தோல் பதப்படுத்தல்
தோல் பதப்படுத்தல் (Tanning (leather)) என்பது இறந்த விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத் தோல் கெட்டுப் போகாதவாறு பாதுகாப்பதே ஆகும். முறையாகப் பதப்படுத்தப்படும் தோல் நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்கள் பல விதமான பொருள்கள் செய்யப் பயன்படுவதால் அவற்றின் தோல் பதப்படுத்தபடுகிறது.[1][2][3]
வரலாறு
[தொகு]இந்தியாவில் இந்து மத நம்பிக்கைகளின் படி சிவன் என்ற கடவுள் புலித்தோல் உடை அணிபவராகக் காட்டப்பட்டுள்ளது. மான்தோலை புனிதமாகவும், மான்தோல் விரிப்பில் அமர்ந்து தவம் முதலானவை செய்ததாகவும், குருகுலக்கல்வி முறையில் ஆசிரியர் மான்தோல் மீது அமர்ந்து பாடம் கற்பித்ததாகவும் புராணவரலாறு கூறுகிறது. சுமார் 3000ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட தோல் இன்னும் கெடாமலிருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்களில் மக்கள் செருப்பு, குதிரைச் சேணம், நீர்ப்பை முதலானவைகள் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்காகவே சிறந்த விலங்குகளின் தோலை உரித்து, அதைப் பதனிட்டு, பின் வேண்டிய பொருள்களைச் செய்து கொள்வர்.
தோலை சுத்தப்படுத்தும் முறை
[தொகு]விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத்தோல் அதிக நேரமிருந்தால் அழுகி கெட்டுவிடும். எனவே, உரித்தவுடனே பொடிக்கப்பட்ட உப்புத்தூளை அதன் உட்பகுதியில் நன்கு தடவுவர். அதனை வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் நன்கு ஊறவைப்பார்கள். இதனால் தோலில் உள்ள அழுக்குகள் அப்புறப்படுத்தப்படும். அதன் பின், வேதிப்பொருள் கலவையோடு கூடிய சுண்ணாம்புக் கரைசலில் அத்தோலினை ஊறவைப்பார்கள். இதனால் தோலின் வெளிப்புறமுள்ள மயிர்கள் நீக்கப்படுகின்றன. தோலிலுள்ள சுண்ணாம்புக் கரைசலை நீக்கப் பலமுறை அமிலம் கலந்த நீரில் முக்கி எடுப்பர். இப்போது மயிர் மற்றும் அழுக்கு நீக்கப்பட்ட செம்மையான பச்சைத்தோல் கிடைக்கிறது. இதன் பிறகே தோல் முறையாகப் பதனிடப்படும்.
தோல் பதனிடும் முறைகள்
[தொகு]தோலைப் பதனப்படுத்த மூன்று முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
- தாவரப் பதனிடும் முறை
- தாதுப் பொருள் பதனிடும் முறை
- எண்ணெய் பதனிடும் முறை
1.தாவரப் பதனிடும் முறை
[தொகு]சிலவகை மரப்பட்டைகள் ,காய்களை தூளாக்கி நீரில் கலந்த கலவையைக் கொண்டு தோல் பதனிடப்படுகிறது. இது தாவரப்பதனிடும் முறை எனப்படும்.
2. தாதுப் பொருள் பதனிடும் முறை
[தொகு]குரோமியம், அலுமினியம், இரும்பு முதலான உலோகப் பொருட்கள் அடங்கிய வேதி உப்புகளைக் கொண்டு தோல் பதனிடும் முறை, தாதுப் பொருள் பதனிடும் முறை எனப்படும்
3.எண்ணெய் பதனிடும் முறை
[தொகு]மீன் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளைக் கொண்டு பதனிடும் முறை, எண்ணெய் பதனிடு முறை எனப்படும். இம்முறைகள் நெடுநாட்களாக இருந்து வரும் முறைகளாகும்.
நவீன பதனிடும் முறைகள்
[தொகு]தோல் பதனிடும் தொழில் இன்று நவீன முறையில் நடைபெறுகிறது. எந்திரங்களின் மூலமே பெரும்பாலும் தோல் பதனிடப்படுகிறது. இவ்வாறு பதப்படுத்தும் தோல்களை இயந்திரங்கள் விரைவாக உலர்த்துகின்றன. தோலின் தேவையற்ற பகுதிகளை வெட்டி ஒழுங்குபடுத்துகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலின் சுருக்கங்கள் நீக்கப்பட்டு பளபளப்பாக மெருகூட்டப் படுகின்றன. இவை யாவையும் இயந்திரங்கள் மூலமே செய்யப்படுகின்றன.
தோல்பொருட்கள்
[தொகு]பதப்படுத்தப்பட்ட தோல்கள் கொண்டு பல விதமான பொருள்கள் செய்யப்படுகின்றன. தோல் பொருட்களின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது. ஆடு, மாடு, பாம்பு, உடும்பு, நெருப்புக்கோழி, மான் போன்றவற்றின் தோல்களைப் பயன்படுத்தி அழகிய பைகள், கைப்பைகள், கடிகாரப்பட்டைகள், இடுப்புப்பட்டைகள், மெல்லிய தோலினாலான உடைகள், செருப்புகள், அலங்காரப்பொருள்கள் முதலியன தயாரிக்கப்படுகின்றன.
உலக சந்தை
[தொகு]தோல் பதனீட்டுத்தொழிலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா முதலிய நாடுகள் சிறந்து விளங்குகின்றன. இந்தியாவிலிருந்து மிகப் பெருமளவில் முழுவதும் பதனிடப்பட்ட, ஓரளவே பதனிடப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் கணிசமான் அளவு அந்நியச் செலாவணி இந்தியாவுக்குக் கிடைக்கிறது.
உசாத்துணை
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- "Home Tanning of Leather and Small fur Skins" (pub. 1962) hosted by the UNT Government Documents Department பரணிடப்பட்டது 2007-10-09 at the வந்தவழி இயந்திரம்
- Leather tanning guide.
- Muspratt's mid-19th century technical description of the whole process. பரணிடப்பட்டது 2011-11-24 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Possehl, Gregory L. (1996). Mehrgarh in Oxford Companion to Archaeology, edited by Brian Fagan. Oxford University Press.
- ↑ Schrickx, Christianus Petrus; Duijn, D.M. (2010). Zeelieden, bedelaars en gevangenen op een eiland in de Zuiderzee: Cultuurhistorie en archeologie van het Oostereiland in Hoorn. Gemeente Hoorn, Bureau Erfgoed, Archeologie.
- ↑ Kumar, Mohi (August 20, 2013). "From Gunpowder to Teeth Whitener: The Science Behind Historic Uses of Urine". smithsonian.com. பார்க்கப்பட்ட நாள் December 16, 2018.