உள்ளடக்கத்துக்குச் செல்

வைத்திலிங்கம் துரைசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைத்திலிங்கம் துரைசுவாமி
1930களில் சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர்
பதவியில்
17 மார்ச் 1936 – 4 சூலை 1947
முன்னையவர்எஃப். ஏ. ஒபயசேகரா
பின்னவர்எவருமில்லை
இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை தொகுதி உறுப்பினர்
பதவியில்
1936–1947
முன்னையவர்நெவின்ஸ் செல்வதுரை
பின்னவர்அல்பிரட் தம்பையா
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வட மாகாண உறுப்பினர்
பதவியில்
1921–1931
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 8, 1874
வேலணை, பிரித்தானிய இலங்கை
இறப்புஏப்ரல் 12, 1966(1966-04-12) (அகவை 91)
தேசியம்இலங்கைத் தமிழர்
துணைவர்இராசம்மா
பிள்ளைகள்மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா
முன்னாள் கல்லூரியாழ்ப்பாணக் கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
கொல்கத்தா பல்கலைக்கழகம்
இலங்கை சட்டக் கல்லூரி
வேலைஅரசியல்வாதி, அரசாங்க சபை சபாநாயகர்
தொழில்வழக்கறிஞர்

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (Sir Waithilingham Duraiswamy, சூன் 8, 1874 - ஏப்ரல் 12, 1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியிலிருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வைத்திலிங்கம் துரைசுவாமி யாழ்ப்பாண மாவட்டம், வேலணையில் தமிழ், சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலியார் குடியில் பிறந்தவர். தந்தை ஐயாம்பிள்ளை வைத்திலிங்கம் திருவிதாங்கூர் அரசில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். துரைசுவாமியுடன் கூடப் பிறந்தவர்கள் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்தினம், இரத்தினகோபால், இராஜகோபால் ஆகியோர். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய துரைசுவாமி கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். முதலியார் சிற்றம்பலம் சதாசிவம் என்பவரின் மகள் இராசம்மா என்பவரை 1905 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மகேசுவரி, நடேசுவரி, மகேந்திரா, இராஜேந்திரா, புவனேசுவரி, பரமேஸ்வரி, யோகேந்திரா, தேவேந்திரா என எட்டுப் பிள்ளைகள். இவர்களில் யோகேந்திரா துரைசுவாமி இலங்கைத் தூதுவராகப் பல உலக நாடுகளில் பணியாற்றியவர்[1].

அரசியலில்

[தொகு]

சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1921 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு இடம்பெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஆறுமுகம் கனகரத்தினத்தை அதிகப்படியான வாக்குகளால் வென்று முழு வட மாகாணத்திற்கும் பிரதிநிதியானார்.[2] இதனால் வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமையையும் பெற்றார். 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத்தின் வலிகாமம் மேற்கு-தீவுப்பற்றுப் பகுதியிலிருந்து போட்டியின்றித் தெரிவானார்.[2]

இலங்கைக்குக் கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் ஆநிலப்பதம் எனப்படும் டொமினியன் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைச் சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு நடத்தினார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணத்திலிருந்து எவரும் போட்டியிட முன்வரவில்லை.[2][3]

1934 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கென இடம்பெற்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தார். பதிலாக யாழ்ப்பாணத்திலிருந்து அருணாசலம் மகாதேவா, சுப்பையா நடேசன், நெவின்ஸ் செல்வதுரை, ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[3].

1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசாங்க சபைத் தேர்தலில் துரைசுவாமி ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் இருந்து போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[4]

சபை முதல்வராகத் தெரிவு

[தொகு]
இலங்கையின் 2வது அரசாங்க சபையின் உறுப்பினர்களுடன் சபாநாயகர் வைத்திலிங்கம் துரைசுவாமி (நடுவில் இருப்பவர்), 1936

1936 ஆண்டில் இரண்டாவது அரசாங்க சபைக்கான சபை முதல்வர் தேர்வுக்குப் பிரான்சிசு டி சொய்சா, சி. பந்துவந்துடாவை, வைத்திலிங்கம் துரைசுவாமி ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. துரைசுவாமியை எம். ஜெ. கேரி பிரேரிக்க, என். எம். பெரேரா முன்மொழிந்தார்.[5] வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சொய்சா 17 வாக்குகளும், பந்துவந்துடாவை 14 வாக்குகளும், துரைசுவாமி 27 வாக்குகளும் பெற்றனர். இந்நிலைமை அரசியலமைப்பின் 5 (6A) பிரிவின் கீழ் அமையாததனால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் பெயரை நீக்கி விட்டு ஏனைய இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சில்வாவிற்கு 29 வாக்குகளும் துரைசுவாமிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அபயகுணசேகர துரைசாமிக்கு ஆதரவாக வாக்களித்ததனால், துரைசுவாமி சபை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][5]

சேர் பட்டம்

[தொகு]

துரைசுவாமி அரசாங்க சபை அங்கத்துவராக இருந்த காலத்தில் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1936 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இந்த வைபவத்துக்கு இலங்கைப் பேராளர் சபைத் தலைவராகத் துரைசுவாமி தெரிவு செய்யப்பட்டு இங்கிலாந்து சென்றார். அவ்வைபவத்தில் துரைசுவாமிக்கு ஜோர்ஜ் மன்னர் நைட் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.

சமூகப் பணி

[தொகு]

துரைசுவாமி சைவவிருத்திச் சங்கத்திலும், சைவபரிபாலன சபையிலும் தலைவராய் இருந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி முதலாம் கலாசாலைகளின் பொது முகாமையாளராகவும் இருந்து சேவை புரிந்துள்ளார். யாழ்ப்பாணம் வழக்கறிஞர் சபைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.[2] யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.[2]

பெரியோர் கருத்து

[தொகு]

துரைசுவாமிக்கு யாழ்ப்பாணத்து யோகசுவாமிகளின் அருளும் இருந்துள்ளது. "சுவாமிகள் எனக்கு அடித்து அப்பம் தீற்றிய அற்புதத்தை என்னென்பேன்" என்று துரைசுவாமி அடிக்கடி கூறுவார்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ceylon Tamils". ceylontamils.com.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "அரசாங்க சபைத் தலைவர்". ஈழகேசரி: pp. 5. 10 மே 1936. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.05.10. பார்த்த நாள்: 20-07-2018. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
  4. "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி. 1936-01-19. pp. 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.01.19. பார்த்த நாள்: 30 சூன் 2018. 
  5. 5.0 5.1 "அரசாங்க சபை ஆரம்பம்". ஈழகேசரி: pp. 9. 22 மார்ச் 1936.