முதலுதவி
முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும். முதல் உதவி என்பது உதவி மட்டுமல்ல உயிரை காக்கும் செயல் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயப்பட்ட நபர்க்கு அளிக்கப்படும். இது மருத்துவத்துறையில் சிறப்புடைய நிபுணர் - அல்லாத எனினும் பயிற்சி பெற்ற ஒரு நபரால் அளிக்கப்படும். சில கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் சிறிய காயங்களுக்கு முதலுதவி அளித்த பிறகு மருத்துவத் தலையீடு தேவையில்லாமலே போகலாம். முதலுதவி சாதாரண, சில சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களை உள்ளடக்கியது. இவைகளை ஒருவர் குறைந்த உபகரணங்களைக் கொண்டே செயல்படுத்தும் வகையில் முதலுதவி அமைய வேண்டும்.
முதலுதவி அனைத்து விலங்குகளுக்கும் கொடுக்கப்படலாம் என்றபோதிலும், பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும் கவனிப்பையே குறிக்கிறது.
வரலாறு
[தொகு]முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் இடைக்காலங்களில் (middle ages) வெகுவாக கைவிடப்பட்டது . அதன் பிறகு 1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு புனித ஜான் அவசர ஊர்தி 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது. இது எப்படி நிகழ்ந்ததென்றால் பல தொடர்வண்டி மையங்களிலும் சுரங்கங்களிலும் அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை(first treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை(national aid) என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878இல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார் ஒரு டாக்டர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார் . ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.[1] இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன.
முதலுதவியில் நிறைய வளர்ச்சிகள் போர்களால் இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் போர் க்லரா பார்டன் என்பவரை அமெரிக்க செஞ்சிலுவையை உருவாக்க ஊக்குவித்தது .[2]
உலக முதலுதவி தினம்
[தொகு]செப்டம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகின்றது. இத்தினம் இரண்டாயிரத்தில் சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு,மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. இது நெருக்கடி நிலைமையில் உயிரை காப்பாற்றுவதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.
முதலுதவிப் பெட்டி
[தொகு]காயம்பட்டவருக்கு முதன்மையான உதவிகளை செய்வதற்காக சில அத்யாவசிய மருத்துவப்பொருட்களை கொண்டுள்ள பெட்டியே முதலுதவிப்பெட்டி ஆகும்.முதலுதவிப்பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்,
- மென்மையான துணி-காயத்தை தூய்மை செய்ய,
- துணிச்சுருள்-காயத்தின் ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவதற்காக கட்ட,
- கிருமிநாசினி-காயத்தினை சுத்தம் செய்ய,
- முக்கோண வடிவ பான்டேஜ்,
- பிசின் நாடாக்கள்,
- தீப்புணுக்கான கிரீம்.
- கத்தரிக்கோள்.
முதலுதவிப்பெட்டியில் உள்ள பொருட்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நோக்கங்கள்
[தொகு]முதலுதவியின் முக்கிய நோக்கங்களை மூன்று புள்ளிகளில் சுருக்கிவிடலாம்:[3]
- உயிர் பாதுகாத்தல் : முதல் உதவி உட்பட அனைத்து மருத்துவ கவனிப்புகளின் சாராம்சம் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே.
- இன்னும் கூடுதலான ஆபத்து நேர்வதை தவிர்த்தல் : நிலைமை மோசமடைவதை தவிர்த்தல் அல்லது இன்னும் கூடுதலான காயம் ஏற்படுவதை தவிர்த்தல் என்றும் இதற்கு தலைப்பிடலாம்.இது சம்பந்தப்பட்ட நபரை நிலைமையின் காரணியிடமிருந்து நகர்த்துதல் போன்ற வெளி காரணங்களையும், அழுத்தம் கொடுத்து உதிரப்போக்கு தீவிரமடைவதை தவிர்த்தல் போன்ற முதலுதவி அளிக்கும் நுட்பங்களையும் உள்ளடக்கயுள்ளது.
