டோனி பெர்னாண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி பெர்னாண்டஸ்
Tony Fernandes
托尼 在配置
டோனி பெர்னாண்டஸ்
பிறப்புஅந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ்
30 ஏப்ரல் 1964 (1964-04-30) (அகவை 59)
 மலேசியா கோலாலம்பூர்
இருப்பிடம்கோலாலம்பூர், மலேசியா
தேசியம்மலேசியர்
கல்விஎப்சம் கல்லூரி
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் பொருளியல் பள்ளி
பணிமுதன்மை செயல் அதிகாரி
ஏர்ஏசியா பணிப்பாளர், டியூன் குழும நிறுவனர்
குயீன்சு பார்க் ரேஞ்சர்சு அணி தலைவர்
பணியகம்ஏர் ஏசியா விமான நிறுவனம்
அறியப்படுவதுஏர் ஆசியா மலிவு விலை
விமானச் சேவை நிறுவனர்;
டியுன் குழுமத் தலைவர்;
பார்முலா 1 கேத்தர்ஹாம்
கார் பந்தய குழுமத் தலைவர்
சொத்து மதிப்பு $745 மில்லியன் (2018)[1]
பட்டம்டான்ஸ்ரீ
சமயம்கிறிஸ்துவம்
வலைத்தளம்
AirAsia Berhad

டான்ஸ்ரீ அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ் CBE அல்லது டோனி பெர்னாண்டஸ் (மலாய்: Tony Fernandes; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.

பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தைத் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார்.

ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்கு உரிமையாளர். மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.[2] டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

பிறப்பும் கல்வியும்[தொகு]

டோனி பெர்னாண்டஸ், கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். கோவாவைச் சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாகக் கொல்கத்தாவில் பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.

தாயார் எனா பெர்னாண்டஸ்[தொகு]

டோனியின் தாயார் எனா பெர்னாண்டஸ் மலாக்காவைச் சேர்ந்த போர்த்துகீசிய-ஆசியக் கலப்பு (கிறிஸ்தாங்கு இனம்) வம்சாவழியினர்.[3][4][5] ஓர் இசைக்கலை ஆசிரியர். மலேசியாவில் அவர் டப்பர்வேர் எனும் நெகிழிப் பாண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரத் துறையிலும் இருந்தார்.[3] டோனி பெர்னாண்டசுக்கு 16 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்து போனார். தாயாரின் இறப்பு டோனி பெர்னாண்டசைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர் வெளி உலகத் தொடர்புகளை முற்றாக ஒதுக்கினார். தன் முழு கவனத்தை படிப்பிலும் பணம் சம்பாதிப்பதிலும் திசை திருப்பினார்.

விமானச்சேவை விண்ணப்பம்[தொகு]

1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்று பட்டம் பெற்றார். 1987–1989 வரை சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில் நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். பிரான்சன் இங்கிலாந்தின் நான்காவது பெரிய பணக்காரர். 1991 இல் சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் இணை உறுப்பினரானதுடன் 1996 இல் சக உறுப்பினரானார்.[6] 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு[தொகு]

2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.

மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க அனுமதி கேட்டார். அந்தக் கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.

அவர் மூலமாகப் பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’ என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.

அப்போது டோனி பெர்னாண்டஸுக்கு வயது 37. உலகச் சாதனை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்று அறிந்திராத வயது. பிரதமர் துன் மகாதீரின் கருத்துகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விமானச் சேவை உலகில் காலடி எடுத்து வைத்தார் டோனி பெர்னாண்டஸ்.

ஏர் ஆசியா விமானச் சேவை[தொகு]

2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் ரிங்கிட் கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையைத் தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு ரிங்கிட் மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.

2003ஆம் ஆண்டு தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத் தன்னுடைய விமானச் சேவையை விரிவுபடுத்தினார். ஏர் ஆசியா விமான நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. இப்போது 25 நாடுகளில் உள்ள 400 நகரங்களுக்குத் தன் அனைத்துலகச் சேவையை வழங்கி வருகிறது. அதன் துணை நிறுவனங்களாகத் தாய் ஏர் ஆசியா (Thai AirAsia) இந்தோனேசியா ஏர் ஆசியா (Indonesia AirAsia) எனும் இரு நிறுவனங்கள் உள்ளன.

