உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை
செப்டம்பர் 2009இல்
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை is located in சீனா
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை
Location of மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை in சீனா
அதிகாரபூர்வ பெயர்长江三峡水利枢纽工程
நாடுChina
அமைவிடம்Sandouping, Yiling, Hubei
நோக்கம்Power, flood control, navigation
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியதுடிசம்பர் 14, 1994
திறந்தது2008
கட்ட ஆன செலவு¥180 billion (US$26 billion)
உரிமையாளர்(கள்)China Yangtze Power (subsidiary of China Three Gorges Corporation)
அணையும் வழிகாலும்
வகைபுவியீர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுயாங்சி ஆறு
உயரம்181 m (594 அடி)
நீளம்2,335 m (7,661 அடி)
அகலம் (உச்சி)40 m (131 அடி)
அகலம் (அடித்தளம்)115 m (377 அடி)
வழிகால் அளவு116,000 m3/s (4,100,000 cu ft/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மூன்று ஆழ்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு39.3 km3 (31,900,000 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி1,000,000 km2 (390,000 sq mi)
மேற்பரப்பு பகுதி1,045 km2 (403 sq mi)
அதிகபட்சம் நீளம்600 km (370 mi)
அதிகபட்சம் அகலம்1.1 km (0.68 mi) avg.
இயல்பான ஏற்றம்175 m (574 அடி)
மின் நிலையம்
பணியமர்த்தம்2003–2012
வகைவழக்கமான
சுழலிகள்32 × 700 MW
2 × 50 MW Francis-type

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்பது யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஓர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்[1].

அணைக் கட்டமைப்பு 2006இல் கட்டி முடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26ஆவது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியைத் தவிர மூலத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கி்கள் 2012ஆம் ஆண்டுக்கு முன் முழு செயல்பாட்டுக்கு வராது. அணையின் 32 முதன்மை மின்னியக்கிகளையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்தத் திறன் 22.5 கிகாவாட் ஆகும்.

இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.[2]. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.[3]

பெயர்க் காரணம்

[தொகு]

யாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang 瞿塘峡)) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu 巫峡)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்கு என மூன்று பள்ளத்தாக்குகள் உள்ள இப்பகுதி மூன்று ஆழ்பள்ளத்தாக்குப் பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த அணை இப்பகுதியில் அமைந்துள்ளதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என அழைக்கப்படுகிறது. இவ்வணை இந்த மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளிலேயே மூன்றாவதாக உள்ளதும் நீளம் மிக்கதுமான ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

திட்ட வரலாறு

[தொகு]
1954ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வூகன் (wuhan) நகரில் எழுப்பப்பட்ட நினைவு சின்னத்தில் மா சே துங் எழுதிய நீச்சல் என்ற பாடல் பொறிக்கப்பட்டுள்ளது

இந்த அணைத் திட்டம் பற்றி 1919ம் ஆண்டு சன் யாட்-சென் தனது "மாநிலங்களுக்கான உத்திகள்-பகுதி II: தொழில் திட்டங்கள்" (Strategy for State) என்ற புத்தகத்தில், இப்பகுதியில் கப்பல்களின் போக்குவரத்துக்கும் இப்பகுதியின் நீர்வள சக்தியைப் பயன்படுத்தவும் இங்கு ஓர் அணை அமைக்கப் பரிந்துரைத்தார்.[4]. மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியின் கீழ்புறத்தில் அமையும் இவ்வணையினால் 30 மில்லியன் (22,371 மெகாவாட்) குதிரைசக்தி திறன் கொண்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறினார். 1932ல் சியங் கை-சேக்கினால் வழி நடத்தப்பட்ட தேசிய அரசாங்கம் மூன்று ஆழ்பள்ளத்தாக்கில் அணை தொடர்பான தொடக்க கட்ட வேலைகளை மேற்கொண்டது. 1939இல் யிசாங் (Yichang) பகுதியை கைப்பற்றிய யப்பானிய இராணுவம், அணை கட்டப்படும் பகுதியை மதிப்பீடு செய்தது. சீனாவை யப்பான் வெற்றி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் யப்பானியர்கள் அணைக்கான ஒட்டானி திட்டம் என்ற வடிவமைப்பை தயாரித்திருந்தார்கள். 1944ல் ஐக்கிய அமெரிக்காவின் நிலச்சீராக்க செயலகத்தின் தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஜான் லூசியன் சாவேஜ் (John L. Savage) இப்பகுதியை மதிப்பீடு செய்து யாங்சே ஆற்று திட்டம் என்ற பெயரில் அணைக்கான கருத்துருவை முன்மொழிந்தார்.[5]. இதைத்தொடர்ந்து 54 சீன பொறியாளர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பயிற்சிக்காக சென்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சியை முடித்த பொழுது சீன உள்நாட்டு போர் காரணமாக 1947ல் இவ்வேலை தடைபட்டது.