- குணமாவுதலை ஊக்குவித்தல் : முதல் உதவி குணமாகும் காரியத்தை தொடங்கிவிடவும் முயற்சிக்க வேண்டும்.சிறு காயத்திற்கு பிளாஸ்திரி போடுவது போன்ற சில சந்தர்ப்பங்களில் இது முழு சிகிச்சையையும் அளிக்குமாறு கூட அமைந்துவிடும்.
முக்கிய திறன்கள்
[தொகு]சில திறன்கள் முதலுதவி வழங்குதலுக்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. ஆதலால் இவை உலகெங்கும் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மற்ற சிறு காயங்களை கவனிக்குமுன் முதலுதவியின் "ஏபிசி" கள் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் இவை மிகவும் தேவையான உயிர்க்காப்பாற்றல் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன. ஏபிசி ,Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.அதாவது காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் என்று விரிகிறது. முதலில் சுவாசவழி தெளிவாக உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். மூச்சுக்குழலில் அடைப்பு இருப்பது உயிர் அச்சுறுத்தும் அவசர நிலையாகும். இதன் பிறகு மூச்சு விடுவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து தேவையானால் செயற்கையாக பாதிக்கப்பட்டவரை மூச்சு விடவைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்று சரிபார்ப்பது இல்லை . அதற்கு பதிலாக செயற்கை இரத்த அழுத்தம் கொடுக்கும் மார்பு அழுத்தம் (chest compressions) தரப்படும். நாடி சரிபார்த்தல் தீவிர நிலையில் இல்லாத ஆட்களிடம் நடத்தப்படலாம்.
சிலர் abcயுடன் ஒரு dயையும்( deadly bleeding or defibrillation ) சேர்த்துக்கொள்வர். அனால் இது இரத்த ஓட்டத்திலேயே அடங்கும் என்று சிலர் கூறுவர் . இந்த ABC களை பாதுகாத்தப்பின் , முதலுதவி அளிப்பவர் கூடுதல் சிகிச்சையை தொடங்கலாம். சில நிறுவனங்கள் abcக்கு பதிலாக மூன்று bக்கள் ( breathimg, bleeding and bones ) என்பதை பின்பற்றுவன. ABC களையும் 3Bக்களையும் பொதுவாக தொடர்நிலையாக செய்ய வேண்டும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படிநிலைகளை ஒரே நேரத்தில் அளிக்கவேண்டிவரும். உதாரணத்திற்கு மூச்சு மற்றும் நாடி இரண்டும் இல்லாதவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் மார்பழுத்தம் இரண்டையுமே ஒன்றாக தர வேண்டும்.
உயிர் பாதுகாத்தல்
[தொகு]உயிருடன் இருக்கவேண்டுமெனில், ஒருவருக்கு அவருடைய சுவாசவழி தெளிவாக இருக்க வேண்டும். காற்று வாய்வழியாகவோ அல்லது மூக்கின் வழியாகவோ உள்ளிழுக்கப்பட்டு உணவு குழாயையும், வாயையும் இணைக்கும் பகுதி (pharynx) மூலமாக நுரையீரலுக்கு எந்த இடர்ப்பாடுமின்றி செல்லவேண்டும். நினைவு நிலையில் உள்ளவர்கள் தடையற்ற சுவாசவழியை தானாகவே கொண்டிருப்பார்கள். அனால் நினைவற்றவர்களுக்கு (GCS எண்ணிக்கை எட்டுக்கும் கீழ் உள்ளவர்கள்) சுவாசவழியை தெளிவாக வைத்துக்கொள்வது முடியாமல் போகலாம் . ஏனெனில் சாதாரண நிலையில் சுவாசத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி இவர்களுக்கு வேலை செய்யாமல் போகலாம்.
பாதிக்கப்பட்டவர் மூச்சு விடுகிறார் என்றால் முதலுதவி அளிப்பவர் அவரை ஒரு விதமாக படுக்கவைத்து அவரது நாக்கு சுவாசவழியை தடை செய்யாதவாறு செய்வார். மேலும் இச்செயல் நினைவிழந்த ஆட்குளுடைய இறப்பின் முக்கிய காரணமான வயிற்றிலுள்ள தேவையில்லாத பொருட்களால் (regurgitated stomach contents) மூச்சடைத்து இறப்பதையும் தவிர்க்கும்.
