உள்ளடக்கத்துக்குச் செல்

கால் வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்லே ஏரியில் உள்ள யாங்வே நகரம்.

கால் வீடு (stilt house) என்பது, நிலம் அல்லது நீர் மட்டத்துக்கு மேல் கால்களில் உயர்த்திக்கட்டப்பட வீட்டைக் குறிக்கும். கால் வீடுகள் முக்கியமாக வெள்ளத்தில் இருந்து பாதுகாப்புக்காக இவ்வாறு கட்டப்படுகிறது.[1] அது மட்டுமன்றி தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள் வீட்டுக்குள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.[2] நிழலோடு கூடிய வீட்டுக்குக் கீழுள்ள இடம் வேலை செய்வதற்கான இடமாகவோ அல்லது பொருள்களைக் களஞ்சியப்படுத்தும் இடமாகவோ பயன்படும்.

நிலத்தடி உறைபனி காணப்படும் ஆர்க்டிக்கில், வீடுகள் கால்கள் மீது கட்டப்படுகின்றது. இது அதன் கீழ் இருக்கக்கூடிய பனி உருகாமல் பாதுகாக்கிறது. னிலத்தடி உறைபனியில் 70% வரை நீர் இருக்கலாம். உறைந்து இருக்குப்போது இது உறுதியான அடிப்படையாக அமையும். ஆனால், வீட்டின் கீழ்புறத்தில் இருந்து கதிர்வீசும் வெப்பத்தால் பனி உருகினால், வீடு இறங்கத் தொடங்கும். வீட்டின் கீழ் நிலத்தடி உறைபனி உருகாமல் தடுப்பதற்கு வேறு விரிவான முறைகள் இருந்தாலும், வீட்டைக் கால்களில் உயர்த்திக் கட்டுவது மிகவும் திறன் வாய்ந்த முறைகளுள் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]
கான்சுடன்சு ஏரியில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட வெண்கலக்காலக் கால்வீடுகள்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் ஏரியில் நிறுவப்பட்ட லாக்குசுட்ரைன் ஊர்.

புதிய கற்காலத்திலும், வெண்கலக் காலத்திலும், அல்பைன், பியநூரா படனா ஆகிய பகுதிகளில் கால்களில் உயர்த்திக் கட்டப்பட்ட வீடுகளைக் கொண்ட குடியேற்றங்கள் பொதுவாகக் காணப்பட்டன.[3] எடுத்துக்காட்டாக, சிலோவேனியாவில் உள்ள லிசுபியானா சதுப்புநிலப் பகுதியிலும், மேல் ஆசுத்திரியாவில் உள்ள மொண்ட்சீ, அட்டர்சீ ஆகிய ஏரிப் பகுதிகளிலும் இவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. பர்டினன்ட் கெல்லர் போன்ற தொடக்ககாலத் தொல்லியலாளர்கள் அக்காலத்தில் ஏரிக்குள் செயற்கைத் தீவுகளில் இத்தகைய வீடுகள் கட்டப்பட்டதாக நம்பினர். தற்கால ஆய்வுகளின்படி, பெரும்பாலான குறியேற்றப் பகுதிகள் கரைகளிலேயே இருந்தன என்றும், பிற்காலத்திலேயே நீர் இப்பகுதிக்குள் சென்றது என்பதும் தெளிவாகியுள்ளது.[4] மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட கால் வீடுகள், அன்டர்ருகிடிங்கென் (Unteruhldingen), சூரிச் ஆகிய இடங்களில் திறந்த வெளி அருங்காட்சியகங்களில் உள்ளன. யூன் 2011ல் ஆறு அல்பைன் மாநிலங்களில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கால் வீடுகள் யுனெசுக்கோ உலக மரபுரிமைக் களங்களாக அறிவிக்கப்பட்டன. அல்வாசுத்திரா கால் வீடு என அழைக்கப்படும் ஒரு தனி இசுக்கன்டினேவியக் கால் வீடு சுவீடனில் அகழ்வாய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொல்லியல் சான்றுகளின்படி, கரோலின் தீவுகள், மைக்குரோனீசையா ஆகிய இடங்களில் கட்டிடக்கலை முறையாகக் கால் வீடுக் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. அத்துடன், ஓசானியாவில் இன்றும் கால் வீடுகள் காணப்படுகின்றன.[5] வடகிழக்கு நிக்கராகுவாவின் கொசுக் கடற்கரை, வடக்கு பிரேசில், தென்கிழக்காசியா, பப்புவா நியூகினியா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றின் சில பகுதிகளில் இன்றும் கால் வீடுகள் பொதுவாகக் காணப்படுகின்றன.[6] ஆல்ப்சில் ரக்கார்டுகள் எனப்படும் இது போன்ற கட்டிடங்கள் தானியக் களஞ்சியங்களாகப் பயன்படுகின்றன. இங்கிலாந்திலும் எலிகள் உள்ளே வருவதைத் தவிர்ப்பதற்காக கற்களின் மீது உயர்த்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள் பயன்பாட்டில் உள்ளன. கால்களில் உயர்த்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள் மேற்கு ஆப்பிரிக்காவிலும் உள்ளன. எடுத்துக்காட்டாக, கினியா, மாலி ஆகிய நாடுகளில் உள்ள மலிங்கே மொழிப் பகுதிகளைக் குறிப்பிடலாம்.

