விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா அறிஞர் திட்டம்
விக்கிமீடியா அறிஞர் திட்டம்
திட்டச் சுருக்கம்
ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கி நுட்பம் ஆகிய தளங்களில் முனைப்பாகப் பங்காற்றி வரும் 20 பங்களிப்பாளர்களை இனங்கண்டு, அவர்களுக்கு மாதம் 100 அமெரிக்க டாலர் சிறப்புநிதி வழங்குதல்.
இத்திட்டம், தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் சோதனை முறையில் ஒரு ஆண்டுக்கு மட்டும் முதலில் முன்னெக்கப்பட்டு, அதன் விளைவுகளை ஆராய்ந்து, இந்தியா, பிற உலக மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் செயற்படுத்தப் பரிந்துரைக்கப்படும்.
திட்ட அறிமுகம்
பொதுவாக, தமிழ் விக்கிப்பீடியா உட்பட உலக மொழி விக்கிமீடியா திட்டங்கள் அனைத்தும் தன்னார்வத் திட்டங்களே. இத்திட்டங்களின் வளர்ச்சி என்பது கூடிய அளவிலும், தொடர்ந்தும் தன்னார்வலர்களை ஈர்ப்பதிலும் தக்க வைப்பதிலுமே பொதிந்து உள்ளது. இவ்வாறு தன்னார்வலர்களை ஈர்க்கும் பொருட்டு பல சமூகங்களிலும் பொதுவான சில செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். அவையாவன:
- சிறப்புப் பரிசுப் போட்டிகள் (கட்டுரையாக்கம், புகைப்படங்களைப் பதிவேற்றுதல், விக்கிமூலம் உரை திருத்துதல் போன்றன)
- கல்வியில் விக்கிமீடியா (ஒரு நாள் பரப்புரைகள், சில நாள் பயிலரங்குகள், பாடத்திட்டத்தோடு இணைந்து ஆண்டு முழுவதுமான விக்கிப்பீடியா பங்களிப்புகள்)
- ஏற்கனவே உள்ள பயனர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் (CIS முன்னெடுக்கும் Train The Trainer போன்றவை)
- விக்கிமேனியா, விக்கி இந்தியா மாநாடு போன்ற கூடல்கள்.
இவ்வாறான பரப்புரை முயற்சிகள், புதிய பயனர்களை ஈர்ப்பதற்கான செயற்பாடுகள் 2010கள் வரை பெருமளவு தன்னார்வப் பணியாகவே இருந்து வந்தன. அதனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடைபெற்று வந்தன. அதற்குப் பிறகு விக்கிமீடியா அறக்கட்டளையின் வளர்ச்சி, இந்தியாவில் விக்கிமீடியா தொடர்பாக உருவான விக்கிமீடியா இந்தியா அமைப்பு, CIS-A2K அமைப்பு போன்றவை, அரசு உள்ளிட்ட நிறுவனக் கூட்டு முயற்சிகள் முதலியன, திட்டமிட்டும் ஆண்டு முழுவதும் நடக்கக்கூடிய பல்வேறு செயற்பாடுகளை இந்திய விக்கிமீடியா சமூகங்களில் அறிமுகப்படுத்தின.
இவ்வாறான முயற்சிகளால் ஒரு பக்கம் நன்மை இருந்தாலும், சில இடர்களும் உள்ளன:
- இணையத்தில் மட்டுமே உலகில் எங்கிருந்தும் விரும்பிய நேரம் பங்களிக்கத் தோதான தன்னார்வப் பணியான விக்கிப் பங்களிப்புகள், இணையம் தாண்டி நிகழ் உலகிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவை.
- கூட்டுறவு கொள்ளும் அரசு, கூகுள் போன்ற நிறுவனங்களின் அளவின் காரணமாக, சிறு அளவிலான திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போதல். அதன் ஒரு விளைவாக, பெருமளவு கட்டுரைகள் குறுகிய நேரத்தில் உருவாதல். அவை விக்கி நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றாமல் போவதால் கூடும் விக்கித் துப்புரவுச் சுமை.
- பன்னாட்டுத் திட்டமான தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களில் தமிழ்நாடு / இந்தியா அளவிலேயே நிகழ்சிகளை நடத்த வேண்டியிருக்கிற சட்டம், நடைமுறைச் சிக்கல்கள்.
- தொடர்ந்து இவ்வாறான திட்டங்களால் ஈடுபடுவதால் பயனர்களுக்கு நேரும் களைப்பு, பிற அழுத்தங்கள், குழப்பங்கள்.
விக்கிமீடியா அறக்கட்டளையும் சரி, CIS-A2K நிறுவனமும் சரி, வழமையான NGOக்கள் பிற துறைகளில் செயற்படுவது போலவே வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, மாநாடுகள், பயிற்சிகளை நடத்துதல். கடந்த 20 ஆண்டுகளாக இவற்றின் செயற்பாடுகளைக் கவனித்து வந்ததன் அடிப்படையில், இவர்கள் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஏற்கனவே செய்து வருகிற சில செயற்பாடுகளையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறார்களே ஒழிய, புதிதாகவோ பெரும் பயன் அளிக்கக் கூடியதாகவோ எதையும் முன்னெடுப்பதாகக் காணோம். ஏற்கனவே வெற்றி பெற்ற வேங்கைத் திட்டம் போன்ற சோதனைத் திட்டங்களைக் கூடப் பெரிய அளவில் விரிவுபடுத்தவில்லை. 2030ல் விக்கிமீடியா என்கிற செயல் இலக்குத் திட்டத்தை 2017லேயே முன்னெடுத்தார்கள். ஆனால், அதன் பயன்கள் 2025 பிறக்கப் போகிற இந்தக் காலக்கட்டத்திலும் கூட நமது விக்கிச்சமூகங்களை வந்து சேரவில்லை. இவை எல்லாம் ஒரு இயக்கம் பெரும் அமைப்பாகச் செயற்படும்போது நேரும் சிக்கல்கள்.
எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவிற்குப் பங்களிக்கும் பலரிடம் சரியான ஒரு கணினி கிடையாது. இவர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய ஆர்வம், பங்களிக்கும் திறன், ஈடுபாடு எல்லாமே உண்டு. ஆனால், அவர்கள் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு கணினியை வாங்கித் தர விக்கிமீடியா நிறுவனத்தால் முடியாது. ஏன் என்றால், அதை எப்படி அவர்கள் ஆண்டு வரவு செலவுக் கணக்கில் பதிவு செய்வது என்பதில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி இனி தேவைப்படாத பழைய கணினிகளை மட்டும் தருகிறார்கள். அதையும் ஏதாவது ஒரு விக்கி மாநாட்டுக்கு அவர்கள் வரும்போது நேரடியாகவே கொண்டு வந்து தர முடியும். இதுபோல் எத்தனைப் பேரால் கணினிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? கூகுள் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு வைக்கும்போது இத்தகைய சில தடைகளைத் தளர்த்த முடிகிறது. அதனால் தான் வேங்கைத் திட்டத்தின் கீழ் கணினிகளைப் பெற்று ஏற்கனவே பங்களித்தவர்களுக்கு வழங்க முடிந்தது.
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. விக்கிமீடியா இயக்கத்தால் மாநாடுகளுக்கும் பயணங்களுக்கும் நேரடியாக விக்கியில் தன்னார்வமாகப் பங்களிக்காத பிற முழு நேரப் பணியாளர்களுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியும், ஆனால், ஏற்கனவே பங்களித்து வரும் ஒரு பயனருக்குச் சிறிய அளவில் கூடத் தேவைப்படும் ஒன்றைச் செய்ய முடியாது ஒரு முரண் அல்லவா? இந்த நிதியாண்டில் மட்டும் விக்கிமீடியா அறக்கட்டளை 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை நல்கைகள் பொருட்டு ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தில் 5% அளவு கூடத் தெற்காசியப் பகுதியில் உள்ள விக்கிமீடியா சமூகங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் என்றால், நம்மால் பல சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் மேலை நாடுகளைப் போல் அமைப்பாக ஒன்று திரண்டு செயற்பட முடியவில்லை. ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், தெற்காசியாவில் கணிசமான உலக மக்கள் தொகை இருக்கிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிச் சமூகங்கள் பயனர் குழுக்களை உருவாக்கி, ஆண்டு முழுவதுமான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகையில், இந்த இடர்களைக் கருத்தில் கொண்டே தமிழ் விக்கிச் சமூகம் இதுவரை அவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னுடைய முழு ஆற்றலையும் கவனத்தையும் நேரடியாக விக்கித்திட்டங்களை இணையம் வழியாக மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. தொடர்ந்து விக்கிமீடியா அறக்கட்டளையிடமிருந்து நிதி, CIS-A2K உடன் கூட்டுறவு கொண்டு இயங்கும் பிற மொழி விக்கிச்சமூகங்களை ஒப்பிட நாம் குறைவான நிதி நல்கைகளையே பெற்று வந்திருக்கிறோம். நிதி பெற்றுக் கொண்டு செயற்பட்டு வரும் மற்ற சமூகங்களைக் காட்டிலும் நாம் கட்டுரைகளின் எண்ணிக்கை, தரம், விக்கிச்சமூகத்தின் செயற்பாடு, ஒற்றுமை, தலைமைத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறோம். அண்மையில், CIS-A2K, இந்திய மொழி விக்கிகளில் தர மேம்பாட்டிற்கு வழிகாட்ட, தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தைத் தலைமை ஏற்க அழைத்திருப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பைப் பதிவு செய்வற்கான ஒரு அருமையான சான்று.
இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியாவைப் பல ஆண்டுகளாகக் கவனித்தும் பங்காற்றியும் அதில் கிடைத்த அனுபவத்தை வைத்துத் தான், நான் விக்கிமீடியா அறக்கட்டளையில் முழு நேரப் பணியாற்றியபோது, கூகுள் கூட்டுறவுடன் கூடிய வேங்கைத் திட்டத்தை வடிவமைத்துச் செயற்படுத்த முடிந்தது.
ஒரு காட்டின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அந்தக் காட்டில் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள வேங்கைகள் (புலிகள்) பாதுகாக்கப்பட வேண்டும். வேங்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அந்தக் காட்டில் உள்ள மான்கள் போன்ற உயிரினங்கள், அவற்றுக்கான நீர் ஆதாரம், இவற்றைப் பாதுகாக்கக்கூடிய முழு காட்டையும் பாதுகாக்க வேண்டும்.
பொதுவாக, கட்டுரைகளின் உள்ளடக்க மேம்பாடு, விக்கிச் சமூக மேம்பாடு அனைத்துமே புதிய பங்களிப்பாளர்களைக் குறிவைத்து மட்டுமே நடக்கும்போது வேங்கைத் திட்டம் அதிலிருந்து மாறுபட்டு, ஏற்கனவே பங்காற்றி வரும் பயனர்களுக்குத் தேவையான கணினி, இணைய அணுக்க உதவிகளைச் செய்தது. ஒரு மாதமே நடந்த கட்டுரைப் போட்டியின் தன்மை ஏற்கனவே பங்காற்றி வரும் பயனர்கள் பங்களிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. அதனால் தான் அத்திட்டம் எவ்வித சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் இந்திய மொழி விக்கிகளில் ஆயிரக்கணக்கான தரமான கட்டுரைகளை உருவாக்கியது. தொடர்ந்து இரண்டாம் ஆண்டு உலகெங்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த வேங்கைத் திட்டத்திலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளையும் உள்ளடக்கியே “விக்கிமீடியா அறிஞர்” திட்டம் முன்மொழிப்படுகிறது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வரும் பல்வேறு உலக விக்கிப்பீடியாக்களில் 70%க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெறும் 1% முனைப்பான பயனர்களே உருவாக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த 1% பயனர்கள் என்போரும் என்றுமே நிலையாக உள்ள ஒரு சில பயனர்கள் அல்ல. ஒவ்வொரு சில வாரங்களுக்கும் இந்தப் பயனர்களின் திரள் மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, சிலர் தானே வருகிறார்கள். முனைப்பாகப் பங்களிக்கிறார்கள். பிறகு, சில காலம் கழித்துப் பங்களிப்புகளை நிறுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மீண்டும் பங்களிக்க வரலாம். அல்லது, வராமலும் போகலாம். அவர்களுடன் நாம் தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தாலொழிய, அவர்கள் ஏன் தங்கள் பங்களிப்புகளை நிறுத்திக் கொள்கிறார்கள், மீண்டும் பங்களிக்க வருவார்கள் என்பதும் தெரியாது.
புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க முனையும் அதே வேளை ஏற்கனவே நன்கு பங்களித்து வரும் பயனர்களைத் தக்க வைப்பதும் முக்கியம். 1% பயனர்களே 70% மேற்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள் என்பதையும், இந்த முனைப்பான பங்களிப்பாளர்களைத் தக்க வைப்பது, ஊக்குவிப்பது, அங்கீகரிப்பது, அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவது ஆகியன விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் விக்கிப்பீடியாவிலும் முதல் முன்னணி 100 பயனர்களே 70% கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழ் மொழி வளர்ச்சி, கட்டற்ற அறிவுப் பரவல் என்கிற உயரிய நோக்கத்துடன் பல ஆண்டு காலமாக உழைத்து வருதல், தன்னார்வப் பங்களிப்பு என்பதைக் கடந்து உண்மையில் விக்கிப்பீடியா என்னும் கலைக்களஞ்சியத்தின் தன்மையைக் கருத்திற் கொண்டு ஒரு அறிவுப் புல பணி என்பதைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. காலங்காலமாக, இவ்வாறு கலைக்களஞ்சியங்களை உருவாக்கும் பணியில் அரசுகளும் பல்கலைகளும் தனியார்களும் ஈடுபட்டிருந்தார்கள். இப்போது நாம் தன்னார்வமாகச் செய்கிறோம். இந்தப் பங்களிக்கும் பாங்கு மட்டும் தான் மாறி இருக்கிறதே ஒழிய, பணியின் தன்மை மாறவில்லை. எடுத்துக்காட்டுக்கு, மயூரநாதன் கட்டடக்கலை குறித்தும், கி. மூர்த்தி வேதியியல் குறித்தும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளனர். உலோ. செந்தமிழ்க் கோதை, புண்ணியாமீன் போன்றோர் தங்கள் ஓய்வுக் காலத்திலும் இறுதிக் காலத்திலும் கூட, தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து மறைந்து போனார்கள். இன்றும் பலர் தங்கள் பணி ஓய்வுக் காலத்தில் எந்தக் கைமாறும் எதிர்பாராமல் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகின்றனர்.
தமிழ் விக்கிப்பீடியா 2003 முதல் செயற்பட்டு வருகிறது. 2028 வந்தால் இது ஒரு கால் நூற்றாண்டு இயக்கம். இப்படிப் பல ஆயிரம் பேர் ஒன்று கூடி, ஒரு பொதுப்பணிக்காகத் தன்னார்வமாகப் பங்களிப்பது ஒரு வரலாற்றுப் பணி. அறிவுப் பணி. இங்குக் கொட்டுகிற உழைப்பை வேறு எங்குக் கொட்டியிருந்தாலும், இத்தகைய உழைப்பாளர்களுக்குத் தக்க சிறப்பும் விருதுகளும் குவிந்திருக்கும். இது காறும், மயூரநாதன் அவர்களுக்குக் கனடா இலக்கியத் தோட்டம் அளித்த விருதும், அதைத் தொடர்ந்து விகடன் அளித்த விருதும் மட்டுமே குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
விக்கிப்பீடியாவைப் பற்றிப் பரப்புரைகளுக்குச் செல்லும்போது எல்லாம், “இதனால் எங்களுக்கு என்ன பயன்?” என்கிற கேள்வியே பொதுவாக எழுகிறது. இதை நம் வீட்டில் குடும்பத்தாரும் கூடக் கேட்பதுண்டு. இது சமூகப் பணி, தன்னார்வப் பணி, இதைச் செய்வதால் நான் நிறைவாக உணர்கிறேன் என்று சொல்வதைத் தவிர நம்மிடம் நிறைவான பதில் ஏதும் இல்லை.
நன்கு வளர்ந்த மேலை நாடுகளில் கூட விக்கிப்பீடியா போன்ற தன்னார்வத் திட்டங்களில் 90% ஆண்களே பங்காற்றுகிறார்கள். ஒரே பின்னணி உடைய சமூகத்தில் கூட, பெண்களால் இத்தகைய பணிகளில் ஈடுபட முடியவில்லை என்பது ஒரு சமூகச் சிக்கல். இந்தியா போன்ற நாடுகளிலோ, 8 கோடி பேருக்கு மேல் மக்கள் தொகையுள்ள தமிழர்களில் ஒவ்வொரு மாதமும் வெறும் 250+ பேர் அளவிலேயே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறோம். இவர்களிலும் மிக முனைப்பாகப் பங்களிப்பவர்கள் என்று கணக்கிட்டால், 20 பேர் அளவில் தான் வருகிறார்கள். நாம் கட்டுரைப் போட்டி, புகைப்படப் போட்டி, பெரும் அளவிலான பயிற்சிப் பட்டறைகள் என்று முன்னெடுக்கும்போது ஒரு சில மாதங்கள் இந்த எண்ணிக்கை கூடலாம். ஆனால், தொடர்ந்து தக்க வைக்க முடிவதில்லை. 2005லும் தமிழ் விக்கிப்பீடியா உலக அளவில் 60ஆவது இடத்தில் தான் இருந்தது. இப்போதும் ஏறத்தாழ அதே இடத்தில் தான் இருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை வளர்ந்து வருகிறதே தவிர, முனைப்பாகப் பங்களிப்போர் எண்ணிக்கை கூடவில்லை. 20 பேர் முனைப்பாகப் பங்களிக்கிறார்கள் என்று எண்ணிக்கையும் விக்கிக்கு வெளியே பரப்புரை, கூட்டு முயற்சிகள் ஒருங்கிணைப்பு என்று வரும்போது ஓரிருவரே தலைமைத்துவப் பணிகளை ஏற்று நடத்தும் நிலை இருக்கிறது.
