விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகஸ்ட் 4, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவன் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சிவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைவரையும் அழித்து தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான உருத்திரன் சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். சிவனை வழிபடும் வழக்கம் வரலாற்றுக்கு முற்பட்டதெனவும், சிந்து, மொகஞ்சதாரோ நாகரிகங்களில் சிவ வழிபாடு செய்தமைக்கான அடையளங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் தமிழர்களின் ஐந்திணைத் தெய்வங்களுள் ஒன்றாக இருந்த சேயோன் வழிபாடே சிவ வழிபாடாக மாறியது என்று கூறப்படுகிறது. மேலும்...


தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் ஒரு வகைக் குறிமுறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்த குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் ஊடகத்தைப் பொறுத்து அமையும். புகைக் குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள் மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன. 19ம் நூற்றாண்டில் மின்சாரம் கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை மின்சாரத் தந்தி மூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் வானொலிக் கண்டுபிடிப்பு வானொலித் தந்தியையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. இணையம் வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட மின்னஞ்சல்கள், குறுஞ் செய்திகள், உடனடி செய்திகள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. 1837இல் அமெரிக்காவில் ஓவியராக இருந்த சாமுவெல் மோர்சு கண்டுபிடிப்பாளராக முதன்முதலில் வெற்றிகரமாக மின்சாரப் பதிவு முறையில் தந்தியை அனுப்பினார். மேலும்...