உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது இசுமாயில் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முஹம்மது இஸ்மாயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகம்மது இசுமாயில் (Muhammad Ismail)
முகம்மது இசுமாயில் சாகிப்
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1946–1952
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்
பதவியில்
1948–1952
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1952–1958
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1962–1972
தொகுதிமஞ்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-06-05)5 சூன் 1896
பேட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு5 ஏப்ரல் 1972(1972-04-05) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி
துணைவர்சமால் கமீதாபீவி
பிள்ளைகள்சமால் முகம்மது மியாகான் (மகன்)
பெற்றோர்மியாகான் ராவுத்தர் (தந்தை)

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் (Muhammad Ismail((5 சூன் 1896 – 5 ஏப்ரல் 1972) சாகிபு இந்தியாவின் முக்கியமான முசுலிம் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.[1] காயிதே மில்லத் என்ற அரபு சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.

குடும்பம்

[தொகு]

முகம்மது இசுமாயில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் பெரும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார்.[1][2] இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியினையும், மத நூல்களையும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.

கல்வி

[தொகு]

முகம்மது இசுமாயில் சாகிப் திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரிகளில் உயர் கல்வி பெற்றார்.[2]

பிரித்தானிய இந்தியாவில்

[தொகு]

தனது இளங்கலைப் பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார். இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா, இதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்த இவர், ஆற்றிய பணி அளப்பரிது. பாக்கித்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவில்

[தொகு]

1947இல் பாக்கித்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், இவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-இல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.

இந்திய அரசியல்

[தொகு]

முகம்மது இசுமாயில் அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராசர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

  • 1945ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
  • 1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
  • 1946 முதல் 1952ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
  • 1952ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்ற மேலவையான மக்களவையின் உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • 1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • 1967இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.

தொழில்துறை

[தொகு]

அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் முன்னணியிலிருந்தார்.[3] தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.[1][2]

1946 முதல் 1972 வரை சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.[2] மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2] தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி இதன் தலைவராகவும் இருந்தார்.[4]

மறைவு

[தொகு]

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குடற்புண் நோய்க்காக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1972, ஏப்ரல் 5 நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் காலமானார்.[5] இந்திய காங்கிரசு தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காயிதே மில்லத் எதிர்கட்சித் தலைவருக்கான ஓர் உதாரணம் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டார்.[1]

நினைவாக

[தொகு]

காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது.[6] பின்னர் 1996இல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் இதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டது.[7][8] 2003ஆம் ஆண்டு இவர் நினைவாக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தைக் கட்டியுள்ளது.[9] காயிதெ மில்லத்தின் பெயர் தற்போது தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி,[1] சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லூரி, மேடவாக்கம்,[10] சென்னை ஆகியவை இவற்றுள் சில. காயிதே மில்லத் நினைவாக சென்னையில் காயிதே மில்லத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Muthiah, S. (2017-05-01). "Who was Quaid-e-Millat?". The Hindu. https://www.thehindu.com/society/history-and-culture/who-was-quaid-e-millat/article18347247.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "M. Muhammad Ismail (Fifth Lok Sabha Members. Profile)". Lok Sabha. Government of India.
  3. Bhattacharjee, Rupanwita (2018-09-29). "Muhammad Ismail, Indian Muslim League Pioneer who Wanted Hindustani as Official Language". The Print.
  4. Members Profile (fifth lok sabha) Muhammad Ismail
  5. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1972. p. 274.
  6. Discussion under Rule 193 Flood situation caused - Parliament of India
  7. Panneerselvan, A. S. (16 June 1997). "Name Of The Game". Outlook Magazine.
  8. "DISCUSSION". Parliament of India.
  9. Opening ceremony of "Kanniya Thendral" Quaid-E-Milleth Mohamed Ismayil Manimandapam.
  10. "University of Madras: Aided Colleges". University of Madras. Archived from the original on 21 February 2006.
  11. http://www.thehindu.com/features/metroplus/bridges-of-madras-the-concrete-connect/article4623232.ece