ஆலடிவிளை கிராமம்

ஆள்கூறுகள்: 8°08′31″N 77°30′24″E / 8.142003°N 77.506552°E / 8.142003; 77.506552
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலடிவிளை
—  சிற்றூர்  —
ஆலடிவிளை
ஆலடிவிளை சிற்றூர்
அமைவிடம் 8°08′31″N 77°30′24″E / 8.142003°N 77.506552°E / 8.142003; 77.506552
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி கன்னியாகுமரி
மக்களவை உறுப்பினர்

விஜய் வசந்த்

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஆலடிவிளை கிராமம் இந்தியாவின் கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையின் வடக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும்.[3][4] இயற்கை வளமும் வனப்பும் நிறைந்தது. இங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். துவக்கத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருந்தன. இப்போது மாறியுள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆசியா கண்டம், இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சுசீந்திரம் குறுவட்டம் குலசேகரபுரம் வருவாய் கிராமத்துக்கு[5] உட்பட்டது ஆலடிவிளை சிறறூர். இது பெருமாள்புரம்[6] என்று தமிழக அரசு ஆவணங்களில் வழங்கப்படுகிறது. மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்: 2 என்ற பகுதிப்புக்கு உட்பட்டது. இந்த வார்டு எண்ணில் கோட்டவிளை என்ற சிற்றூரும் அடங்கும்.

ஆலடிவிளை சிற்றூர் அரசு பதிவேடுகளில் பதிவாகியுள்ள பெயர் பெருமாள்புரம்[7] ஆகும். இந்த சிற்றூர் றிங்கல்றோபிபுரம், பொன்னாரவிளை, என்ற பொன்னம்மாள்புரம், காமராஜபுரம் ஆகிய குடியிருப்புகளை உள்ளடக்கியது.

இதன் எல்லையாக வடக்கில் மயிலாடி, தெற்கில் மருந்துவாழ்மலை, தென்மேற்கில், பொற்றையடி, கிழக்கில், பொட்டல்குளம், வட கிழக்கில் புன்னார்குளம், மேற்கில், பூமாயிதோப்பு என்ற லட்சுமிபுரம் மற்றும் உசரவிளை ஆகிய சிற்றுார்கள் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் சிதறலாக உள்ளது மருந்துவாழ்மலை என்ற குன்று. இதன் முகடு 958 அடி அதாவது 292 மீட்டர் உயரமுள்ளது. இந்த குன்றின் வட பள்ளத்தாக்கில் ஆலடிவிளை சிற்றுார் அமைந்துள்ளது. அமைவிடதத்தில் உத்தேச நில நேர்கோடு 8.142003*N; நிரைகோடு 77.506552*E சந்திக்கின்றன.

பெயர்காரணம்[தொகு]

மருந்துவாழ்மலை பிரதான பாசனக்கால்வாய் கிளை பிரியும் தெய்வேந்திரன் மலை குன்று பகுதியில் ஒரு விழுதில்லா ஆலமரம் நின்றது. இது, 2015 ம் ஆண்டு அழிந்தது. இந்த ஆலமரத்தின் அடியில் சிறிய கற்கட்டுமானம் ஒன்று உள்ளது. அதில் பெண் முகங்கள் அடங்கிய ஒன்பது புடைப்புச்சிற்பங்களும், நாக வழிபாட்டு சிற்பங்களும் உள்ளன. பெண் சிற்பங்கள் பிரத்யேக செயல்களின் வடிவங்களாக உள்ளன. இது, கன்னிமார் கோவில் என்று மரபாக வழங்கி வருகிறது. இவை, தொல்பொருள் ஆய்வுத்துறையால் ஆவணப்படுத்தப்படாத வரலாற்று ஆவணம்.

இந்த கோயில் ஆலமரத்தை ஒட்டி அமைந்த விளைநிலங்களை உள்ளடக்கிய பகுதியாக அமைந்ததால், ஆலடிவிளை என, ஊர் பெயர் பெற்றதாக செவிவழிச் செய்தி உள்ளது.

