உள்ளடக்கத்துக்குச் செல்

கரோலஸ் லின்னேயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லின்னேயஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரோலஸ் லின்னேயஸ்
Carl Linnaeus
கரோலஸ் லின்னேயஸ் அலெக்சாண்டர் ரோசலின் 1775ல் வரைந்தது.
பிறப்பு(1707-05-23)மே 23, 1707 (see
article note:[1])
ரோஸ்ஹுல்ட், ஹெல்ம்ஹுல்ட், சுவீடன்
இறப்புசனவரி 10, 1778(1778-01-10) (அகவை 70)
உப்சாலா, சுவீடன்
வாழிடம்சுவீடன்
தேசியம்சுவீடன்
துறைவிலங்கியல், மருத்துவம், தாவரவியல்
கல்வி கற்ற இடங்கள்லுண்ட் பல்கலைக்கழகம்
உப்சாலா பல்கலைக்கழகம்
University of Harderwijk
அறியப்படுவதுஅறிவியல் வகைப்பாட்டு, உயிரியல் பெயர்முறை
கையொப்பம்
கரோலஸ் லின்னேயஸ் தனது தேசிய உடையில்.

கரோலசு இலின்னேயசு (Carl Linnaeus or Carolus Linnæus) (மே 23, 1707 - சனவரி 10, 1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு (scientific classification) முறைக்கும், பெயர்முறைக்கும் (nomenclature) அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் (ecology) முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தையென அழைக்கப்படுகிறார்.

கார்ல் வி. லின்னே என்று தன்கையொப்பத்தில் இட்டுள்ளார். கடை எழுத்தாகிய e மீது ஏகாரத் திரிபுக் குறியிட்டுக் காட்டியுள்ளார்.

பெயர்

[தொகு]

"கார்ல் லின்னேயஸ்", "கரோலஸ் லின்னேயஸ்", கார்ல் வொன் லின்னே, "கார்ல் லின்னே" போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார். இவரது உண்மையான சுவீடிய மொழிப் பெயர்பற்றி இப்பொழுதும் குழப்பம் நிலவுகிறது.(சுவிடியப் பெயர்-"Carl von Linné"; இலத்தீனியப்பெயர்-"Carolus Linnaeus" (1707–1778)) 'கார்லஸ் லின்னேயஸ்' என்பது லத்தீனாக்கம் செய்யப்பட்ட பெயராகும். இப்பெயரையே அவர், இலத்தீன் மொழியில் தான் எழுதிய அறிவியல் நூல்களில் பயன்படுத்தியுள்ளார்.

வரலாறு

[தொகு]

சுவீடனின் இராசல்ட்டு கிராமத்தில் கரோலஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார். இந்த இராசல்ட்டு(Råshult) என அழைக்கப்படும் பகுதி, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (Småland) மாகாணத்தில் உள்ள Älmhult Municipality இல் அமைந்துள்ளது.

இவரது தந்தை ஒரு பாதிரியார் ஆவார். தாவரவியலாளரும்கூட. தன் மகன் லின்னேயஸுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். கரோலஸ் லின்னேயஸ் இலத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றைத் தம் தந்தையிடமே கற்றுத் தேர்ந்தார். தந்தையைப் போன்று இவரும் தாவரங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். தம் வீட்டுத் தோட்டத்தில் பல்வேறுவகையான தாவரங்களை வளர்த்து வந்தார். புதிய தாவரங்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்தார். இவருடைய ஈடுபாட்டைக் கண்டு, லின்னேயஸ் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதை இவரது தந்தை உறுதி செய்தார்.[2]

லின்னேயஸ் தம் பத்தாவது வயதில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். தொடர்ந்து தாவர ஆராய்ச்சிகளையும் இவர் மேற்கொண்டு வந்தார். உடலியல் மற்றும் தாவரவியல் குறித்த கல்வியை முறையே லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பெற்றார். பூக்களில் உள்ள பாலுறுப்புக்கள் பற்றிய கட்டுரை ஒன்றால் கவரப்பட்ட இவர், அதே தலைப்பில் தானும் கட்டுரை ஒன்றை எழுதியதன் மூலம் தாவரவியற் பூங்காவான உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே தாவரவியல் துறை விரிவுரையாளராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு இவர் ஆற்றிய விரிவுரைகள் புகழ்மிக்கவை. தாவர வகைப்பாட்டியல் முறை குறித்து கட்டுரைகள் படைத்தார். இவ் ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்குப் போதுமான நிதியை, 1732 இல், அக்காலத்தில் அதிகம் அறியப்பட்டிராத லாப்லாந்து (Lapland) பற்றிய ஆய்வுப் பயணம் ஒன்றுக்கு உப்சாலா அறிவியல் அக்காடமி வழங்கி ஊக்கப்படுத்தியது.

