பூவராகசுவாமி கோயில்
பூவராகசுவாமி பெருமாள் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் |
அமைவு: | ஸ்ரீமுஷ்ணம் |
ஆள்கூறுகள்: | 11°24′7″N 79°24′19″E / 11.40194°N 79.40528°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | பல்லவர் |
பூவராக சுவாமி கோயில் (Bhu Varaha Swamy temple) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது விஷ்ணுவின் பன்றி அவதாரமான, வராகர் (பூவராக சுவாமி), மற்றும் அவரது துணைவியார் அம்புஜவல்லி தாயார் (லட்சுமி) ஆகியோருக்கு அமைக்கபட்டுள்ளது.
இந்த கோவிலில் 10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்களின் திருப்பணிகள் இருந்தன. பின்னர் தஞ்சை நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கரால் விரிவாக்கபட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்றாலயங்களையும் குளத்தையும் உள்ளடக்கி கருங்க்கல்லாலான பெரிய மதில் சுவர் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயில் ஏழு நிலை இராஜகோபுரம் உள்ளது.
கோயிலில் தினசரி ஆறுகால பூசைகளும், ஆண்டு விழாக்கள் மூன்றும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தேர் திருவிழா, தமிழ் மாதமான வைகாசியில் (ஏப்ரல்-மே) நடத்தப்படுகிறது. இது மிக முக்கியமான விழாவாகும். இந்த திருவிழாவானது பிராந்தியத்தின் சமய நல்லினக்கத்தைக் குறிக்கிறது - தேரில் கட்டப்படும் கொடி முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது; அவர்கள் கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டுவந்து மசூதிகளில் அல்லாவுக்கு வைக்கிறார்கள். இந்த கோயில் தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அர்த்த மண்டபம் வரை முஸ்லிம்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட சில கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
தொன்மம்
[தொகு]இரண்யாட்சன் என்றொரு அசுரன், பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் சிறை வைத்து விடுகிறான். இந்தப் பூமகளைக் காக்க திருமாள் பன்றி உருவில் தோன்றிக் பாய்ந்து அரக்கனைக கொன்று பூமாதேவியை மீட்கிறார். அந்த அரக்கனின் வியர்வைத் துளி விழுந்து இத்தலத்தில் குளம் உருவானது என்கின்றனர். இறக்கும் தருவாயில் அரக்கன் தன் திசையை நோக்குமாறு கூறுகின்றான். இதனால் இத்தலத்தில் உள்ள வராகர் அவனது ஆசையை நிறேவேற்ற தன் முகத்தை தெற்கு நோக்கி திருப்பியபடி இருக்கிறார். அதேசமயம் அவரது உடல் பகுதி மேற்கு நோக்கியபடி உள்ளது. மேலும் பூதேவி கோரியபடி பூவராகர் தன் கைகளில் சங்கு சக்கரத்தை வைத்துக்கொண்டு காட்சியளிக்கிறார்.[1] ஒரு நவாப் தனக்கிருந்த நோய் நீங்க யக்ஞ வராகரை வேண்டிக் கொள்ள, அப்படியே நோய் நீங்க, அதன்பின் அந்த நவாப் பூவராக சாஹேப் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்று ஒரு கர்ண பரம்பரை வரலாறு கூறுகிறது. அவர் ஏற்படுத்திய மானியம் இன்றும் இருக்கிறது, இந்தக் கிள்ளையிலே. சமுத்திர தீரத்திற்குச் செல்லு முன் யக்ஞ வராகர் மகம்மதியர் பிரார்த்தனை ஸ்தலமான மசூதி பக்கம் போய் அவர்கள் செய்யும் மரியாதைகளையும் ஏற்றுக் கொள்கிறார்.[2]
தலச்சிறப்பு
[தொகு]வைணவத் தலங்களுக்குள் இத்தலம் ஒரு தனிச்சிறப்பானது. சுயம்புலிங்கம் போல, சிற்றுளி கொண்டு செய்யப்படாது தானாகவே தோன்றிய தலங்கள் எட்டு என்பர். அவை திருரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், ஸாளக்கிராமம், நைமி, சாரண்யம், வானவாமலை, புஷ்கரம், நாராயணம் என்றும் கூறுவர். இவற்றையே வடமொழியில் 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்' என்பர். அதில் ஒன்று இக்கோயில்.[3]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் பிரும்மாண்டமான கோயில். மூன்று மதில்களால் சூழப்பட்டிருக்கின்றது. இன்று இருப்பது இரண்டு மதில்களே. மூன்றாவது மதில் சிதைந்து அதன் அடையாளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கோயில் வாயிலை 150 அடி உயரமுள்ள ஒரு ராஜகோபுரம் அழகு செய்கிறது. இக்கோபுர வாயிலிலே துழைத்த உடனே கோபுரத்தின் மேலே கிழக்கு நோக்கியவராய் வேங்கட வாணன் இருப்பதைக் காட்டுவர். இத்தலத்தில் கோபுரத்தில் உள்ள வேங்கடவனை முதலில் தரிசித்த பின்னரே பூவராகனை சேவிக்க வேண்டும் என்பது இத்தலத்தின் சம்பிரதாயம் ஆகும்.[3]