விளை என்பதை தமிழ் வாழ்வியல் தொல் இலக்கண பகுப்பான மருதம் நிலப்பகுப்பில் விளைச்சல் பகுதியாக கொள்ளலாம். வளை என்பது, எலி, நண்டு போன்ற உயிரினங்களின் வசிப்பிடம். வளை என்ற சொல்லுக்கு இருப்பிடம் என்றும் பொருள் கொள்ளலாம். இந்த பொருள் கொண்டால், வளை என்பது வாய்மொழி மரபில் விளை என்று ஆகியிருக்கலாம்.

ஆலடிவிளை சிற்றுார் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், விளைநிலங்களை பெயர் சூட்டி குறியீடாக அழைக்கும் வழக்கம் உள்ளது. நெடிய நிலப்பரப்பை நெடுவிளை என்றும் நொச்சி மரங்கள் நிறைந்த பகுதியை நொச்சிவிளை என்கின்றனர். மலையின் மடியில் உள்ள பகுதியை, மடுவிளை என்றும், பூச்சி என்ற குறுஞ்செடி நிறைந்த பகுதியை பூச்சிவிளை என்றும் வழங்குகின்றனர்.

இவை தவிர திருநாட்டிவிளை, மாடத்துவிளை, பொன்நவரை விளை, அவுரிவிளை, நாவிதன் பாறை விளை, வண்ணாத்திவிளை என்று பெயர்களும் வழக்கில் உண்டு. இவை வாய்மொழி மரபு தொடராக வழங்கிவருகின்றன. பிரபல தமிழக ஆய்வாளர் முனைவர் ரா. பி. சேதுப்பிள்ளை ஊரும் பேரும்[8] என்ற புகழ்பெற்ற ஆய்வு நுாலில், ‘வயல் என்னும் சொல் புதுவயல், நெடுவயல் முதலிய ஊர்ப்பெயர்களில் வழங்கும். தென்னாட்டில் விளை புலங்களையுடைய ஊர்களை விளையென்னும் பெயரால் குறிப்பதுண்டு...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஆவணங்களில், ஆலடிவிளை என்ற பெயர் பதிவாகவில்லை. பெருமாள்புரம் என்றே பதிவாகியுளள்ளது. ஆனால், வாய்மொழி மரபில் ஆலடிவிளை என்ற பெயரே நிலைத்துள்ளது. கிறிஸ்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள றிங்கல்றோபிபுரம் தேவாலய முகப்பு வரவேற்பு வளைவில் ஆலடிவிளை என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நாட்டார் வழிபாட்டு மரபில் உள்ள முத்தராம்மன் கோயிலில் பெருமாள்புரம் என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் வசிக்கும் பகுதியை, றிங்கல்றோபிபுரம் என்று அழைக்கின்றனர். கி.பி.1806 ம் ஆண்டில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பாதிரியார் வில்லியம் தோபியாஸ் றிங்கல்தோபி[9] என்பவர், லண்டன் மிஷன்[10][11] என்ற அமைப்பு மூலம், சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தை பரப்ப திருவிதாங்கூருக்கு வந்தார். அவர் மயிலாடியை தலைமையிடமாகக் கொண்டு, புராட்டஸ்டாண்டு மதம் என்ற சீர்திருத்த கிறி்ஸ்தவ மதத்தை பரப்பும் பணிகளை செய்து வந்தார். அவரது நினைவாக, கிறிஸ்தவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு, றிங்கல்றோபிபுரம் என பெயர் சூட்டிக் கொண்டனர். அங்கு, றிங்கல் றோபி பெயரில், சீர்திருத்த கிறிஸ்தவ ஆலயமும் உள்ளது. அது, தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட கொட்டாரம் சேகரம், நாகர்கோவில் திருமண்டலத்தில் இயங்கிவருகிறது.

வரலாற்று தடயங்கள்[தொகு]

