உள்ளடக்கத்துக்குச் செல்

யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு
தற்போதைய யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவின் அதிகாரபூர்வ இலச்சினை, 1992-ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது
தோற்றம்1955 (1992-இலிருந்து
தற்போதைய வடிவில்)
மண்டலம்ஐரோப்பா (யூஈஎஃப்ஏ)
அணிகளின் எண்ணிக்கை32 (குழு நிலை)
76 (அ) 77 (மொத்தம்)
தற்போதைய வாகையாளர்எசுப்பானியா ரியல் மாட்ரிட்
(11வது வாகையர் பட்டம்)
இணையதளம்Official website
2016-17 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு

யூ ஈ எஃப் ஏ வாகையர் கூட்டிணைவு (UEFA Champions League - /juːˈfə ˈæmpiənz ˈlɡ/), அல்லது சுருக்கமாக வாகையர் கூட்டிணைவு (Champions League), ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations-UEFA) 1955 முதல் ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தும் கால்பந்து போட்டியாகும்.[1] இது முன்னதாக ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை (European Champion Clubs' Cup) அல்லது சுருக்கமாக ஐரோப்பியக் கோப்பை (European Cup) என்று அறியப்பட்டது. இது உலகத்தில் மிகவும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றாகும், மேலும் ஐரோப்பிய கால்பந்தில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாகும். இதன் இறுதிப்போட்டி உலக அளவில் அதிகம் பேர் கண்டுரசிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், தோராயமாக 300 மில்லியன் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் இதனை உலக அளவில் பார்க்கின்றனர்..[2]

1992-க்கு முன்னர் இது ஐரோப்பிய வாகைக் கழகங்களின் கோப்பை என்று அழைக்கப்பட்டது, ஆனால் பலரால் பொதுவாக ஐரோப்பியக் கோப்பை என்றே குறிக்கப்பட்டது.[1] ஆரம்பகாலகட்டத்தில் ஒவ்வொரு நாடுகளின் கூட்டிணைவு வாகைக் கழகங்கள் மட்டுமே பங்குபெறுமாறும், 'தோற்றால் வெளியே' (Knockout) எனும்படியானதாகவும் இப்போட்டி இருந்தது.[1] 1990-களில் விரிவாக்கம் செய்ய ஆரம்பிக்கப்பட்டது, அதிக அணிகள் பங்குபெற அனுமதிக்கப்பட்டன மற்றும் தொடர்சுழல் முறை கட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] ஐரோப்பாவின் வலிமையான கூட்டிணைவுகளிலிருந்து நான்கு அணிகள் வரை பங்குபெற அனுமதிக்கப்படுகின்றன.[3] யூ ஈ எஃப் ஏ வாகையர் கூட்டிணைவினை யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுடன் (UEFA Europa League), முன்னதாக யூ ஈ எஃப் ஏ கோப்பை (UEFA Cup), குழப்பிக்கொள்ளப்படக்கூடாது.[4]

இந்தப் போட்டிகள் பல்வேறு படிநிலைகளைக் கொண்டுள்ளது.[5] ஜூலையின் மத்தியில் தொடங்கப்படும் இப்போட்டிக்கு, மூன்று தோற்றால் வெளியே (நாக்-அவுட்) தகுதிச்சுற்றுகள் மற்றும் ஒரு தொடர்போட்டி (ப்ளே-ஆப்) சுற்றைக் கொண்டவாறு தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] 22 தொடக்க அணிகளுடன், அத்தகைய தொடர்போட்டியில் எஞ்சியுள்ள 10 அணிகளும் இதன் குழுப்படிநிலையில் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவும் நான்கு அணிகளைக் கொண்டுள்ளவாறு எட்டு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.[5] ஒவ்வொரு குழுவிலும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு, அதாவது தோற்றால் வெளியே (Knockout stage) நிலைக்கு, முன்னேறும். இப்போட்டிகள் மே மாதத்தில் நடக்கும் இறுதிப் போட்டியுடன் நிறைவுறும்.[5] இக்கூட்டிணைவில் வாகை சூடும் அணி யூஈஎஃப்ஏ மேலான கோப்பை மற்றும் ஃபிஃபா கழக உலகக் கோப்பை ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.[6][7]

வாகையாளர் கூட்டிணைவுக் கோப்பையை 22 வேறுபட்ட கழகங்கள் வென்றுள்ளன. அதில் 12 கழகங்கள் இந்த கோப்பையை ஒருமுறைக்கு மேல் வென்றுள்ளன.[8] அதிகபட்சமாக ரியல் மாட்ரிட் ஒன்பது முறைகள் வென்றுள்ளது. இப்போட்டி தொடங்கப்பட்ட முதல் ஐந்து பருவங்களிலும் இவர்களே வெற்றிபெற்றனர்.[8] 1992-ல் போட்டியின் பெயரும் அமைப்புமுறையும் மாற்றியமைத்ததன் பின்னர் எந்த கழகத்தினாலும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறமுடியவில்லை. தற்போது செல்சீ வாகையர்களாக உள்ளனர்.[9]

வரலாறு

[தொகு]

ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசுகளின் கால்பந்து கழகங்களுக்கிடையேயான சவால் கோப்பையே ("The Challenge Cup") முதல் ஐரோப்பிய ரீதியிலான போட்டியாகும்.[10] அதனைப் பின்பற்றி 1927-இல் தொடங்கப்பட்ட மித்ரோபா கோப்பை ("The Mitropa Cup") மத்திய ஐரோப்பிய நாடுகளின் கழகங்களுக்கிடையே விளையாடப்பட்டது.[11] 1930-ல் சுவிட்சர்லாந்து கழகமான செர்வெட் எஃப்சி-யால் தொடங்கப்பட்டு ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட கூப் டெ நேசன்ஸ் (பிரெஞ்சு: நாடுகளின் கோப்பை), ஒவ்வொரு நாடுகளின் தேசிய வாகையர்களுக்கிடையே போட்டிகள் நடத்துவதன் முதல் முயற்சியாகும்.[12] ஜெனீவாவில் நடத்தப்பட்ட இப்போட்டி ஐரோப்பிய கண்டத்தின் பத்து தேசிய வாகையர்களுக்கிடையே நடத்தப்பட்டது. ஹங்கேரியின் உஜ்பெஸ்ட் எஃப்சி இப்போட்டியை வென்றது.[12] இலத்தீன் ஐரோப்பிய நாடுகள் 1949-இல் ஒன்றுசேர்ந்து இலத்தீன் கோப்பையை ஆரம்பித்தனர்.[13]

தென்னமெரிக்க வாகையரின் பெருவெற்றிப் போட்டிகளின் வெற்றிகளை தன்னுடைய பத்திரிகையாளர்களிடம் கேட்டறிந்த பின்னர், எல்'எக்கியூப்-பின் பதிப்பாசிரியரான கேப்ரியல் ஹானட்[14] ஐரோப்பியக் கண்ட அளவிலான போட்டித்தொடரை நடத்துவதற்கு கருத்துரு வைக்க ஆரம்பித்தார்.[15] 1950-களில் ஆங்கில பதிப்புலகம், தொடர்ச்சியான தோழமைப் போட்டி வெற்றிகளால் வொல்வராம்ப்டன் வான்டரர்சை உலகின் வாகையாளர்கள் என அறிவித்தது. இதன் பின்னர் கேப்ரியல் ஹானட் யூஈஎஃப்ஏ-வை தன் ஆலோசனைப்படியிலான கண்டம் முழுமைக்குமானதொரு போட்டியை ஏற்படுத்த சம்மதிக்கவைத்தார்.[1] அது 1955-இல் பாரீசில் ஐரோப்பிய வாகையர் கழகங்களின் கோப்பையாக வடிவம் பெற்றது.[1]

1955–91: தொடக்ககாலம்

[தொகு]

1955–56 இல் தோற்றால் வெளியே (நாக்-அவுட்) வடிவத்தைப் பயன்படுத்தி இந்தப் போட்டிகள் தொடங்கப்பட்டது. இதில் உள்ள அணிகள் இரண்டு போட்டிகளில் பங்கேற்பர். அப்போட்டிகளில் ஒன்று தாயக ஆடுகளத்திலும் மற்றொன்று எதிரணி ஆடுகளத்திலும் நடத்தப்படும். மேலும் இப்போட்டிகள் எல்லாவற்றிலும் அதிகமாக வெற்றிபெறுபவர்கள் போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். 1992 ஆம் ஆண்டு வரையிலும் தேசிய கூட்டிணைவு வாகையாளர்கள் மற்றும் நடப்பு ஐரோப்பியக் கோப்பை வெற்றியாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க அனுமதி உண்டு.

1992: மாற்றம்

[தொகு]

1992–93 பருவத்தில் போட்டியின் பெயர் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் குழுநிலையை அறிமுகப்படுத்தியது மற்றும் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது உள்ளிட்ட வடிவ மற்றும் அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன. தகுதிச் சுற்றுகள் மற்றும் குழு அமைப்பு முறை போன்றவற்றில் அதன்பிறகு ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1997–98 இல் 'யூஈஎஃப்ஏ'-வின் குணகத் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்து சில நாடுகளின் கூட்டிணைவு அட்டவணையில் முதலிடம் அல்லாத மேலான இடங்களைப் பெற்ற அணிகளை உள்ளடக்கி இப்போட்டி விரிவு படுத்தப்பட்டது. அப்போது தகுதி சுற்றுக்களின் அமைப்பு முறை மாற்றியமைக்கப்பட்டது. அதனால் குழுநிலைக்கு முன்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிச் சுற்றுகளை குறைவான 'யூஈஎஃப்ஏ' குணக தரவரிசை உள்ள நாடுகளின் தேசிய கூட்டிணைவு வாகையர்கள் பங்கேற்க வேண்டும். இதற்கிடையில் உயர்ந்த தர வரிசையில் உள்ள நாடுகளின் கூட்டிணைவிலிருந்து நேரடியாக தகுதிபெறாத அணியினர் பின்னர் வரும் சுற்றுகளில் பங்கேற்க வேண்டும். தற்போது உயர்ந்த தர வரிசை உடைய நாடுகளில் இருந்து அதிகபட்சமாக நான்கு கழகங்கள் வரை இப்போட்டிகளில் பங்கேற்கின்றன.

