உள்ளடக்கத்துக்குச் செல்

திருவையாறு அரசர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவையாறு அரசர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி சமஸ்கிருதம், தமிழ், இசைகல்வி போன்றவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆகும்.

வரலாறு[தொகு]

தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் திருவையாறில் உருவாக்கப்படது கலியாணியம்மாள் சத்திரம் ஆகும். அங்கு 1881ஆம் ஆண்டு வடமொழிப் பள்ளி துவக்கப்பட்டது. இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் வடமொழியும், தமிழும் கலந்த வித்வான் படிப்பை இங்கு 1910 இல் துவக்கியது. அதனால் வடமொழிப் பள்ளி வடமொழிக் கல்லூரியாக மாறியது. தமிழும் சமசுகிருதமும் கலந்த வித்துவான் (2அ, 2ஆ, 2இ) என மூன்றுவகையான பட்டங்கள் அளிக்கப்பட்டன. கல்லூரியில் உணவும் உறைவிடமும் இலவசமாக அளிக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் 1907இல் மாவட்ட நிர்வாகம் (மாவட்டக் கழகம்) உருவாக்கப்படபிறகு சத்திரமும் கல்லூரியும் அதன் நிர்வாகத்தின்கீழ் வந்தன.

1923இல் மாவட்டக் கழகத் தலைவராக நீதிக்கட்சித் தலைவர் ஏ. டி. பன்னீர் செல்வம் பொறுப்புக்கு வந்தார். அவரின் நிர்வாகத்தின்கீழ் கலியாணியம்மாள் சத்திரத்திரமும், கல்லூரியும் வந்தன. அக்கால கட்டத்தில் தனித்தமிழ் கற்பிக்கும் கல்லூரிகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் மாவட்டக் கழகத்தின் துணைத்தலைவராக இருந்த உமாமகேஸ்வரனார் திருவையாறு கல்லூரியில் தனித்தமிழ் படிப்பைத் துவக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து ஏ. டி. பன்னீர்செல்வம் தனித்தமிழ்ப் படிப்பை ஏற்படுத்தும் முயற்சியை எடுத்தார். அதை எதிர்த்து இது வடமொழிக் கல்லூரி இங்கு வடமொழி மட்டுமே கற்பிக்கவேண்டும். இதை மன்னர் செப்புப் பட்டையத்தில் வடமொழியில் எழுதிவைத்துள்ளார் என கல்லூரி நிர்வாகத்தினர் பட்டையத்தைக் காட்டினர். இவர்கள் கூற்றில் உண்மைத் தன்மையை அறிய விரும்பிய பன்னீர் செல்வம் அந்தப் பட்டையத்தை தன் பொறுப்பில் பெற்றுக் கொண்டார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் மடத்தின் தலைவரான ஞானியார் அடிகளிடம் பட்டையத்தைக் கொடுத்து அவர்கள் கூறியதுபோல பட்டையத்தில் உள்ளதா என படித்துக்கூற வேண்டினார். பட்டையத்தைப் படித்த ஞானியார் அடிகள் பட்டையத்தில் கல்வி வளர்ச்சிக்கு என்று பொதுவாகவே எழுதப்பட்டுள்ளது அவர்கள் கூறுவது தவறு தனித்தமிழ் படிப்பைத் துவக்க இதில் தடை இல்லை என்றார்.

இதன்பிறகு திருவையாறு வடமொழி கல்லூரிக்கு திருவையாறு அரசர் கல்லூரி என 1924 இல் பெயர் மாற்றப்பட்டது. அதன்பிறகு தனித்தமிழ் படிப்பானது வித்வான் (2ஈ) என்ற பெயரில் அளிக்கப்பட்டது. இந்தப் பட்டம் 1972இல் தமிழ் புலவர் என மாற்றம்பெற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. புலவர் செந்தலை ந. கவுதமன் (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 93–96.