மேற்கு சமயப்பிளவு
மேற்கு சமயப்பிளவு அல்லது திருப்பீட பிளவு என்பது கத்தோலிக்க திருச்சபையில் 1378 முதல் 1418 வரை நிகழ்ந்த பிளவைக்குறிக்கும். இக்காலத்தில பல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை என உரிமை கொண்டாடினர். இச்சிக்கல் இறையியல் அல்லாமல் அரசியல் சார்ந்த ஒன்றாகவே இருப்பினும் இது திருத்தந்தை பதவியின் மரியாதையினை பெருமளவு குறைத்தது. இப்பிளவு காண்ஸ்டன்சு பொதுச்சங்கத்தினால் (1414–1418) முடிவுக்கு வந்தது. பெரும் சமயப்பிளவு என்றும் சில இடங்களில் அழைக்கப்படும் இது பெரும்பாலும் 1054இன் பிளவைக் குறிக்கவே பயன்படுகின்றது.
துவக்கம்
[தொகு]பதினொன்றாம் கிரகோரியின் ஆட்சியில் 1309 முதல் அவிஞ்ஞோன், பிரான்சில் இருந்த திருத்தந்தை உரோமை நகருக்கு மீண்டும் வந்தார். இதனால் அவிஞ்ஞோன் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.[1] 1378இல் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியின் இறப்புக்குப்பின்பு உரோமையர்கள், ஒரு உரோமையரையே திருத்தந்தையாக தேர்வுசெய்ய கிளர்ச்சி செய்தனர். இதனால் 1378இல் நாபொலியினரான பார்தலோமியோ பிரிக்னானோ திருத்தந்தை ஆறாம் அர்பன் என தேர்வு செய்யப்பட்டார்.
ஆயினும் தேர்வானப்பின்பு இவர் பலவற்றை மாற்ற முயன்றதாலும், கடுங்கோபக்காரராக இருந்ததாலும், இவரைத்தேர்வு செய்த பல கர்தினால்கள் இவரைவிட்டுப்பிரிந்து அங்கனி என்னும் இடத்தில் ஒன்று கூடி ஜெனிவாவின் இராபர்ட்டை அதே ஆண்டு செப்டம்பர் 20அன்று இவருக்குப்போட்டியாக தேர்வுசெய்தனர். ஏழாம் கிளமெண்ட் என்னும் பெயரினை ஏற்றார். இவர் திருப்பீடத்தை மீண்டும் அவிஞ்ஞோன் நகரிக்கே மாற்றம் செய்தார்.
வரலாற்றில் இதற்குமுன் பல எதிர்-திருத்தந்தையர்கள் இருந்தபோதும் ஒரே தேர்தல் அவை திருத்தந்தையையும் எதிர்-திருத்தந்தையையும் தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும். இச்சிக்கல் சமய சிக்கலைத் தாண்டி அரசியல் சிக்கலாக விரைவில் உருவெடுத்தது.
- அவிஞ்ஞோன் திருத்தந்தைக்கு ஆதரவளித்தோர்: பிரான்சு, அரகோன், காசுடில் மற்றும் லியோன், சைபிரசு, பர்கண்டி, சவோய், நேப்பில்சு, ஸ்காட்லாந்தும் ஆகும்
- உரோமை திருத்தந்தைக்கு ஆதரவளித்தோர்: டென்மார்க், இங்கிலாந்து, பிலான்டர்சு, புனித உரோமைப் பேரரசு, அங்கேரி, ஐயர்லாந்து, நோர்வே, போர்த்துகல், போலந்து, சுவீடன், வெனிசு குடியரசு மற்றும் இத்தாலி.
விளைவு
[தொகு]இப்பிளவின் முதல் திருத்தந்தையர்கள் அவிஞ்ஞோனிலும் உரோமையிலும் இறந்தப்பின்பு முறையே திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் 1389இல் உரோமையிலும், பதின்மூன்றாம் பெனடிக்ட் அவிஞ்ஞோனிலும் பதவியேற்றனர். போனிஃபாஸ் 1404இல் இறக்கவே உரோமையின் எட்டு கர்தினால்களும் பெனடிக்ட் பதவி விலகினால் அடுத்த திருப்பீட தேர்தலில் வாக்களிப்பதில்லை என உறுதி அளித்தனர். ஆயினும் இதை பெனடிக்ட் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் உரோமையின் புதிய ஆயராக திருத்தந்தை ஏழாம் இன்னசெண்டை தேர்வுசெய்தனர்.
இவகளுக்கிடையில் உடண்பாடு எட்ட பலமுறை பலரால் முயற்சிக்கப்பட்டது. அதில் ஒருமுயற்சியாக 1409இல் கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக்கியது. இவர் ஜூன் 26, 1409 முதல் 1410 இல் தனது இறப்புவரை இப்பதவியினைக்கோரினார். இவருக்குப்பின்பு இவரின் வாரிசாக இருபத்திமூன்றாம் யோவான் தேர்வானார்.
முடிவு
[தொகு]பீசா எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் 1414-இல் கூட்டப்பட்ட காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் இப்பிளவிற்கு முடிவுகட்ட முயன்றது. இதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக பணி துறக்கக் கோரப்பட்டது. இதை திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஏற்றனர். ஆனாலும் அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது. ஆயினும் இச்சங்கத்தில் திருத்தந்தை பதவியினைக்கோரிய மூவரில் யார் உண்மையான வாரிசாக இருந்தனர் என முடிவெடுக்காததால் இக்காலத்தின் உண்மையான திருத்தந்தை யார் என்பதில் சிக்கல் 19ஆம் நூற்றாண்டுவரை நிலவியது.
பின்னாட்களில் திருத்தந்தை இரண்டாம் பயஸ், ஒருவர் திருத்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாத வண்ணம் தடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J.N.D. Kelly, Oxford Dictionary of the Popes, p. 227