உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னையில் ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது, தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

தமிழகத்தில் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலேயே கம்பெனி ஆட்சியின் ஆதிக்கம், படிப்படியாக அதிகரித்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில பகுதிகளைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும் வரை, தமிழகம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்தது.

கம்பனி ஆட்சி (1684-1858)

[தொகு]
கிழகிந்திய கம்பனி கொடி

தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினேழாம் நூற்றாண்டில் கால் பதித்தனர். தற்கால சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களின் விளைவாக, ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் தெற்கிலும், பல தமிழகப் பகுதிகள் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தன. 1806 இல் வேலூர் புரட்சி முறியடிக்கப் பட்டபின், தமிழகத்தில் ஆங்கில ஆட்சிக்கு தீவிர எதிர்ப்பு எதுவும் எழவில்லை. 1857 இல் சிப்பாய்கலகத்தின் போதும் தமிழகம் அமைதியாகவே இருந்தது.

மன்னர் ஆட்சி (1858-1920)

[தொகு]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவின் கொடி

சிப்பாய் கலகத்தின் விளைவாக கம்பனியின் கீழிருந்த இந்திய ஆட்சி பிரித்தானிய முடியாட்சியின் நேரடிக் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. சென்னை மாகாணம், பிரித்தானிய ஆளுனர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. 1877-78 ஆம் ஆண்டு கடும்பஞ்சம் சென்னை மாகாணத்தை தாக்கியது. பருவ மழை தவறியாதாலும், அரசின் மெத்தனத்தாலும் 50 லட்சம் மக்கள் மாண்டனர், பல்லாயிரக்கணக்கானோர், இலங்கை, பர்மா, பிஜி தீவுகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக இடம் பெயர்ந்தனர். 1892இல் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார விடுதலைக்கு பஞ்சமி நிலச் சட்டம் இயற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்திய சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தொடங்கின. அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கம் தமிழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டது.

இரட்டை ஆட்சி முறை (1920-37)

[தொகு]

1919 ஆம் ஆண்டு மொன்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, இந்திய அரசாங்கச் சட்டம் (1919) பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் விளைவாக, இந்தியாவில் மத்திய அரசிலும், மாகாணங்களிலும், இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டன. சட்டம், நிதி, உள் துறை முதலிய முக்கிய துறைகள் பிரித்தானிய ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசவையின் கட்டுப்பாட்டிலும் இயங்கின. சென்னை மாகாணத்தில சட்டசபை விரிவு படுத்தப்பட்டு மொத்தமுள்ள 134 உறுப்பினர்களில் 98 பேர் நேரடி தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தகைய இரட்டை ஆட்சி முறையை தேசீயவாத இயக்கமான இந்திய தேசிய காங்கிரசு பெரும்பாலும் புறக்கணித்தது. பிராமணரல்லாதவர்களுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சியே தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. ஆங்கில அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது. 1920 முதல் 37 வரை நான்கு முறை நீதிக்கட்சியும், ஒரு முறை சுயேட்சைகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்தனர். நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை, ஜாதிவாரி இட ஒதுக்கீடு ஆகியவை அமல் படுத்தப்பட்டன. தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தான் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. 1920 இல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமும், 1927 இல் நடைபெற்ற சைமன் கமிஷன் போராட்டமும் தமிழகத்தில் பெரிய ஆதரவு பெற்றிருக்கவில்லை. ஆனால் 1930 இல் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கமும், உப்பு சத்தியாகிரகமும் தமிழகத்தில் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த்தன.

மாநில சுயாட்சி (1937-47)

[தொகு]

1935 இயற்றப் பட்ட இந்திய அரசாங்கச் சட்டம் 1935, இன் படி, மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டது. பாதுகாப்பு துறை தவிர ஏனைய துறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசுகளுக்கு வழங்கப்பட்டன. 1937 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு வென்று, ராஜகோபாலச்சாரி முதல்வரானார். அவரது ஆட்சியில், மது ஒழிப்பு, விற்பனை வரி, தாழ்த்தப்பட்டோர் கோவிலுள் நுழைய அனுமதி முதலிய கொள்கைகள் சட்டமாக்கப்பட்டன. இந்தி மொழி பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டு அதற்கு எதிராக கடும் எதிர்ப்பும் எழுந்தது. 1939 அக்டோபரில், இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதை கண்டித்து, காங்கிரசு அரசு பதவி விலகியது. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1942 இல் நடத்தப் பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. 1946 வரை மீண்டும் தேர்தல் நடைபெறவில்லை. 1946 இல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்தபின்னர் தேர்தல் மீண்டும் நடை பெற்றது. காங்கிரசு வென்று, தங்குதுரி பிரகாசம், சென்னை மாநிலத்தின் முதல்வரானார். ஆனால் ஒரு வருடத்திற்குள் உட்கட்சி பூசலினால், அவர் பதவி விலகி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 15 ஆகஸ்ட் 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது அவரே தமிழகத்தின் முதல் (சுதந்திர) முதல்வரானார்.

மேற்கோள்கள்

[தொகு]