1960 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், வாகையர் கூட்டிணைவில் வெற்றிபெறுவோர் தென் அமெரிக்காவின் கோபா லிபெர்டாடோர்சின் வெற்றியாளருக்கு எதிராக (தற்போது செயலற்று இருக்கும்) கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கான (Intercontinental Cup) போட்டியில் ஆட தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதன் பிறகு போட்டி வடிவ அமைப்பு முறைகள் மாற்றப்பட்டு, ஒவ்வொரு கண்டத்தின் கழக வாகையர் கூட்டிணைவுகளின் வெற்றியாளர்களும் ஃபிபா-வால் ஏற்பாடு செய்யப்படும் பிபா கழக உலகக் கோப்பைக்கு (FIFA Club World Cup) தானாகவே தகுதி பெறுகின்றனர்.

வடிவம்

[தொகு]

தகுதி

[தொகு]
UEFA சாம்பியன்ஸ் லீக்கின் குழு நிலையை அடைந்த UEFA நாடுகளின் வரைபடம் [9] [10] [11]

2011-12 பருவத்தின்படி, 32 அணிகள் தொடர் சுழல்முறை குழுநிலையுடன் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு தொடங்குகிறது. இதற்கு முன்னர், வாகையர் கூட்டிணைவுக்கு நேரடியாக தகுதிபெறாத கால்பந்து கழகங்களுக்காக இரண்டு ஓடைகளில் தகுதிச் சுற்றுகள் நடக்கின்றன. அவ்விரண்டு ஓடைகளில், ஒன்று - ஒவ்வொரு தேசிய கூட்டிணைவுகளிலும் வாகையர் பட்டம் வென்ற அணிகள், இரண்டு - ஒவ்வொரு கூட்டிணைவுகளிலும் 2 முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் ஆகியவற்றுக்கானவையாகும்.

ஒவ்வொரு தேசிய சங்கத்திலிருந்தும் எத்தனை அணிகள் வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெறும் என்பது யூஈஎஃப்ஏ குணகங்கள் மூலமாக முடிவு செய்யப்படுகிறது. இந்த யூஈஎஃப்ஏ குணகங்கள், கடந்த ஐந்து பருவங்களில் ஒவ்வொரு யூஈஎஃப்ஏ அங்கத்து சங்களிலிருந்து தகுதிபெற்ற அணிகளின் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு செயல்திறனைப் பொறுத்து முடிவு செய்யப்படுகின்றன. ஒரு சங்கத்தின் குணகம் அதிகமாக இருப்பின் அச்சங்கத்திலிருந்து அதிக அணிகள் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதி பெறும், அவை குறைந்த அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடும்.

தற்போது போட்டிகளின் பல நிலைகளானது பின்வரும் வரிசையில் ஒதுக்கப்படுகிறது:

  • 1 முதல் 3 வரை தரவரிசைப் படுத்தப்பட்ட சங்கங்கள் நான்கு இடங்களைக் கொண்டுள்ளன,
  • 4 முதல் 6 வரை தரவரிசைப் படுத்தப்பட்ட சங்கங்கள் மூன்று இடங்களைக் கொண்டுள்ளன,
  • 7 முதல் 15 வரை தரவரிசைப் படுத்தப்பட்ட சங்கங்கள் இரண்டு இடங்களைக் கொண்டுள்ளன,
  • 16 அல்லது அதற்கும் குறைவாக தரவரிசைப் படுத்தப்பட்ட சங்கங்கள் ஒரு இடத்தைக் கொண்டுள்ளன.

இதில் குழுப் படிநிலைக்காக 22 அணிகள் தானாகவே தகுதி பெற்று விடுகிறது, அவைப் பின்வருமாறு:

  • 1 முதல் 3 வரை தரவரிசைப்படுத்தப்பட்ட சங்கங்களில் 1முதல் 3 வரை தரவரிசைப்படுத்தப்பட்ட அணிகள்
  • 4 முதல் 6 வரை தரவரிசைப்படுத்தப்பட்ட சங்கங்களில் 1வது-2வதாக தரவரிசைப்படுத்தப்பட்ட அணிகள்
  • 7 முதல் 12 வரை தரவரிசைப்படுத்தப்பட்ட சங்கங்களில் 1வதாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட அணி
  • கடந்த பருவ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர் அல்லது 13வதாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட சங்கத்தின் 1வதாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட அணி.

