சாக்கடல்

ஆள்கூறுகள்: 31°20′N 35°30′E / 31.333°N 35.500°E / 31.333; 35.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்கடல்
ஆள்கூறுகள்31°20′N 35°30′E / 31.333°N 35.500°E / 31.333; 35.500
வகைஉவர்ப்புத் தன்மை மிகுதி
முதன்மை வரத்துயோர்தான் ஆறு
முதன்மை வெளியேற்றம்ஒன்றும் இல்லை
வடிநிலப் பரப்பு41,650 km2 (16,080 sq mi)
வடிநில நாடுகள்யோர்தான், இசுரயேல், மேற்குக் கரை
அதிகபட்ச நீளம்67 km (42 mi)
அதிகபட்ச அகலம்67 km (42 mi)
மேற்பரப்பளவு810 km2 (310 sq mi)
சராசரி ஆழம்118 m (387 அடி)
அதிகபட்ச ஆழம்377 m (1,237 அடி)
நீர்க் கனவளவு147 km3 (35 cu mi)
கரை நீளம்1135
கடல்மட்டத்திலிருந்து உயரம்-423 மீ
Islands2
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.
சாக்கடல் அல்லது இறந்த கடல் பகுதியை செய்மதியில் இருந்து எடுத்த படம்

சாக்கடல் அல்லது இறந்த கடல் (Dead Sea, எபிரேயம்: ים המלח‎ (உப்புக் கடல்); அரபு: البحر الميت‎) என்னும் நீர்நிலையானது மேற்குக் கரை, இசுரேல், யோர்தான் ஆகியவற்றின் எல்லையில், பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் யோர்தானியப் பகுதியில் அமைந்துள்ளது. இக் கடலில் உயிரினங்கள் வாழ முடியாமையினாலேயே இது சாக்கடல் அல்லது இறந்த கடல் என அழைக்கப்படுகிறது.

முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட இக்கடல் ஓர் உவர் நீரேரி ஆகும். 377 மீட்டர் (1237 அடி) ஆழமுடைய சாக்கடல், பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 8.6 மடங்கு அதிகளவு உவர்ப்புடைய நீரைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து தற்போது 423 மீட்டர் (1388 அடி) கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழிறங்குகிறது. இவ்விறக்கம் பூமியின் மேல் ஓடுகளின் விரிசலினால் ஏற்படுகிறது.

உப்புத் தன்மை மிகுந்திருப்பதால் இந்த ஏரியில் உயிரினங்கள் வாழ்வது அரிது. எனவே சாக்கடல் என்னும் பெயர் எழுந்தது. சாக்கடலின் நீளம் 67 கி.மீ (42 மைல்); மிகுதியான அகலம் 18 கி.மீ (11 மைல்). இதற்கு யோர்தான் ஆற்றிலிருந்தே பெருமளவில் நீர் கிடைக்கிறது. சாக்கடலுக்கு அடியிலும் அதைச் சுற்றியும் உள்ள நீரூற்றுகளிலிருந்தும் நீர் கிடைக்கிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும் புதைமணல் பகுதிகளும் உருவாகியுள்ளன.

வேதியியற் தகவல்[தொகு]

1960 ஆம் ஆண்டு வரை சாக்கடலின் மேற்பகுதியில் உப்புத்தன்மை குறைவாயும், ஆழப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல உப்புத்தன்மை அதிகமாயும் காணப்பட்டது. நீர்ப் பாசனத்துக்குக்காக ஜோர்டான் ஆறு திசை திருப்பட்டதாலும் மழை குறைந்ததாலும் சாக்கடல் பெறும் நீரின் அளவு குறைந்தது. 1975 ஆம் ஆண்டளவிலிருந்து சாக்கடலின் மேற்பகுதி உவர்ப்புத் தன்மை அதிகமுள்ளதாக மாறியது. ஆனால் மேற்பகுதி நீரின் வெப்பநிலை ஒப்பீட்டளவில் கீழ்ப்பகுதியை விட வெதுவெதுப்பாய் இருப்பதால் அடர்த்தி் குறைவாக இருக்கிறது. அடர்த்தி குறைந்த நீர் மேல்பகுதியில் இருக்கிறது. மேல் பகுதியின் நீர் குளிர்ந்ததும் இதுவரை இரு வேறு வெப்பநிலைகளைக் கொண்டிருந்த மேல் கீழ் பகுதிகளின் நீர் கலந்தன. இதனால் முன்னெப்போதும் இல்லாதவாறு முழுக்கடலுமே ஒரே வெப்பநிலை யுடையதாக மாறியுள்ளது.

