விநாயகமூர்த்தி முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விநாயகமூர்த்தி முரளிதரன்
இலங்கை பாரளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 7, 2008
முன்னையவர்வசந்த சமரசிங்க
பின்னவர்பதவியிலுள்ளார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1966
கிரான், மட்டக்களப்பு மாவட்டம்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஇசுக, முன்னர் தமவிபு
துணைவர்Nira
பிள்ளைகள்மூன்று பிள்ளைகள்

விநாயகமூர்த்தி முரளிதரன் (பிறப்பு 1966, பிரபலமாக கேணல் கருணா அம்மான் என்றும் அறியப்படுகிறார்) முன்னாள் போராளியும், இலங்கையின் அரசியல்வாதியுமாவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முரளிதரன், மார்ச் 2004 இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக அறிவித்துக்கொண்டதுடன், இலங்கை அரசின் ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்[1]. அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.[2] மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.

இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் (2008 அக்டோபர் 7) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்கு போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் "வடக்கு மைய தலைமையை" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்கு போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.[3]. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது.

இவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்படுகின்றார்கள்.

மனித உரிமை மீறல்கள்[தொகு]

கருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதவளித்து வருகின்றனர்.[சான்று தேவை]

லண்டனில் கைது[தொகு]

கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை[4] அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்[5].

இலங்கையில் மீண்டும் கருணா[தொகு]

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்[6][7].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]