இதற்காக, இவர் நெடும் பயணம் மேற்கொண்டார். தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாது புவியியல் பற்றியும் எண்ணற்ற குறிப்புகளை எழுதினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வகை தாவர இனங்களை அடையாளம் கண்டார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை லின்னேயஸ் எழுதினார். அதன்பின், தாவர, விலங்குகளுக்கு இரு பெயரீடு முறை குறித்து ஆராய்ந்தார். பிறகு, நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத் துறையிலும் பட்டம் பெற்றார்.[2]

வகைப்பாட்டியல்

[தொகு]

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

  1. திணை(இராச்சியம்) (kingdom)
  2. வகுப்பு (class)
  3. வரிசை (order)
  4. பேரினம் (genus)
  5. இனம் (species)

இவர் உயிரினங்களை பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரு திணைகளாகப் பகுத்தார். இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில், ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்குப் பல சொற்பெயரிடு முறை என்று பெயர். பலசொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.[3] இம்முறையை பின்பற்றி, சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளரும், மருத்துவருமான கரோலஸ் லின்னேயஸ் (17071778) பெயரிடல் முறையைப் பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.[4] அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இவர் உருவாக்கிய இருசொல் பெயரிடும் முறையானது எளிய முறையில் அமைந்திருந்தது. இம்முறையே நடப்பில் வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இக்காரணங்களால், கரோலஸ் லின்னேயஸ், வகைப்பாட்டியலின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.[5]

முக்கிய நூல்வெளியீடுகள்

[தொகு]

இயற்கையின் அமைப்பு(Systema Naturae)

[தொகு]

இயற்கையின் அமைப்பு முதல் பதிப்பு 1735 இல் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டது. இது ஒரு பன்னிரண்டு பக்க புத்தகமாகும். இது 1758 ல் அதன் 10 வது பதிப்பில் வெளிவந்த நேரத்தில், இது 4,400 விலங்கினங்கள் மற்றும் 7,700 தாவர இனங்கள் கொண்டதாக இருந்தது. இப்போது உயிரி அட்டவணை என அழைக்கப்படும் அமைப்பு, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாகின் சகோதரர்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றாலும், லின்னேயஸ் ஆராய்ச்சிக்கு பின்பே அறிவியல் சமூகத்தில் இது பரவலாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

உயிரினங்களின் வகைப்பாடு

[தொகு]

இனங்களின் வகைப்பாடு முதல் இரண்டு தொகுதி, 1753 ல் வெளியிடப்பட்டபின் அது முக்கியத்துவம் வாய்ந்த பெயரிடும் முறையின் தொடக்க புள்ளியாக உள்ளது.

இன வகைப்பாடு

[தொகு]

இன வகைப்பாடு, 1737 இல் வெளியிடப்பட்டது. இதன் 10 பதிப்புகளில் லின்னேயஸ் அவர்களால் 1754ல் வெளியிடப்பட்ட ஐந்தாவது பதிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. இதில் 24 வகைகளாகத் தாவர உலகம் பிரிக்கப்பட்டுள்ளது, தாவரங்களின் மறைக்கப்பட்ட இனப்பெருக்க பாகங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு(Philosophia Botanica)

[தொகு]

தாவரங்களின் கருத்தியல் வகைப்பாடு 1751ல் வெளியிடப்பட்டது. தாவர வகைப்பாடு மற்றும் பெயரிடும் முறைபற்றிய லின்னேயஸின் சிந்தனை சுருக்கத்தை, அவர் முன்பு 1736ல் தாவரங்களின் அடிப்படை வகைப்பாடு (Fundamenta Botanica) மற்றும் 1737ல் தாவரங்களின் தீவிர வகைப்பாடு (Critica Botanica) என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் கரோலஸ் லின்னேயஸ் பயணம் மேற்கொண்டு, நிறைய மாதிரிகளைச் சேகரித்ததுடன் அங்குள்ள அறிவியல் அறிஞர்கள் பலரை சந்தித்தார். பின்னர், சுவீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராகப் பணியாற்றினார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741 இல் பொறுப்பேற்று, பின் 1750 இல் அப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மறைவு

[தொகு]

சுவீடன் மன்னர், கரோலஸ் லின்னேயஸுக்கு 1761 இல் சர் பட்டம் வழங்கிப் பாராட்டினார். நவீன சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், தற்கால அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கரோலஸ் லின்னேயஸ் தம் 71-வது வயதில் (1778) மறைந்தார்.[2]

நினைவுச் சின்னங்கள்

[தொகு]

லின்னேயஸ் பிறந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய அஞ்சல் தலைகள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான சிலைகள் உள்ளன. 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் தாவரவியல் அல்லது விலங்கியலில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; Linnaea), நிலவு பள்ளம் (லின்னெ; Linné) மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; Linnaeite) ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.