அமெரிக்கா

[தொகு]
சிலியின் காசுட்ரோவில் உள்ள பலபிட்டோக்கள்.
காம்சாட்கா தீவக்குறையில் வாழும் மக்களின் கோடைகால வீடுகள். இவை இட்டால்மென்கள் அல்லது காம்சாடல்கள் என அழைக்கப்படுகின்றன.

கால் வீடுகள் அமெரிக்காக் கண்டத்திலும் சில பகுதிகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்க இந்தியர்களின் சொந்த உருவாக்கங்களாகத் தெரிகின்றன. இவற்றை, தென்னமெரிக்காவின் வெப்பமண்டல ஆற்றுப் பள்ளத்தாக்குகளில், குறிப்பாக அமேசான், ஒரினோக்கோ ஆற்றுப் பகுதிகளில் பரவலாகக் காணமுடியும். மராக்கைபோ ஏரிக்கரையில் கால் வீடுகள் முக்கியமான அம்சங்களாக விளங்கியதே இப்பகுதி முழுவதற்கும் "வெனிசுவேலா" (சிறிய வெனிசு) எனப் பெயரிட அமெரிகோ வெசுப்புச்சியைத் தூண்டியது. அமெரிக்கக் குடாக் கரைகளை அண்டிய பகுதிகளில் புயல் சேதம் அதிகமாகி வருவதால், இப்பகுதியில் கூடுதலான வீடுகள் கால் வீடுகளாக அமைக்கப்படுகின்றன அல்லது திருத்தி அமைக்கப்படுகின்றன.

வகைகள்

[தொகு]
  • கெலோங் - பிலிப்பைன்சு, மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காணப்படும் இவ்வகைக் கால் வீடுகள் முதன்மையாக மீன்பிடிப்பதற்காகவே கட்டப்படுகின்றன. ஆனாலும் அவை பெரும்பாலும் கரைக்கு அப்பால் அமைந்த வீடுகளாகவும் பயன்படுகின்றன.
  • நிப்பா குடிசை - பிலிப்பைன்சின் மரபுவழி வீட்டு வகைகளில் ஒன்று. தற்காலத்தில் வீடுகள் பெரும்பாலும் மேனாட்டுப் பாணியைத் தழுவியே அமைக்கப்படுகின்றன.
  • பலாபிட்டோ - இவை கொலம்பசுக்கு முந்திய காலத்திலிருந்தே தென்னமெரிக்காவில் காணப்படும் வீடுகள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிலி நாட்டில் உள்ள காசுட்ரோ, சோன்சி, சிலோ தீவுக்கூட்டத்தில் உள்ள பிற நகரங்கள் ஆகியவற்றில் ஏராளமான பலாபிட்டோக்கள் கட்டப்பட்டன. இவை இப்போது சிலோ கட்டிடக்கலையின் முக்கிய கூறுகளாகக் கருதப்படுகின்றன.
  • பாங் உக் - இவை ஆங் காங்கின் லான்டாவுவில் உள்ள தாய் ஓ என்னும் இடத்தில் உள்ள சிறப்பு வகை வீடுகள். பெரும்பாலும் தான்காக்களால் அமைக்கப்படுகின்றன.
  • பப்புவா நியூகினியா கால் வீடு - இவை மோட்டுவான் மக்களால் அமைக்கப்படும் ஒரு வகைக் கால் வீடுகள். பெரும்பாலும், பப்புவா நியூ கினியாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன.
  • தாய்லாந்துக் கால் வீடு - இது தாய்லாந்தில், பெரும்பாலும் நன்னீர்த் தேக்கங்களில் கட்டப்படும் ஒரு வகை வீடு.
  • வியட்நாமியக் கால் வீடு - இது தாய்லாந்து வகையைப் போன்றதே ஆயினும், இதில், மதம் சார்ந்த காரணங்களுக்காக முன்பகுதியில் குறைவான உயரம் கொண்ட ஒரு கதவு இருக்கும்.
  • தியாவோசியாவோலூ - தேன் சீனப் பகுதிகளில் காணப்படும் கால் வீடுகள்.
  • குயீன்சுலாந்தர் - ஆசுத்திரேலியாவின் வடக்கு நியூ சவுத் வேல்சில் உள்ள குயீன்சுலாந்தில் பரவலாகக் காணப்படும் ஒரு வகை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. David M. Bush (June 2004). Living with Florida's Atlantic beaches: coastal hazards from Amelia Island to Key West. Duke University Press. pp. 263–264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-3289-3. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  2. Our Experts. Our Living World 5. Ratna Sagar. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8332-295-9. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  3. Alan W. Ertl (15 August 2008). Toward an Understanding of Europe: A Political Economic Précis of Continental Integration. Universal-Publishers. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59942-983-0. பார்க்கப்பட்ட நாள் 28 March 2011.
  4. Francesco Menotti (2004). Living on the lake in prehistoric Europe: 150 years of lake-dwelling research. Psychology Press. pp. 22–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-31720-7. பார்க்கப்பட்ட நாள் 29 March 2011.
  5. Paul Rainbird (14 June 2004). The archaeology of Micronesia. Cambridge University Press. pp. 92–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-65630-6. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  6. Dindy Robinson (15 August 1996). World cultures through art activities. Libraries Unlimited. pp. 64–65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56308-271-9. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்_வீடு&oldid=2919148" இலிருந்து மீள்விக்கப்பட்டது