மருந்துவாழ்மலையில் வடக்கு பகுதி மடியில் ஆலடிவிளை சிற்றூர் அமைந்துள்ளது. மடியின் மையப்பகுதியை, மடுவிளை என்று அழைக்கின்றனர். அங்கு கறுப்பு சிவப்பு வண்ண மண்கல ஓடுகள் பரவி சிதறியுள்ளன. தொல்லியல் துறையால் பகுக்கப்படாத புதைபடிமங்கள் உள்ள பகுதி. இங்குபுதைபொருள் ஆராய்ச்சி நடத்தினால், வரலாற்று தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆலடிவிளை சிற்றூரின் கிழக்கு பகுதியில் ஆலமரத்தடி கன்னிமார்கோவில் புடைப்பு சிற்பங்களும் இந்த ஊரின் பழமையை உணர்த்தும் சான்று. அந்த கோயிலை ஒட்டி, மருந்துவாழ்மலையில் கிழக்கு குறுமுகடு உள்ளது. அது தெய்வேந்திரன்குன்று என்று அழைக்கப்படுகிறது. இதை தெய்வேந்திரன் சுனை என்றும் வாய்மொழி மரபில் வழங்குவது வழக்கம். இங்கும் வரலாற்றை உணர்த்தும் குடைவரை பெரிய பாறையின் மையப்பகுதியில் உள்ளது. இந்த குடைவரைக்கு செல்ல, செங்குத்து பாறையில், சிறிய படிக்கட்டுகள் முற்காலத்திலே அமைக்கப்பட்டுள்ளன. குடைவரை உள்ள பகுதியில், இரண்டு நீரூற்றுகள் உள்ளன. குடைவரைக்குள் புடைப்பு சிற்பங்கள் பல உள்ளன. ஒரு பகுதியில் ஆனக்கால் என்ற, யானையின் ஒற்றைக்கால் வடிவம் உள்ளது. இது பாறை சிற்பமா அல்லது இயற்கையாக உருவானதா என்ற மயக்கம் உள்ளது. இவை, சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் கட்டிய காலத்தில், அந்த சிற்பிகள் உருவாக்கியவை என்ற பேச்சு மரபும் உண்டு.

வழிபாட்டு இடங்கள்[தொகு]

ஆலடிவிளை சிற்றுாரில் வசிக்கும் தமிழர்கள், சிறுதெய்வ வழிபாடு என்ற நாட்டுப்புறவியல் முறையை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். கன்னி தெய்வத்தை முதன்மையாகவும், ரகசியமாகவும் வழிபடுகின்றனர். குடும்ப வாழ்வில் இணைவதற்கு முன், மரணமடையும் ஆண், பெண்களை கன்னி என்று அழைக்கின்றனர். அவர்களை நினைத்து, நள்ளிரவில் சிறு சடங்கு செய்து வழிபடுவர். இது, பெரும்பாலான குடும்பங்களில் நிகழும். பாரம்பரிய வழிபாட்டில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய குடும்பங்களிலும் பின்பற்றுவதுண்டு.

குலவழிபாடு மரபும் கொண்டுள்ளனர். இதை குடி வழிபாடு என்பர். இதில் ஒன்றைவீரன் குடி வழிபாடும் ஒன்று. ஒன்றைவீரன் வழித்தோன்றல் குடும்பத்தின் முதற் கோவில், ஊரின் நடுவே வெண்கலராஜன் சாலையில், நாராயணன் ராஜமணி வளாகத்தில் உள்ளது.

இந்த குடி தவிர ஊசிகாட்டான், மன்னர் ராசா, காலன் என குடித்தலைவர்களை முதன்மையாகக் கொண்டு, அந்தந்த பெயரில் மையங்களை உருவாக்கி வழிபடும் வழக்கம் உள்ளது. குடித்தலைவர் பெயரை, குடும்பத்தில் மூத்த உறுப்பினருக்கு சூட்டும் வழக்கமும் நடைமுறையில் இருந்தது. இப்போது அருகி வருகிறது. குடியை, கொடி என வாய்மொழியாக உச்சரிப்பதால் பொருள் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

இங்கு தாய் தெய்வமாக அம்மனை வழிபாடுகின்றனர். முத்தாரம்மன் என்று பெயர். ஊருக்கு பொதுவான முத்தாரம்மன் கோவில், ஊரின் வடக்கு எல்லையில் உள்ளது. இந்த பகுதியில் தான் முதலில் ஊர் உருவானது. முத்தாரம்மன் என்பது, வயதிலும் அனுபவத்திலும், முதிய பெண்ணை குறிப்பது. மூத்தார் அம்மன் வழிபாடு என்பது தான் மருவி, முத்தாரம்மனாக மாறியுள்ளது. தமிழர்கள் வணங்கிய தாய் தெய்வ முறையின் வழித்தோன்றல்தான் இந்த வழிபாட்டு முறை.