1949இல் சீன் உள்நாட்டுப் போரில் பொதுவுடைமைவாதிகள் பெற்ற வெற்றியையடுத்து மா சே துங் இத்திட்டத்தை ஆதரித்தார். எனினும் ஜிஜோப (Gezhouba) அணைத் திட்டமே முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பண்பாட்டு புரட்சி, முன்னோக்கி செல்லுதல் போன்ற நடவடிக்கையினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களினால் இவ்வணை திட்டம் தள்ளிப்போடப்பட்டது. 1958ல் நூறு மலர்கள் இயக்கத்தை அடுத்து இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறிய சில பொறியாளர்கள் சிறை வைக்கப்பட்டனர்.[6].

1980ஆம் ஆண்டுவாக்கில் இத்திட்டம் தொடர்பான கருத்து மீண்டும் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெற்றது. 1992இல் தேசிய மக்கள் காங்கிரசு இந்த அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மீண்டும் இதன் பணிகள் டிசம்பர் 14, 1994அன்று தொடங்கின. அணையானது 2009ல் முழு இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலத்துக்கடியில் வைக்கப்படும் ஆறு மின்னியக்கிகள் போன்ற கூடுதல் கட்டுமானப் பணிகளால் 2012க்கு முன் முழு இயக்கத்தை அடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008இல், அணையினால் நீர்மட்டம் 172.5 மீட்டராக (566 அடி) உயர்ந்தது.[7]

பல பெரிய நகரங்களின் வழியே செல்லும் யாங்சே ஆற்றில் அணையின் இருப்பிடம்

தளக்கோலம்

[தொகு]

அணையின் சுவரானது பைஞ்சுதையினால் ஆக்கப்பட்டது. இச்சுவரின் நீளம் 2,309 மீட்டர் (7,575 அடி) உயரம் 185 மீட்டர் (607 அடி) ஆகும். அணையின் அடியில் இச்சுவர் 115 மீட்டர் (377 அடி) தடிமனாகும் மேல் பகுதியில் 40 மீட்டர் (131.2 அடி) தடிமனாகும். இத்திட்டத்திற்காக 27,200,000 கன மீட்டர் (35,600,000 கன அடி) பைஞ்சுதையும், 463,000 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டது, இந்த இரும்பைக்கொண்டு 63 ஈபிள் கோபுரங்களை உருவாக்க முடியும், இதற்காக தோண்டப்பட்ட மண்ணின் அளவு 102,600,000 கன மீட்டர் (134,200,000 கன அடி).[8]. கப்பல் உயர்த்தி அணையின் வலப்பக்கத்தில் தனக்கென தனி நீர்ப்பாதையை கொண்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்தை விட 175 மீட்டருக்கு (574 அடி) அதிகமாக (110 மீட்டர் அல்லது 361 அடி கீழ்நிலை ஆற்றின் மட்டத்தைவிட) உள்ளபோது அணை உருவாக்கிய நீர்தேக்கமானது சராசரியாக 660 கிமீ (410 மைல்) நீளம் மற்றும் 1.12 கிமீ (0.70 மைல்) அகலம் இருக்கும்.