ஒரு பொருள் சுவாசவழியை அடைத்து மூச்சுத்தினரலை உண்டாக்கும்போது முதலுதவி அளிப்பவர் அந்நபருக்கு பின்னால் அடித்தும் வயிற்று பகுதியை அழுத்தியும் நிவாரணம் தருவார்.
சுவாசவழி திறக்கப்பட்டவுடன், முதல் உதவி அளிப்பவர் பாதிக்கப்பட்டவர் ஒழுங்காக மூச்சு இழுக்கிறாரா என்று பார்ப்பார் . பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இல்லை என்றால் ,முதலுதவி அளிப்பவர் இதய இயக்க மீட்பை (cardiopulmonary resuscitation) உடனடியாக அளிப்பார். இதில் முதலுதவி கொடுப்பவர் பாதிக்கப்பட்டவருக்காக மூச்சிழுப்பார் என்று சொல்லலாம். அப்படி செய்யும்போதே பாதிக்கப்பட்டவரின் இதயத்தை அழுத்தி விடுவார் (massage).
குணமடைவதை ஊக்குவித்தல்
[தொகு]முதலுதவி அளிப்பவர் வெட்டுகள், எலும்பு முறிவுகள் போன்ற காயங்களை கையாளவும் கற்பிக்கப்படுவார் . இதுபோன்ற சந்தர்ப்பங்களை இவர்கள் முழுமையாகவோ ( ஒரு சிறு பான்டேஜை வெட்டுபட்ட இடத்தில் ஓட்டுவது, இதில் சிகிச்சை இங்கேயே முடிவுக்கு வந்துவிடுகிறது ) அல்லது எலும்பு முறிவுகள் போன்ற சந்தர்ப்பங்களில் அவசர ஊர்தி வரும் வரை அந்த முறிவை கட்டுக்குள் வைத்திருக்கவோ கற்பிக்கப்ப்டுவர்.
பயிற்சி
[தொகு]பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் பெரிதாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. உதாரணத்திற்கு இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு மேற்சொன்ன வாக்கியம் வெகுவாக பொருந்தும்.இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது,நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பல நாடுகளில், அவசர ஊர்தி வந்துகொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்யவேண்டுமென்று அடிபட்டவரை பார்த்துகொண்டிருப்பவரிடம் சொல்வார்கள்.
முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். இது ஒரு சான்றிதழைக் கொடுக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் இவ்வகுப்புகளுக்கு போவதும் சான்றிதழை புதுப்பித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று. ஏனெனில் புதிய ,இன்னும் அதிக செயல்திறன் மிக்க பயிற்சிகள் கண்டுபிடிக்கப்படலாம். முதல் உதவி பயிற்சி செஞ்சிலுவை மற்றும் புனித ஜான் அவசர ஊர்தி போன்ற சமூக அமைப்புகள் மூலம் அடிக்கடி கிடைக்கும். மேலும் கட்டணம் செலுத்தி கூட சில அமைப்புகளிலிருந்து இதை பெற்றுக்கொள்ளலாம். பல சமூக அமைப்புகள் தங்களது சமூக திட்டங்கள் முழுமையடைய ஒரு வர்த்தக சேவை, வழங்குகின்றன.பல சமூக அமைப்புகளும் கூட வணிகரீதியான பயிற்சிகள் தருவன. இது ஏனெனில் இப்பணம் தங்கள் இலவச பயிற்சிகளுக்கும் சமூக வேலைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
குறிப்பிட்ட துறைகளில்
[தொகு]சில குறிப்பிட்ட துறைகளில் முதலுதவி அளிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படும்.
- கடல்சார் முதலுதவி : இது கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் பணியாளர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்கள் ஆகியோர் தெரிந்துகொள்ள வேண்டிய முதலுதவி ஆகும்.
- போர்க்கள முதல் உதவி : ஆயுதம் பயன்படுத்தி ஒரு மோதல் நிகழும்போது, அதில் பாதிக்கப்படும் வீரர்கள் அல்லது அப்பாவி பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி.