இந்திய மொழி விக்கிப்பீடியாக்களைப் பொருத்தவரை, நம்மால் போதுமான பங்களிப்பாளர்களை ஈர்க்க முடியவில்லை என்பதை ஒரு பொருளாதாரச் சிக்கலாகவுமே பார்க்கிறேன். ஒரு நல்ல வேலை கிடைத்தால் அதற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக் கொண்டு பணியாற்றக்கூடிய கோடிக்கணக்கான இளைஞர்கள் நம்மிடையே உள்ளனர். ஆனால், அவர்கள் நல்ல வேலைக்குச் சென்று வாழ்க்கையின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்த பிறகே தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களுக்குப் பங்களிப்பதைப் பற்றி எண்ணிப் பார்க்க முடியும். விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கிய பலர் பள்ளி, கல்லூரி செல்லும் இளமைக் காலத்திலும் திருமணதிற்கு முன்பும் இருப்பதைக் கவனிக்கலாம். குடும்பம், வேலையில் பொறுப்புகள் கூடும்போது பங்களிப்புகள் குறைவதைக் காணலாம். பணி ஓய்வு பெற்ற பலர் பங்களிப்புகளில் நாட்டம் செலுத்துவதையும் கவனிக்கலாம். Marslow’s hierarchyல் சுட்டிய படி தனிமனிதனின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பிறகு தான் சமூகத்திற்குப் பங்களிப்பது போன்ற தன்னலமற்ற பணிகளைப் பற்றி அவனால் சிந்திக்க முடியும். இந்தச் சட்டகத்திற்குள் சிக்காமல் சிலர் பங்களிக்கலாம். ஆனால், அது விதிவிலக்காகவே இருக்க முடியும்.
வணிக மேலாண்மை, விற்பனை நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு ஒன்று தெரியும். புதிதாக ஒரு வாடிக்கையாளரை அடையாளம் கண்டு விற்பதை விட, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரை நன்கு கவனித்து அவர்களுக்கு நல்ல சேவை அளிப்பதன் மூலம், அவர்களைத் தக்க வைத்து, அவர்களிடமிருந்து கூடுதலாக நிறுவனத்திற்கு வருவாயைப் பெற்றுக் கொள்ள முடியும். Life time value of a customer, Customer acquisition cost என்று சொல்லாடல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 8 கோடி பேர் உள்ள தமிழர் மக்கள் தொகையில் 20 பேர் தான் முனைப்பாகப் பங்களிப்பார்கள் என்றால், அடுத்து இதே போல் ஒருவரைக் கண்டுபிடிக்க நாம் 40 இலட்சம் பேரிடமாவது பரப்புரை செய்ய வேண்டும். இது நடைமுறையில் ஒத்து வருகிற காரியம் இல்லை. தமிழ்நாடு முழுக்க 1500 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தான் ஸ்ரீதர், மகாலிங்கம் இரத்னவேலு ஆகிய இரு பெறுமதி மிக்க பயனர்களை அடையாளம் காண முடிந்தது. இது அத்திட்டத்தால் கண்ட பலன். ஆனால், அத்திட்டத்தில் தரம் குறைந்த கட்டுரைகள் குவிந்தன என்பது இடர்.
40 இலட்சம் பேரைச் சென்றடைந்து தான் அடுத்து வரும் முனைப்பான பங்களிப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அதற்கு நம்மிடையே இருக்கும் ஒரே பரப்புரைக் கருவி தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தாம். இக்கட்டுரைகள் தாம் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 4 இலட்சம் பேரைச் சென்றடைந்து வருகிறது. சென்ற நவம்பர் 2024ல் மட்டும் 1.1 கோடி முறை தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்து, பயன்படுத்தி, தாமே பங்களிக்க முன்வருபவர்கள் தாம் தமிழ் விக்கிப்பீடியாவின் சொத்து. இவர்கள் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். தாமாக வந்தால் தான் உண்டு. அப்படி வருகிறவர்களை அனைத்து வகையிலும் ஆதரவு தந்து அரவணைத்து அவர்கள் நெடுநாள் பயனர்களாகத் தொடர்வதை உறுதி செய்வது நம் கடமை. இன்று முனைப்பாகப் பங்களித்துக் கொண்டிருக்கும் பலர் அப்படித் தாமாக வந்தவர்கள் தான். இசை, கலை, விளையாட்டு ஆர்வம் போல விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வமும் தாமாக வரக்கூடியதே. அப்படி இல்லாத ஆட்களுக்கு எவ்வளவு பயிற்சி அளித்தாலும், அந்தப் பயற்சித் திட்டத்தின் கட்டாயத்தில் அடிப்படையில் சில தற்காலிகப் பங்களிப்புகளைச் செய்வார்களே ஒழிய, நீடித்து நிலைக்க மாட்டார்கள்.
இது தொடர்பாக மூன்று உவமைகளை முன்வைக்க விரும்புகிறேன்:
- காணாமல் போகும் படையணிகள்: ஒரு போர் நடக்கிறது. ஒரு படையணித் தயார் செய்து போர் முனைக்கு அனுப்புகிறோம். அதில் பாதி பேர் தான் திரும்பி வருகிறார்கள். மீதி பேர் இறந்து விடுகிறார்கள். அல்லது, காயமுறுகிறார்கள். அவர்களிடம் போதுமான பாதுகாப்புக் கருவிகள், தளவாடங்கள் இல்லை. ஆனால், இதை எப்படித் தடுப்பது என்று கவலைப்படாமல் தொடர்ந்து அதே போலப் பல படையணிகளைப் பயிற்சி மட்டும் கொடுத்து, கையில் ஆயுதங்களோ பாதுகாப்புக் கவசமோயின்றி போர் முனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டே இருந்தால் அது அறிவுள்ள செயலாக இருக்குமா?
- பாலைவன ரோஜாக்கள்: ஒரு பாலைவனத்தில் அரிதாக ஒரு ரோஜா பூக்கிறது. அதுபோல இன்னும் பல ரோஜாக்களை வளர்ப்போம் என்று கருதி பாலைவனம் எங்கும் நீரூற்றினால் அதனால் புதிதாகப் பூக்கள் பூத்து விடுமா? அதே வேளை, ஏற்கனவே பூத்த ரோஜாவால் வெயில் தாங்க முடியவில்லை. அதற்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. நீ தானாகப் பூத்த காட்டுப் பூ தானே? உனக்கு எதற்குத் தண்ணீர் என்று கேட்டு அதைச் சாக விட முடியுமா? செடி முளைக்க வாய்ப்பேயில்லாத இடங்களில் நீரூற்றுவதை விட, ஏற்கனவே பூஞ்செடிகள் உள்ள தோட்டத்தில் நீரூற்றி அத்தோட்டத்தைப் பராமரிப்பதே அறிவுள்ள செயற்பாடாக இருக்கும். உலகெங்கும் சுற்றிப் பார்த்து, பல அரிய ரோஜா வகைகளைக் கொண்டு வந்து அத்தோட்டத்தில் சேர்த்தாலும் அந்த ரோஜாக்களுக்கும் உரிய பராமரிப்பு தேவை.
- காணாமல் போகும் விமானங்கள்: இரண்டாம் உலகப் போரின்போது பல போர் விமானங்கள் காணாமல் போகின்றன. திரும்பி வரும் விமானங்களில் பல குண்டடி பட்டுப் பல ஓட்டைகள் தென்படுகின்றன. எல்லோரும் அந்த ஓட்டைகளை அடைத்தால் விமானம் வலு பெறும் என்று எண்ணும்போது, ஒருவர் மட்டும், ஓட்டைகள் இருக்கும் இடங்களை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் பகுதிகளை மேலும் வலுப்படுத்துங்கள் என்கிறார். ஏன் என்றால், ஓட்டையுள்ள பகுதிகளில் அடி வாங்கினாலும் விமானத்தால் திரும்ப முடிகிறது. ஆனால், ஓட்டை இல்லாத பகுதிகளில் அடி வாங்கிய விமானங்கள் விழுந்து நொறுங்கியிருக்கும். நாம் நம் கண் முன்னே உள்ள ஓட்டைகளை மட்டுமே பார்த்து விட்டு, நொறுங்கிய விமானங்கள் எங்கே அடிவாங்கின என்பதை மறந்து விடுகிறோம் என்றார். அதுபோல, தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்கள் இல்லை, இல்லை என்று இல்லாமையை மட்டுமே பார்த்து, அந்த இல்லாமலையை நீக்குவதற்கான திட்டங்களை மட்டும் செய்து கொண்டிருக்காமல், ஏற்கனவே உள்ள பயனர்களைத் தக்க வைப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆகவே, கூகுள் திட்டமா, விக்கிமீடியா அறிஞர் திட்டமா அது என்ன என்பதை எல்லாம் தாண்டி, 20 ஆண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அடுத்தகட்ட வளர்ச்சியை நன்கு திட்டமிட்டு, உரையாடி முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த விக்கிமீடியா அறிஞர் திட்டம் என்னும் யோசனையை முன்வைக்கிறேனே தவிர, அது மட்டுமே வழி அன்று. வேறுபல புதிய யோசனைகளையும் திட்டங்களையும் பயனர்கள் முன்வைக்க வர வேண்டும். அது இதுவரை நாம் செயற்படுத்திய திட்டங்களைத் திறந்த மனதுடன் மதிப்பீடு செய்து, அந்தப் பாடங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாமும் தொடர்ந்து பயிற்சிகள், போட்டிகள், பரப்புரைகள் என்கிற சுழலில் மாட்டிக் கொள்வோம்.
