உள்ளடக்கத்துக்குச் செல்

தொலைவுக் கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் எண்கள், இந்தோ அரேபிய எண்கள் இரண்டையும் பயன்படுத்தும் ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்)

தொலைவுக்கல் என்பது போக்குவரத்துப் பாதையில் அடுத்துள்ள முக்கிய ஊருக்கான தொலைவைக் காண்பிப்பதற்காக நடும் ஒரு கல்லாகும். இந்தக் கல்லில் அடுத்துள்ள முக்கிய ஊரின் பெயரும் அதன் கீழ் அந்தக் கல்லிலிருந்து குறிப்பிடப்பட்ட முக்கிய ஊருக்கான தொலைவும் கிலோமீட்டர் அளவில் தரப்பட்டிருக்கும்.

இந்தியாவில் பல மொழிகள் பயன்பாட்டிலுள்ளதால், அந்தக் கல்லில் கல் நடப்பட்டுள்ள மாநிலப் பகுதியின் பயன்பாட்டிலுள்ள மொழியிலும் அதன் கீழ் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர் இடம் பெற்றிருக்கும். சில கற்களில் பயன்பாட்டிலுள்ள மேலும் சில மொழிகளும் குறிக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் தொலைவு கிலோ மீட்டர் அளவில் குறிக்கப்பட்டிருக்கும். இவை முதன்மைத் தொலைவுக்கற்களாகும். முன்பு இக்கற்களில் பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தொலைவுகளை அளக்கப் பயன்படும் மைல் நீள அலகு கணக்கில் குறிப்பிட்டதால் மைல் கற்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இரு முதன்மைக் கற்களுக்கிடையில், குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவிலான கற்கள் நடப்பட்டிருக்கின்றன.

தருமபுரி அகழ்வைப்பகத்தில் உள்ள அதியமான் பெருவழிக்கல்

இந்தியாவில் தொலைவுக் கற்கள்

[தொகு]

வரலாறு

[தொகு]

தமிழகத்தின் பழங்காலத்தில் போக்குவரத்துக்காக இருந்த பெருவழிகளில் அடையவேண்டிய ஊரின் தொலைவை அறியக்கூடியவாறாக தொலைவுக் கற்கள் அமைக்கப்பட்டன. இதில் இவ்வளவு தொலைவு எனபது எண்ணால் மட்டுமின்றிக் கற்றோரோடு கல்லாதவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் தொலைவுக்கல்லில் குழிகள் போன்ற குறியீடுகளாகவும் காட்டப்பட்டிருந்தன.[1] பண்டைய தமிழர்கள் இந்த மைல்கற்களை சாலை ஓரங்களில் நட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தமிழ் எண்கள் கொண்ட மைல்கற்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெருமளவு காணப்படுகின்றன. அந்த வகையில் தமிழ் மைல் கற்கள் புதுக்கோட்டையில் கண்டறியப்பட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.[2] அவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தின் கூழியான்விடுதி, அன்னவாசல் ,ஆதனக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரால் தமிழ் எண்கள் கொண்ட கைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மஞ்சள், வெள்ளை நிறங்களைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையின் மைல்கல்

இந்தியாவில் தற்கால தொலைவுக் கற்கள்

[தொகு]

இந்தியாவில் சாலைகளானவை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, ஊரகச் சாலை என்று பல்வேறு வகைகளாக உள்ளன. இந்த சாலைகளை எந்த சாலைகள் என அடையாளம் காணும் வகையில் மைல் கற்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. தேசிய நெடுச்சாலையின் தொலைவுக் கற்களில் மஞ்சளும், வெள்ளையும் தீட்டப்பட்டதாகவும், மாநில நெடுஞ்சாலைக் கற்களில் பச்சையும், வெள்ளையும் பூசப்பட்டதாகவும், மாவட்ட சாலைக் கற்களில் நீலமும், வெள்ளையும் பூசப்பட்டதாகவும், ஊரகச் சாலைகளானவை இளஞ்சிவப்பு அல்லது கருப்பு வெள்ளைக் கோடு கொண்டவையாகவும் இருக்கின்றன.[3]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மைல்கற்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைவுக்_கல்&oldid=4046641" இலிருந்து மீள்விக்கப்பட்டது