- உயிர்வளி முதல் உதவி : உயிர்வளி பற்றாக்குறை விளைவிக்கும் நிலைமைகள் ஏற்படும் நபர்களுக்கு தரும் முதலுதவி .
- சூழற்சார் முதல் உதவி : பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமெனில் ( நிலப்பகுதியின் காரணமாகவோ, தட்பவெப்பநிலை காரணமாகவோ அல்லது ய்பகரங்கள் பற்றாக்குறை காரணமாகவோ ) இம்முதலுதவி வழங்கப்பட வேண்டும். இவ்வகை முதலுதவி மூலம் காயப்பட்ட நபரை மணிக்கனக்கிலோ நாட்கணக்கிலோ பாதுகாக்க முடியும்.
- ஹைட்ரோப்லூறிக் அமிலம் முதல் உதவி : இது இரசாயன தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களுக்கு, ஹைட்ரோப்லூறிக் அமிலம் உடலில் பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திகொள்ள கற்றுத்தரப்படும்.
- மன நல முதல் உதவி மனநிலை பாதிப்பது போன்ற தருணங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் முதலுதவி ஆகும். மேலும் மனநோயின் முதல் அறிகுறிகளை கண்டறிவதையும் இது உள்ளடக்குகிறது.
சின்னங்கள்
[தொகு]முதல் உதவியுடன் பொதுவாக தொடர்புடைய சின்னமாக செஞ்சிலுவை சின்னம் அமையும்போதிலும் அது செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரப்பூர்வமான சின்னமாகும். ஜெனீவா உடன்படிக்கை மற்றும் ஏனைய சர்வதேச சட்டங்களின் படி, இது போன்ற சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை(red crescent) ஆகியனவற்றிக்கு மட்டுமே உரிமை உள்ளது. மேலும் வேண்டுமென்றால் மருத்துவ உதவி தேவைப்படும் ஒரு நபருக்கு இதை ஒரு பாதுகாப்பு சின்னமாக பயன்படுத்தலாம். வேறு எந்த நபரோ அல்லது நிறுவனமோ இவற்றை பயன்படுத்துவது சட்டவிரோதமானது.
அகில உலக அளவில் முதலுதவியின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது எதுவென்றால் கீழே காண்பிக்கப்பட்டிருக்கும் பச்சை பின்னணியில் உள்ள வெள்ளை குறுக்கு சின்னமாகும்.
சில நிறுவனங்கள் வாழ்வின் நட்சத்திரம்(star of life) சின்னத்தை பயன்படுத்தலாம்.எனினும் வழக்கமாக இது அவசர ஊர்திகளின் பயன்பாட்டுகேன்று ஒதுக்கப்பட்டவையாகும்.சில நிறுவனங்கள் மால்டிஸ் கிராஸ் சின்னத்தை பயன்படுத்தலாம்-மால்ட அவசர ஊர்தி அல்லது புனித ஜான் அவசர ஊர்திகள் பயன்படுத்துவது போல. மற்ற சின்னங்களும் பயன்படுத்தப்படலாம்.
-
ISO முதலுதவி சின்னம்
-
செஞ்சிலுவை சின்னம்
-
மால்டீஸ் அல்லது அமால்ஃபி சின்னம்
-
வாழ்வின் நட்சத்திரம்(star of life)
முதல் உதவி பெரும்பாலும் தேவைப்படும் நிலைமைகள்
[தொகு]- உயர நோய் ,சில நபர்களுக்கு 5,000 அடி உயரத்திலேயே கூட இது ஏற்படும். இதன் விளைவாக மரணம் வரக்கூடிய அளவிற்கு கூட மூளை, நுரையீரல் ஆகியவை வீங்கலாம்.[4]
- காப்புப்பிறவு, இதனால் மூச்சுக்குழல் சுருக்கப்பட்டுவிடும்.இது சில நேரங்களில் உயிரையே கூட எடுத்துவிடும்.இதனால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சிக்குள்ளாவார்.இந்த நிலை பூச்சிக்கடி அல்லது பட்டாணி போன்ற ஒவ்வாமை ஊக்கிகளால் உடம்பில் ஏற்படும் ஒரு முறைப்படுத்தப்பட்ட விளைவினால் உண்டாகும்.ஆரம்பத்தில் எபிநெஃரைன் ஊசி அளித்து இதற்கு சிகிச்சை அளிப்பார்கள்.
