உள்ளடக்கத்துக்குச் செல்

த. வே. உமாமகேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வே. உமாமகேசுவரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராவ் பகதூர், தமிழவேள்
த. வே. உமாமகேசுவரன்
தமிழ்ப் பொழில் இதழில் உமாமகேசுவரனின் ஒளிப்படம் (ஏப்ரல் 1927)
தலைவர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்
பதவியில்
14 மே 1911 – 9 மே 1941
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்அ. யா. அருளானந்தசாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1883
கருந்திட்டைக்குடி, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு9 மே 1941(1941-05-09) (அகவை 58)
அயோத்தி,
ஐக்கிய மாகாணம்,
பிரித்தானிய இந்தியா (தற்போது
உத்தரப் பிரதேசம், இந்தியா)
குடியுரிமைபிரித்தானிய இந்தியர்
தேசியம்தமிழர்
துணைவர்உலகநாயகி
பிள்ளைகள்பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு
பெற்றோர்காமாட்சி
வேம்பப்பிள்ளை
வேலைதமிழறிஞர்
வழக்கறிஞர்

தமிழவேள் உமாமகேசுவரன் (7 மே 1883 – 9 மே 1941), ஒரு ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், வழக்குரைஞர், மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். தஞ்சாவூர் நகரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராக 30 ஆண்டுகள் செயலாற்றினார்.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கருந்திட்டைக்குடி எனும் ஊரில் 7 மே 1883 அன்று காமாட்சி - வேம்பப்பிள்ளை இணையருக்கு மகனாகப் பிறந்தார் உமாமகேசுவரனார். வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமாகவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்த மகன் போலவே வளர்த்துவந்தார்.

தம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு, பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார். துன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்த மகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார். அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார்.

வழக்குரைஞர் பணி

[தொகு]

தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின்னர், சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், தஞ்சை கே. சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது அரிதான காலத்திலேயே ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டியவர் உமா மகேசுவரனார் ஆவார்.[1]

உமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது. பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை "அரசு கூடுதல் வழக்குரைஞர்" பணியில் அமர்த்தியது.

சமூகப் பணி

[தொகு]
கரந்தைத்தமிழ்ச் சங்கத்தில் உள்ள உமாமகேசுவரன் சிலை

தஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார். அவரது பதவிக்காலத்தில் வரகூர் - அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி - கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார்.

இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.

கூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால், 1926, செப்டம்பர் 10 ஆம் நாள், கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். 16. பெப்ரவரி 1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். இதேபோல 1938இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். கூட்டுறவுத் துறையில் அவர் பொறித்த முத்திரைகள் அவர் பெயரை இன்றும் நினைவு கூர்கின்றன.

சங்க முகப்பு

கரந்தைத் தமிழ்ச்சங்கம்

[தொகு]

1911ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக உமாமகேசுவரனார் பொறுப்பேற்றர். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும்.

அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில் 6.10.1916இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். மேலும், சங்கத்தின் சார்பில் 1928 – 29இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார். 1915இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார்.

தமிழ்த் தொண்டுகள்

[தொகு]

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராய் உமாமகேசுவரனார் அமர்ந்து ஆற்றிய பணிகளுள் ஒரு சில:

  • நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகப் படுத்தியது
  • வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச்செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றியது.
  • தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று 1919 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது
  • தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ஆம் ஆண்டிலேயே முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
  • இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, 1937 ஆம் ஆண்டிலேயே அதன எதிர்த்து முதல் குரல் கொடுத்ததும், தீர்மாணம் இயற்றி களத்தில் இறங்கிப் போராடியது
  • ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற வட சொற்களுக்குப் பதில் திரு மகன், திருவாட்டி என்னும் சொற்களை அதில் கையாண்டார்.
  • பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக்குத் தந்தார்.
  • யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.
  • தமிழ் மொழியைப் பிற மொழிகளின் சிறப்புகளைச் சேர்த்து மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

அரசியலில்

[தொகு]

நீதிக் கட்சியில் தஞ்சை மாவட்டப் பகுதியில் தீவிரமாக செயல்பட்டுவந்தார். அவர், ஏழை எளிய மக்களுக்காக பள்ளிகளைத் தொடக்கியதோடு கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டு வந்தார்.

விருதுகள்

[தொகு]

ராவ் பகதூர் பட்டம்

[தொகு]

1935ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசால் ராவ் பகதூர் விருது வழங்கிப் பாராட்டப்பட்டார்.

தமிழவேள் பட்டம்

[தொகு]

இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928 – 30இல் "கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்" எனும் கட்டடம் கட்டப்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. ஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, "செந்தமிழ்ப் புரவலர்" எனும் பட்டத்தை ஞானியாரடிகள் இவருக்கு அளித்தார். இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் "தமிழவேள்" பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார். தமிழ்ப் பொழில் இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன.

மறைவு

[தொகு]

இரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்தி நிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்தி நிகேதனைப் பார்வையிட்டார். பிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றி, காய்ச்சல் கண்டதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 9 மே 1941 அன்று மறைந்தார்.

புகழ்

[தொகு]

உமாமகேசுவரனாரைப் பெருமைப்படுத்தும் விதமாக 13 ஏப்ரல் 1973 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அவரது சிலை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

உமாமகேசுவரம், கரந்தை ஜெயக்குமார் மற்றும் கரந்தை சரவணன் எழுதிய, உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூலாகும். இந்நூலில் அவரது சமூக, கல்வி, தமிழ், ஆன்மீகப்பணிகள் உள்ளிட்டவை பதியப்பெற்றுள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழவேள் உமாமகேசுவரனார்". Archived from the original on 2013-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  2. உமாமகேசுவரம், கரந்தை ஜெயக்குமார் மற்றும் கரந்தை சரவணன், கரந்தை லோகநாதன் நூலாலயம், கரந்தை, தஞ்சாவூர் 613 002

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வே._உமாமகேசுவரன்&oldid=3839438" இலிருந்து மீள்விக்கப்பட்டது