உள்ளடக்கத்துக்குச் செல்

இன்கா நாகரிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும்.[1] வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 1938 முதல் 1533 வரையான காலப்பகுதியில் போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.[2]1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது.[3] 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது.

மதம்

[தொகு]

சூரியனே இன்காக்களின் முதன்மையான கடவுள். இன்கா இனத்தவர் போருக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட சில கடவுளருக்கு படையல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர்.[4]

வேளாண்மை

[தொகு]

இன்கா மக்கள் வேளாண்மைக்கு ஒவ்வாத மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் பயிர் செய்வதற்கேற்ப மலைச்சரிவினை வெட்டிப் பயிர் செய்தனர். அவர்கள் நீர்ப்பாசன வசதிகளையும் செய்திருந்தனர். சோளம், உருளைக்கிழங்கு, பருத்தி, தக்காளி முதலியவற்றைப் பயிர் செய்தனர். இன்காக்களுடைய முதன்மையான உணவு உருளைக்கிழங்கு ஆகும். இன்கா நாகரிகமே உருளைக்கிழங்கை பயிர்செய்த முதல் நாகரிகம்.

ஆயுதங்களும் போர்முறையும்

[தொகு]

இன்காக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவர்கள் மற்ற நாகரிகங்களுடன் போரிலும் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில் அப்பகுதியில் இன்காப் படையே மிகவும் வலிமையனதாக இருந்தது. ஏனெனில் அவர்களால் எந்த ஒரு உழவனையோ அல்லது குடிமகனையோ போர் வீரனாக மாற்ற முடிந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது ஒரு போரிலாவது பங்கேற்றிருக்க வேண்டுமென்ற ஒரு விதி இருந்தது.

இன்காக்கள் போருக்குச் செல்லும் போது முரசு கொட்டி கொம்பூதிச் சென்றனர். தலை, மார்புப் பகுதிகளுக்கு கவசங்களைப் பயன்படுத்தினர். கோடாரிகள், ஈட்டிகள், இரம்பம் போன்ற மரத்தாலான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இன்காக்களின் சிறந்த சாலையமைப்பு போர்வீரர்கள் விரைவாக நகர்வதற்கு உதவியது. மேலும் ஒரு நாளில் செல்லக்கூடிய தொலைவில் நிறைய தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நல்ல சாலைகளின் காரணமாக செய்தி கொண்டு செல்வோரும் விரைவாகச் சென்று வேகமான தகவல் தொடர்பு இருந்தது. சேவகர்கள் ஓடிச்சென்று தகவலை அடுத்தவரிடம் தர அவர் சிறு தொலைவு ஓடி அவருக்கு அடுத்தவரிடம் சேர்ப்பார். இவ்வாறு தகவல் சென்று சேர்க்கப்பட்டது. ஒரு நாளில் 240 கி.மீ வரை தகவல் கொண்டு செல்லப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இன்கா நாகரிகம்
  2. Inca Civilization
  3. Pizarro executes last Inca emperor
  4. Inca people
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்கா_நாகரிகம்&oldid=3251250" இலிருந்து மீள்விக்கப்பட்டது