விக்கிமீடியா ஒரு தன்னார்வத் திட்டம். ஆனால், தன்னார்வத்தால் மட்டுமே இத்திட்டத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்பது என்பது கட்டாயம் அன்று. தொழில்முறையாக விளம்பர நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் கூட, தாங்கள் பணம் பெற்றுக் கொண்டு தான் கட்டுரைக்குப் பங்களிக்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக் கட்டுரைகளைத் தொகுப்பதை ஆங்கில விக்கிப்பீடியா அனுமதிக்கிறது. இவ்வாறான வெளிப்படையான செயற்பாடுகள் இருக்கும்போது, கட்டுரையின் உண்மைத் தன்மையைச் சரி பார்க்க முடியும். தன்னார்வப் பங்களிப்பு போற்றத்தக்கது. ஆனால், அதற்கு அளவோ எதிர்பார்ப்புகளோ முன்வைக்க முடியாது.
தன்னார்வம் தவிர முழுநேரப் பணியாகவும், பகுதி நேரப் பணியாகவும் கட்டுரையாக்கம் அல்லாத பல பணிகளில் ஆர்வமும் தேவையும் உள்ளோர் பங்காற்றியே வருகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, Wiki Loves Butterfly என்று ஒரு திட்டம் ஏழு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒரு குறைந்தபட்சத் தொகையை மாத ஊதியமாக விண்ணப்பித்து நல்கை பெற்றுக் கொண்டிருக்கிறார். Wiki Loves Feminism and Folklore என்று ஒரு உலகளாவிய போட்டித் திட்டம். இத்திட்டத்தில் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் பகுதி நேர ஊதியத்தைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். விக்கிமீடியா போட்டிகளுக்கு நடுவர்களாக வருவோருக்கு இணையச் செலவுகளுக்கான பணம், அவர்கள் குழந்தைகளை child careல் விடுவதற்கான பணம் தரப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு Wikimedia Fellowships என்று ஒரு திட்டம் இருந்தது. அதில் நேரடியாகவும், வழக்கமாகவும் பங்களிப்பாளர்கள் செய்வதிலிருந்து மாறுபட்ட தன்னார்வப் பணிகளுக்கு நல்கை வழங்கப்பட்டது. ஆக, தன்னார்வப் பணிகளை வரவேற்கும் அதே வேளை, தகுந்த காரணங்களுக்காக நிதி உள்ளிட்ட பிற ஆதரவினைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக இயங்குவோரை ஏளனமாகப் பார்க்கவோ குறைத்து மதிப்பிடவோ தேவையில்லை. விக்கிமீடியா இயக்கம் ஒரு ecosystem என்றால் அதில் அனைத்து வகையினரின் பங்களிப்புகளையும் சேர்ந்தே இயக்கம் முன்னகர்ந்து செல்ல முடியும்.
கூகுள் முதன் முதலில் 2010 வாக்கில் விக்கிப்பீடியாவில் இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைப் பதிவேற்றியபோது, அவர்களுக்கு விக்கிப்பீடியாவின் நடைமுறைகளைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. அதனால், பெருமளவு தரம் குறைந்த கட்டுரைகளைக் குவித்தார்கள். அதனைச் சுட்டிக் காட்டிய பிறகு, தங்கள் தவறைத் திருத்திக் கொண்டார்கள். அந்தத் திட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள். இப்போது அவர்களைப் போன்று கூட்டுறவுக்கு வரும் நிறுவனங்கள், தங்களால் இவ்வளவு நிதி அளிக்க முடியும், இவ்வளவு கட்டுரைகள் வந்தால் நன்றாக இருக்கும் என்கிற தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுமே சொல்கிறார்கள். அந்த நிதியைப் பயன்படுத்தி எத்தகைய திட்டங்களை வகுத்துப் பயனுள்ள கட்டுரைகளை உருவாக்குவது என்னும் பொறுப்பும் சுதந்திரமும் நம்மிடமே உள்ளது.
ஆகவே, புதிதாகப் பயனர்களை ஈர்ப்பதுடன், ஏற்கனவே முனைப்பாகப் பணியாற்றி வரும் பயனர்களுக்கு மட்டும் அன்று, தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல ஆண்டுகள் தன்னார்வமாகப் பங்களித்து மறைந்து போனவர்களின் உழைப்பையும் போற்றி, அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் “விக்கிமீடியா அறிஞர்” என்னும் திட்டத்தை முன்னெடுக்க விரும்புகிறது.
திட்டம் நடைமுறைப்படுத்தல்
இத்திட்டத்தைப் பின்வருமாறு நடத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. பயனர் கருத்துகள் அடிப்படையில் தேவையான மாறுதல்களைச் செய்யலாம்.
- ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிமூலம், மீடியாவிக்கி நுட்பம் ஆகிய புலங்களில் முனைப்பாகப் பங்களித்து வரும் 20 பேரை விக்கிமீடியா அறிஞர்கள் என்னும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுத்தல்.
- இப்பயனர்கள், சனவரி 1, 2025க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பயனர் கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு முனைப்பான பங்களிப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்த வரை முனைப்பான பங்களிப்பு என்பதனை 2024ஆம் ஆண்டில் 100 கட்டுரைகள் என்று அளவிடலாம். விக்கிமூலம், விக்சனரி, மீடியாவிக்கி நுட்பப் பங்களிப்புகளுக்கான அளவீடுகள் என்ன என்பதை அந்தந்த திட்டப் பொறுப்பாளர்களே பரிந்துரைக்கலாம்.
இந்த 20 பேர் என்பது பல்வேறு பின்னணி உடையவர்களுக்கும் சென்று சேரும் வகையில் பின்வரும் முறையில் இடப் பங்கீடு அமையலாம்:
- வாழ்நாள் பங்களிப்பாளர்கள் / முன்னோடிகள் / வயதில் மிக மூத்தவர்கள் (உயிர் நீத்தவர்கள் உட்பட) - 4 பேர் (20% இடப் பங்கீடு). ஒரு காலத்தில் முனைப்பான பங்களிப்புகளைத் தந்து தற்போது பல்வேறு காரணங்களால் விலகி இருக்கும் முன்னோடிகளின் தமிழ் வளர்ச்சி, கட்டற்ற அறிவு வளர்ச்சிப் பணியைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில். இவர்களுள் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து உயிர்நீத்தவர்களும் உள்ளடங்குவர். அவர்களுக்கான நன்கொடையையும் பாராட்டுப் பத்திரத்தையும் / விருதையும் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துத் தந்து சிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு, உலோ. செந்தமிழ்க்கோதை, புண்ணியாமீன் குடும்பத்தினர்.
- பெண்கள் - 6 பேர் (30% இடப் பங்கீடு)
- விக்சனரி - 1 , விக்கிமூலம் - 2 , மீடியாவிக்கி - 1 ஆக மொத்தம் பிற விக்கித்திட்டங்களுக்கு மொத்தம் 4 இடங்கள் (20% இடப் பங்கீடு)
- பன்னாட்டு விக்கிப்பீடியர் - 4 இடங்கள் (20% இடப் பங்கீடு)
- புதிய பங்களிப்பாளர்கள் (கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் கணக்கு தொடங்கியோர்) - 4 பேர் (20% இடப் பங்கீடு)
இந்த இடப்பங்கீடுகள் யாவும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தும் இருக்கலாம். அதாவது, ஒரு புதிய, பெண் பங்களிப்பாளர் மலேசியாவிலிருந்து விக்கிமூலத்திற்குப் பங்களித்து இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தால், அவர்களை மேற்கண்ட அனைத்து வகைகளின் கீழும் கணக்கு வைக்கலாம்.
மேற்கண்ட இடப்பங்கீடு அடிப்படைகளில் போதிய பங்களிப்பாளர்களை இனங்காண முடியாவிட்டால், தேவையான தகுதிகளைப் பாதியாகக் குறைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு தொடங்கியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டு என்று தளர்த்தலாம். ஓராண்டில் 100 கட்டுரைகள் என்பதனை 50 கட்டுரைகள் என்று தளர்த்தலாம்.
இந்த இடப்பங்கீடுகள் என்பன குறைந்தபட்சம் இந்த எண்ணிக்கையிலாவது பங்கேற்புகள் இருப்பதை உறுதி செய்யவே. பத்து தகுதியுடைய பெண்களோ பன்னாட்டுப் பங்கேற்பாளர்களோ விண்ணப்பித்தால், 20 பேருக்குள் எத்தனைப் பேருக்கு வழங்க முடியுமோ அத்தனைப் பேருக்கும் வழங்கலாம்.
இந்த விக்கிமீடியா அறிஞர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?
விக்கி மாநாடுகளுக்கு scholarship வழங்கு ஒரு குழு செயற்படுவதைப் போலவே இந்த 20 பேரைத் தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட ஒரு குழு அமைக்கலாம். இம்மூவரும் நடப்பு ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தங்களுக்குத் தாங்களே திட்டப் பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் தாங்களே விண்ணப்பிக்கலாம். அல்லது, மற்றவர்கள் பரிந்துரைக்கலாம்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தில் குறிப்பட வேண்டியது என்ன?
