யோசப் பிரான்சுவா தூப்ளே
| யோசஃப் ஃபான்சுவா தூப்ளே | |
|
பிரெஞ்சு இந்தியாவின்
தலைமை ஆளுனர் |
|
| பதவியில் 14 சனவரி 1742 – 15 அக்டோபர் 1754 |
|
| அரசர் | பதினைந்தாம் லூயி |
|---|---|
| முன்னவர் | பியரி பெனுவா தூமா |
| பின்வந்தவர் | சார்லஸ் கொடெகு தலைமை ஆளுனர் பொறுப்பில் |
|
|
|
| பிறப்பு | 1 சனவரி1697 லாண்ட்ரெசீஸ், பிரான்சு |
| இறப்பு | 10 நவம்பர் 1763 (அகவை 66) பாரிசு, பிரான்சு |
யோசஃப்-ஃபான்சுவா, மார்க்கி தூப்ளே (Joseph-François, Marquis Dupleix, 1 சனவரி 1697 – 10 நவம்பர் 1763) இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். இவர் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராபர்ட் கிளைவிற்கு எதிரியாக விளங்கினார்.
பொருளடக்கம் |
வாழ்க்கை வரலாறு [தொகு]
தூப்ளே லாண்ட்ரெசீஸ், பிரான்சில் பிறந்தார். செல்வந்தரான அவரது தந்தை பான்சுவா தூப்ளே மகனின் அறிவியல் நாட்டத்தைத் திசைதிருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலொன்றில் 1715இல் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர் இந்தியாவிற்கும் அமெரிக்காக்களுக்கும் பல கடற்பயணங்கள் மேற்கொண்டார். 1720இல் பாண்டிச்சேரியின் சுபீரியர் அவையில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். மிகுந்த வணிக நாட்டத்தை வெளிப்படுத்திய தூப்ளே தனது அலுவல்களுக்கு தவிரவும் தனக்காகவும் வணிக முயற்சிகளை மேற்கொண்டு 1730இல் பெரும் செல்வம் ஈட்டினார். சந்தன்நகர்|சந்தன் நகரில் பிரெஞ்சு விவகாரங்களுக்கான மேலதிகாரியாக நியமிக்கப்படார். அவரது நிர்வாகத் திறமையால் சந்தன்நகர் பெரும் வளர்ச்சி கண்டது. 1741இல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரின் விதவையான ஜீன் ஆல்பெர்ட்டை திருமணம் புரிந்தார். இந்தியர்களால் யோனா பேகம் என்றழைக்கப்பட்ட தூப்ளேயின் மனைவியார் அவர் உள்நாட்டு சிற்றரசர்களுடன் நடத்திய பேர உரையாடல்களின்போது பெரிதும் துணையாக இருந்தார்.
அவரது சிறப்பான பணியால் 1742இல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்டார். பிரெஞ்சு ஆட்சிப்பகுதியின் எல்லைகளை விரிவாக்குவதை தமது நோக்கமாக கொண்டு தமது நடை,உடை,பாவனைகளில் இந்தியப் பண்பாட்டை கடைபிடித்தார். இந்திய சிற்றரசுகளுடன் நட்புறவாடி பிரெஞ்சுச் செல்வாக்கை உயர்த்தினார். இந்திய குடிமக்களைக் கொண்டே, சிப்பாய்கள் எனப் பெயரிட்டார், இராணுவப்படையை உருவாக்கினார். மைசூரின் ஹைதர் அலியும் அவரது சேவையில் இருந்தார். இவற்றால் பிரித்தானியர்கள் பெரும் கலக்கமடைந்தனர். ஆனால் தூப்ளேக்கும் பெர்ட்ரண்ட் பான்சுவா மாஃகே டெ லா பூர்தோன்னைக்கும் இடையே நிலவிய பொறாமை அவர்களுக்குத் துணையாயிற்று.