'டோனி பெர்னாண்டஸுக்கு கிறுக்குப் பிடித்துப் போய் விட்டது. அதனால் தான் ஏர் ஆசியா விமான நிறுவனத்தை வாங்கியிருக்கிறார்' என்று சொன்னவர்கள் அவரை இப்போது நம்பிக்கையின் நட்சத்திரமாகப் புகழ்கின்றார்கள். அவருடைய அணுகுமுறையைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் பல மலிவு விலை விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சாதனைகள்[தொகு]

டோனி பெர்னாண்டஸின் மிகப்பெரிய சாதனை ஏர் ஆசியா உள்நாட்டு விமானச் சேவையை அனைத்து உலக விமானச் சேவையாக மாற்றியமைத்ததே. ஏர் ஆசியா விமானச் சேவை தோற்றுவிப்பதற்கு முன்னர் ஆசிய வட்டாரத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் (open-skies) இல்லாமல் இருந்தது.

2003 ஆம் ஆண்டில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் உருவாக்கம் பெறுவதற்கு டோனி பெர்னாண்டஸ் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்குப் பிரதமர் துன் மகாதீரும் உறுதுணையாக இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாக இருந்தவர் டோனி பெர்னாண்டஸ். அதன் பயனாகப் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோன்றியுள்ளன.

மலிவுவிலை விமானச் சேவைகள்[தொகு]

  • மலேசிய பயர்ஃபிளை - Malaysia's Firefly (மலேசிய விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  • சிங்கப்பூர் டைகர் ஏர்வேய்ஸ் - Singapore’s Tiger Airways (சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  • சிங்கப்பூர் ஸ்கூட் - Singapore’s Scoot (சிங்கப்பூர் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  • சிங்கப்பூர் வேலுயூ ஏர் - Singapore’s Valuair (சிங்கப்பூர், கந்தாஸ் விமானச் சேவைகளுக்குச் சொந்தமானது)
  • ஜெட்ஸ்டார் ஆசியா - Jetstar Asia (சிங்கப்பூர், கந்தாஸ் விமானச் சேவைகளுக்குச் சொந்தமானது)
  • தாய்லாந்து நோக் ஏர் - Thailand's Nok Air
  • வியட்நாம் ஜெட்ஸ்டார் பசிபிக் - Vietnam's Jetstar Pacific (பசிபிக் விமானச் சேவைக்குச் சொந்தமானது)
  • பிலிப்பைன்ஸ் செபு பசிபிக் - Philippines's Cebu Pacific

பிரிட்டிஷ் அரசியாரின் விருது[தொகு]

பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசியார், டோனி பெர்னாண்டஸுக்கு சி.பி.இ. (Commander of the Order of the British Empire) எனும் பிரித்தானிய உயர் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.[7] பிரிட்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையில் வர்த்தக, கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் அந்த விருது வழங்கப்பட்டது.

’ஏர் ஏசியா, ட்யூன் குழுமம், லோட்டஸ் டீம் ஆகியவற்றில் உள்ள என் அனைத்துப் பங்காளிகளும் நண்பர்களும் ஊழியர்களும் வழங்கிய கடின உழைப்பு, உறுதி, விடா முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் அது’ என்று டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது[தொகு]

வான் போக்குவரத்துத் தொழில் துறையில் அவர் ஆற்றியுள்ள தலைசிறந்த பணிகளைப் பாராட்டும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 2010ம் ஆண்டு Officer of the Legion d’honneur எனும் கௌரவ விருதை வழங்கிச் சிறப்பித்தது.[8] இந்த விருதை 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு மகா வீரர் நெப்போலியன் போனபார்ட் உருவாக்கினார். பிரான்சு நாட்டிற்கு அரிய சேவைகளை வழங்கியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பிரஞ்சுக் குடிமகன் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள மிக உயரிய விருது அதுவாகும். இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் போன்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் போர்ப்ஸ் என்னும் அனைத்துலக சஞ்சிகை டோனி பெர்னாண்டசை ’2010ம் ஆண்டுக்கான சிறந்த ஆசிய வணிகர்’ ஆகத் தேர்ந்தெடுத்தது.

