விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 16, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்பார் நகரம் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ளது. மலேசியாவில் மிகவும் விரைந்து வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. 2007 மே மாதம் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் இங்கு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கம்பார் பண்டார் பாரு எனும் புதிய துணை நகரத்தில் 20,000 மாணவர்கள் உயர் படிப்புகளைப் படித்து வருகின்றனர். கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும். கம்பார் நகரைச் சுற்றிலும் அடர்ந்த பச்சைக் காடுகளும் கண்ணுக்கு இனிய கனிமக் குன்றுகளும் உள்ளன. இந்நகரம் 1887 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஈயக் கனிமத்திற்கு பெயர் போன கிந்தா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கிறது. கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப் பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. 1941-1945 காலப்பகுதியில் சப்பானியர்கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கம்பார் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இங்குதான் வலாற்றுப் புகழ் பெற்ற "கம்பார் போர்" நடந்ததுமேலும்...


நிக்கோலாசு கோப்பர்னிக்கசு (1473-1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். புரட்சிகரமான சூரியமையக் கொள்கையை வகுத்துத் தந்து வானவியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டவர். பூமி யை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றி சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானவியல் அறிஞரான டாலமி கி.பி. 140-ல் புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிஸ்ட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால் இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானது என அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் போலந்தில் பிறந்தவர். சிலர் இவர், செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்று கருதுகிறார்கள். மேலும்...