பொருளியல் கூறுகள்

[தொகு]

இத்திட்டம் முடிக்கப்படும் போது இதற்கு செலவழித்தது 180 பில்லியன் யுஆன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலில் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 12% குறைவாகும். இதற்கு காரணம் குறைவான பணவீக்கமே தவிர குறைவான செலவு அல்ல.[9] 2008இன் முடிவில் செலவு 148.365 பில்லியன் யுஆன் ஆகும் இதில் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்டது 64.613 பில்லியன் யுஆன், பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியமர்த்த 68.557 பில்லியன் யுஆன் மற்றும் நிதியுதவி, கடன் போன்றவற்றிகு 15.195 பில்லியன் யுஆன்.[10] 250 பில்லியன் யுஆன் மதிப்புடைய 1,000 TWh மின்சாரத்தை அணை உற்பத்தி செய்யும் பொழுது இத்திட்டன் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்ட தொகை மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழு செயல்பாட்டுக்கு வந்த பத்து ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட முழு தொகையும் மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[11]

இத்திட்டத்திற்கான நிதியானது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை கட்டுமான நிதி, ஜிஜோப (Gezhouba) அணையிலிருந்து பெறப்படும் லாபம், சீன வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன், உள்நாட்டு, வெளிநாட்டு வணிக வங்களில் இருந்து பெறப்பட்ட கடன், நிறுவன கடன்பத்திரம், அணை முழுதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னும் பின்னும் கிடைக்கும் வருவாய் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.[12]

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் விரிந்த தோற்றம்

மின் உற்பத்தியும் பகிர்வும்

[தொகு]

மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22,500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும், இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32இல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 26, 2010 அன்று அணையின் நீர் மட்டம் உயர் அளவான 175மீ-க்கு உயர்த்தப்பட்டு அணையின் மின் உற்பத்தி முழு அளவில் நடந்தது.[13] ஜூலை 2003ல் முதலில் மின்உற்பத்தியை தொடங்கியது. அணையில் மின் உற்பத்தி தொடங்கி 9 ஆண்டுகளுக்கு பின் 2012 ஜூலையில் 32 மின்னியக்கிகளும் இயக்கப்பபட்டு முழு அளவு (22.5 ஜிகாவாட்)மின்சாரம் எடுக்கப்பட்டது, இது சீனாவின் மொத்த நீர் மின்உற்பத்தியில் 11% ஆகும்.[14]

மின்னியக்கிகள்

[தொகு]
ஃபிரான்சிஸ் விசைச்சுழலி

முதன்மை மின்னியக்கிகள் ஒவ்வொன்றும் 6,000 டன் எடை கொண்டிருப்பதுடன் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னியக்கிகளின் நிலை மட்டம் 80.6 மீட்டர் (264 அடி) இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கிகளில் செல்லும் நீரின் அளவு அதன் நிலை மட்டத்தை பொறுத்து 600–950 கன மீட்டர் (780–1,240 கன யார்டு) ஆக இருக்கும். நிலை மட்டம் பெரியதாக இருந்தால் அது அதிக அளவு ஆற்றலைப் பெறக் குறைந்த நீரே போதும். இங்கு ஃபிரான்சிஸ் விசைச்சுழலி பயன்படுத்தப்படுகிறது. விசைச்சுழலியின் விட்டம் 9.7/10.4 மீட்டர்; சுழற்சி வேகம் நிமிடத்திற்கு 75 ஆகும். மின்னியக்க நிறுத்தியின் வெளிப்புற விட்டம் 21.4/20.9 மீட்டரும் உட்புற விட்டம் 18.5/18.8 மீட்டரும் ஆகும். இதன் உயரம் 3.1/3 மீட்டர் ஆகும். இதுவே இவ்வகையான மின்னியக்க நிறுத்திகளில் பெரியதாகும். இந்த மின்னியக்கிகள் இரண்டு கூட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் விளைவுகள்