- வாழ்நாள் பங்களிப்புக்காக விக்கிமீடியா அறிஞர் விருது பெறுவோரிடம் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.
- மற்றவர்கள், வரும் ஆண்டில் தத்தம் விக்கித் திட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு துறைகளைத் தேர்ந்தெடுத்து மேம்படுத்துவோம் என்று உறுதி அளிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, சட்டம், அரசியல், நுட்பம் போன்ற ஒரு துறையை எடுத்துக் கொண்டு அதில் காணப்படும் உள்ளடக்க இடைவெளிகளை நிரப்புவேன் என்று உறுதி அளிக்கலாம். இவர்கள் அனைவருமே ஏற்கனவே முனைப்போடு பங்களித்து வருகிறவர்கள் தாம் என்பதால் இவ்வளவு பங்களிப்புகளை நல்க வேண்டும் என்று இலக்குகளோ நிபந்தனைகளோ விதிக்கப்படாது. ஆயினும், அவர்கள் மேலும் முனைப்பாகச் செயற்படுவர் என்கிற நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
திட்டத்தில் இணைபவர்களுக்கு என்ன கிடைக்கும்?
- அவர்களின் பங்களிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் மாதம் 100 அமெரிக்க டாலர் (சுமார் இந்திய ரூபாய் 8500) அளிக்கப்படும். இத்திட்டம் 2025 முழுக்க அல்லது தொடர்ந்து 12 மாதங்களுக்குச் செயற்படுத்தப்படும்.
- ஆண்டின் இறுதியில் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வில் இதற்கு ஈடான தொகை முன்னோடி / வாழ்நாள் பங்களிப்பாளர்களுக்கு விருதுடன் கூடிய நன்றித்தொகையாக வழங்கப்படும்.
திட்டத்தில் பெறும் தொகையை எந்த எந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்?
இந்தப் பணம் நிபந்தனையின்றி வழங்கப்படுகிறது. பங்களிப்பாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது தங்கள் பங்களிப்பு தொடர்பான புதிய புத்தகங்களை வாங்குதல், ஆய்வுக்குரிய தளங்களுக்கான பயணங்கள், கணினி, செல்பேசி, புகைப்படக்கருவி உள்ளிட்ட கருவிகள், மென்பொருட்கள் வாங்குதல், இணையத்திற்கான செலவு என்று எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மதிப்பூதியம் போன்றதே. செலவுக் கணக்கு காட்டத் தேவையில்லை.
நிதி ஏன் அமெரிக்க டாலரில் குறிப்பிடப்படுகிறது?
விக்கிமீடியா அறக்கட்டளையின் நிதியாள்கை அமெரிக்க டாலரிலேயே இருக்கிறது. நாளை இத்திட்டம் வெற்றி பெற்று இந்தியா, பிற மொழிகளில் நடைமுறைப்படுத்தப்படுமானால் எல்லா இடங்களிலும் சீரான தொகையை அளிக்கவும் உலகெங்கும் எளிமையாகப் புரிந்து கொள்ளவும் தொகை அமெரிக்க டாலரில் குறிப்பிடப்படுகிறது.
இது கட்டணப் பங்களிப்பு இல்லையா?
இல்லை. விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை Paid editing இரு வகையாகக் கருத்தில் கொள்ளலாம்.
- மக்கள் தொடர்பு நிறுவனங்கள், பணம் பெற்றுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர் தொடர்பான கட்டுரைகளில் ஒரு பக்கச் சார்பாகத் தொகுப்புகளைச் செய்தல்.
- விக்கிப்பீடியாவில் தொகுப்பதையே முழு நேர வேலையாகக் கொண்டு செயற்படுதல்.
முதல் வகையில், கட்டுரையின் உண்மைத் தன்மை பாதிக்கப்படுகிறது என்பது தான் பிரச்சினையே தவிர, அவர் பணம் பெற்றுக் கொண்டு தொகுத்தார் என்பது அல்ல. பணம் பெற்றுக் கொண்டு தொகுப்பது தொடர்பாக உரிய வெளிப்படைத்தன்மை மிக்க அறிவிப்புகளைத் தந்து விட்டு, கட்டுரைகளைத் தொகுப்பதை விக்கிமீடியா அறக்கட்டளை தடை செய்யவில்லை.
இரண்டாவது வகையில், 2010 கூகுளின் இயந்திர மொழிபெயர்ப்புத் திட்டம் போன்றவற்றில் இச்சூழலை எதிர்கொண்டோம். இங்கு ஒருவரது முழுநேரப் பணியாக விக்கிப்பீடியாவைத் தொகுக்க முடிகிறபோது, அவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதைப் பல மடங்கு செய்ய முடிகிறது. ஒரு வேளை, அவரது தொகுப்புகள் தவறாக இருந்தால், அதை மற்ற தன்னார்வப் பயனர்கள் திருத்தி முடிப்பதற்குள் அவர் மலைபோல் பிழைகளையும் குப்பைகளையும் குவித்து விடுவார். விக்கிப்பீடியாவின் தரத்தைவிட, அவருக்குப் பணம் தரக்கூடிய முன்வைக்கக்கூடிய இலக்குகளைத் தான் முக்கியமாகக் கருதிச் செயற்படுவார். இது ஒரு தன்னார்வத் திட்டத்தின் செயல்திறனையும் தாங்குதிறனையும் கடுமையாகப் பாதிக்கக் கூடியது.
இந்த இரு வகைச் சிக்கல்களும் விக்கிமீடியா அறிஞர் திட்டத்தில் எழ வாய்ப்பில்லை. ஏன் என்றால், ஏற்கனவே விக்கி நடைமுறைகளை நன்கு அறிந்தவர்களே இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்குக் குறிப்பிட்ட இலக்குகள் என்று எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு வேங்கைத் திட்டம் போன்றது தான். அத்திட்டத்தில் கணினியாகவும், இணையச் செலவுக்காகக் குறிப்பிட்ட அளவு பணமாகவும் தரப்பட்டது. இங்கு, பொதுவாக நிதி நல்கப்படும். அவ்வளவு தான் வேறுபாடு.
இத்திட்டம் தன்னார்வ மனப்பான்மையைக் குலைக்காதா?
விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பதற்காக ஒரு கல்லூரிக்குச் செல்கிறோம். அங்கு இது போன்ற பயிற்சிகளுக்கு வரக்கூடிய பேச்சாளர்கள், பயிற்சியாளர்களுக்காக ஒரு அடையாள வெகுமதியாக, வந்து போகும் செலவுகளுக்காக ரூ. 1000 அல்லது ரூ. 1500 வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது அந்தப் பயிற்சியாளரின் விக்கி தன்னார்வ மனப்பான்மையைக் குலைத்து விடுமா? அதே போல் தான் இத்திட்டத்தின் கிடைக்கக்கூடிய நிதியையும் பார்க்கிறேன். 100 அமெரிக்க டாலர் என்பது விக்கிமீடியா அறக்கட்டளை அமைந்திருக்கிற சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒருவர் மக்டோனல்ட்ஸ் கடையில் வேலை பார்த்தால் ஒரு நாளில் சம்பாதிக்கக் கூடியது. இந்திய அரசு உடல் உழைப்பு வேலைகளுக்குக்குப் பரிந்துரைத்துள்ள மாதாந்திரக் குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவானது.
இவ்வாறு நிதி நல்குவதால் ஒருவரின் தன்னார்வ மனப்பான்மை குலைந்து விடக் கூடாது, விக்கிசமூகத்தில் போட்டி பொறாமைகள் எழக் கூடாது, நாளை உலக அளவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனில், எல்லோருக்கும் இதுபோல் நிதி அளித்திட போதுமான நிதி இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே என்பதாலேயே மிகக் குறைந்த அளவில் மாதம் 100 அமெரிக்க டாலர் என்கிற தொகையைப் பரிந்துரைக்கிறேன். இன்று தொழில்முறையாக மொழிபெயர்ப்பு, எழுத்தாக்க வேலைகளைப் பார்ப்பவர்கள் எவ்வளவு கட்டணம் விதிக்கிறார்கள் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஒரு சொல்லுக்கு ஒரு ரூபாய் என்று அளவிட்டால் கூட, நம் பங்களிப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் எழுதிக் குவிக்கும் கட்டுரைகளின் பணமதிப்பு அளவிட முடியாதது. என்னுடைய நன்னம்பிக்கை என்னவென்றால், இந்தத் தொகைக்ககாக யாரும் விக்கியில் எழுதுவதையே ஒரு முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டு எழுதப் போவதில்லை. அப்படியே எழுதினாலும், அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத் தான் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட முடியும். முதலில் இந்தத் திட்டமே நடைமுறைக்கு வருமா, அதற்குப் புரவலர்கள் கிடைப்பார்களா, கிடைத்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடருமா என்று தெரியாது.