மலேசிய விருதுகள்[தொகு]

  • மலேசியப் பேரரசரின் டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகள்
  • மலேசியாவின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி (Malaysian CEO of the Year 2003)
  • மலேசியா, நெகிரி செம்பிலான் மாநில சுல்தானின் டத்தோ விருது
  • மலேசியா, பகாங் மாநில சுல்தானின் டத்தோ விருது 2007
  • மலேசியா, பகாங் மாநில சுல்தானின் டத்தோ ஸ்ரீ விருது 2008
  • மலேசிய தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் விருது (Honorary Doctorate from Universiti Teknologi Malaysia (UTM) 2010.)

அனைத்துலக விருதுகள்[தொகு]

  • அனைத்துலக ஹெரால்ட் டிரிபியூன் விருது (International Herald Tribune Award)
  • மிகச் சிறந்த தலைமைத்துவம் (Asia Pacific Leadership Awards 2009)
  • போர்ப்ஸ் சிறந்த வணிகர் விருது 2010 (Forbes Asia businessman of the year)[9]
  • 2011 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படைப்புத் திறனாளி (Top 100 Most Creative People in Business.)[10]
  • பிரான்ஸ் நாட்டின் Legion d'Honneur Order விருது.[11]
  • பிரித்தானிய அரசாங்கத்தின் Commander of the Order (CBE) விருது
  • எர்னஸ்ட் யாங் தொழில் முனைவர் விருது (Ernst & Young Entrepreneur of the Year Awards 2004.)
  • விமானச்சேவை வணிக வியூக விருது (Airline Business Strategy Award 2005.)
  • ஆசிய பசிபிக் வான் போக்குவரத்துக் கழக விருது (Centre for Asia Pacific Aviation (CAPA) 2004, 2005.)
  • லாரேதே ஆளுமை விருது (The Brand Laureate’ Brand Personality Personality 2006, 2007.)
  • இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ கணக்காயர் பட்டயம் (Association of Chartered Certified Accountants in 1991.)
  • ஆசிய பசிபிக் வான் போக்குவரத்துக் கழக சகாப்த விருது (CAPA Legend Award 2009)

மேற்கோள்கள்[தொகு]

  1. "#21 Anthony Fernandes". Forbes. February 2018. http://www.forbes.com/profile/anthony-fernandes/. 
  2. Today AirAsia is the region's largest low-cost carrier, with nearly 8,000 employees, 100 planes and 140 routes--including 40 that no airline had served before.
  3. 3.0 3.1 Brian Mertens (3 டிசம்பர் 2010). "Flying On A Budget". ஃபோர்ப்ஸ். http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2014. "Raised in Malacca of mixed Portuguese-Asian descent, his mother was an entrepreneurial-minded music teacher who launched the Tupperware direct-marketing business in Malaysia." 
  4. "We were Malaysians first". The Nutgraph. 19 நவம்பர் 2009. http://www.thenutgraph.com/we-were-malaysians-first/. 
  5. "Flying On A Budget". Forbes. 20 டிசம்பர் 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103060148/http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget_print.html. 
  6. http://www.indiainfoline.com/Research/LeaderSpeak/Tony-Fernandes-CEO-Air-Asia/44204468
  7. AirAsia CEO Datuk Seri Tony Fernandes has received the Commander of the Order of the British Empire (CBE) award from Queen Elizabeth II at Buckingham Palace.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Tony Fernandes has been made an Officier de la Légion d' Honneur, the highest rank of honour the French government can bestow on a non-French citizen". Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-01-31.
  9. Flying On A Budget
  10. "Malaysian entrepreneur's budget airline AirAsia has flown more than 100 million passengers". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.
  11. "Officier of the Legion d' Honneur is the highest rank of honor that the government of France can award to a non-French citizen. The Legion d' Honneur was established by Napoleon Bonaparte in 1802 to recognize outstanding service to France". Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2012-01-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_பெர்னாண்டஸ்&oldid=3687795" இலிருந்து மீள்விக்கப்பட்டது