- போர்க்கள முதல் உதவி -இது துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயம் ,தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற போர்க்களத்திலோ அல்லது குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலோ ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதை சார்ந்தது.
- எலும்பு முறிவு, ஆரம்பத்தில் ஒரு சிம்பு வைத்து முறிவை நிலைப்படுத்த வேண்டும்.
- தீக்காயங்கள்,இவை திசுக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.மேலும் உடலிலுள்ள முக்கிய திரவங்கள் இழந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது.
- இதய செயல்பாட்டுத்தடை (cardiac arrest) :இதய இயக்க மீட்பு (CPR) உடனடியாக தரப்படவில்லைஎன்றல் இந்நிலை மோசமாகி எளிதில் மரணம் நிகழும்.
- மூச்சடைத்தல்(choking), இது பல நேரங்களில், பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்குழல் சுத்தமாக்கப்படாவிட்டால் ,உடனடியாக மரணத்தை தர வல்லது.
- குழந்தை பிறப்பு
- தசைப்பிடிப்புகள் ,போதிய உயிர்வளி தசைக்கு கிடைக்காததாலும் போதிய தண்ணீர் அல்லது உப்பு இல்லாததாலும் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம் காரணமாக இவை ஏற்படும்.
- டைவிங் குறைபாடுகள், நீரில் மூழ்குதல் அல்லது மூச்சு திணறல்.
- மாரடைப்பு,அல்லது இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் வழங்கும் இரத்த நாளங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாமை.
- இரத்த ஓட்டத்தை நிறுத்துமளவிற்கு ஒரு முடியோ அல்லது வேறு நூலோ விரல் போன்ற உடற்பாகங்களில் இறுக கட்டிக்கொள்ளப்படுவது.
- வெப்ப மயக்கநிலை, வெப்ப வீச்சு அதே செயல்முறை மற்றொரு கட்டத்தில், வெப்ப பக்கவாதம் போன்ற சூழ்நிலையில் ஏற்படும் மற்றும் சில அதிகாரிகள் பிந்தைய இருந்து வேறுபடுத்தி இல்லை.
- மிகுந்த உதிரப்போக்கு,இதற்கு காயம் உள்ள இடத்தில் அழுத்தம் கொடுத்தும் (முதலில் கைமூலமாகவும் பின்னர் ஒரு பேன்டேஜுடனும்), முடிந்தால் அடிபட்ட இடத்தை உயர்த்துவதன் மூலமும் சிகிச்சை அளிக்க வேண்டும்.
- இரத்த சர்க்கரை மிகுதியாகவோ குறைவாகவோ இருப்பது(hyperglycemia and hypoglycemia)
- ஒரு நபரின் உடல் வெப்பநிலை 33.7 ° செல்சியஸ் (92.6 டிகிரி பாரன்ஹீட்) என்ற நிலைக்கு கீழே விழும் போது (hypothermia), 33.7 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலைக்கு சற்றே ஒரு நபரின் உடற்வேப்பநிலை குறையும்போது ,அவரது உடம்பிற்கு மறுசூடேற்றல் செய்யலாம். ஆனால் 33.7 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலைக்கு மிகுதியாக ஒருவரின் வெப்பநிலை குறையும்போது அவருக்கு மறுசூடேற்றல் செய்தல் அவரை மரண நிலைக்கே கொண்டு செல்லலாம்.
- பூச்சி மற்றும் விலங்கு கடி மற்றும் குளவி போன்ற பூச்சிகளின் கொட்டுகள்.
- எலும்பு இணைப்புகளின் பெயர்ச்சி.
- ஊசி மூலமோ ,மூச்சு உள்ளிழுத்தல் மூலமோ , உறிஞ்சுதல் மூலமோ , அல்லது உணவு உட்செலுத்தலால் ஏற்படும் நச்சேற்றம்.