[தொகு]

உயிர்ப் பல்வகைமை

[தொகு]

அழிவுறும் நிலையிலுள்ள சைபீரிய நாரைகள் உலகில் இன்னும் 3,000 - 4,000 இருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் பல குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் தங்கும். அணை உருவாக்கம் அந்த நிலங்களை அழித்துவிட்டது. யாங்சே ஆற்று டால்பினான பாய்ஜி அழிவதற்கு அணையும் ஓரளவுக்குக் காரணமாகும்.

மின்சக்தி உருவாக்கம்

[தொகு]

சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு அமைப்பின் கூற்றுப்படி 366 கிராம் நிலக்கரியானது 1 kWh மின்சாரத்தை சீனாவில் உற்பத்தி செய்கிறது. அணை முழுதிறனில் இயங்கும் போது ஆண்டுக்கு 31 மில்லியன் டன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும். மேலும் 100 மில்லியன் டன் பசுமைக்குடில் காற்று, மில்லயன் கணக்கான புழுதி, மில்லியன் டன் சல்பர் டைஆக்சைடு, 370,000 டன்கள் நைட்ரிக் ஆக்சைடு, 10,000 டன்கள் கார்பன் மோனாக்சைடு மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பாதரசம் குறைகிறது. இதனால் வடசீனாவில் மின்சாரத்துக்காக நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது, சுத்தப்படுத்தப்படுவது போன்றவை குறைகின்றன.

மண் அரிப்பு, வண்டல் படிதல்

[தொகு]

மண் அரிப்பும் வண்டல் படிதலும் இந்த அணையை பாதிக்கும் இரண்டு காரணிகளாகும்.

தற்போதைய அளவில் 80% நிலப்பரப்பு மண் அரிப்புக்கு உட்பட்டுள்ளது. அதனால் ஆண்டுக்கு 40 மில்லியன் டன்கள் வண்டல் யாங்சே ஆற்றில் படிகின்றது. அணை கட்டுவதற்காக மீள்குடியமர்த்தப்பட்ட மக்களினால் ஏற்படும் காடழிப்பு, விவசாயத் தேவைகள் மண் அரிப்பை உருவாக்குவதாக கருதப்படுகிறது.

குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் யாங்சே ஆற்றில் வரும் வெள்ளம் அணையினால் கட்டுப்படுத்தப்படுவதால் ஆற்றின் கீழ் பகுதிகளில் ஆற்றங்கரை அரிப்பு குறைவடையும். அணையினால் யாங்சே ஆற்றின் கழிமுகத்துக்கு செல்லும் வண்டலின் அளவு குறையும், படியும் வண்டல் அணை மின் உற்பத்தி திறனை குறைக்கும். ஆற்றின் கடற்கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்படவும் அவை மூழ்கவும் ஆற்றின் கீழ்பகுதிகளில் வண்டல் குறைவது காரணமாகலாம்.

அதிகளவில் படியும் வண்டல் அணையின் மதகுகளை அடைத்து அணை உடைவதற்கு காரணமாகலாம் எனவும் கருதப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 530 மில்லியன் டன் வண்டல் அணை நீர்தேக்கத்தில் சேரும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். அணையில் சேரும் வண்டலினால் மின்னியக்கிகளின் விசைச்சுழலியின் வாயில் அடைக்கப்படும் எனவும் கருதப்படுகிறது. ஆனால் 2006லிருந்து சீனா அணையின் மேல்பகுதி ஆற்றில் நான்கு பெரிய அணைகளை கட்டிவருவதால் இந்த அணைக்கு வரும் வண்டலின் அளவு முதலில் கணிக்கப்பட்டதை விடக் குறைவாக இருக்கும்.