திருமால் கடவுளை முன் வைத்து, முத்துக்குட்டி சுவாமிகள் என்ற ஐயா வைகுண்டர் வழியில் அய்யாவழி மரபில் ஒரு நிழல்தாங்கல் இங்கு உள்ளது.

இங்கு புராட்டஸ்டாண்டு கிறிஸ்தவ மதத்தை, ஞானப்பூ மகள் லேயாள் என்ற பெண் ஸ்தாபித்தார். அவர் கிறிஸ்தவத்துக்கு மாறியதன் மூலம் இந்த சிற்றுாருக்கு புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் வந்தது. அவரது கணவர் பெயர் இசக்கிமுத்து. குடிவழி வழிபாட்டில் தீவிரம் கொண்டிருந்தவர். இந்த குடும்பம், 18 ம் நுாற்றாண்டில் மதம் மாறி, றிங்கல்றொபி பெயரில் ஆலடிவிளையில், ஒரு தேவ ஆலயத்தை உருவாக்கினார். பிற மத வழிபாட்டாளர்களோ, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களோ இந்த சிற்றுாரில் வசிக்கவில்லை.

நீர்வளம்[தொகு]

கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பேச்சிப்பாறை அணை[12] உள்ளது. இந்த அணை நீர், கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதி நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது. பாசன நிலங்களுக்கு நீர் வினியோகம் செய்ய பல கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அருகே சிதறிக்கிடக்கும் குன்றுகளை இணைத்து அதன் பள்ளத்தாக்குகளை பாசன வசதியுள்ள பரப்பாக மாற்ற, தோவாளை பாசன வாய்க்கால் வெட்டப்பட்டது. இது, ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக தோவாளையை அடுத்த பர்வதம் மலை அருகே, நிலப்பாறை என்ற பகுதியில் மூன்று கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளை, மருந்துவாழ்மலை பிரதான பாசனக்கால்வாய் எனப்படுகிறது. இந்த வாய்க்கால் மேம்பால வழித்தடமாக அமைக்கப்பட்டுள்ளது. மண் குவியலால் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தின் மீதுள்ள சிமெண்ட் கால்வாயில், நீர் ஓடுகிறது.

அதவாது பர்வதாம் மலைமருந்துவாழ்மலை குன்றுகளை இடையே 70 அடி உயரம் வரை உயர்த்தப்பட்ட செயற்கை நீர் வழியில் வாய்க்காலாக பாய்கிறது. மருந்துவாழ்மலை குன்றுகளின் தென்கிழக்கு மடுவில் தேவேந்திரன்மலைக் குன்று முனையில், அந்த மேம்பால நீர்வழித்தடம் நிறைவு பெறுகிறது. அங்கிருந்து, குன்று ஓரம் வெட்டப்பட்ட சமபரப்பு கால்வாயாக, கிழக்கு மேற்கு திசைகளில் கிளைகள் பிரிகின்றன. கிழக்கில் சற்று அகண்ட வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அது, பொட்டல்குளம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி வரை பாய்கிறது. அந்த பகுதி குளங்களை நிறைக்கிறது. பரப்புகளை பசுமையாக்குகிறது. மேற்குப்புறம் சற்று அகலம் குறைந்த கிளைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இது தான் மருந்துவாழ்மலையின் வடக்கு பள்ளத்தாக்கை பசுமையாக்குகிறது. இந்த கால்வாய் பாசனத்தால் பயன் பெறம் ஆயக்கட்டு நிலப்பரப்பு கிட்டத்தட்ட 977 ஏக்கர் ஆகும்.

இணைப்பு சாலைகள்[தொகு]

ஆலடிவிளை சிற்றுார், கன்னியாகுமரி – நாகர்கோவிலில் சாலையில் 11 வது கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. சிற்பத்தொழிலால் புகழ் பெற்ற மயிலாடி நகரில் இருந்து, 3 கி.மீ., தெற்கில் உள்ளது. கன்னியாகுமரி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், பொற்றையடி என்ற சிற்றூரில் இருந்து, மருந்துவாழ்மலையை ஓட்டிய அடிவாரச் சாலையில் 3வது கிலோமீட்டரில் உள்ளது. இதுதான் புராதன சாலை. அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலக பதிவேட்டில் இதை வெங்கலராஜன் சாலை[13] என்ற பெயரில் பதிவாக உள்ளது. இந்த சாலையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் அரசு சின்னமான சங்கு முத்திரை பதித்த, மைல்கற்கள் என்ற துாரம் காட்டி கற்கள் நடப்பட்டிருந்தன. தற்போது வரலாற்று முக்கியத்துவம் அறியாமல் அந்த கற்களை அகற்றிவிட்டனர்.

