நீ. மரிய சேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ. மரிய சேவியர் அடிகள்
பிறப்புநீக்கிலாப்பிள்ளை மரிய சவேரி
(1939-12-03)3 திசம்பர் 1939
இளவாலை, யாழ்ப்பாணம்
இறப்புஏப்ரல் 1, 2021(2021-04-01) (அகவை 81)
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகூத்து, நாடகக் கலைஞர், நாடக நெறியாள்கை, திருமறைக் கலா மன்றம் நிறுவனர்
சமயம்கத்தோலிக்கம்
பெற்றோர்நீக்கிலாம்பிள்ளை எமிலியாம்பிள்ளை

அருட்கலாநிதி நீ. மரிய சேவியர் அடிகள் (திசம்பர் 3, 1939 - ஏப்ரல் 1, 2021)[1] யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலாமன்றத்தை நிறுவி, அதன் மூலம் ஈழத்தமிழரின் கலை, இலக்கியம் தொடர்பாக நாடகம், கூத்து, பயிற்சிப் பாசறைகள், நூல் வெளியீடுகள், ஓவிய, சிற்பக் கண்காட்சிகள், இதழ் வெளியீடு போன்ற செயற்பாடுகள் மூலம் கலைப்பணி ஆற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நீக்கிலாபிள்ளை மரிய சவேரி (மரிய சேவியர்) 1939 திசம்பர் 12 இல் யாழ்ப்பாணம் இளவாலையில் நீக்கிலாம்பிள்ளை எமிலியாம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தவர். தனது கல்வியை இளவாலை புனித என்றிக்கம்பர் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கற்றார். 12-வது அகவையில் குருமடத்தில் சேர்க்கப்பட்டார். கண்டி அம்பிட்டி தேசிய மதப்பள்ளியில் இறையியல் கல்வியைப் பெற்று, 1958 ஆம் ஆண்டு இறையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு உரோம் சென்று தனது 22-வது அகவையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றதுடன் உரோமைத் தமிழ்ச் சங்கத் தலைவராகவும் 1960-1961 காலப்பகுதியில் இருந்து சேவையாற்றினார்.[2] 1962-இல் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அச்சுவேலி, மன்னார், கிளிநொச்சி, குருநகர், உரும்பிராய் போன்ற இடங்களில் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார்.

மரிய சேவியர் சில காலம் புனித பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். கலைத்துறை மீது கொண்ட பெரு விருப்பால், பாவசங்கீர்த்தன இரகசியம் என்ற இத்தாலியத் திரைப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்தார். இந்தியாவில் கற்கும் போது திராவிடக் கழகம், மற்றும் நாடகம் சார்ந்த உரைகளால் கவரப்பெற்று எதுகை மோனையுடன் கூடிய அடுக்குவசன நடையில் தானும் உரையாற்றி மக்களைக் கவர்ந்தார்.

மன்னாரில் உதவிக் குருவாகப் பொறுப்பேற்று நாடகம் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டார். 'பாஸ்' என்று அழைக்கப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சிகளை தமிழில் நாடக வடிவில் எழுதி அரங்கேற்றினார். 1966 இல் யாழ்ப்பாணம், உரும்பிராயிலும், பின்னர் குருநகரிலும் பங்குத் தந்தையாக நியமனம் பெற்றார். மரிய சேவியர் இடாய்ச்சு, ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், கிரேக்க மொழி, எபிரேயம் ஆகிய மொழிகளில் ஆளுமை பெற்றார்.

திருமறைக் கலாமன்றம்[தொகு]

இலங்கையில் நாடகக் கூத்துக் கலையை மேம்படுத்தும் நோக்கில் 1965 இல் உரும்பிராயில் திருமறைக் கலாமன்றத்தை ஆரம்பித்தார். இலங்கையில் பல மாவட்டங்களிலும், மற்றும் கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இலண்டன், நோர்வே முதலிய நாடுகளிலும் இதன் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1990 முதல் 'கலைமுகம்' என்ற காலாண்டு இதழை கொழும்பில் இருந்தும், பின்னர் 2000 முதல் யாழ்ப்பானத்தில் இருந்தும் வெளியிட்டு வந்தார். அத்துடன், 'ஆற்றுகை' என்ற நாடக, அரங்கியல் இதழ், Journal of Saiva Siddhanta Studies என்ற ஆங்கில இதழ் ஆகியவற்றையும் வெளியிட்டார். கலைத்தூது அழகியற் கல்லூரி, கலாமுற்றம் என்ற ஓவியக் கலைக்கூடம் ஆகியனவும் நிறுவப்பட்டிருக்கின்றன.

நாடகங்கள்[தொகு]

  • 1971 இல் யாழ்ப்பாணக் கோட்டையைத் தளமாகக் கொண்டு முன்னூறு கலைஞர்களின் பங்களிப்பில் 'அன்பில் மலர்ந்த அமர காவியம் என்ற நாடகத்தை மேடையேற்றினார்.
  • 1972-73 இல் இலங்கையில் இருந்து 22 பேரடங்கிய நாடகக் குழுவை திருச்சிக்கு அழைத்துச் சென்று நாடகம் ஒன்றை மேடையேற்றினார்.
  • 2003 இல் அமெரிக்காவில் பன்னாட்டு சிறுவர் மாநாடு நடைபெற்றபோது யுத்தத்தின் தொட்டில் (In the credle of War) என்ற பெயரில் ஊமை நாடகம் ஒன்றை மேடையேற்றினார்.
  • சிலுவை உலா, கல்வாரிப்பரணி, கல்வாரிக் கலம்பகம் முதலிய சிற்றிலக்கிய வடிவங்களை நாடகங்களில் கையாண்டார்.
  • இலங்கை வானொலியிலும், ரூபவாகினியிலும் இவரது பல நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டுள்ளன.
  • 1993 இல் தலைநகர் கொழும்பில் பெரும் நாடக விழா ஒன்றை இரண்டு வாரங்கள் நடத்தியிருந்தார்.
  • 1997 இல் அடிகளின் தலைமையில் 13 பேரடங்கிய நாடகக் குழு ஒன்று 20 நாட்களுக்கு ஐரோப்பாவிற்குக் கலைப்பயணம் மேற்கொண்டு பல நாடகங்களை மேடையேற்றியது.

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

  • மதுரையில் தமிழ் படித்து 'வித்துவான்' பட்டம் பெற்றார்.
  • வரலாற்றுத் துறையிலும் (லண்டன்), சைவசித்தாந்தத் துறையிலும் (செருமனி) கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
  • 2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.[2]
  • யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சி 2019 ஆம் ஆண்டு 'சாதனைத் தமிழன்' விருதை வழங்கிக் கௌரவித்தது.
  • 2016 இல் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான மீயுயர் விருது இலங்கை சனாதிபதியால் வழங்கப்பட்டது.
  • 2020 செப்டம்பரில் இலங்கை அரசின் 'நாடகக் கீர்த்தி' விருது வழங்கப்பட்டது.[3]

உசாத்துணைகள்[தொகு]

  1. மரிய சேவியர் அடிகளார் காலமானார்![தொடர்பிழந்த இணைப்பு], ஏப்ரல் 01, 2021
  2. 2.0 2.1 கலாநிதி மரிய சேவியர் காலமானார், தினகரன், ஏப்ரல் 3, 2021
  3. 48 ஆவது அரச நாடக விழா – 2020
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ._மரிய_சேவியர்&oldid=3588826" இலிருந்து மீள்விக்கப்பட்டது