சாக்கடலின் உவர்ப்புத் தன்மையால் நீருள் மூழ்காமல் மிதக்கும் நிலையைப் படத்தில் காணலாம்

இதன் நீர் அதிகளவு உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன:

1. சுற்றியுள்ள பகுதியின் ஆறுகள் இக்கடலில் கலத்தல் (ஆற்று நீரிலுள்ள கனிம உப்புக்கள்) 2. ஆவியாதல் மூலம் மட்டுமே இக்கடலிலிருந்து நீர் வெளியேறுதல்

சாக்கடல் நீரிலுள்ள கனிமங்கள்[தொகு]

மக்னீசியம் குளோரைட் 53%, பொட்டாசியம் குளோரைட் 37%, சோடியம் குளோரைட் (சாதாரண உப்பு) 8%, பல்வேறு உப்புக்கள் 2%.

இதன் உவர்தன்மை மாறிக்கொண்டிருந்தாலும் அண்ணளவாக 31.5%. அதிகளவு உப்பிருப்பதால் நீரின் அடர்த்தி அதிகமாகக் காணப்படுகிறது. இந்நீரை விட அடர்த்தி குறைவாயுள்ள எதுவும் சாக்கடல் நீரில் மிதக்கும். மனிதர்கள் கூட நன்னீர்/கடல்நீரில் போன்று அமிழ்ந்து விடாது மிதப்பர். பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படல், மாசுபடாத வளி, வளியமுக்கம் அதிகமாயிருத்தல், அதிஊதாக் கதிர்களின் வீச்சுக் குறைவாயிருத்தல் என்பன உடல் நலத்தை ஊக்குவிக்கும் காரணிகளாக அமைவதால் உடல் மற்றும் அழகுச் சிகிச்சைக்குப் புகழ் பெற்ற இடமாகவும் சாக்கடல் விளங்குகின்றது.

உயிரினங்கள்[தொகு]

அதிகளவு உவர்ப்புத் தன்மையுடைய நீரில் மீன்களோ தாவரங்களோ வாழ முடியா விட்டாலும் மிகச் சிறியளவில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மழைக் காலத்தில் உப்புத் தன்மை சற்றுக் குறைவதால் குறுகிய காலத்திற்கு சாக்கடலில் உயிரிகள் வாழும். 1980ம் ஆண்டில் மழைக்காலத்தின் பின் (வழமையாக கடும்நீல நிறத்தில் காணப்படும்) சாக்கடல் செந்நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் காணப்பட்ட டுனலியெல்லா என்கிற ஒரு வகைப்பாசியை உண்ட சிவப்பு நிறமிகளைக் கொண்ட நுண்ணுயிரிகளே செந்நிறத்திற்குக் காரணம் என அறிவியலாளர் கண்டறிந்தனர்.

சாக்கடல் பகுதியில் பல்லினப் பறவைகளும் ஒட்டகம், முயல், நரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. இசுரேல், ஜோர்டான் நாடுகள் இயற்கைப் புகலிடங்களை (சரணாலயங்களை) இப்பகுதியில் அமைத்துள்ளன.

ஒரு காலத்தில் பப்பைரஸ் மற்றும் தென்னை மர இனத் தாவரங்கள் பெருமளவில் காணப்பட்டன.