மீதமிருக்கும் 10 இடங்களில் 5 இடங்கள், மீதமுள்ள 38 (அ) 39 நாடுகளின் கூட்டிணைவு வாகையாளர்கள் நான்கு சுற்றுக்கள் கொண்ட தகுதிப் போட்டிகளில் வென்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது, இதில் யூஈஎஃப்ஏ குணகம் அதிகமாக உள்ள நாடுகளிலிருந்து பங்குபெறும் அணிகளுக்கு சில சுற்றுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்றுமுள்ள 5 இடங்கள், யூஈஎஃப்ஏ குணகத்தின்படி 1 முதல் 15 வரை வரிசைப்படுத்தப்பட்ட நாடுகளின் கூட்டிணைவுகளில் 2 முதல் 4 இடங்களுக்குள் முடித்த அணியினருக்கு இரண்டு சுற்று தகுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

விளையாடுதல் சம்பந்தமான கட்டளைவிதிகளைத் தவிர்த்து ஒவ்வொரு கழகமும் அதனதன் தேசிய சங்கங்களிலிருந்து பெறப்பட்ட யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவில் பங்கேற்பதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கு ஒவ்வொரு கால்பந்து கழகமும் அதனதன் ஆடுகள, உள்கட்டமைப்பு, நிதி நிர்வாக தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

போட்டித் தொடர்

[தொகு]

போட்டித் தொடரானது 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்ட 32 அணிகளுடன் தொடங்கப்படுகிறது. குழுநிலைக்கான குலுக்கல் செய்யப்படும்போது வித்துமுறை பயன்படுத்தப்படுகிறது. குழுநிலையில் ஒரே சங்கத்தைச் சேர்ந்த அணிகள் ஒரே குழுவுக்குள் சேர்க்கப்படமாட்டாது. தொடர் சுழல்முறையில் ஒவ்வொரு அணியும் தனது குழுவிலுள்ள மற்ற அணிகளுடன் தாயக மற்றும் எதிரணி ஆடுகளங்களில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதலாவது மற்றும் இரண்டாவதாக தேர்வு பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். மூன்றாவதாக வரும் அணி யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவில் பங்குபெறும்.

அடுத்த நிலையில், 16 அணிகள் சுற்று, ஒரு குழுவில் முதலிடம் பிடித்த அணி மற்றொரு குழுவில் இரண்டாமிடம் பிடித்த அணியோடு மோதும். இச்சுற்றிலும் ஒரே சங்கத்தைச் சேர்ந்த இரு அணிகள் மோதவிடப்படமாட்டாது. அதற்கடுத்த சுற்றுகள் சமவாய்ப்பு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவற்றில் முந்தைய சுற்றுக்களில் இருந்ததுபோல ஒரே சங்க அணிகள் என்ற கட்டுப்பாடெல்லாம் கிடையாது. யாரும் யாருடனும் மோதலாம்.

போட்டித் தொடரில் எதிரணி ஆடுகள கோல்கள் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது, இரு அணிகளுக்கிடையேயான போட்டிகளில் இரு அணிகளின் மொத்த கோல்கள் எண்ணிக்கை சமமாக இருக்கும் பட்சத்தில் எந்த அணி எதிரணி ஆடுகளத்தில் அதிக கோல்கள் அடித்திருக்கிறதோ அவ்வணி வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும்.[16]

போட்டித் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் இலையுதிர் காலத்தில் நடத்தப்படும். குளிர்கால இடைவேளைக்குப் பிறகு 'தோற்றால் வெளியே' (நாக்-அவுட்) நிலை தொடங்கும். இறுதி ஆட்டத்தின் விதி விலக்குடன் இந்த 'தோற்றால் வெளியே' (நாக்-அவுட்) போட்டிகள் இரண்டு பகுதிகளாக ஆடப்படும். அதாவது ஒவ்வொரு அணியும் தாயக ஆடுகளத்தில் ஒரு ஆட்டமும் எதிரணி ஆடுகளத்தில் ஒரு ஆட்டமும் ஆடவேண்டும். பொதுவாக மே மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களில் இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது.

நடுவர்கள்

[தொகு]

தரவரிசை

[தொகு]

யூஈஎஃப்ஏ நடுவர்களின் தொகுதியானது அனுபவத்தின் அடிப்படையில் ஐந்து நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சு, யெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் நடுவர்களும் 4-வது நிலையில் ஆரம்பத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழமையாக உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை நடுவண் செய்வதில் சிறப்பாக இருப்பதால் நேரடியாக 3-வது நிலையில் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு போட்டியின் பிறகும் நடுவர்களின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு பருவத்தில் அதிகபட்சமாக இரண்டு முறை ஒரு நடுவரின் தர நிலை சீராய்வு செய்யப்பட்டு நிலை மாற்றம் செய்யப்படலாம். மேலும் ஒரு நடுவர் 3-வது தரநிலையிலிருந்து நேரடியாக உன்னத தரநிலைக்கு மாற்றம் செய்யப்படமுடியாது.[17]

நியமனம்

[தொகு]

