படுக்கையறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு தற்காலப் படுக்கையறை.

படுக்கையறை என்பது, வீடுகளில் அல்லது பிற வாழிடக் கட்டிடங்களில் அங்கு வாழ்வோர் அல்லது விருந்தினர் தூங்கும் நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அறையைக் குறிக்கும். வளர்ந்தோரைப் பொறுத்தவரை இது பாலுறவுக்கான ஒரு இடமாகவும் பயன்படுகிறது.

தளவாடங்கள்[தொகு]

தற்காலத்துப் படுக்கையறைகளில் ஒன்று அல்லது இரண்டு கட்டில்கள் இருக்கும். தனியாள் ஒருவருக்கான படுக்கையறையில் ஒற்றைக் கட்டிலும், இருவருக்கான, பொதுவாகக் கணவன் மனைவி இருவருக்குமான படுக்கையறையில் இரட்டைக் கட்டில் எனப்படும் பெரிய அளவான கட்டில் இருப்பது வழக்கம். குழந்தைகள், சிறுவர்களுக்கான படுக்கையறைகளில் தொட்டில்கள் அல்லது சிறிய அளவிலான கட்டில்கள் இருப்பதுண்டு. பழைய காலத்திலும், தற்காலத்தில்கூட பொருளாதார வசதிகள் குறைவாக உள்ளவர்களின் வீடுகளிலும் படுக்கையறைகளில் கட்டில்கள் இல்லாமல் இருப்பதும் உண்டு. இவ்வாறான இடங்களில் பாய்கள் படுப்பதற்குப் பயன்படுகின்றன. இத்தகைய மக்களின் வீடுகளும் சிறியவையாகவே இருப்பதால், படுப்பதற்காகத் தனியான படுக்கையறைகள் இருப்பதைவிட அறைகள் பெரும்பாலும் பல்பயன்பாட்டுக்கு உரியவையாகவே இருப்பது வழக்கம்.

வீட்டில் வாழ்பவர்களின் பொருளாதார வசதியைப் பொறுத்தும், அவர்களுடைய வாழ்க்கை முறை, தேவைகள் போன்றவற்றுக்கு ஒப்பவும் படுக்கையறைகளில் வேறு பல தளவாடங்களும் இருப்பது உண்டு. இது அறையின் அளவைப் பொறுத்தும் மாறுபடக்கூடும். உடைகள் வைப்பதற்கான அலுமாரிகள், ஒப்பனை மேசை, எழுதுவதற்கான மேசையும் நாற்காலியும், இருந்து இளைப்பாறுவதற்கான அல்லது அலவளாவுவதற்கான வசதியான இருக்கைகள் என்பனவும் படுக்கையறையில் இடம்பெறுவது உண்டு.

தனிமைத்தேவை[தொகு]

வீடுகளில் காணப்படும் பல்வேறு வகையான அறைகள் வேறுபட்ட தனிமைத்தேவைகளைக் கொண்டவை. வரவேற்பறை போன்ற அறைகள் குறைவான தனிமைத்தேவையைக் கொண்டவை. ஆனால், படுக்கையறைகள் வீடுகளில் உள்ள மிகக் கூடிய தனிமைத்தேவையைக் கொண்ட அறைகளாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படுக்கையறை&oldid=2747218" இலிருந்து மீள்விக்கப்பட்டது