இத்திட்டம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பங்களிக்கக் கூடியவர்களை ஈர்க்கும் அளவுக்குப் பெரிய தொகை கிடையாது. அதே வேளை, எதையும் எதிர்பார்காமல் எழுதி வருகிறவர்களுக்கு ஓரளவாவது பயன் தரக்கூடியது. குறிப்பாக, இல்லத்தரசிகள், மாணவர்கள் போன்றவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்கனவே பங்களிப்பாளர்களுக்குச் செலவழித்துத் தான் வருகிறது. அது நாம் ஒரு மாநாட்டுக்கோ பயிற்சிக்கோ போனால், விமானக் கட்டணமாக விமான நிறுவனத்திற்கும், தங்கும் விடுதி அறையின் கட்டணமாக விடுதி உரிமையாளருக்கும் போய்க் கொண்டிருக்கிறது. அது தவறில்லை. அவையெல்லாம் தேவையான செயற்பாடுகளே. அதே போல், விக்கிச் சமூகத்தை வளர்க்கும் பொருட்டு தேர்ந்தெடுத்த பங்களிப்பாளர்களுக்கு நேரடியாகவும் இத்தகைய மதிப்பூதியத்தை வழங்கினால் அது தேவைப்படுகிறவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். அவர்கள் தன்னலமற்ற உழைப்பை அங்கீகரிப்பதாகவும் இருக்கும்.
தமிழ் வளர்ச்சி நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல நூறு கட்டுரைகளை எழுதி விட்டு மாண்டு போகிறவர்களுக்கு நாம் வெறும் ஒரு வலைப்பதிவு இடுகையும் பேச்சுப் பக்கச் செய்தியும் தான் விட்டுச் செல்ல முடியுமா என்று நான் பல வேளை ஆதங்கப்பட்டிருக்கிறேன். இப்படியான ஒரு திட்டம் அவர்கள் வாழும் காலத்திலும் வாழ்ந்து முடித்தபிறகும் அவர்களுக்குரிய மரியாதையைப் பெற்றுத் தரும். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்களுக்குச் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்கிறபோது, தமிழ் அறிவுலகச் சூழலில் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரும் நம்மோடு இணைந்து பங்காற்ற முன்வரக்கூடும். குறைந்தபட்சம், இது போன்ற விருதுகளை வழங்கி விளம்பரப்படுத்துவதன் மூலம் அத்தகையோரின் கவனத்தை ஈர்க்க முடியும்.
இத்திட்டம் பயனர்களின் தன்னார்வ மனப்பான்மையைக் குலைக்காது என்கிற நம்பிக்கையுடனும் கவனத்துடனும் தான் இத்திட்டத்தை வடிவமைத்துப் பரிந்துரைக்கிறேன். அப்படி தன்னார்வ மனப்பான்மைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய கூறுகள் இருந்தால், அவற்றை எப்படிக் களையலாம் என்று உங்கள் ஆலோசனைகளையும் சேர்த்தே முன்வையுங்கள்.
ஏன் 20 பேர் மட்டும்? அது ஏன் 10 பேராகவோ 50 பேராகவோ இருக்கக் கூடாது?
ஒரு சோதனைத் திட்டம் தக்க விளைவுகளைத் தருகிறதா என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட அளவிலான பயனர்களையாவது சென்றடைய வேண்டும். ஆகவே 5, 10 என்று குறைவான எண்ணிக்கையில் செயற்படுத்த முடியாது. தகுதியுள்ள யாரும் தாங்கள் விடுபட்டுப் போய்விட்டதாகக் கருதக் கூடாது. இதனால் சமூகத்தில் குழப்பம், வருத்தம், போட்டி, பொறாமை வரக் கூடாது. அதற்கு ஏற்ப ஓரளவாவது தக்க எண்ணிக்கையில் திட்டம் இருக்க வேண்டும். அதே வேளை மிகப் பெரிய எண்ணிக்கையிலும் செயற்படுத்த முடியாது. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மாதமும் 250+ பங்களித்து வருகிறார்கள். இவர்களுள் ஒரு 20 பேர் தான் முனைப்பாகப் பங்களிக்கக் கூடியவர்கள் என்பதை அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்திருக்கிறோம். 20 பேருக்கு மாதம் 100 டாலர் என்கிற அளவில் 12 மாதங்களுக்குத் தருவது 20 * 100 * 12 = 24,000 அமெரிக்க டாலர் ஆகும். இது இந்திய ரூபாயில் 20 இலட்சத்து 32 ஆயிரம் அளவுக்கு வருகிறது. இதே சோதனைத் திட்டம் வெற்றி பெற்று நாளை வேறு விக்கிப்பீடியாக்களுக்குச் செல்லும்போது, அது சற்றே பெரிய விக்கிப்பீடியாவில் செய்வது என்றால், அங்கு மாதம் 1000+ பங்களிப்பாளர்கள் இருந்தால், அவர்களுக்கு 10% பேர் முனைப்பாகப் பங்களிப்பார்கள் என்று கருதி, 100 பேருக்கு இத்திட்டத்தைச் செயற்படுத்தலாம்.
இந்த நிதியை, யார் எப்படிக் கையாள்வார்கள்
இத்திட்டத்தை முதலில் விக்கிமீடியா அறக்கட்டளையிடம் முன்வைக்கலாம் என்று தான் எண்ணியிருந்தேன். இது தொடர்பாக, விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலரிடமும் சில விவரங்களை முன்பே கோரியிருந்தேன். இப்போது கூகுள் கூட்டுறவுக்கான வாய்ப்பு வந்துள்ளது. அதை ஏற்பது என்று பெரும்பான்மையாகப் பலரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். அப்படி கூகுள் கூட்டுறவை ஏற்பது, 5000 கட்டுரை இலக்கை ஏற்றுக் கொள்வது என்கிற அடிப்படையில், அந்த இலக்கை எட்டுவதற்கான தகுந்த திட்டங்களையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். எப்போதும் போல் கட்டுரைப் போட்டி, பயிற்சிப் பட்டறைகள், அதுவும் முடியாவிட்டால் ஏற்கனவே உள்ளவர்களே அவற்றை எழுதி முடிப்பது என்கிற திசையில் உரையாடல் நகர்ந்தபோது, அண்மைய கூகுள் மீட்டில் கலந்து கொண்ட பயனர்களிடையே இத்திட்டத்தை விளக்கிச் சொன்னேன். அவர்களும் ஆர்வத்துடன் திட்டத்தின் விவரங்களைக் கேட்டறிந்த முறையில், கூடுதல் விவரங்களை இங்கு ஆலமரத்தடியிலும் திட்டப்பக்கத்திலும் விரிவாக எழுதியுள்ளேன்.
இது கூகுள் கூட்டுறவுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் அன்று. கூகுள் கூட்டுறவு இல்லாவிட்டாலும் விக்கிமீடியா அறக்கட்டளை மூலமாகவோ வேறு வழிகளிலோ இத்திட்டத்தைச்செயற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவே எண்ணியுள்ளேன். இத்திட்டத்தின் தன்மை, புதுமை காரணமாக ஒரு வேளை விக்கிமீடியா அறக்கட்டளை தயங்கும் எனில், கூகுள் போன்ற புற நிறுவனங்களிடம் இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆதரவு உண்டா என்பதை அறியும் நோக்கில் கூகுள் கூட்டுறவோடு சேர்த்து இத்திட்டத்தை முன்மொழிகிறேன். ஒரு வேளை, இதனைத் தனித்திட்டமாகப் பொறுமையாகக் கலந்துரையாடிச் செயற்படுத்தலாம், கூகுள் கூட்டுறவோடுப் பிணைக்க வேண்டாம் என்றால், அதுவும் சாத்தியமே. ஆனால், அப்படிக்கருதும் சூழ்நிலையில் கூகுள் முன்வைத்துள்ள இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் என்ன என்பதையும் விரிவாகப் பேச வேண்டும்.
இந்தியாவில் எந்தத் திட்டமாக இருந்தாலும் இப்போது அதனை CIS போன்ற நிறுவனங்கள் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும். CIS பெரும்பாலும் நிதியை உரியவர்களுக்கு நேரடியாகவே அனுப்பி வைக்கிறது. CISன் கணக்குகளை ஒரு தொழில்முறை chartered accountant தணிக்கை செய்கிறார். விக்கிமீடியா அறக்கட்டளையும் சரி பார்க்கிறது. நல்கை பெற்று செயற்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் விக்கிசமூகப் பயனர்கள் அவற்றை நேரடியாகத் தங்கள் கணக்குகளிலோ கைகளிலோ பெற்றுச் செயற்படுத்துவது அரிது. நிகழ்வுகளில் அளிக்கப்படும் மதிப்பூதியத்தைக் கூட CIS கணக்கரே நேரடியாக வந்து கையெழுத்து பெற்றுக் கொண்டு தருவதைக் கவனித்து இருப்பீர்கள். எனவே, இது போன்ற திட்டங்களால் ஏதேனும் நிதிக் கையாடலில் குழப்பங்கள், முறைகேடுகள், அவதூறுகள் வருமோ என்ற கவலை தேவையற்றது.