யூஈஎஃப்ஏ நடுவர் தொகுதியோடு, யூஈஎஃப்ஏ நடுவர் செயற்குழுவும் இணைந்து போட்டிகளுக்கு நடுவர்களை நியமிக்கும். முந்தைய போட்டிகளில் நடுவர்கள் காண்பித்த செயல்திறன், அதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் உடல்தகுதியைப் பொறுத்தே நடுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒருதலைசார்பு முடிவுகளைக் குறைக்க யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவில் நடுவர்களின் தாய்நாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, ஒரு நடுவர் தனது நாட்டைச் சேர்ந்த கூட்டிணைவிலிருக்கும் கால்பந்து கழகங்கள் பங்கேற்கும் போட்டிகளில் நடுவண் செய்யமுடியாது. நடுவர்கள் நியமனத்தின்போது, யூஈஎஃப்ஏ நடுவர் தொகுதியானது நடுவர்களை தேர்ந்தெடுத்து யூஈஎஃப்ஏ நடுவர் செயற்குழுவுக்கு பரிந்துரை செய்யும். போட்டிகளுக்கான நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை நடுவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன, இது நடுவர் மீதான ரசிகர்களின் தாக்கத்தைக் குறைக்கவும் வேறுவகையில் நடுவர்கள் பாதிப்படைவதையும் குறைக்க உதவுகிறது.[17]

வரம்புகள்

[தொகு]

1990-லிருந்து யூஈஎஃப்ஏ அனைத்துலக நடுவரின் வயது 45-ஐத் தாண்டியிருக்கக் கூடாதென வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 45 வயதுக்குப் பிறகு, ஒரு நடுவர் அந்த பருவத்தின் இறுதியில் ஓய்வு பெற்றுவிட வேண்டும். நடுவர்களின் உடல்தகுதி உன்னத நிலையில் இருப்பதற்காகவே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம், யூஈஎஃப்ஏ நடுவர்கள் போட்டிகளுக்கு முன்னர் தங்களது உடல்தகுதியை நிரூபித்தால்தான் அனைத்துலக அளவில் போட்டிகளை நடத்த பரிசீலிக்கப்படுவார்கள்.[17]

பரிசுத் தொகை

[தொகு]

2010-11 பருவ மதிப்பீட்டின்படி, UEFA சாம்பியன்ஸ் லீக்கிற்காக தகுதி பெறும் ஒவ்வொரு அணிக்கும் €2.1 மில்லியனை UEFA பரிசாக வழங்குகிறது. குழு நிலையின் பங்கேற்பதற்காக கூடுதலாக €3.9 மில்லியனையும் வழங்கிறது. குழு நிலையில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் தலா €550,000 வழங்கப்படுகிறது. குழு நிலையில் ஒவ்வொரு வெற்றிக்கும் €800,000-ம் ஒவ்வொரு சமநிலை முடிவுக்கும் €400,000-ம் வழங்கப்படுகிறது. 16 அணிகள் சுற்றுக்குத் தகுதிபெறும் ஒவ்வொரு அணிக்கும் €3 மில்லியன் வழங்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு காலிறுதி அணிகளுக்கும் €3.3 மில்லியனை UEFA வழங்குகிறது. ஒவ்வொரு அரையிறுதி-அணிகளுக்காகவும் €4.2 மில்லியனை வழங்குகிறது. மேலும் இறுதிப் போட்டியில் தோற்ற அணிக்கு €5.6 மில்லியன் தொகையும் வெற்றி பெற்றவர்களுக்கு €9 மில்லியன் பரிசுத் தொகையும் வழங்குகிறது.[18]

  • தொடர்சுற்று(Playoffs): €2,100,000
  • குழு நிலை: €3,900,000
  • குழு நிலையில் ஒவ்வொரு போட்டிக்கும்: €550,000
  • குழு போட்டி வெற்றிக்கு: €800,000
  • குழு போட்டி சமநிலைக்கு: €400,000
  • 16 அணிகள் சுற்று(Round of 16): €3,000,000
  • காலிறுதி: €3,300,000
  • அரையிறுதி: €4,200,000
  • இறுதியாட்ட தோல்வியாளருக்கு: €5,600,000
  • இறுதியாட்ட வெற்றியாளருக்கு: €9,000,000

யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பெரும் பகுதி "சந்தை நிதி"யாக் கிடைக்கிறது. ஒவ்வொரு நாட்டின் தொலைக்காட்சி சந்தையின் மதிப்பு மூலமாக இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. 2010-11 பருவத்திற்காக மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகம் இறுதிப் போட்டி தோல்வியாளராக மொத்தமாக €53.2 மில்லியன் பெற்றது, அதில் €27.3 மில்லியன் மட்டுமே யூஈஎஃப்ஏ பரிசுத்தொகையாகும். வெற்றி பெற்ற பார்சிலோனா கால்பந்துக் கழகம் மொத்தமாக €51 மில்லியன் பெற்றது, அதில் €30.7 மில்லியன் மட்டுமே பரிசுத்தொகையாகும். இவ்வாறு ஒரு கால்பந்து கழகத்தின் சந்தை மதிப்பும் அதன் வாகையர் கூட்டிணைவு வருவாயில் பெரும் பங்கு வகிக்கிறது.[19]

நிதி ஆதரவு

[தொகு]

