மரபுவழித் தாய்லாந்து வீடு
மரபுவழித் தாய்லாந்து வீடு என்பது, தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும், நாட்டார் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த வீடுகளை ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. வழமையாக மூங்கில் அல்லது மரத்தாலான "தாய்" வீடுகள் கால்களின்மீது உயர்த்திக் கட்டப்படுகின்றன. இவை கூடிய சரிவு கொண்ட மச்சுக்கூரையைக் கொண்டவை.[1] தாய்லாந்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீடுகள் அவ்வப்பகுதிகளுக்குரிய தனித்துவமான பாணிகளில் அமைந்தவை. இவை, சமூக பண்பாட்டு நம்பிக்கைகள், சமய வழக்காறுகள், தொழில் என்பவற்றை உள்ளடக்கிய, மக்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
மத்திய தாய்லாந்தில் கால் வீடுகள்
[தொகு]மத்திய தாய்லாந்தில் காணப்படும் கால் வீடுகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் வகை ஓற்றை வீடு. இது ஒரு குடும்பம் வாழ்வதற்கானது. இதில் ஒரு படுக்கையறையும் ஒரு சமையலறையும் இருக்கும். இரண்டாவது வகை குழு வீடு. இந்த வீட்டு வகையில் குறைந்தது இரண்டு வீடுகள் ஒரேயிடத்தில் அமைந்திருக்கும். அடுத்த வகை அலுவலர் வீடு. இது அரச அலுவலருக்கான வீடு. நடைபாதைக் கடை அல்லது நீர்முகப்புக் கடை என்பது, வணிகத்துக்காகக் கட்டப்படுவது. கடைசி வகை மிதவை வீடு. இது ஆற்றங்கரை அல்லது கடற்கரைகளை அண்டி அமைக்கப்படுவது.[2]
வட தாய்லாந்தில் கால் வீடுகள்
[தொகு]வடக்குத் தாய்லாந்தில் உள்ள கால் வீடுகள் மூன்று வகைப்படுகின்றன. முதலாவது, ருவென் கிறங் பூக் அல்லது ருவென் மை புவா என அழைக்கப்படும் கயிறுடன் சேர்ந்த கூடும் வீடு.[3] இது நாட்டுப்புறத்தில் உருவான மிகப்பழைய வகை.[4] இதன் அமைப்பு புல்வேய்ந்த கூரை, மூங்கில்களைக் கயிற்றினால் கட்டி அமைக்கப்படும் தளம், சுவர்கள் ஆகியவற்றைக் கொண்டது. கழிகளும், வளைகளும் இவற்றின் அமைப்புக்கான அடிப்படையாக அமைகின்றன. இவை மரத்தினால் செய்யப்படுகின்றன. இரண்டாம் வகை உண்மை மர வீடு. இதுவே மிகவும் வலுவான கால் வீடு. இந்த வகை வீடுகளில் இரண்டு வகையான கூரைகள் காணப்படுகின்றன. லான்-நா மக்களுடைய பழங்காலப் பாணி வீடான கலேயா வீட்டின் முகப்பின் மேல் பகுதியில் ஒன்றுக்கொன்று குறுக்காக V அல்லது X வடிவில் அமைக்கப்பட்ட இரு மரச் சட்டங்களால் அழகூட்டப்படுகின்றன. மற்றக் கூரை வகை "காற்று வெளி வீடு" என்னும் வகைக்கு உரியது. இது, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள வீடுகளின் செல்வாக்கினால் உருவானது. உயரமாக அமைந்த இக்கூரை, சுட்ட களிமண்ணாலான ஓடுகளினால் மீன் செதில் வடிவில் வேயப்பட்டது.
தாய்லாந்தின் வட கிழக்குப் பகுதியில் கால் வீடுகள்
[தொகு]இப்பகுதியில் உள்ள கால் வீடுகள், அதில் தங்கும் காலத்திற்கு ஏற்றபடி அமைக்கப்படுகின்றன. முதல் வகை விவசாயிகளுக்கான தற்காலிக வீடுகள். இது, அறுவடை காலத்தில், பழைய மரத்தினால் கட்டப்படும் ஒரு மேடைமீது அமைக்கப்படுகின்றன. இவ்வீடுகள் ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளே நிலைத்திருக்கின்றன. அத்துடன் இந்த எளிமையான வீடுகள் இலகுவில் அகற்றப்படக்கூடியது. ஓரளவு நிரந்தர வீடுகள் முதன்மை வீடுகளுடன் கூடிதலான ஒரு பகுதியைக் கொண்டவை. இந்தக் கூடுதல் பகுதி மூன்று பாணிகளில் காணப்படுகின்றன. ஒன்றில் முதன்மைக் கூரை அரிசி சேமித்து வைக்கப்படும் பகுதியையும் மூடி அமைகிறது. இரண்டாவது பாணியில் கூடுதல் பகுதி முதன்மை வீட்டிலிருந்து தனியாக அமைகின்றது. மூன்றாவது பாணியில் வீட்டின் நடுவில் ஒரு கால் இருக்கும் ஆனால், இது நிலம் வரை செல்லாமல் வளை மட்டத்தில் நின்றுவிடும். கடைசி வகை நிரந்தர வீடுகள். இதிலும் மூன்று வகைகள் உள்ளன. மேல்படியும் வீடு, இரட்டைப் பாணி வீடு, ஒற்றை வீடு என்பன இம்மூன்றும் ஆகும். இக்கால் வீடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஒடுங்கிய சாளரங்களும், முன்புறத்தில் ஒரு கதவும் இருக்கும். இதனால், மற்றக் கால் வீடுகளிலும் இந்த வீடுகளின் உட்புறம் இருட்டாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sthapitanonda, Nithi; Mertens, Brian (2012). Architecture of Thailand : a guide to traditional and contemporary forms. Singapore: Didier Millet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814260862.
- ↑ National Identity Office, Office of the Permanent Secretary, the Prime Minister’s Office (1993). Ruen Thai. Thailand: National Identity Office, Office of the Permanent Secretary, the Prime Minister’s Office.
- ↑ Pattaya location beach front. The traditional Thai house. Retrieved October 4, 2013, from http://www.pattaya-location-beach-front.com/anmaison.php
- ↑ National Identity Office, Office of the Permanent Secretary, the Prime Minister’s Office (1993). Ruen Thai. Thailand: National Identity Office, Office of the Permanent Secretary, the Prime Minister’s Office.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- கால் வீடு (stilt house)
- தாய்லாந்துக் கட்டிடக்கலை