உள்ளடக்கத்துக்குச் செல்

வளையப் புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளையப் புழு
புதைப்படிவ காலம்:Early Ordovician–Recent
Glycera sp.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
Superphylum:
கணம்:
{{{1}}}

Lamarck, 1809
வகுப்புக்களும் உப-வகுப்புக்களும்

Class Polychaeta (paraphyletic?)
Class Clitellata (see below)
   Oligochaeta – மண்புழுக்கள்.
   Branchiobdellida
   அட்டை – அட்டைகள்
Class Myzostomida
Class Archiannelida (polyphyletic) Class Echiura (previously a separate phylum)

துண்டங்களாலான உடலையுடைய முள்ளந்தண்டிலி விலங்குகளை உள்ளடக்கிய ஒரு விலங்குக் கணமே வளையப்புழு அல்லது அனெலிடா (phylum Annelida) ஆகும். மனிதர்களுக்கு மிகவும் பழக்கமான அனெலிட்டுக்களாக மண்புழு, அட்டை என்பன அமைகின்றன. இவ்விலங்குக் கணத்துக்குள் கிட்டத்தட்ட 17000 இனங்காணப்பட்ட இனங்கள் அடங்குகின்றன. பெரும்பாலான இனங்கள் கடலிலும், சில ஈரலிப்பான மண்ணிலும், நன்னீரிலும் வாழ்கின்றன. ஒரு சில இனங்கள் கடலினடியில் எரிமலைத் துவாரங்களுக்கருகில் ஐதரசன் சல்பைடு வாயு வெளியேறும் இடங்களிலும் வாழ்கின்றன. இவை உண்மையான உடற்குழி (coelom) உடைய, இருபக்கச் சமச்சீரான Triploblastica விலங்குகளாகும். இவற்றில் சிறப்பான இன்னுமொரு இயல்பு துண்டுபட்ட உடலமைப்பாகும். இவற்றில் அனேகமான இனங்கள் மூடிய குருதிச் சுற்றோட்டத்தையும் கொண்டுள்ளன. பழைய முறைப்படி வளையப்புழுக்களின் வாழிடம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் செயற்கையாக பொலிக்கீட்டா (கடல் வாழ் அனெலிட்டுக்கள்), ஒலிக்கோகீட்டா (மண்புழு போன்ற அனெலிட்டுக்கள்), ஹிருடீனியா (அட்டைகள் போன்றவை) என மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டன. எனினும் இது கூர்ப்பியல்புகளைக் காட்டாததால் இப்பாகுபாடு தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. முளையவியலின் அடிப்படையில் அனெலிட்டுக்கள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். பெரும்பாலான நில வாழ் அனெலிட்டுக்கள் மண்புழுக்களாகும். இவை சுற்றுச்சுருங்கல் அசைவு மூலம் அசைகின்றன. மண்புழுக்கள் இயற்கையியல் ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மனிதனுக்கு மிகவும் முக்கியமான விலங்குகளாகும். இவை மண்ணுக்குக் காற்றூட்டம் வழங்கி மண்ணை வளப்படுத்துவதன் மூலம் விவசாய அபிவிருத்திக்குப் பங்களிக்கின்றன. மண்புழுக்கள் மண்ணிலுள்ள உக்கலடையும் சேதனப் பொருட்களை உட்கொள்ளுகின்றன. அட்டைகள் விலங்குகளின் இரத்தத்தைக் குடித்து வாழும் ஒட்டுண்ணி விலங்குகளாகும். அனெலிட்டுக்கள் பொதுவாக உறுதியான அகவன்கூட்டையோ, புறவன்கூட்டையோ கொண்டிருப்பதில்லை. அவற்றின் உடற்குழியிலுள்ள இழையப் பாய்பொருளே நீரியல் வன்கூடாகத் தொழிற்படுகின்றது. இவ்வாறான மென்மையான உடலமைப்பைக் கொண்டிருப்பதாலும், வன்கூடு இல்லாமையாலும் இவற்றின் சுவட்டு எச்சங்களை இலகுவாகப் பெற முடியாதுள்ளது. கிடைக்கப்பெற்ற மிகப் பழமையான அனெலிட்டு எச்சம் கேம்பிரியன் காலத்துக்குரியது.