மனித வரலாறு[தொகு]

உலகிலேயே மிக நீண்ட காலமாக மக்கள் தொடர்ந்து வசித்து வருமிடமாக சாக்கடலுக்கு அண்மையிலுள்ள ஜெரிக்கோ (எரிக்கோ) நகரம் நம்பப்படுகிறது. விவிலியத்தில் குறிப்பிடப்படும் சோதோம், கொமொரா நகரங்கள் சாக்கடலின் தென்கீழ்க் கரைக்கண்மையில் அமைந்துள்ளன என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். வேதாகமம் விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின்படி சோதோம், கொமோரா ஆகிய இந்நகரங்கள் ஆபிரகாம் காலத்திலே கடவுளால் அழிக்கப்பட்டது தொடக்க நூல் 19:1-9). சவுல் அரசன் தாவீதை கொலை செய்யத் தேடியபோது தாவீது மறைந்திருந்த குகை சாக்கடலுக்கண்மையில் உள்ள எய்ன் கெடியில் அமைந்துள்ளது.

எகிப்திய அரசி கிளியோபட்ரா சாக்கடலின் கரையோரத்தில் கிடைத்த கனிமங்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்கள், மற்றும் மருந்து வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ, உரிமனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அடைவதற்குக் கடினமான இடமாக இருந்தமையால் கிரேக்க மரபுவழி திருச்சபை சாதுக்களை பைசன்டைன் காலம் முதல் இவ்விடம் ஈர்த்தது. 'வாடி கெல்ட்'ல் உள்ள 'புனித ஜோர்ஜ்' மற்றும் யூதேயப் பாலைவனத்திலுள்ள 'மர் சாபா' ஆகிய தங்குமிடங்கள் இப்போது யாத்திரைத் தலங்களாக விளங்குகின்றன.

சாக்கடல் பற்றிய விவிலியக் குறிப்புகள்[தொகு]

கலிலேயக் கடல் போன்று சாக்கடல் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் அதிகம் இல்லை. பாலஸ்தீன நாட்டின் தென்கிழக்கு எல்லையில் அமைந்த இந்த ஏரிக்கு விவிலியத்தில் பல பெயர்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு தடவை மட்டுமே இன்றைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கே பாலைநிலக்கடல் என்னும் சாக்கடல் என்னும் சொற்றொடர் உள்ளது (காண்க: யோசுவா 3:14-16):

செப்துவசிந்தா என்னும் விவிலியக் கிரேக்க மொழிபெயர்ப்பில் சமவெளிக் கடல் என்னும் உப்புக் கடல் என்னும் விளக்கம் உள்ளது. யோவேல் நூல் 2:20) சாக்கடலை "கீழைக் கடல்" என்றும் கலிலேயக் கடலை "மேலைக் கடல் என்றும் குறிப்பிடுகிறது:

சாக்கடல் "உப்புக் கடல்" என்று தொடக்க நூல் 19:1-3 பிரிவில் உள்ளது:

எசேக்கியேல் நூல் எருசலேம் கோவிலின் தூயகத்திலிருந்து தண்ணீர் பாய்ந்தோடி, பாலை நிலத்தைச் சோலை வனமாக மாற்றி, உப்புக் கடலினை நன்னீரால் நிரப்பி வளமை கொணர்ந்ததைக் காட்சியாக விவரிக்கிறது:

இசுலாமிய நம்பிக்கையில் சாக்கடற் பகுதி "லூத்" (கிறிஸ்தவ விவிலியத்திலும் காணப்படும் லோத்து), இவர் நபியுடனும் சம்பந்தப் படுத்தப்படுகிறார். பெடுயின் இஸ்லாமிய குழுவினரும் நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த நூற்றாண்டில் அண்மித்த குகையொன்றிலிருந்து ஓலைச் சுருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவை சாக்கடல் ஓலைச் சுருள்கள் (Dead Sea Scrolls) என அறியப்படுகின்றன. அண்மையிலிருந்து அறிவியலாளரும் சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்லுமிடமாக மாறியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கடல்&oldid=3388945" இலிருந்து மீள்விக்கப்பட்டது