இராசகோபுரத்தைக் கடந்தத பிறகு நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் அடிப்பாகம் நல்ல விரிந்து பரந்திருக்கிறது. இத்தனை அகலமாக கல்லாலேயே மண்டபம் அமைந்திருப்பது அழகாக இருப்பதுடன் ஆச்சர்யப் படத்தக்கதாகவும் இருக்கிறது. இந்நூற்றுக்கால் மண்டபத்திலே நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. ஞான முத்திரை தாங்கி நம்மாழ்வாரது செப்புச்சிலை சிறிதேயானாலும் அழகானது. இந்த மண்டபத்தையடுத்து சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட புருஷசூக்த மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம் உள்ளது. நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயிலைக் கட்டிய நாயக்க மன்னர்கள், அவர்கள் துணைவியர் சிலை எல்லாம் கற்றூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பதினாறு கால் மண்டபத்திற்கு வடபுறம் வேணுகோபாலன் சந்நிதி இருக்கிறது. அங்கு வேணு கோபாலன் ருக்மணி சத்யபாமா உடன் சிலை உருவில் நிற்கிறான். பக்கத்திலே நர்த்தன கோபாலனும் நடனம் ஆடும் நிலையில் உள்ளான். முதன்மைக் கோயிலானது மகா மண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையின் நடுவிலே பூவராகர் சிலை உருவில் நிற்கிறார். இந்த மூர்த்தி சுமார் மூன்றடி உயரமே உள்ளவர். சாளக் கிராமம் என்னும் உயர்ந்த சிலை வடிவினர். இரண்டு திருக்கரங்களுடன் இடுப்பிலே கை வைத்துக் கொண்டு நிற்கிறார். இடுப்பில் வைத்திருக்கும் கைகளிலே சங்கையும் சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார். உடல் முழுவதும் மேற்கு நோக்கி இருந்தாலும், தெற்கு நோக்கி நிமிர்ந்தே நிற்கிறார். அவர் காலடியிலே ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவிலேயே எழுந்தருளியிருக்கின்றனர்.[3]
இக்கோயிலில் உள்ள உற்சவர் யக்ஞ வராகர் எனப்படுகிறார். இவர் யக்ஞவராகர் என்று பெயர் பெற்றதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. நெய்வேலிக்கு அடுத்த வளையமாதேவியில் - கார்த்தியாயன மகரிஷி என்று ஒருவர் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு மகள் அம்புஜவல்லி என்ற பெயரோடு. இவளை மணக்க பூவராகன் விரும்புகிறான். அப்போது மகரிஷி பூவராகனை அவரது சுயஉருவில் வந்து மணந்து கொள்ளும்படி வேண்டுகிறார். அந்த முனிவர் நடத்திய வக்ஞத்திலிருந்து தன் சுய உருவோடு எழுந்திருக்கிறார். அப்படிப் பரந்தாமன் பூதேவி ஸ்ரீதேவி சகிதனாக எழுந்தவரே யக்ஞ வராகன் என்ற திருதாமத்தோடு அங்கு கருவறையை அடுத்த அந்த ராளத்தில் இருக்கிறார்.
இந்த யக்ஞவராகர் எனும் உற்சவரே உற்சவ காலங்களில் உலாப் புறப்படுவார். மாசி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேரோட்டம் முடிந்ததும் கிள்ளை என்ற கிராமத்துக்கு எழுந்தருளி அங்கு தீர்த்தமாடுவார். இந்த தீர்த்தோத்சவத்தை ஒரு மகம்மதியப் பெரியார் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூலதனத்தைக் கொண்டு, உப்பு வேங்கடராயர் என்ற ராயர் வம்சத்தவர்கள் நடத்தி வருகின்றனர். இந்த யக்ஞவராகர் ஒரு காலத்தில் திப்பு சுல்தானால் களவாடப்பட்டு மறைந்திருக்கிறார். அப்போது புதிதாகச் செய்யப்பட்ட மூர்த்தியே அபிசாக ஆராதனை ஏற்றிருக்கிறார். யக்ஞ வராகர் திரும்பவும் வந்து சேர்ந்தபிறகு, புதிதாக நிர்மாணிக்கப்பட்டவர் போக நாராயணன் என்ற பெயரோடு உள்ளார். இந்த போக நாராயணனே, சாதாரண நாட்களில் பஞ்ச பர்வ உற்சவங்களை ஏற்றுக் கொள்கிறார்.[3]
கோயில் வளாகத்தில் தென்பக்கம் கிழக்கே பார்த்த தனிக் கோயிலில் தாயார் சந்திதி உள்ளது. கோவில் பிராகாரத்தில் வடபுறமாக ஒரு சிறு சந்நிதியில் சப்த மாதர்கள் புடை சூழ அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். அவளே அம்புஜவல்லியின் அம்சம். பிள்ளை இல்லாதவர்கள் வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு அருள் பாலிக்கிறாள் எனப்படுகிறது. இதனால் அவளையே குழந்தையம்மாள் என்று கூறுகிறார்கள். இவளுக்கு ஆராதனையெல்லாம் செங்குந்த முதலியார்கள் செய்கிறார்கள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S., Prabhu (10 May 2012). "Symbolising religious unity". The Hindu. http://www.thehindu.com/features/friday-review/religion/symbolising-religious-unity/article3404308.ece. பார்த்த நாள்: 13 October 2014.
- ↑ Rao, A.V.Shankaranarayana (2012). Temples of Tamil Nadu. Vasan Publications. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8468-112-3.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (1999). "வேங்கடம் முதல் குமரி வரை 5". நூல். கலைஞன் பதிப்பகம். pp. 16–24. பார்க்கப்பட்ட நாள் 2 நவம்பர் 2020.