நாகர்கோவில்– திருச்செந்துார் நெடுஞ்சாலையில், புன்னார்குளம் சிற்றூர் அருகே, மருந்துவாழ்மலை மேம்பால பாசனக் கால்வாயை ஒட்டிய சாலையில் 3வது கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. நாகர்கோவில்கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், ஈத்தங்காடு கிராமம் வழியாக குலசேகரபுரம், ஒசரவிளை சந்திப்பில் புத்தனாறுகால்வாய் குறுக்கே பிரிந்து வரும் சாலையில், 3வது கிலோமீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது.

மாற்றங்கள்[தொகு]

மருந்துவாழ் மலை அடிவாரத்தில் அமைந்து்ளளது ஆலடிவிளை கிராமம். இந்த ஊர் உருவான போது, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. வடிகால் பகுதியான ஊற்றுவிளை, வம்பவிளை பகுதியில் உள்ள நராயணி கோணத்து குளம் ஆகியவற்றில் இருந்தே தண்ணீர் எடுக்க வேண்டியிருந்தது. இவை முறையே 1 மற்றும் 2 கீலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதற்காக, ஊரின் வடக்கு புறத்தில் மக்களால் ஒரு கிணறு வெட்டப்பட்டது. அது பழையகிணறு என அழைக்கப்பட்டது. அது, முழு அளவில் நீர் தேவையை பூர்த்தி செய்யவில்லை.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கிறிஸ்தவராக மதம் மாறிய ஞானப்பூ மகள் லேயாள் என்பவர் ஒரு கிண்று அமைத்தார். அது ஊரின் தென் மேற்கு பகுதியில் அவரது குடும்ப நிலத்தின் மத்தியில் அமைந்துள்ளது. அது, ஊரின் தென்புறத்தில் வசித்தவர்களின் நீர் தேவையை சிறிதளவு தீர்த்து வைத்தது. மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் இந்த கிணறுகளில் நீர் இருக்காது. இதனால் நீர் தேவையை சமாளிக்க, லேயாள் கிணறு அடுத்து வட மேற்கு பகுதியில் உள்ள இயற்கை ஊற்றை மக்கள் பயன்படுத்துவர். அது, சிறிய அளவில் வற்றாத ஊற்றாக சுரந்தது. கேடை காலத்தில் மட்டுமே இந்த ஊற்று பயன்படுத்தப்பட்டது. இதை நாவிதன்பாறை ஊற்று என அழைத்தனர். நாவிதர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் அந்த பெயர் வந்தது.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்த கிராமத்தில் கல்வி அறிவு, 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. மிக குறைவாகவே எழுத்தறிவு பெற்றிருந்தது. பெரும்பாலான குடும்பங்கள் பனைத்தொழில் சார்ந்து வாழ்ந்தன. பனை பொருட்கள் உற்பத்திக்காக நாள் முழுக்க அந்த தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். அதனால், பள்ளிக் கல்வி அறிவு பெறும் நிலையில் குடும்பங்களின் நிலை இல்லை. பள்ளி கல்வி பெறுவதற்கான முறையான கட்டமைப்பும் நிறுவப்பட்டிருக்கவில்லை.

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய லேயாள் குடும்பத்தில் சிலர் ஆரம்ப பள்ளி கல்வி பெற்றிருந்தனர். ஒற்றைவீரன் என்பவர் குடும்பத்தை சேர்ந்த நாராயணன் – தாமரைவடிவு மகன் ராஜமணி உயர்நிலை கல்வியை சுசீந்திரம் பள்ளியில் கற்றவர். அவரது முயற்சியால், கிராம மறுமலர்ச்சி மன்றம் என்ற பெயரில் ஒரு வாசகசாலை அமைக்கப்பட்டது. கிராமத்தில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, சொந்தமாக நிலம் வாங்கி, கட்டடம் அமைத்து இந்த வாசகசாலை, 1955 ம் ஆண்டு முதல் இயங்கியது. இந்த கிராமத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு, இந்த வாசகசாலை இயங்கி வந்தது. அந்த ஊர் வாசிகளின் மாலைநேரப் பள்ளியாகவும் செயல்பட்டது.