வண்டல் வரத்து குறைவு இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது.

  • சில நீரியல் நிபுணர்கள் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள ஆற்றங்கரைகள் வெள்ளம் வந்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள்.
  • 1000 மைல்களுக்கு அப்பால் யாங்சே ஆற்றின் கழிமுகத்தில் உள்ள சாங்காய் நகரம் பெரும் வண்டல் சமவெளியில் அமைந்துள்ளது. ஆற்றில் வரும் வண்டல்கள் இப்பகுதியை வலுப்படுத்தி வந்துள்ளன. குறைவான வண்டல் வரத்து வண்டல் சமவெளியின் வலுவை குறைந்து விடும். அதனால் இதன் மேல் கட்டப்பட்டுள்ள சாங்காய் முதலான நகரங்கள் பாதிப்படையும் என்று கருதுகிறார்கள்.

நிலநடுக்கமும் நிலச்சரிவும்

[தொகு]

நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் நில அதிர்வும் அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் எடையும் சேரும் போது அணையின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்படலாம்.[15] உயரும் நீர்மட்டத்தால் ஏற்படும் மண்அரிப்பு காரணமாக அடிக்கடி பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் முறையே 50,000 மற்றும் 20,000 கன மீட்டர் (65,000 and 26,000 கன யார்டு) மண் ஆற்றில் விழுந்தது.[16]

கழிவுப்பொருள் நிருவாகம்

[தொகு]

அணையின் காரணமாக ஆற்றின் மேல்பகுதியில் உள்ள சிகோஜிங் (Chongqing) மற்றும் அதன் புறப்பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திதன் கூற்றுப்படி ஏப்ரல் 2007ல் 50க்கும் அதிகமான கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன, இவை நாளொன்றுக்கு 1.84 மில்லியன் டன் கழிவுகளை சுத்திகரித்தன. இது நகரின் தேவையில் 65% ஆகும். மேலும் 32 குப்பை கொட்டும் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதில் நாளொன்றுக்கு 7,664.5 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது.

காடுகள்

[தொகு]

தற்போது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியில் காட்டுப்பகுதி 10% ஆக உள்ளது, 1950ல் 20% காடுகள் இப்பகுதியில் இருந்தன. ஐ.நாவின் உணவு விவசாய அமைப்பின் ஆராய்ச்சியானது 2008ல் ஆசிய-பசிபிக் பகுதியானது 6,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை பெற்றுள்ளது என கூறுகிறது. இது 1990களில் ஆண்டுக்கு 13,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை இழந்ததை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதற்கு முதன்மைக் காரணம் சீனா காடு வளர்ப்பில் மேற்கொண்ட முயற்சிகளே. 1998ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கை அடுத்து காடழிப்பே இதற்கு காரணம் என சீன அரசாங்கம் கருதியதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைக்கு மேல் பகுதியில் யாங்சே ஆற்றுப்படுகையில் காடுவளர்ப்பை அரசு மேற்கொண்டது.

வெள்ளக்கட்டுப்பாடும் விவசாயமும்

[தொகு]

அணையின் செயல்பாடுகளில் வெள்ளக்கட்டுப்பாடு முதன்மையானதாகும். வெள்ளமானது யாங்சே ஆற்றின் பெரிய சிக்கலாகும். அணைக்கு கீழ்பகுதி ஆற்றங்கரைப்பகுதியில் பல மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள், பெரிய நகரங்ளான வுஹன் (Wuhan), நன்ஜிங் (Nanjing), சாங்காய் (Shanghai) போன்றவை ஆற்றை ஒட்டி உள்ளன. ஏராளமான விளை நிலங்களும் சீனாவின் சிறப்பு வாய்ந்த தொழிற்கூடங்களும் ஆற்றை ஒட்டி உள்ளன.

