திருவனந்தபுரத்தில் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவலம் கடற்கரை, திருவனந்தபுரம்
திருவனந்தபுரம், விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்

திருவனந்தபுரத்தில் சுற்றுலா (Tourism in Thiruvananthapuram ) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலை வாழிடங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், கடற்கரைக்காயல்கள், வனவிலங்கு சரணாலயங்களைப் பற்றியதாகும். இப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாகவும், மருத்துவச் சுற்றுலாவுக்கான சிறு விமானங்களையும் கொண்டுள்ளது. ஏனெனில் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன. இது முதன்மையாக ஆயுர்வேதத்திற்கு வெளிநாடுகளில் பிரபலமடைவதே காரணமாகும். மேலும், நகரத்தின் நவீன மருத்துவமனைகளாலும் மருத்துவச் சுற்றுலா ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வகை வசதிகள் அருகிலுள்ள ஐந்து நட்சத்திர கடற்கரை விடுதிகளிலும், மலை வாழிடங்களிலும் உள்ளன.

கோவளம் கடற்கரை[தொகு]

கோவளம், திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவளம் திருவிதாங்கூர் மகாராசாவினால் புகழ்பெறச்செய்யப்பட்டது. மேலும் கிப்பிகள் பலர் இங்கு வரத் துவங்கியதிலிருந்து இது மேலும் புகழ் பெற்றது. 17 கி.மீ கடற்கரையில் அருகருகே கலங்கரை விளக்கம் கடற்கரை, ஹவா கடற்கரை, சமுத்ரக் கடற்கரை என மூன்று கடற்கரைகள் பிறை வடிவில் அமைந்துள்ளது.

வர்கலா கடற்கரை[தொகு]

திருவனந்தபுரம் நகருக்கு வடக்கே 46 கி.மீ தொலைவில் வர்கலா அமைந்துள்ளது. கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் சிறுமலைக்குன்றுகளுக்கு மிக அருகாமையில் அல்லது ஒட்டிய கடற்கரை பரப்பு வர்கலா கடற்கரையாகும்.[1] இங்குள்ள குன்றுகள் மூன்றாம் நிலை படிவப்பாறைகளால் உருவானவை. இது கேரள கடலோரப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள தனித்துவமான புவியியல் அம்சமாகும். பிரசித்தி பெற்ற சிறீ ஜனார்தனன் சுவாமிகள் கோவில், புகழ்பெற்ற சிவகிரி மடம் போன்றவை வர்கலாவிற்கு அருகாமையில் உள்ள முக்கிய இடங்களாகும்.

பூவார்[தொகு]

பூவார் என்பது திருவனந்தபுரத்தின் தெற்கு முனையில் உள்ள அடுத்த கிராமமான போழியூரைக் குறிக்கிறது. இயற்கை வனப்பகுதியில் உள்ள விழிஞ்ஞத்துக்கு மிக அருகில் பூவார் அமைந்து உள்ளது. இவ்வூர் கடலோரமாக அமைந்து உள்ளது. 56 கி.மீ நீளமுள்ள நெய்யார் ஆறு நெய்யாற்றிங்கரை வட்டம் வழியாக, பூவார் அருகே உள்ள அரபிக் கடலைச் சென்றடைகிறது. அதன் இயற்கை சூழலால் இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கிளிமானூர்[தொகு]

கிளிமானூர் திருவனந்தபுரம் நகரிலிருந்து 36 கி.மீ வடக்கே அமைந்துள்ளது. பிரபல ஓவியர் ரவி வர்மா கிளிமானூர் அரண்மனையில் பிறந்தார்.

சங்குமுகம் கடற்கரை[தொகு]

சங்குமுகம் கடற்கரை என்பது திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கடற்கரையாகும். சென்னைக் கலைக்கல்லூரியின் பழைய மாணவரான சிற்பி கானாயி குஞ்ஞிராமன் வடிவமைத்த "சலகன்னிகை" எனப்படும் சிற்பம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. ஒரு சிறிய தோட்டமும் இங்குள்ளது. சங்குமுகத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள வல்லியத்துறையில் ஒரு கடல் பாலமும் உள்ளது.

உயிரியல் பூங்கா[தொகு]

திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பறவைகள் மற்றும் விலங்குகளை அவற்றின் இயற்கை சூழலில் பாதுகாப்பதில் தனித்துவமானது. இது 55 ஏக்கர்கள் (22 ha) பரப்பளவில் வனப்பகுதி, ஏரிகள், புல்வெளிகள் பொன்றவற்றைக் கொண்டுள்ளது.