இத்திட்டம் செயற்பாட்டுக்கு வரும் என்றால், CIS நேரடியாகப் பங்களிப்பாளர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பி வைக்கும். வெளிநாட்டுப் பயனர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவுகள், நட்புகளுக்குப் பணம் அனுப்பி வைக்குமாறு கோரி, பிறகு அவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது. அவர்கள் வாழும் நாட்டுக்கே எப்படிப் பணம் அனுப்பி வைப்பது என்பதை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் கூடி ஆலோசிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் எந்தத் திட்டமாக இருந்தாலும் அது பன்னாட்டுத் திட்டமாகவே இருக்க வேண்டும், யாரும் விட்டுப் போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கூகுள் மீட்டில் உரையாடியபோது இப்படி நமக்கு நாமே அறிஞர்கள் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டு திட்டங்களை வகுப்பது சரியாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்தது. நமக்குத் தேவைப்படும், பயன் அளிக்கும் திட்டங்களைச் செயற்படுத்த இங்கு வேறு யாருமில்லை என்றால், நாம் தான் நமக்கான திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டங்கள் நாளை பிற விக்கிச்சமூகங்களுக்கும் பயனளிக்கும் என்பதை எண்ணிப் பார்த்தாலே, நமக்கு எழக்கூடிய தயக்கத்தை உதறித்தள்ளலாம். இத்திட்டத்தை முன்மொழிகிறவன் என்கிற முறையில் என்றும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாட்டேன், பிறர் முன்மொழிந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
இந்த விவரங்களைக் கூகுள் ஆவணத்தில் எழுதிச் சரி பார்த்து இங்குப் படியிடுகிறேன். இதுவே 18 பக்கங்களுக்கு நீள்கிறது. இவ்வளவு பின்னணி விவரங்களைக் கோர்வையாக எழுத நேரம் கிடைக்காமையால் தான் கூகுள் மீட்டில் சுருக்கமாக விளக்கினேன். ஆனால், விக்கியில் தகுந்த நேரத்தில் முழு விவரங்களைத் தராவிட்டால் அது மேலும் பிழையான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்பதால் இந்த விவரங்களை இப்போது இங்கு இடுகிறேன். உங்களுக்குள்ள கேள்விகள், கருத்துகள், தயக்கங்களை முன்வையுங்கள். அவற்றையும் உரையாடி, திட்டத்தின் தன்மையை இறுதி செய்யலாம். அதற்குப் பிறகு முறையாக வாக்கெடுப்பு நடத்தி இத்திட்டத்தை இறுதி செய்யலாம். நன்றி. --இரவி (பேச்சு) 15:20, 5 திசம்பர் 2024 (UTC)
- விருப்பம் தங்களுடைய விரிவான விளக்கங்கள் பல கேள்விகளுக்கு பதிலாக உள்ளது. நல்ல திட்டம். கூகுள் உடன் சேர்ந்து முன்வைக்கப்படும் திட்டத்தில் இதனை முன்வைக்கலாம். அவர்கள் ஏற்காவிட்டால் பின்னர் குறைந்த தொகையில் தொடரலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:53, 7 திசம்பர் 2024 (UTC)
கருத்துக்கள்
[தொகு]விரிவான விளக்கத்திற்கு நன்றி. தன்னார்வமாகப் பங்களிக்காத முழு நேரப் பணியாளர்களுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்வது குறித்து நானும் எண்ணியுள்ளேன். நமது பத்தாவதாண்டு கொண்டாட்டத்தில் கூட அதிக செலவு எதற்கென்று கேட்டு உரையாடிய நினைவுள்ளது. அந்த நிதியைத் தன்னார்வலர்கள் மேம்பாட்டிற்களித்து ஊக்கப்படுத்துவது நல்லதே. மேலோட்டமாக நோக்கத்தை வரவேற்கிறேன். ஆனால் அதற்கு நீங்கள் முன்வைக்கும் பிற காரணிகள் கடந்த கால உரையாடலுடன் முரண்படுகிறது.
புதியவர்களை ஈர்ப்பதைவிட தொடர்பங்களிப்பாளர்களைத் தக்கவைக்க விரும்புவதாகக் குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனில் இதுவரை விக்கியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் இத்தகைய திட்டத்தால் தக்கவைத்திருப்போமா என யோசிக்கிறேன். கருத்து முரண்கள், அரசியல், மொழிநடை போன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றைத் தீர்க்க முனைவதே படையணிகள் காணாமல் போகாமல் தடுக்க எடுக்கும் முதல் முயற்சி என நினைக்கிறேன். உதாரணமாக தொடர் சந்திப்புகள் மூலம் சமூக ஒற்றுமையை வளர்த்தல், பயனர்கள் முன்னெடுக்கும் திட்டங்களை ஊக்கப்படுத்தல், இலகுவுவான விதிமுறைகள் அமைத்தல், மொழிநடை இறுக்கம் தளர்த்தல், விக்கிக்கு வெளியே நடப்பதை விக்கிக்குள்ளும் கொண்டு வருவதைத் தவிர்த்தல் போன்று சமூக வளர்ச்சி நோக்கி செய்யலாம். இது குறித்த பார்வையில்லாமல் நேரடியாகப் பணபலன்களைப் பேசும் போது நன்றாக இருந்த பல பயனர் சமூகங்கள், Ego, உள்ளரசியல், நிருவாகப் பணிச் சுமைகள், கிசுகிசு பேசி நாசமாகப் போனது (நீங்கள் குறிப்பிட்டது) போலத் தமிழ் விக்கிச் சமூகம் ஆகாது என்று எவ்வாறு உறுதி கொள்ளலாம் என்று விளக்க வேண்டுகிறேன்.
2023 சிங்கப்பூரில் நடைபெற்ற விக்கிமேனியாவில் தமிழ்ப் பயனர்களுக்கு நிதிநல்கை கொடுக்கவில்லை என்பது தெரியுமா? தகவலுழவன் மட்டும் தனது செலவில் கலந்துகொண்டு வந்தார். பல கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை சர்ச்சையால் பல பயனர்கள் முரண்கொண்டு ஆர்வத்தை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? தமிழ் விக்கிப்பீடியாவில் சுறுசுறுப்பான அதிகாரி அணுக்கமுள்ளவர்கள் குறைந்து போனது தெரியுமா? விக்சனரியில் தானியங்கி அணுக்கம் கிடைக்காமல் முடங்கிய திட்டங்களின் எண்ணிக்கை தெரியுமா? தமிழ் அறிவுலகச் சூழலில் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் போன்றோர் விக்கி மீது முன்வைக்கும் விமர்சனங்கள் தெரியுமா? முகந்தெரியாதவர்களால் பயனர்களின் மீது தனிப்பட்ட தாக்குதல் வேறு நடக்கிறது. இவையெல்லாம் தான் விமானத்தின் குண்டு துளைக்காத பாகங்களைச் சேதப்படுத்துகிறது. பசிப்பவருக்குப் பணம் கொடுப்பது தவறில்லை ஆனால் பணம்கொடுத்துவிட்டு இதுதான் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது தவறு.
ஒரு நாட்டில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது, மின்சாரம் தொடர்ந்து தடைபடுகிறது, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, போதைப்பொருள் கல்விநிலையங்களில் பெருகுகிறது போன்ற காரணங்களால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து வெளியூருக்குப் பிழைப்பிற்குச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசிலருக்கு மாதாமாதம் இரண்டாயிரம் பணம் கொடுத்து அரசின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் திட்டம் என்று அறிவிக்கிறார்கள். கோடி கோடியாக அமைச்சர்கள் பணத்தைச் செலவு செய்கிறார்கள் மாறாக மக்களுக்குக் கொடுக்கிறோம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும், வேறு ஊர்களுக்கு மக்கள் செல்லமாட்டார்கள், இது மக்களைத் தக்கவைக்கும் திட்டமென்றால் என்ன நினைப்போம்? எப்படியிருக்குமோ அது போல இந்த முன்மொழிவு உள்ளதோ என நினைக்கத்தோன்றுகிறது. நிதி உதவி செய்வதென்பது வேறு நோக்கில் நல்லதுதான் ஆனால் அது தொடர்பங்களிப்பாளர்களைத் தக்கவைக்கும் என்பது தான் சிக்கல். ஒரு சிலரைத் தக்கவைக்கலாம் ஆனால் அது நீண்ட காலநோக்கில் இடர்களை ஏற்படுத்தும். விக்கித்திட்டங்களுக்கு அடுத்தகட்டம் வளர்வதற்கு பங்களிப்பவர்களுக்கு நிதி நல்கை முக்கியமா புதிய வளங்களை உள்ளே கொண்டுவருவது முக்கியமா எனச் சிந்திக்க வேண்டுகிறேன்.