அணை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 22 கன கிமீ (18 மில்லியன் ஏக்கர் அடி) ஆகும். இந்த கொள்ளளவின் காரணமாக பத்து அல்லது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆற்றின் கீழ்பகுதியில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அவற்றின் பாதிப்பை இந்த அணை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாங்சே ஆற்றில் 1954இல் ஏற்பட்ட வெள்ளத்தால் 33,169 மக்கள் உயிரிழந்தார்கள், 18,884,000 பேர் இடம் பெயர்ந்தார்கள். எட்டு மில்லியன் மக்கள் தொகையுடைய வுஹன் நகரமானது மூன்று மாதங்களுக்கு நீரால் சூழப்பட்டிருந்தது. ஜின்ஜிகுவாங் (Jingguang) தொடருந்து சேவை 100 நாட்களுக்கு செயல்படவில்லை. 1954ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பில்லியன் கன மீட்டர் நீர் வந்ததாக அறியப்படுகிறது.

1998இல் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது, 2,039 சதுர கிமீ (787 சதுர மைல்) அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், 1,526 மக்கள் உயிரிழந்தார்கள். இது 40 ஆண்டுகளில் வட சீனத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 2009இல் ஏற்பட்ட வெள்ளம் அணை வழியே சென்றதால் வெள்ளத்தின் கடுமை குறைக்கப்பட்டு வினாடிக்கு 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 1, 2009இல் 145.13 மீட்டராக இருந்தது ஆகஸ்ட் 8, 2009இல் 152.88 மீட்டராக உயர்ந்தது. 4.27 பில்லியன் கன மீட்டர் வெள்ள நீரானது அணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 15,000 கன மீட்டராக குறைக்கப்பட்டதால் ஆற்றின் கீழ்பகுதி வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

அணையிலுள்ள நீர் வறட்சி காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கீழ்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து அக்காலங்களில் விவசாயத்திற்கும் தொழிற்கூடங்களுக்கும் நீர் தடையின்றி கிடைக்கிறது. மேலும் இதனால் இக்காலத்தில் ஆற்றில் கப்பல்கள் செல்லும் சூழலும் மேம்படுகிறது. இக்காலத்தில் அணையின் நீர்மட்டம் 175 மீட்டரிலிருந்து 145 மீட்டராக குறைந்து விடுகிறது. எதிர் வரும் மாரிக்காலத்தையும் திடீர் என வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் இக்குறைந்த நீர்மட்டம் உதவுகிறது.

2003லிருந்து இந்த அணையிலிருந்து வறட்சி காலத்தில் 11 பில்லியன் கன மீட்டர் நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வறட்சி சமாளிக்கப்பட்டதுடன் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் நகரங்கள் பயன் அடைந்தன.