- வலிப்பு, அல்லது மூளையின் மின் செயல்பாட்டில் ஒரு செயலிழப்பு. க்ராண்ட் மால் என்ற வகையான வலிப்பு தற்காலிக சுவாச கோளாறுகள்,தோல் நிற மாற்றம் போன்றவற்றை உள்ளடக்கும்.பெடிட் மால் என்ற வகையான வலிப்பு சட்டென்று சடசடவென கண்ணிமைப்பது மற்றும் நினைவிழத்தல் இல்லாமல் ,ஆனால் நினைவு மாற்றம் நிகழ்வது போன்றவற்றை உள்ளடுக்கும்.
- தசை இறுக்கங்கள் மற்றும் சுளுக்குகள், உடனடியாக தானாகவே சரியாகிவிடும். ஆனால் கட்டுநாண்(ligament) சேதம் விளைவிக்கும்.
- பக்கவாதம், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஒரு தற்காலிக நிறுத்தம்.
- பல் வலி,இது கடுமையான வலி மற்றும் பள்ளிழப்பை ஏற்படுத்தலாம். இது எப்போது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்றால் சம்பந்தப்பட்ட
நோய் தொற்று தாடை எலும்பிற்கு பரவி ஆஸ்டியோமைலிடீஸ் என்னும் நோயை தொடங்கிவிடும்போதுதான்.
- காயம் மற்றும் உதிரப்போக்கு ,கல்லீரல் மண்ணீரல் போன்ற உள்ளுடம்பு உதிரப்போக்குகள் ,காற்றை வெளிவிடும் ஆனால் உள்ளே விடாத ஒரு குறிப்பிட்ட கட்டு தேவைப்படும் மார்பு காயங்கள் (sucking chest wounds) ஆகியவை உட்பட.
முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
[தொகு]- முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
- சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.
- நோயாளருக்கு உதவியளித்தல்.
முதலுதவியின் நோக்கங்கள்
[தொகு]- உயிரைப் பாதுகாத்தல்.
- நிலமை மோசமடையாமல் தடுத்தல்.
- குணமடைய முன் ஏற்பாடு செய்தல்.
அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்
[தொகு]- முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.
- முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
- அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
- பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.
- முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்
- அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்தைரியத்தை அளிக்க வேண்டும்
- பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
- பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி
[தொகு]- காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.
- இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
- ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்
[தொகு]- வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.
- இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்
[தொகு]- காயத்தின் மீது வீக்கம்.
- காயம் சிவந்து காணப்படுதல்.
- வலி.
- காய்ச்சல்.
- காயத்தில் சீழ்பிடித்தல்.
மூச்சுத்திணறல்
[தொகு]மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.
பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.
மயக்கம் ஏற்படுதல்
[தொகு]அறிகுறிகள்
[தொகு]மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
- தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
- சோர்வு
- வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
- தோல் வெளுத்துக் காணப்படுதல்.
முதலுதவி
[தொகு]மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
- முன்புறமாக சாய வேண்டும்
- தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
- பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
- இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
- குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
வலிப்பு
[தொகு]வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.
அறிகுறிகள
[தொகு]- உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.
- நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
- முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
- சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
முதலுதவி
[தொகு]- பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.
- நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
- எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
- மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
- மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
- பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
வெப்ப நோய்கள்
[தொகு]வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
[தொகு]- வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
- முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
- உடல்சூடு சாதாரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
- உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
- மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ . The earliest days of first aid John Pearn BMJ 1994;309:1718 20
- ↑ American Red Cross -- Museum, retrieved March 23, 2011.
- ↑ "Accidents and first aid". NHS Direct. Archived from the original on 2008-05-03. பார்க்கப்பட்ட நாள் 2008-10-04.
- ↑ Cymerman, A; Rock, PB. Medical Problems in High Mountain Environments. A Handbook for Medical Officers. USARIEM-TN94-2. US Army Research Inst. of Environmental Medicine Thermal and Mountain Medicine Division Technical Report. http://archive.rubicon-foundation.org/7976. பார்த்த நாள்: 2009-03-05.