கல்லூரிகளில் பயிற்சியாளர்களுக்காக வழங்கப்படும் வெகுமதி என்பது விக்கிப் பங்களிப்பிற்கு வழங்கப்படுவதில்லை. விக்கியில் வெகுவாகப் பங்களிக்காத பலரும் விக்கி பயிற்றுநராக உள்ளதை நீங்களும் அறிந்திருக்கலாம். பிழையான உதாரணங்கள் நோக்கைத் திசை திருப்பும். விக்கி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தால், போட்டிக்கு நடுவராக இருத்தல், பயிற்சி வழங்குதல் போன்ற தன்னார்வப் பங்களிப்பல்லாதவற்றிற்கு மதிப்பூதியம் வழங்குவதன் நோக்கம் வேறு. விக்கியில் எழுதுவதற்கு வழங்கப்படும் நிதி என்பது வேறாகப் பார்க்க வேண்டும். நான் எதிர்க்கவில்லை பாதங்களை உரையாட விரும்புகிறேன். பங்களிப்பவர்களுக்கு நிதி உதவி என்றால் புதிய பங்களிப்பாளர்கள் நிதி உதவி பெறும் பொருட்டு நிச்சயம் இதற்காக வருவார்கள் வந்து ஏமாற்றமடைந்தால் விக்கிச் சமூக ஒழுங்கைப் பாதிக்காதா? இதற்கு முன்னர் தனிநபர் நிதிநல்கை பெற்றுப் பங்களித்தவர்களுள் எத்தனை நபர்கள் இன்றும் அத்தகைய உதவி இல்லாமல் பங்களிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு தனியார் நிதி உதவியில் விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி செய்யப்பட்டது, அதில் பங்காற்றிய பலர் நிதி உதவி நின்றவுடன் தன்னார்வப் பங்களிப்பை நிறுத்தியதைப் பார்க்கிறேன். பணம் என்று வரும் போது விமர்சனங்கள் எழுகின்றனர். நீங்கள் ஏற்கனவே நிர்வாக ஊழியராகப் பணிபுரிந்துள்ளதாலோ தனிப்பட்டகாரணத்தாலோ User15may கணக்கின் வழியாக உங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனம் போல எதிர்காலத்தில் யார் யாரோ யார்மீதோ வைக்கும் விமர்சனச் சர்ச்சையை எவ்வாறு தடுப்பது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
விரிவான பரிந்துரையை முன்வைக்க நேரமில்லை மார்ச்சுக்குப் பிறகு முன்னெடுக்கிறேன். ஆனால் இதே திட்டத்தை நிதி நல்கைக்குப் பதிலாகப் பொருளாகவோ சேவையாகவோ கொடுக்கும் போது இந்த சிக்கலைக் குறைக்கமுடியும் என நினைக்கிறேன். உதாரணம் பங்களிப்பாளர்களுக்கு கணினி வழங்குவது, ஒளிப்படக் கருவி வழங்குவது, இணையச் செலவை ஏற்பது, புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, விக்கிசார்ந்த ஆய்வுகள்/கட்டுரைகளுக்கு நிதிநல்கை கொடுப்பது, பயனர் விரும்பும் தனிப் பயிற்சிகளுக்கு நிதிநல்கை கொடுப்பது, விக்கிமேனியா போன்ற பயணங்களுக்கு நல்கை கொடுப்பது, மாவட்டந்தோறும் சந்திப்புகளை நடத்துவது என்று முன்னெடுக்க முடியுமா எனப் பார்க்கலாம். இதை முழு நேர ஊழியர் ஒருங்கிணைப்பது சாலப் பொருந்தும். கி.மூர்த்தி போன்ற பயனர்களின் உதவியைக் கோரலாம். கடந்த கால அனுபவத்தில் பணத்தைவிடச் சுயவிருப்பமே நெடிய பங்களிப்புகளை விக்கித்திட்டங்களுக்குச் செய்துள்ளதாக எண்ணுகிறேன். அந்த சுயவிருப்பம் பயனர்கள் புதிய திட்டங்களை முன்னெடுக்க வைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட பயனர்களின் கூட்டு முயற்சியே எல்லா வெற்றிகரமான திட்டங்களுக்கும் அடிப்படை. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கையில் அடிப்படையில் முன்னணியிலிருந்தாலும் கூட்டுமுயற்சிகள் அடிப்படையில் தெலுங்கும் மலையாளமும் முன்னணியில் உள்ளார்கள். இந்திய அளவில் மாநாட்டை நடத்தும் பயனர் பலம் அவர்களிடம் உள்ளது. தமிழ் விக்கிமீடியர்களுக்குப் பயனர் குழு உருவாக்குதல், விக்கிப்பீடியர்களுக்கு கல்வி நிலையங்களில் உள்ளகப் பயிற்சி, தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டு ஆய்வுப்பணி, பொதுச் சமூக வல்லுநர்களுடன் கலந்தாய்வு போன்ற புதிய முன்னெடுப்புகளைச் செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 19:50, 5 திசம்பர் 2024 (UTC)
- தங்கள் கருத்துகளுக்கு நன்றி. மற்ற பயனர்களின் கருத்துகளையும் கோரியிருக்கிறேன். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கியபிறகு என் மறுமொழியைப் பதிவு செய்கிறேன். --இரவி (பேச்சு) 13:03, 6 திசம்பர் 2024 (UTC)
புதிய பயனர்கள் 'அறிஞர்' என்ற அளவுக்குத் தகுதியானவர்களாகக் கூட இருக்க முடியும். இத்திட்டத்தில் 'அறிஞர்' என்ற நிலையை அடையும் கால அளவு இரண்டு ஆண்டுகள் அல்லது ஓர் ஆண்டு என்று இருக்கும் பட்சத்தில், அவர்களின் கலந்து கொள்ளும் ஆர்வம் குறைவாக இருக்கலாம். புதிய பயனர்களையும் குறைவான எண்ணிக்கையிலாவது ஊக்குவிக்கும் வகையில் ஒரு நபருக்காவது, அவரது கட்டுரையின் உயர் தரத்திற்கு ஏற்ப ஊக்கப்படுத்தும் நோக்கில் 'புதிய அறிமுக அறிஞர்' என்ற வகையில் சிறிய பரிசாவது கொடுக்க 'சிறப்புப் பரிசு' என்ற ஒன்றை உருவாக்க முடியுமா? என்று யோசிக்க வேண்டுகிறேன். தேர்ந்தெடுக்கப்படாத கட்டுரை எனில், அம்முறை அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை என்று அறிவித்ததும் விடலாம். நன்றி! பொதுஉதவி (பேச்சு) 05:40, 7 திசம்பர் 2024 (UTC)
முன்மொழிவை ஏற்கிறேன் உங்களது நல்ல நோக்கம் புரிகிறது ,எனது ஐயம் ஒன்று தான். இந்தத் திட்டத்தினால் தன்னார்வப் பணி என்பதே முழுமையாக இல்லாமல் போய்விடுமோ எனும் அச்சமே முதலில் ஏற்படுகிறது. காரணம் என்னுடன் பணிபுரிபவர்களே "எதுவும் வராமலா இவ்வளவு நாள் இதுல இருக்குறீங்க" என என் காதுபட பேசியது உண்டு. சுருக்கமாகக் கூறினால் பங்களித்தவர்களுக்குப் பணம் கிடைக்கும் என்பது தவறுதலாக பங்களிப்பதற்குப் பணம் என்று புரிந்துகொள்ளப்படுமோ எனும் ஐயம் ஏற்படுகிறது.
நான் ஆதரிப்பதற்கான காரணங்கள்:
- சென்னையில் நடந்த நிகழ்வில் செங்கைப் பொதுவன் ஐயாவினைக் கண்டேன். நடக்க, பேசவே சிரமப்படும் ஒருவர் விக்கி தொடர்பாக அவ்வளவு நேரம் உரையாடினார். உலோ. செந்தமிழ்க் கோதை ஐயா அவர்கள் இறக்கும் தருவாய் வரை தனது பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளார். //இவர்களுக்கு நன்கொடையையும் பாராட்டுப் பத்திரத்தையும் / விருதையும் அவர்கள் குடும்பத்தினரை அழைத்துத் தந்து சிறப்பிக்கலாம்// என்பது.
- பெண்களின் பக்ன்களிப்பினை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- //மாணவர்கள் போன்றவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்// -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:59, 7 திசம்பர் 2024 (UTC)
இத்திட்டத்தில் மாதந்திர வெகுமதி பெறும் பங்களிப்பாளர்களுக்கு நிதி கிடைப்பதும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதும் நல்லது என்றாலும் இத்திட்டத்தால் தமிழ் விக்கிகான இலாபம் எதுவும் இல்லை எனத் தோன்றுகிறது. நீச்சல்காரன் சொன்னது போல மடிக்கணிணியோ, இணையசேவைக் கட்டணமோ வழங்கலாம். தமிழ் விக்கியில் பங்களித்தால் மாதாந்திர வெகுமதி கிடைக்கும் எனும் நிலை உருவாகாமல் இருப்பதே நல்லது. தமிழ் விக்கியில் அங்கீகாரத்திற்காகவோ, வெகுமதிக்காகவோ எவரும் இதுவரைப் பங்களிக்கவில்லை. வருங்காலங்களில் தன்னார்வமாக தமிழ் விக்கியில் பங்களிக்க வருபவர்களுக்கு இத்திட்டம் ஒரு தேவையற்ற எதிர்பார்ப்பினை உருவாக்கலாம் என்பது என் ஐயம். —இரா. பாலாபேச்சு 03:18, 9 திசம்பர் 2024 (UTC)
- கருத்துகளைத் தெரிவித்த பயனர்கள் அனைவருக்கும் நன்றி. புதிய கூகுள் திட்டத்தின் நிதி வாய்ப்பு உள்ளிட்ட விவரங்கள் உறுதியான பின் விக்கிமீடியா அறிஞர் திட்டம் பற்றிய உரையாடல்களைத் தொடரலாமென நினைக்கிறேன். இது வீண் குழப்பங்களைத் தவிர்க்கும். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 11 திசம்பர் 2024 (UTC)