இருசொல் பெயரிடுவதன் இன்றியமையாமை

[தொகு]

உயிரினங்களின் பெயர்களைப் பொதுப்பெயரிட்டு அழைத்து அறியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் பொதுப்பெயர்கள் இட்டு வழங்கும் முறைகளால் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குழப்பங்கள் நீடித்து வந்தன. இந்நடைமுறை உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகக் காணப்பட்டது. இத்தகைய குறைபாடுகளைக் களைவதற்காக உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது. இது உலகளவிலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோலஸ் லின்னேயஸ் உயிரினங்களுக்கு தற்போதும் நடைமுறையிலுள்ள இருசொற் பெயரீட்டு முறையை உருவாக்கினார்.[6] கரோலஸ் லின்னேயசின் இத்தகைய வகைப்பாட்டியல் முறை, உயிரினங்களுக்குப் பெயரிடவும், அவற்றை வகைப்படுத்திடவும், ஒப்பீடுகள் மேற்கொண்டு வேறுபாடுகளை அறிந்திடவும் பயன்படுகிறது.

இருசொல் பெயரிடும் முறையின் அடிப்படை விதிகள்

[தொகு]
  1. உயிரினங்களின் அறிவியல் பெயர் இலத்தின் மொழி அல்லது இலத்தின் மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  2. பேரினப் பெயரில் இடம்பெற்றிருக்கும் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தில் எழுதப்படுதல் இன்றியமையாதது.
  3. அதுபோல், சிற்றினப் பெயரின் முதல் எழுத்தைச் சிறிய எழுத்தில் எழுதப்படுதல் அவசியம்.
  4. ஓர் உயிரினத்தின் இருசொற் பெயர்களைப் பதிவிடும்போது சாய்வான எழுத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
  5. இப்பெயர்களைக் கையினால் எழுதும்போது அப்பெயர்களுக்கு அடியில் அடிக்கோடிட்டு எழுதப்பட வேண்டும்.[5]

சில இருசொல் பெயர்கள்

[தொகு]

தாவரவியல் பெயர்கள்

[தொகு]
  • அரிசி - ஒரைசா சட்டைவா
  • உருளைக்கிழங்கு - சொலானம் டியுபரோசம்
  • மா - மாஞ்சிபெரா இண்டிகா
  • செம்பருத்தி - ஹைபிஸ்கஸ் ரோசாசைனேன்சிஸ்
  • தக்காளி - லைகொபெர்சிகான் எஸ்குலன்டம்

விலங்கியல் பெயர்கள்

[தொகு]
  • புறா - கொலம்பா லிவியா
  • தவளை - ரானா ஹெக்ஸ்காடாக்டைலா
  • மனிதன் - ஹோமோ செப்பியன்ஸ்
  • வீட்டு ஈ - மஸ்கா டோமஸ்டிகா
  • பாம்பு - நாஜா நாஜா

இருசொல் பெயரிடும் முறையின் படிநிலைகள்

[தொகு]

உயிரின வகைப்பாட்டியலின் மிகப்பெரிய படிநிலை உலகம் ஆகும். இதன் கீழ் பல்வகைப்பட்ட துணை அலகுகள் பல்வேறு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என்பதாகும். இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் அனைத்துவித உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான பண்புகளின் அடிப்படையில் உயிரினங்கள் பல்வேறு சிறு அலகுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் உள்ள உயிரினங்கள் அவற்றிற்கு முந்தைய அலகு உயிரிங்களிளிருந்து உருவாகியிருக்கக் கூடும். இவ் வகைப்பாட்டியலின் கீழ்நிலை அலகு சிற்றினம் ஆகும்.[7]

தாவரவியலாளர் பெயர்ச்சுருக்கத் தரக்குறியீடு

[தொகு]

தாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, லின்னேயசு என்பவரை, L. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[8]

ஊடகங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. “Carl Linnaeus was born in Råshult, Småland, in 1707 on May 13th (Old Style) or 23rd according to our present calendar.” Citation: Linnaeus the child by Uppsala University. "Old Style" in the cited text refers to the Swedish calendar.
  2. 2.0 2.1 2.2 "கார்ல் லின்னேயஸ் 10". பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Johnson, A.T.; Smith, H.A. (1972), Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning, Buckenhill, Herefordshire: Landsmans Bookshop, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-900513-04-6 {{citation}}: Unknown parameter |lastauthoramp= ignored (help), p. v
  4. Polaszek, Andrew (2009), Systema naturae 250: the Linnaean ark, CRC Press, p. 189, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9501-2
  5. 5.0 5.1 அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம். தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை, சென்னை. 2016. pp. ப. 161.
  6. அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம். தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை,சென்னை. 2016. pp. ப. 161.
  7. அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி மூன்று. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-6. 2017. pp. ப. 4.
  8. IPNI,  லின்னேயசு {{citation}}: Invalid |mode=CS1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலஸ்_லின்னேயஸ்&oldid=3594367" இலிருந்து மீள்விக்கப்பட்டது