அகத்தியமலை[தொகு]

மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் [2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,869 மீட்டர் (6,132 அடி) உயரமுள்ள அகத்தியமலை மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரமாக இருக்கும் ஆனைமுடிக்குப் பிறகு கேரளாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமாகும். அகத்தியர் என்ற முனிவர் இந்த சிகரத்தில் வாழ்ந்ததாக பாரம்பரியம் கூறுகிறது. ஏராளமான ஆயுர்வேத மூலிகைகள் காரணமாகவும், அகத்திய முனிவரின் இருப்பிடமாக கருதுவதாலும் இக்கூம்பு வடிவ மலை இந்துக்களுக்கு புனித யாத்திரை மையமாக உள்ளது. அகத்தியர் பிரம்மச்சாரியாக இருப்பதால் இங்குள்ள பழங்குடியினர் இம்மலையில் பெண்கள் தங்குவதை விரும்புவதில்லை. மேலும் அவர்கள் சிகரத்தை ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அகத்தியவனம் உயிரியல் பூங்கா மலையேற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.

விழிஞ்ஞம்[தொகு]

விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகம்

திருவனந்தபுரத்தின் தெற்கே இரண்டு கி.மீ. தொலைவில் கோவளம், விழிஞ்ஞம் ஆகிய இடங்களில் பழங்காலத்தில் துறைமுகங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இப்போது, விழிஞம் ஒரு மீன்பிடித் துறைமுகமாகவும், கலங்கரை விளக்கமாக்வும் திகழ்கிறது. போத்துக்கீசர்களும்,டச்சுக்காரர்களும் இங்கு வணிக நிறுவனங்களைக் கொண்டிருந்தனர். போர்த்துகீசர்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள விழிஞத்தில் ஒரு தேவாலயத்தை கட்டியுள்ளனர். இது இன்னும் செயல்பட்டு வருகிறது. இது பழைய விழிஞ்ஞம் தேவாலயம் என்று குறிப்பிடப்படுகிறது .[3] இது விழிஞ்ஞம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் பாதைகளுக்கு அருகாமையில் இருப்பதாலும் அதன் இயற்கை ஆழம் காரணமாகவும் இந்த இடம் சர்வதேச ஆழமான நீர் கொள்கலன் சரக்குகள கையாலும் முனையமாக உருவாக்கப்பட்டு வருகிறது. [4]

விழிஞ்ஞம் குகைக் கோயில்[தொகு]

திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞத்தில் பொ.ச. 8ஆம் நூற்றாண்டு கால இந்துக் கோயிலாகும்.[5] குகையில் ஒரே கல்லலில் செதுக்கபட்ட வீணா தட்சிணாமூர்த்தியின் சிற்பத்தை உள்ளடக்கிய ஒரு சன்னதி உள்ளது.

அருங்காட்சியகம்[தொகு]

உயிரியல் பூங்காவின் அருகிலுள்ள பெரிய அரண்மனையில், கேரள அரசு அரிய பழங்கால மற்றும் கலைப்பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளது.

நெய்யாறு அணை[தொகு]

இது நகரிலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ளது. நெய்யாறு கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தியமலையில் தோன்றி ஓடும் ஓர் ஆறு. இந்த ஆறு நெய்யாற்றன்கரை வட்டத்தில் பாய்ந்து பின் அரபிக் கடலில் சேர்கிறது. இந்த ஆற்றின் நீளம் 56 கிலோமீட்டர்கள். கல்லாறு, முல்லையாறு முதலியன இதன் துணையாறுகள். நெய்யாற்றின் குறுக்கே நெய்யாறு அணை 1958-ல் கட்டப்பட்டது.அணைக்கு அருகில் ஒரு சிறிய வனவிலங்கு சரணாலயமும், பூங்காவும் உள்ளன.

மேலும் பிற சுற்றுலாத் தலங்கள்[தொகு]

இதைத் தவிர திருவனந்தபுரத்தைச் சுற்றி காபில், அரக்கல் அருங்காட்சியகம், கேரள மண் அருங்காட்சியகம், மீன்முட்டி அருவி, கோயிக்கல் அரண்மனை, கேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம், கேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், சாச்சா நேரு குழந்தைகள் அருங்காட்சியகம், தேக்கு அருங்காட்சியகம், நேப்பியர் அருங்காட்சியகம் போன்ற ஏராளமான சுற்றுலா ஆர்வமுள்ள இடங்களும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.karthikaplaza.com/varkala.html பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம் | Details of Varkala
  2. "Trivandrum - Tourist Places - Agasthyakoodam". Archived from the original on 2020-01-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  3. "Home/History". Our Lady of Good Voyage Church - Vizhinjam. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  4. "India's deep-sea Vizhinjam port project moves forward". The Journal of Commerce (JOC). 14 July 2015. Archived from the original on 26 August 2015.
  5. Krairiksh, Piriya. "A NOTE ON THE ‘MAKARA’ BALUSTRADE AT MALACCA." Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, vol. 47, no. 1 (225), 1974, pp. 96–103.

வெளி இணைப்புகள்[தொகு]