம்)&oldid=3747703" இலிருந்து மீள்விக்கப்பட்டது