தனித்த விளம்பரதாரர் நிதியுதவி செய்யும் இங்கிலாந்தின் பிரிமியர் லீக், பிரான்சின் லீக் 1 அல்லது இத்தாலியின் சீரி ஆ போலன்றி, ஃபிபா உலகக் கோப்பையைப் போன்று யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு ஆட்டங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்புகள் மூலமாக நிதியுதவி செய்யப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் உருவாக்கப்பட்ட போது இந்நிகழ்ச்சிக்காக நிதியுதவி செய்வதற்கு கண்டிப்பாக எட்டு நிறுவனங்கள் வரை இடமளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதில் ஆடுகளத்தின் எல்லையைச் சுற்றி நான்கு விளம்பர பலகைகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்படும். அதே போல் முந்தைய- மற்றும் பிந்தைய-ஆட்ட நேர்காணல்களின் பின்னட்டைகளில் இலச்சினைகள் பயன்படுத்தப்படும் மற்றும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள நுழைவுச் சீட்டுகள் ஒதுக்கப்படும். இந்த ஆட்டங்களின் போது தொலைக்காட்சி விளம்பரங்களில் போட்டித் தொடரின் விளம்பரதாரர்களுக்கு முதலுரிமை வழங்கப்படுவதை உத்தரவாதமளிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்படும். இதன் மூலம் போட்டித் தொடரின் ஒவ்வொரு முக்கிய விளம்பரதாரருக்கும் அதிகமான வெளிப்பாடு வழங்கப்படுவதாக உறுதிபடுத்தப்படும்.[20]

பிரீமியர் லீக் போன்ற பிற கூட்டிணைவுகளோடு ஒப்பிடும் போது வாகையர் கூட்டிணைவு விளம்பரப் பலகைகளின் பெரிய அளவு காரணமாக சர்ச்சைகள் ஏற்படுகின்றன. ஓல்ட் ட்ராபோர்ட், ஆன்பீல்ட், செல்டிக் பார்க் மற்றும் ஸ்டாம்போர்டு பிரிட்ஜ் போன்ற சில ஆடுகளங்களில் இவர்களது பெரிய அளவு காரணமாக, முன்வரிசையிலிருந்து பார்வையாளர்கள் போட்டியைப் பார்க்க முடியாத காரணத்தால், முன்வரிசை இருக்கைகளை பார்வையாளர்களுக்கு ஒதுக்க முடிவதில்லை; மேலும், பருவ நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு எப்போதும் உறுதியாக போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை வழங்கமுடிவதில்லை, அவர்கள் வாங்கிய நுழைவுச்சீட்டுகளின்படியன்றி வேறு இருக்கைகளில் அவர்கள் அமர வைக்கப்படலாம். சில அரங்கங்களில் சக்கர நாற்காலிகள் மற்றும் உடல் ஊனமுற்றோரின் இருக்கைகளுக்காக முன்வரிசை இருக்கைகளின் முன்பு உள்ள இடத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் பெரிய விளம்பரப் பலகைகள், ஆடுகளங்களில் உடலில் குறையுள்ள ஆதரவாளர்களின் கொள்திறனை மிகவும் கடுமையாகக் குறைத்துள்ளது.

போட்டியின் ஒவ்வொரு விளையாடிற்கு முன்னும் ஆடுகளத்தின் மையப்பகுதியில் சாம்பியன்ஸ் லீக்கின் சின்னம் காட்டப்படுகிறது

இந்தப் போட்டித் தொடரின் தற்போதைய முக்கிய விளம்பரதாரர்கள், பின்வருமாறு:

  • ஃபோர்டு
  • ஹெய்னெகென் (ஆல்ககால் நிதி ஆதரவு தடைசெய்யப்பட்டுள்ள ஸ்பெயின், துருக்கி, பிரான்சு, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவைத் தவிர்த்து. பிரான்சு மற்றும் சுவிட்சர்லாந்தில் ஹெயினெகென்னின் விளம்பரப் பலகையானது ஒரு பொறுப்புடன் மகிழுங்கள்/அனுபவியுங்கள் ("Enjoy Responsibly") விளம்பரப் பலகையின் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவில் ஹெயினெகென்னின் விளம்பரப்பலகையானது "இனப் பாகுபாட்டை வேரறுப்போம்" ("No to Racism") விளம்பரப் பலகையின் மூலமாக மாற்றப்பட்டுள்ளது)
  • மாஸ்டெர்கார்ட்
  • சோனி ஐரோப்பா
  • சோனி கணினி பொழுதுபோக்கு - ஐரோப்பா
    • த ப்ளேஸ்டேசன் விளம்பரப்படுத்தப்படுகிறது.
  • யுனிகிரிடிட்

அடிடாஸ் அனைத்து பிற யூஈஎஃப்ஏ போட்டிகளுக்கு செய்வது போல் இரண்டாம் தர விளம்பரதாரராக இருந்து அதிகாரப்பூர்வ போட்டி பந்தை வழங்குகிறது. கொனாமியின் புரோ எவல்யூசன் சாக்கர் ("Pro Evolution Soccer" – PES), மேலும் ஒரு இரண்டாம்தர விளம்பரதாரராக இருந்து அதிகாரப்பூர்வ வாகையர் கூட்டிணைவு காணொளி விளையாட்டை அளிக்கிறது.