ஜூலை 2010இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கு வினாடிக்கு 70,000 கன மீட்டர் நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஓரிரவில் நான்கு மீட்டர் உயர்ந்தது. அணையிலிருந்து 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணையின் காரணமாக ஆற்றின் கீழ்பகுதிகள் கடும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.[17].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "top-100-pt-1". Industcards.com. Archived from the original on 2012-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-10-27.
  2. "重庆云阳长江右岸现360万方滑坡险情-地方-人民网". Unn.people.com.cn. Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01. See also: "探访三峡库区云阳故陵滑坡险情". News.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.
  3. Lin Yang (12 அக்டோபர் 2007). "China's Three Gorges Dam Under Fire". Time இம் மூலத்தில் இருந்து 2007-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013172456/http://www.time.com/time/world/article/0,8599,1671000,00.html. பார்த்த நாள்: 28 மார்ச் 2009. "The giant Three Gorges Dam across China's Yangtze River has been mired in controversy ever since it was first proposed"  See also: Laris, Michael (17 ஆகஸ்ட் 1998). "Untamed Waterways Kill Thousands Yearly". Washington Post. http://www.washingtonpost.com/wp-srv/inatl/longterm/china/stories/death081798.htm. பார்த்த நாள்: 28 மார்ச் 2009. "Officials now use the deadly history of the Yangtze, China's longest river, to justify the country's riskiest and most controversial infrastructure project – the enormous Three Gorges Dam."  and Grant, Stan (18 ஜூன் 2005). "Global Challenges: Ecological and Technological Advances Around the World". CNN. http://edition.cnn.com/TRANSCRIPTS/0506/18/gc.01.html. பார்த்த நாள்: 28 மார்ச் 2009. "China's engineering marvel is unleashing a torrent of criticism. [...] When it comes to global challenges, few are greater or more controversial than the construction of the massive Three Gorges Dam in Central China."  and Gerin, Roseanne (11 டிசம்பர் 2008). "Rolling on a River". Beijing Review. http://www.bjreview.com.cn/eye/txt/2008-12/06/content_168792.htm. பார்த்த நாள்: 28 மார்ச் 2009. "..the 180-billion yuan ($26.3 billion) Three Gorges Dam project has been highly contentious." 
  4. "中国国民党、亲民党、111新党访问团相继参观三峡工程_新闻中心_新浪网". News.sina.com.cn. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.
  5. http://books.nap.edu/html/biomems/jsavage.pdf பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம் John Lucian Savage Biography by Abel Wolman & W. H. Lyles, National Academy of Science, 1978.
  6. Steven Mufson (1997-11-09). "The Yangtze Dam: Feat or Folly?". Washington Post. http://www.washingtonpost.com/wp-srv/inatl/longterm/yangtze/yangtze.htm. பார்த்த நாள்: 2008-01-20. 
  7. "三峡完成172.5米蓄水 中游航道正常维护(图)-搜狐新闻". News.sohu.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-16.
  8. "Three Gorges Dam Project — Quick Facts". ibiblio.org. http://www.ibiblio.org/chinesehistory/contents/07spe/specrep01.html#Quick%20Facts. பார்த்த நாள்: 2008-01-20. 
  9. "Brief explanation of TGP" (in Chinese). China Three Gorges Project Corporation. 2006-05-20 இம் மூலத்தில் இருந்து 2010-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100329113449/http://www.ctgpc.com.cn/sxslsn/index.php. பார்த்த நாள்: 2007-05-27. 
  10. "国家重大技术装备". Chinaneast.xinhuanet.com. 2009-01-11. Archived from the original on 2009-02-08. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.
  11. "International Water Power and Dam Construction". Waterpowermagazine.com. 2007-01-10. பார்க்கப்பட்ட நாள் 2009-08-01.
  12. "Three Gorges Dam" (in Chinese). China Three Gorges Project Corporation. 2003-04-20 இம் மூலத்தில் இருந்து 2007-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070407133833/http://www.ctgpc.com.cn/sx/sxgczds.php?mClassId=015004. பார்த்த நாள்: 2007-04-29. 
  13. http://news.yahoo.com/s/ap/as_china_three_gorges;_ylt=AhgVOYjCvgfwW6Tp92Ng716ve8UF;_ylu=X3oDMTMzb3JkZTMxBGFzc2V0Ay9zL2FwL2FzX2NoaW5hX3RocmVlX2dvcmdlcwRjY29kZQNtcF9lY184XzEwBGNwb3MDOQRwb3MDOQRzZWMDeW5fdG9wX3N0b3JpZXMEc2xrA2NoaW5hc3RocmVlZw--
  14. பிபிசி செய்தி
  15. "Chapter 10: Dam Safety Analysis". Damming the Three Gorges. Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03. {{cite web}}: |first= missing |last= (help); Unknown parameter |las= ignored (help)
  16. Yang, Sung. "No Casualties in Three Gorges Dam Landslide". Xinhua News Network. CRIEnglish.com. Archived from the original on 2009-05-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.
  17. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-10695272

வெளிஇணைப்பு

[தொகு]