கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறபொருளெதிரியாக்கி என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் உடலுக்கு வெளியான ஒரு பொருளாக அடையாளம் காணப்பட்டு, உடலினுள் பிறபொருளெதிரி உருவாவதைத் தூண்டக்கூடிய ஒரு மூலக் கூறாகும்[1][2]. இந்த பிறபொருளெதிரியானது, அந்த குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கியுடனேயே பிணைப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால், 'தன்' (Self) பிறபொருளெதிரியாக்கிகள், பொறுத்துக் கொள்ளப்படுவதுடன், 'வெளி' (Non-self) பிறபொருளெதிரியாக்கிகள் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டு பிறபொருளெதிரிகளால் அழிக்கப்படும். சிலவேளை இந்த 'தன்' பிறபொருளெதிரியாக்கிகள் (அதாவது தனது உடலிலேயே இருக்கும் சொந்த உயிரணுக்கள், இழையங்களிலுள்ள பொருட்கள்), நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் வெளிப்பொருட்களாக அடையாளப்படுத்தப்படுவதால், அவற்றிற்கெதிராக பிறபொருளெதிரிகள் உருவாக்கப்பட்டு, தன்னுடைய உடலுக்கு எதிராகத் தொழிற்படும். இது தன்னுடல் தாக்குநோய் (Autoimmune disorder) என அழைக்கப்படும்.