இப்போட்டிகளில் தனிப்பட்ட கழகங்கள் விளம்பரத்துடன் விளையாட்டு உடைகளை அணியலாம். வாகையர் கூட்டிணைவு விளம்பரதாரர்களோடு ஒத்துப் போகாமலிருப்பினும் அவ்வாறு அணியலாம். எனினும் ஒவ்வொரு விளையாட்டு உடையிலும் ஒரே ஒரு விளம்பரதாரருக்கு மட்டுமே (கூடுதலாக அதன் உற்பத்தியாளர்) இடமளிக்கப்படும். மேலும் அவ்வாறு நிதியுதவி அளிக்கும் விளம்பரதாரர்கள், போட்டி நடக்கும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு புறம்பானதாக இருப்பின் (எ-கா: பிரான்சில் ஆல்ககால் நிதியுதவி தடைசெய்யப்பட்டுள்ளது) அவர்களது விளையாட்டு உடைகளில் இருந்து அத்தகைய விளம்பரதாரர் சின்னங்களைக் கண்டிப்பாக நீக்கியாக வேண்டும்.

ஆல்கஹால் & பந்தய வலைத்தளங்கள் விளம்பர ஆதரவு

[தொகு]

அணிகள் விளம்பர ஆதரவுக் கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்தால் ஆல்கஹால் விளம்பர ஆதரவு முத்திரைகளை அவர்களது விளையாட்டுப் பொருட்களில் இருந்து நீக்கும்படி கட்டாயப்படுத்தப்படலாம்.

எடுத்துக்காட்டாக லிவர்பூல், லியோனுக்கு விளையாடச் சென்ற போது லிவர்பூல் அவர்களின் விளையாட்டுப் பொருட்களில்/உடையிலிருந்து கார்ல்ஸ்பெர்க்கை நீக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ரியல் மாட்ரிட் ஜூரிச்சில் விளையாடச் சென்ற போது ரியட் மாட்ரிட் அவர்களின் விளையாட்டுப் பொருட்களில்/உடையிலிருந்து bwin.com ஐ நீக்குவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். நார்வேயிலும் இதேபோன்று கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஊடகப் பதிவு

[தொகு]

இந்தப் போட்டியானது ஐரோப்பாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பரவலாகப் பல தொலைக்காட்சி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இந்த ஆட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 க்கும் அதிகமான மொழிகளில் <citation needed> வர்ணணைகளுடன் 70 க்கும் அதிகமான நாடுகளில் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் சில ஆட்டங்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான TV ரசிகர்ளை <citation needed> ஈர்க்கலாம். பொதுவாக TV இல் மிகவும் அதிகமாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[21]

சாதனைகளும் புள்ளிவிவரங்களும்

[தொகு]

வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள்

[தொகு]
கழகம் வாகையாளராக இரண்டாமிடத்தில் வென்ற ஆண்டுகள் இரண்டாமிடம் பெற்ற ஆண்டுகள்
எசுப்பானியா ரியல் மாட்ரிட் 9 3 1956, 1957, 1958, 1959, 1960, 1966, 1998, 2000, 2002 1962, 1964, 1981
இத்தாலி மிலான் 7 4 1963, 1969, 1989, 1990, 1994, 2003, 2007 1958, 1993, 1995, 2005
இங்கிலாந்து லிவர்பூல் 5 2 1977, 1978, 1981, 1984, 2005 1985, 2007
செருமனி பேயர்ன் மியூனிக் 4 5 1974, 1975, 1976, 2001 1982, 1987, 1999, 2010, 2012
எசுப்பானியா பார்சிலோனா 4 3 1992, 2006, 2009, 2011 1961, 1986, 1994
நெதர்லாந்து அயாக்சு 4 2 1971, 1972, 1973, 1995 1969, 1996
இங்கிலாந்து மான்செஸ்டர் யுனைடெட்
3
2
1968, 1999, 2008 2009, 2011
இத்தாலி Internazionale 3 2 1964, 1965, 2010 1967, 1972
போர்த்துகல் Benfica 2 5 1961, 1962 1963, 1965, 1968, 1988, 1990
இத்தாலி யுவென்டசு 2 5 1985, 1996 1973, 1983, 1997, 1998, 2003
இங்கிலாந்து Nottingham Forest 2 0 1979, 1980
போர்த்துகல் Porto 2 0 1987, 2004
இசுக்காட்லாந்து Celtic 1 1 1967 1970
செருமனி Hamburg 1 1 1983 1980
உருமேனியா Steaua București 1 1 1986 1989
பிரான்சு Marseille 1 1 1993 1991
இங்கிலாந்து செல்சீ 1 1 2012 2008
நெதர்லாந்து Feyenoord 1 0 1970
இங்கிலாந்து Aston Villa 1 0 1982
நெதர்லாந்து PSV Eindhoven 1 0 1988
யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு Red Star Belgrade 1 0 1991
செருமனி Borussia Dortmund 1 0 1997
பிரான்சு Stade de Reims 0 2 1956, 1959
எசுப்பானியா Valencia 0 2 2000, 2001
இத்தாலி Fiorentina 0 1 1957
செருமனி Eintracht Frankfurt 0 1 1960
யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு Partizan 0 1 1966
கிரேக்க நாடு Panathinaikos 0 1 1971
எசுப்பானியா அத்லெடிகோ மாட்ரிட் 0 1 1974
இங்கிலாந்து Leeds United 0 1 1975
பிரான்சு Saint-Étienne 0 1 1976
செருமனி Borussia Mönchengladbach 0 1 1977
பெல்ஜியம் Brugge 0 1 1978
சுவீடன் Malmö FF 0 1 1979
இத்தாலி Roma 0 1 1984
இத்தாலி Sampdoria 0 1 1992
செருமனி Bayer Leverkusen 0 1 2002
பிரான்சு Monaco 0 1 2004
இங்கிலாந்து ஆர்சனல் 0 1 2006