பிரித்தறிய உதவும் இயல்புகள்

[தொகு]

குறிப்பிட்ட ஒரு இயல்பை மட்டும் வைத்து மற்றைய முள்ளந்தண்டிலிகளிலிருந்து பிரித்தறிய முடியாது. சில இயல்புகளைக் கொண்டு கூட்டாக இவற்றைப் பிரித்தறிய முடியும். இவற்றின் உடல் பல துண்டங்களால் ஆக்கப்பட்டிருக்கும். இவற்றின் உடலில் மெய்யான உடற்குழி காணப்படும். ஒவ்வொரு துண்டத்திலும் உறுப்புக்கள் தனித்தனியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனினும் சமிபாட்டுத் தொகுதியும், குருதிச் சுற்றோட்டத் தொகுதியும், நரம்புத் தொகுதியும் துண்டங்கள் அனைத்துக்கும் பொதுவானதாகும். எனவே அனைத்து உறுப்புக்களும் காணப்பட்டாலும், துண்டங்களால் தனியாகச் செயற்பட முடியாது. இவற்றின் மேற்றோல் கலங்களால் ஆக்கப்படுவதில்லை. மேற்றோலுக்குக் கீழுள்ள கலங்களால் கொலாஜனால் ஆக்கப்பட்ட மேற்றோல் சுரக்கப்படுகின்றது. அனேகமான வளையப் புழுக்கள் மூடிய குருதிச்சுற்றோட்டத்தைக் கொண்டுள்ளன.

பிரித்தறிய உதவும் இயல்புகளின் சுருக்கம்
  வளைதசைப்புழுக்கள் தற்காலத்தில் வளைதசைப்புழுக்களில் உள்ளடக்கப்பட்டவை தொடர்புபட்ட கணங்கள் வளைதசைப்புழுக்கள் போன்றவை
Echiura[1] Sipuncula[2] Nemertea[3] கணுக்காலி[4] Onychophora[5]
வெளிப்புறத் துண்டமாதல் ஆம் இல்லை இல்லை சில இனங்களில் மாத்திரம் ஆம் இல்லை
உள்ளுறுப்புக்கள் துண்டங்களில் மீளல் ஆம் இல்லை இல்லை ஆம் ஆதியானவற்றில் மாத்திரம் ஆம்
உடற்குழிகளுக்கிடையில் பிரிதகடு அனேகமான இனங்களில் உண்டு இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
மேற்றோலை ஆக்கும் பொருள் கொலாஜன் கொலாஜன் கொலாஜன் காணப்படுவதில்லை α-கைட்டின் α-கைட்டின்
மேற்றோல் கழற்றல் பொதுவாக இல்லை இல்லை இல்லை இல்லை ஆம் ஆம்
உடற்குழி உடற்பாய்பொருளாலானது இரட்டை உடற்குழிகள் இரட்டை உடற்குழிகள் உறிஞ்சியில் மாத்திரம் உண்டு குருதிக்குழி குருதிக்குழி
சுற்றோட்டத் தொகுதி மூடியது திறந்தது திறந்தது மூடியது திறந்தது திறந்தது

உடலமைப்பியல்

[தொகு]
4     வளையத் தசை
5     நீள்பக்கத் தசை
6     Peritoneum
7     குடல்
8     இரத்தக் குழாய்
9     நரம்பு நாண்
10     உடற்குழி
வளையப்புழுவின் குறுக்குவெட்டு முகம்

உடற்துண்டங்கள்

[தொகு]

அனெலிட்டுக்கள் அனுபாத்துத் துண்டமிடலைக் காண்பிக்கின்றன. அதாவது அவை ஒரே வயதை உடையதும், ஒரே உட்புறக் கட்டமைப்பாலுமான துண்டங்களால் அகமும் புறமும் துண்டமிடப்பட்டுள்ளன. அனெலிட்டுக்களின் முன்னிரு துண்டங்களையும், பின் துண்டத்தையும் தவிர ஏனைய துண்டங்கள் ஒரே மாதிரியானவையாகும். துண்டங்களில் ஒவ்வொன்றிலும் சிலிர்முட்கள் காணப்படுகின்றன (அட்டைகளில் காணப்படுவதில்லை) .முன்னிரு துண்டங்களும் பின்றுண்டமும் வித்தியாசமாக வியத்தமடைவதுடன் சிறிது வேறுபட்ட அமைப்பைக் கொண்டுள்ளன. முன்றுண்டத்தில் மூளையும், புலனங்கங்களும் காணப்படும். இம்முன் துண்டம் protostomium எனப்படும். கடைசித்துண்டத்தில் குதம் காணப்படும். இக்கடைசித் துண்டம் pygidium எனப்படும். protostomiumஇற்கு அடுத்ததாக வாய்ப்பகுதியைக் கொண்டுள்ள peristomium துண்டம் காணப்படும். pygidium பகுதிக்குச் சிறிது தலைப்பக்கமாக அனெலிட்டுக்களின் வளர்ச்சிப் பகுதி காணப்படுகின்றது. வளர்ச்சியின் போது இவ்வளர்ச்சிப் பகுதியிலிருந்து தலைப் பகுதியை நோக்கித் துண்டங்கள் சேர்க்கப்படுகின்றன. அட்டைகளில் துண்டங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருக்கும்.