பெர்ட்ரண்ட் பான்சுவா மாஃகே டெ லா பூர்தோன்னை தலைமையிலான பிரெஞ்சு படையினர் 1746இல் மதராஸ் சண்டையை அடுத்து மதராசைக் கைப்பற்றிய பின்னர் கோட்டையை மட்டும் வைத்துக்கொண்டு நகரத்தை பிரித்தானியர்களுக்கு திருப்பிக் கொடுப்பதாக உறுதியளித்தார். இதனை புதுச்சேரியலிருந்த தூப்ளே எதிர்த்தார். அக்டோபரில் பெர்ட்ரண்ட் புதுச்சேரிக்குத் திரும்பிய பின்னர் தூப்ளே மற்றொரு படையை சென்னைக்கு அனுப்பி அங்கிருந்த பிரித்தானியர்களை சிறை பிடித்தார். புனித ஜார்ஜ் கோட்டையைத் தரைமட்டமாக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற முயன்றார். இவரால் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானியர்களில் அப்போது அலுவலக உதவியாளராக (குமாஸ்தா) இருந்த ராபர்ட் கிளைவ் இந்தியர்களைப் போன்று மாறுவேடமணிந்து புனித டேவிட் கோட்டைக்குத் தப்பி வந்து வெளியுலகிற்கு பிரெஞ்சுத் துரோகத்தை வெளிப்படுத்தினார். தூப்ளே 1747இல் புனித டேவிட் கோட்டையையும் கைப்பற்ற படைகளை அனுப்பினார்; இதனை பிரித்தானியர்களுடன் நட்பு பாராட்டிய ஆற்காடு நவாப் தடுத்தார். நவாபை சம்மதிக்கவைத்த தூப்ளே மீண்டும் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றன. நள்ளிரவில் கடலூர் மீது போர் தொடுத்த தூப்ளேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
1748ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் புதுச்சேரியை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் ஆஃகனில் பிரித்தானியர்களுக்கும் பிரான்சிற்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன்பிறகு தென்னிந்தியாவை தன்வசமாக்க கர்நாடக மற்றும் தக்காண பகுதிகளின் ஆட்சி உரிமை பெற்றவர்களுக்கு துணை நிற்க பெரும்படை ஒன்றை அனுப்பினார். பிரித்தானியர்கள் எதிரிகளுடன் இணைந்துகொண்டு தூப்ளேயின் இந்தத் திட்டத்தைத் தடுத்தனர்.
1750இல் தக்காண சௌதாபர் ஆலம்பரை கோட்டையை பிரெஞ்சுப் படையினருக்கு கொடையளித்தது. இது தூப்ளேயும் அவரது பிரெஞ்சுப் படையினரும் ஆற்றிய சேவைகளுக்காகக் கொடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் பிரித்தானியர்கள் கைப்பற்றறி அழித்தனர்.
1751இல் பர்மாவில் பிரெஞ்சு செல்வாக்கை நிலைநிறுத்த தனது தூதராக சியூ டெ புரூனோவை அனுப்பி பர்மியர்களுக்கு எதிராக மொங் மக்கள்|மொங் மக்கள் சண்டையிட இராணுவ உதவி புரிந்தார்.[1]
பிரித்தானியர்களுக்கும் பிரெஞ்சுப் படையினருக்குமான மோதல்கள் 1754 வரை நீடித்தது. இதனால் அமைதியை விரும்பிய பிரான்சு தூப்ளேக்கு மாற்றாக இந்தியாவிற்கு ஓர் சிறப்பு ஆணையரை அனுப்பியது. தூப்ளே கட்டாயமாக அக்டோபர் 12, 1754இல் தாய்நாட்டிற்கு கப்பலில் ஏற்றப்பட்டார். துணைவியார் ஜீன் ஆல்பெர்ட் 1756இல் மறைந்தார்.
நிறுவன முன்னேற்றத்திற்காக தனது சொந்த உடமைகளை செலவிட்ட தூப்ளே பெரும் நட்டத்திற்கு உள்ளானார். அவருக்கு நிதி உதவி வழங்க பிரான்சு அரசு மறுத்தது. வறிய நிலையில் எவரும் அறியாது நவம்பர் 10, 1763இல் தூப்ளே மரணமடைந்தார்.
நினைவுச்சின்னங்கள் [தொகு]
இவரது நினைவாக:
- பாரிசில் ஓர் சதுக்கம், சாலை மற்றும் பாதாள தொடர்வண்டி நிலையம் இவர் பெயரைக் கொண்டுள்ளது.
- நான்கு பிரெஞ்சு கடற்படைக் கப்பல்கள் இவர் பெயரைத் தாங்கியுள்ளன (இரு வணிக கப்பல்கள் தவிர):
மேற்கோள்கள் [தொகு]
மேலும் அறிய [தொகு]
- Owen, Sidney J. (1886). "Joseph François Dupleix". English Historical Review (Oxford Journals) 1 (4): 699–733. doi:10.1093/ehr/I.IV.699.
- Duplieix by Colonel John Biddulph, 1910
வெளி இணைப்புகள் [தொகு]
பொதுக்கோப்பகத்தில் யோசப் பிரான்சுவா தூப்ளே தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.
| அரச அலுவலகங்கள் | ||
|---|---|---|
| முன்னர் பியரி பெனுவா தூமா |
பிரெஞ்சு இந்தியாவின் தலைமை ஆளுனர் 14 சனவரி 1742 - 15 அக்டோபர் 1754 |
பின்னர் சார்லசு கோடெகு (ஆணையர்) (பொறுப்பு) |