நாடு வாரியாக

[தொகு]
நாடுகளின் ஆற்றுகை
நாடு வாகையாளர் இரண்டாமிடத்தவர் வென்ற கழகங்கள்
 எசுப்பானியா 13 9 2
 இத்தாலி 12 14 3
 இங்கிலாந்து 12 7 5
 செருமனி 6 9 3
 நெதர்லாந்து 6 2 3
 போர்த்துகல் 4 5 2
 பிரான்சு 1 5 1
 இசுக்காட்லாந்து 1 1 1
 உருமேனியா 1 1 1
 யுகோசுலாவியா 1 1 1
 கிரேக்க நாடு 0 1 0
 பெல்ஜியம் 0 1 0
 சுவீடன் 0 1 0

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Football's premier club competition". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefachampionsleague/history/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  2. "Ford Extends 20-Year Partnership with the UEFA Champions League, Europe's Most Prestigious Club Football Competition". Archived from the original on 2013-05-29. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.
  3. "Clubs". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefachampionsleague/season=2012/clubs/country/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  4. "New format provides fresh impetus". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefaeuropaleague/history/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Matches". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefachampionsleague/season=2012/matches/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  6. "Club competition winners do battle". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefasupercup/history/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  7. "1989/90 European Champions Clubs' Cup". Fédération Internationale de Football Association. 31 January 2010. http://www.fifa.com/clubworldcup/. பார்த்த நாள்: 23 May 2010. 
  8. 8.0 8.1 "European Champions' Cup". RSSSF. 31 January 2010. http://www.rsssf.com/tablese/ec1.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  9. "2010/11 UEFA Champions League". Union of European Football Associations. 31 January 2010. http://www.uefa.com/uefachampionsleague/season=2011/index.html. பார்த்த நாள்: 23 May 2010. 
  10. García, Javier; Kutschera, Ambrosius; Schöggl, Hans; Stokkermans, Karel (2009). "Austria/Habsburg Monarchy – Challenge Cup 1897–1911" (in English). RSSSF. பார்க்கப்பட்ட நாள் 5 September 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |trans_title= (help)CS1 maint: unrecognized language (link)
  11. Stokkermans, Karel (2009). "Mitropa Cup" (in English). RSSSF.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. 12.0 12.1 Ceulemans, Bart; Michiel, Zandbelt (2009). "Coupe des Nations 1930" (in English). RSSSF. பார்க்கப்பட்ட நாள் 5 September 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |trans_title= (help)CS1 maint: unrecognized language (link)
  13. Stokkermans, Karel; Gorgazzi, Osvaldo José (2006). "Latin Cup" (in English). RSSSF. பார்க்கப்பட்ட நாள் 5 September 2011. {{cite web}}: Cite has empty unknown parameter: |trans_title= (help)CS1 maint: unrecognized language (link)
  14. Spiro, Matthew (12 May 2006). "Hats off to Hanot". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 10 July 2006.
  15. "Primeira Libertadores – História (Globo Esporte 09/02/20.l.08)". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2010.
  16. Regulations of the UEFA Champions League 2011/12, pg 10: http://www.uefa.com/MultimediaFiles/Download/Regulations/competitions/Regulations/01/63/02/44/1630244_DOWNLOAD.pdf
  17. 17.0 17.1 17.2 "UEFA Referee". Uefa.com. 7 July 2010. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
  18. "Clubs get share of Champions League revenue". uefa.com. ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம். பார்க்கப்பட்ட நாள் 13 December 2010.
  19. "€750 million for UEFA Champions League clubs" (PDF). uefadirect (Union of European Football Associations) (110): 6–7. August 2011. http://www.uefa.com/MultimediaFiles/Download/EuroExperience/uefaorg/Publications/01/66/55/51/1665551_DOWNLOAD.pdf. பார்த்த நாள்: 26 August 2011. 
  20. Thompson, Craig; Magnus, Ems (February 2003). "The Uefa Champions League Marketing". Fiba Assist Magazine: 49–50. http://www.ekospor.com/Sports-Marketing/Sport%20Marketing%20uefa.pdf. பார்த்த நாள்: 19 May 2008. 
  21. "World’s most watched TV sports events: 2006 Rank & Trends report". Initiative. 19 January 2007 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928085141/http://initiative.com/static/prDec2006.html. பார்த்த நாள்: 26 May 2007. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
யூஈஎஃப்ஏ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.