    Prostomium
    Peristomium
O வாய்
    வளர்ச்சிப்படை
    Pygidium
O குதம்
வளையப்புழுக்களின் உடற்றுண்டங்கள்

உடற்சுவர், சிலிர்முட்கள், பரபாதங்கள்

[தொகு]

வளையப் புழுக்களின் மேற்றோல் கொலாஜன் நுண்ணிழைகளால் ஆனது. இதனை மேற்றோலுக்குக் கீழுள்ள ஒரு கலத் தடிப்புடைய மேற்றோற்கலங்கள் சுரக்கின்றன. தோலிழையத்துக்குக் கீழுள்ள தசையிழையங்கள் இடைமுதலுருப் படையின் உடற்குழிக்கு மேற்பட்ட பகுதியை ஆக்கின்றன. பிரதானமாக பொலிக்கீட்டாக்களும் மேலும் பல அனெலிட்டுக்களும் சிலிர்முட்களைக் கொண்டுள்ளன. இவை அனெலிட்டுக்களுக்கு உராய்வை வழங்குவதால் அவற்றின் அசைவில் உதவுகின்றன. இச்சிலிர்முட்கள் பீட்டா-கைட்டினால் ஆக்கப்பட்டவையாகும். சில வளையப் புழுக்கள் அசைவில் உதவுவதற்காக பரபாதங்களையும் கொண்டுள்ளன. இவை மூட்டுகளற்ற அவயங்களாகும். இப்பரபாதங்களுள் உடலிலுள்ள வளையத் தசைகளிலிருந்து பெறப்பட்ட தசைகள் உள்ளன. இவற்றோடு இணைக்கப்பட்டுள்ள சிலிர்முட்கள் பரபாதங்களுக்கு ஓரளவு உறுதித்தன்மையை வழங்குகின்றன. பரபாதங்கள் அசைவிலும், உயர் மேற்பரப்பைக் கொண்டிருப்பதால் சுவாசத்திலும் உதவுகின்றன. பரபாதங்கள் பொலிக்கீட்டா வகுப்பு அங்கத்தவர்களிலேயே காணப்படுகின்றன.

உடற்குழியும் குருதிச்சுற்றோட்டமும்

[தொகு]

அனெலிட்டுக்கள் மெய்யான உடற்குழியைக் கொண்ட விலங்குகளாகும். அனெலிட்டின் ஒவ்வொரு துண்டத்திலும் ஒரு சோடி உடற்குழிகள் உள்ளன. உடற்குழியில் நுண்ணங்கித் தொற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சீலொமோசைட் கலங்கள் காணப்படுகின்றன. இரண்டு உடற்குழிகளிலுமுள்ள உடற்பாய் பொருளை உடலிலுள்ள வளையத்தசைகள் நிரப்பி, நீக்குவதால் சுற்றுச்சுருங்கல் அசைவை ஏற்படுத்துகின்றன. அதிகமாக அசையாத அனெலிட்டுக்களில் இவ்வாறு உடற்குழி இரண்டாக பிரிக்கப்பட்டிருத்தலை அவதானிக்க இயலாது. பல இனங்களில் மூடிய குருதிச்சுற்றோட்டம் காணப்படுகின்றது. குருதிக்குழியில் அல்லது உடற்குழியில் ஒக்சிசன் காவும் சிவப்பு நிற ஈமோகுளோபிளின் அல்லது பச்சை நிற குளோரோகுருரோனின் நிறத்துணிக்கைகள் கரைய நிலையில் காணப்படுகின்றன.

நரம்புத் தொகுதியும் புலனங்கங்களும்

[தொகு]

அனெலிட்டுக்களின் தொண்டையைச் சூழ ஒரு சோடி மூளைய நரம்புத் திரட்டுக்களையும் தொண்டைக் கீழ் நரம்புத் திரட்டையும் கொண்ட நரம்பு வளையம் காணப்படும். இந்நரம்பு வளையத்திலிருந்து உடற் துண்டங்களுக்கு இரட்டை நரம்பு நாண்கள் விநியோகிக்கப்படும். இந்நரம்பு நாண்கள் துண்ட ஒழுங்கில் சோடி நரம்புத் திரட்டுக்களைக் கொண்டிருக்கும். இந்நரம்புத் தொகுதியினாலேயே பல துண்டங்கள் ஒருங்கிசைவாக ஒரு உயிரியாக செயற்பட முடிகிறது. மண்ணினுள் புதையுண்டு வாழும் அங்கிகளில் கண்கள் விருத்தியடையவில்லை. சிலவற்றில் எளிய கண்கள் விருத்தியடைந்துள்ளன. சிலவற்றில் சிம்பி மற்றும் பிடர் அங்கம் எனும் இரசாயன வாங்கிகளும், சமநிலை பேண உதவும் நிலைச் சிறைப்பை (stato cyst) என்பனவும் விருத்தியடைந்துள்ளன.