அந்த வாசக சாலை வாசிப்பு தவிர முதியோருக்கு கல்வி கற்பிக்கும் பணிகளையும் செய்து வந்தது. அது தவிர...

  1. கிராம மக்கள் நிலங்களை பராமரிப்பது, அதற்கு உதவுவது
  2. புதிதாக நிலம் வாங்குவோருக்கு ஆலோசனை தருவது
  3. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பூசலை தவிர்த்து உதவுவது
  4. [[சுய உதவிக்குழு]] போல் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவது
  5. ஜாதி முறையால் ஏற்பட்டிருந்த அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டு வருவது
  6. புத்தக வாசிப்பு நடைமுறையை ஊக்குவிப்பது
  7. விவசாய உற்பத்தியில் நவீன நடைமுறைக்கு உதவுவது
  8. கிராம மக்கள் எழுத்தறிவு பெற இரவு நேர பள்ளி நடத்துவது
  9. பேதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் விழிப்புணர்வு.

இது போல் சமூக, பொருளாதார கல்வி நடைமுறைகளை நோக்கமாகக் கொண்டு இந்த சங்கம் இயங்கியது. இதில், லேயாள் குடும்பத்தை சேர்ந்த ஐயாக்கண், வேதக்கண் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த செல்லவடிவு நாடார், ஒற்றைவீரன் குடும்பத்தை சேர்ந்த நாரயணன் மகன் ராஜாமணி மற்றும் சிலர் கூட்டாக செயல்பட்டு உருவாக்கினர். வாசகசாலை நடைமுறை விதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார் ராஜாமணி. இந்த அமைப்பு 1963 வரை சிறப்பாக இயங்கியது. மக்கள் சிறப்பான சேவையை பெற்றனர். கிராமம் முறையாக வளர்ச்சி அடைந்தது. அரசு நியமித்திருந்த கிராம சேவக் ஊழியரின் சேவை இந்த அமைப்பின் வழியாக முறைப்படுத்தப்பட்டது. அப்போது கிராமசேவக் காக பணிபுரிந்தவர் தாழக்குடி கிராமத்தை சேர்ந்த நரசிங்கமூர்த்தியா பிள்ளை என்பவர் ஆவார். நிர்வாகிகள் மாறிய பின் அதன் செயல்பாடு சீரழிந்தது. இந்த கிராம மறுமலர்ச்சி மன்ற செயல்பாடுகளில் பங்கேற்றிருந்த சுயம்பு வேதமாணிக்கம் என்பவர், பின்னர் கல்லூரி படிப்பை முடித்து, கிராமத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையை பெற்றார். மும்பை, கோவை நகரங்களில் ஆடை ஏற்றுமதி தொழில் நிறுவனங்களில் முதன்மை பொறுப்புகள் வகித்தார். அவர் எழுதிய சுயசரிதை, என் பெயர் சுயம்பு[14] நுால் ஆலடிவிளை ஊரில் நடந்த வளர்ச்சி பணி நிகழ்வுகளையும் மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/43207/13/13_chapter%205.pdf
  4. https://www.dinamalar.com/news_detail.asp?id=396365&Print=1
  5. https://www.msuniv.ac.in/Download/Pdf/ecbd9f4aad5944e
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-15.
  7. https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2018/04/2018040667.pdf
  8. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=30
  9. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/13999/11/11_chapter%204.pdf
  10. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/14215/6/07_chapter%201.pdf
  11. Kent, Eliza F. (2004). Converting Women: Gender and Protestant Christianity in Colonial South India. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195165074. https://archive.org/details/convertingwomeng0000kent. 
  12. http://www.wrd.tn.gov.in/DRIP_details.pdf
  13. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/105985/12/12_chapter%206.pdf
  14. {ISBN:978-93-5768-110-0}
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலடிவிளை_கிராமம்&oldid=3937281" இலிருந்து மீள்விக்கப்பட்டது