வகைப்பாடு

[தொகு]
மண்புழுவொன்றின் கட்டுச்சேணம்

அனெலிட்டுக்கள் வழமையாக மூன்று பிரதானமான வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டன. தற்போது இரண்டு வகுப்புக்களாகவும் பல உப வகுப்புக்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

  • வகுப்பு பொலிக்கீட்டா (chaeta-சிலிர்முட்கள்): இவற்றின் ஒவ்வொரு துண்டத்திலும் பல சிலிர்முட்கள் காணப்படுகின்றன. இவற்றின் அனேகமான இனங்கள் பரபாதங்களையும் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட 10000 இனங்கள் இவ்வகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனேகமான இனங்கள் கடலில் வாழவதுடன், சொற்பமானவை நிலத்திலும், நன்னீரிலும் வாழ்கின்றன. ஒவ்வொரு உடற்துண்டத்திலும் சோடியான பரபாத முளை உண்டு. இவை உருமாற்ற விருத்தியைக் காட்டுகின்றன. புறக் கருக்கட்டலின் பின்னர் இவை சக்கரந்தாங்கிக் குடம்பிகளை உருவாக்குகின்றன. இவற்றில் உறிஞ்சிகளோ கட்டுச்சேணமோ காணப்படுவதில்லை. உ-ம்: Nereis, Arenicola, Sabella
  • வகுப்பு கிலிட்டலேட்டா (கட்டுச்சேணிகள்): இவை பரபாதங்களைக் கொண்டிராத வளையப்புழுக்களாகும். இவற்றில் விசேடமான இனப்பெருக்க உறுப்பாக கட்டுச்சேணம் காணப்படுகின்றது. இக்கட்டுச்சேணத்தில் கருக்கட்டப்பட்ட முட்டைகள் ஊட்டச்சத்து வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வகுப்பு பிரதானமாக இரு உப வகுப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன.
    • உபவகுப்பு ஒலிகோகீட்டா: மண்புழுக்களை உள்ளடக்கிய உபவகுப்பாகும். இவை அரை உக்கலடைந்த சேதன எச்சங்களை உணவாக்கிக் கொள்பவையாகும். இவற்றில் பரபாத முளைகள் இருப்பதில்லை. சிலிர் முட்கள் உடல் மேற்பரப்பில் தாங்கப்பட்டவையாக உள்ளன. இவற்றின் முட்டை நேர் விருத்திக்குரியது. அதாவது குடம்பிப் பருவம் தோற்றுவிக்கப்படுவதில்லை. இவற்றில் புழுக்கூடாகத் தொழிற்படும் கட்டுச்சேணம் விருத்தியடைந்துள்ளது.
    • உபவகுப்பு ஹிரூடீனியா: இவை அட்டைகளை உள்ளடக்கிய உப வகுப்பாகும். இவற்றின் இரு அந்தங்களிலும் உறிஞ்சிகள் காணப்படுகின்றன. இவற்றின் உடற்றுண்டங்களில் பரபாதங்கள், சிலிர்முட்கள் காணப்படுவதில்லை. கடல் வாழ் அட்டைகள் மீன்களின் குருதியை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாகும். ஈர மண்ணில் வாழுபவை மனிதர்களின், விலங்குகளின் குருதியை உறிஞ்சி வாழ்கின்றன. சில நன்னீர் இனங்கள் மாத்திரம் ஊனுண்ணிகளாக உள்ளன. இவையும் நேர் விருத்தியைக் காண்பிக்கின்றன. இவை தம் உறிஞ்சிகளின் உதவியால் தட அசைவைக் காண்பிக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Echiura and Sipuncula". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. pp. 490–495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Anderson, D.T., (1998). "The Annelida and their close relatives". In Anderson, D.T., (ed.). Invertebrate Zoology. Oxford University Press. pp. 183–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-551368-1.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  3. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Nemertea". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. pp. 271–282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Arthropoda". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. pp. 518–521. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Ruppert, E.E., Fox, R.S., and Barnes, R.D. (2004). "Onychophora and Tardigrada". Invertebrate Zoology (7 ed.). Brooks / Cole. pp. 505–510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையப்_புழு&oldid=3848916" இலிருந்து மீள்விக்கப்பட்டது